இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சாமை..!!
இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.
சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில்தான் இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப் பொருட்களை உடலில் அதிகரிகக்ச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபத்து இல்லை.
இப்போது கடினமான மேல் தோல் நீக்கிய சாமை கிடைக்கிறது. இதை உபயோகிக்கும்போது தோல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அரிசியைப் போலவே பல உணவுகளை சமைக்க சுலபமாக பயன்படுத்த முடியும். வாங்கும்போது பார்த்தாலே இது புரியும். கம்பைப் போல குத்தி, தோல் நீக்க இயலுமென்றாலும் வேலையை கருதி பலரும் உபயோகிக்காமல் இருந்தனர்.
சாமையில் செய்த உணவுகள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை. மிகச் சுலபமாக ஜீரணமாகும். எந்த விதப் பக்க விளைவுகளும் வராது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையது.
அரிசியை விட சிறிது விலை அதிகமானாலும் சத்துகள் மிகுந்தது. சிறிதே உண்டாலும் வயிறு நிறையும். இணை உணவு கள் இல்லாமலே தேவையான சத்துகள் கிடைக்கும். அதிக நேரம் பசிக்காது. சீக்கிரமாக சமைக்க இயலும். இந்த குணங்களை பார்க்கும்போது கொடுத்த விலைக்கு பயன் அதிகம்.
அரிசி சாதத்தைப் போல சமைத்து சாப்பிடலாம். பிரஷர் குக்கர் தேவையில்லை. ஒரு பங்கு சாமைக்கு 2 பங்கு தண்ணீர் போதும். சில வேளை இரண்டரை கூட பிடிக்கும். ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
தண்ணீரை கனமான பாத்திரத்தில் சூடாக்கி, கொதி வரும்போது கழுவிய சாமையை சேர்த்து, கொதி வந்ததும் லேசாக ஒரு தடவை கலந்துவிட்டு, மூடி வைத்து மிதமான தணலில் ஈரம் வற்றும் வரை வைத்தால் நன்றாக வரும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. மத்தியில் அடிக்கடி கிளற வேண்டாம். நீங்கள் அரிசி சாதம் சாப்பிடும் அளவில் மூன்றில் 1 பங்கு உண்டாலே போதும்… வயிறு நிறைந்துவிடும். குழம்பு, பொரியல், தயிர் சேர்த்து எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
100 கிராம் சாமையில் 7.7 கிராம் புரதச்சத்து உள்ளது. இந்த புரதம் உடல் வளர்ச்சிக்கு, எலும்புகளின் வலுவுக்கு, தசைகள், சதைகள் வலுவுடன் இருப்பதற்கு உதவுகின்றன. அதோடு, மூளைக்குச் செல்லும் செல்களுக்கு நல்ல சக்தியை தரும். மனச் சோர்வைப் போக்கும். நல்ல உறக்கம் பெறலாம்.
இதில் 7.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் வராமலிருக்க உதவி புரியும். எடை அதிகரிக்காது. ரத்தத்தில் மெதுவாக குளுக்கோஸை வெளிவிடுவதால் நீரிழிவுக்காரர்களுக்கு உகந்தது. கொலஸ்ட்ராலை குறைக்கும்.
மாவுச்சத்து 67 கிராம் அளவு உள்ளது. இந்த மாவுச்சத்தில் எடையை அதிகமாக்கும் பசைத்தன்மை உடைய ‘க்ளூட்டன்’ அறவே இல்லை. அதனால் முழு நன்மையைத் தரும். சக்தியை அளவிடும் கலோரிகள் 100 கிராமுக்கு 341 இருக்கும்.
இரும்புச்சத்து 9.3 மில்லிகிராம் அளவு உள்ளது. நமது ஒரு நாளையத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு 100 கிராம் அளவிலேயே கிடைத்துவிடும். ர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் தரலாம். ரத்தசோகை ஏற்படாமல் இருக்க சிறு வயது முதல் சாப்பிடலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது.
கம்பில் இருக்கும் இரும்புச்சத்தைவிட இதில் அதிகம் உள்ளது. கேழ்வரகில் இருப்பதைவிட இரண்டரை மடங்கு அதிகம்.ககால்சியம் சத்து (சுண்ணாம்புச் சத்து) கம்பைவிட குறைவு என்றாலும், உறிஞ்சப்படும் நிலையில் இருக்கும். (7 மில்லி கிராம் அளவு உள்ளது.) கம்பில் உள்ளதைவிட மூன்றில் ஒரு பங்கே.
தாது உப்புகள்: மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற பல முக்கிய தாதுகளையும் சாமையில் இருந்து பெறலாம். வைட்டமின் சத்துகள் என்று பார்த்தால் முக்கிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் அமிலம் எல்லாமும் கிடைக்கும்.
மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்னைகள் தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. உடலில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் சாமையை, தினமும் காலை உணவாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
Average Rating