தமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்..!!
வைக்கிங் மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யார் இவன்’. இப்படத்தில் சச்சின் என்பவர் தயாரித்து நடிக்கிறார். இவர் தெலுங்கில் 6 படங்கள் நடித்துள்ளார். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு இவர் அறிமுகமாவது இந்த படம்தான். அதேபோல், பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
மேலும், இவர்களுடன் பிரபு, கிஷோர், டெல்லி கணேஷ், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியுள்ளார். கனல்கண்ணன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.
டி.சத்யா என்பவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். இவர் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர். இவருடைய தாத்தா பிரகாஷ்ராவ், சிவாஜி நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘உத்தமபுத்திரன்’. அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ‘படகோட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
இவருடைய அப்பா எல்.வி.பிரசாத் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர். 75-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களையும், 15 இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்று கடைசிவரை ஆசைப்பட்டாராம். ஆனால், அது முடியாமலேயே போய்விட்டதாம். தந்தையின் கனவை தற்போது அவரது மகனான டி.சத்யா நிறைவேற்ற முன்வந்துள்ளார்.
டி.சத்யா இதுவரை தெலுங்கில் 3 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் இவர் இயக்கியது எல்லாமே தமிழ் படங்களை ரீமேக் செய்ததுதான். ‘வெண்ணிலா கபடிகுழு, ‘சிவா மனசுல சக்தி’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களைத்தான் இவர் தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார். முதன்முறையாக நேரடி தமிழ் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறதாம்.
படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான் என்று கூறுகின்றனர். சென்னையில் புரோ கபடி விளையாடும் நாயகன், கோவாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள செல்கிறார். நாயகி கபடி ரசிகை என்பதால், இவரது விளையாட்டில் மயங்கி, காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். திருமணம் முடிந்தகையோடு நாயகி இறந்துவிடுகிறாள். அவளது இறப்பிற்கு பிறகு நடக்கும் கதையை ஒரு கிரைம் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்களாம்
இப்படத்தில் பிரபு நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், சதிஷின் காமெடி படத்தின் கதையோடு ஒட்டியபடியே நகரும் என்றும் கூறுகின்றனர். வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும், மே மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating