கேப்பாப்புலவு தமிழர்களும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும்..!! (கட்டுரை)
தமிழர்களின் சமூக விடுதலைப் போராட்டம் என்பது பொதுவாக எல்லாக் காலங்களிலும் முஸ்லிம்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வந்திருக்கின்றது எனலாம். ஆனால், பின்வந்த காலத்தில் அதனை ஒரு முன்மாதிரியாக முஸ்லிம்கள் எடுத்துச் செயற்பட்ட மாதிரித் தெரியவில்லை. இலங்கை முஸ்லிம்களில் சமூகம் பற்றியும் அதன் அபிலாஷைகளைப் பற்றியும் சிந்திக்கின்ற மக்கள் இருக்கின்றனர் என்றாலும் அவற்றை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
‘எல்லாவற்றையும் அரசியல்வாதிகளே பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஒரு நினைப்பு முஸ்லிம்களிடையே இருக்கின்றது. அப்படி என்றால், அவர்களது அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் அதனைச் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அரசியல் என்பதும் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டத்துக்கான ஒரு களம்தான்.
அந்தவகையில், போர் முரசு கொட்டி, பெரிய மேளதாளங்களுடன் களத்துக்கு அனுப்பப்படுகின்ற பெருமளவிலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் களத்தில் குதித்து எதிரிகளை எதிர்த்தாடுவதும் இல்லை; இலக்குகளை தொடுவதும் இல்லை. அவர்கள் போர்க்களத்தில் உள்ள கூடாரத்துக்குள் முடங்கி விடுகின்றனர். அங்கிருக்கின்ற சுகங்களில் அவர்கள் மதிமயங்கிக் கிடக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளைப் பேரினவாத சக்திகள் கனகச்சிதமாகச் செய்து கொடுக்கின்றன.
இவர்களுக்கு எது தேவை என்பதை நாடி பிடித்து அறிந்து வைத்திருக்கின்ற பெருந்தேசியவாதம், கூடாரத்துக்குள்ளேயே முஸ்லிம் அரசியல் தலைமைகளை மயக்கி, கட்டுண்டு கிடக்கச் செய்து விடுகின்றது. அந்த கூடாரத்துக்குள் இருந்து வெளியில் யாராவது வந்து சொல்லும் வரைக்கும் எல்லாம் இனிதே நடக்கும் என்றே மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் முஸ்லிம் அரசியல் யதார்த்தம்.
ஒன்றுதிரண்ட ஜனநாயகப் போராட்டங்கள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதற்கு மிக அண்மைக்கால உதாரணம் கேப்பாபிலவு மக்களின் போராட்டமாகும். கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அக்காணிகளை விடுவித்துத் தரவேண்டும் என்றும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக அப்பகுதி மக்கள் தொடராக, ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிறுபிள்ளைகளும் வயதானவர்களும் அர்ப்பணிப்புடனும் தைரியத்துடனும் அந்தக் காணிகளுக்கு முன்னால், வீதியில் அமர்ந்து இடைவிடாது போராடிக் கொண்டே இருந்தனர். வேறு பிரதேசங்களிலும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
ஒருசிலவற்றில் முஸ்லிம்களும் பங்குபற்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதனால், தேசிய ஊடகங்களின் கவனமும் அரசாங்கம் மற்றும் சர்வதேசத்தின் கவனமும் கேப்பாபிலவு என்ற குக்கிராமத்தின் மீது குவிந்தது. மிக முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்தனர். விளைவு, அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. ஜனாதிபதி, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய முன்னதாகவே அவரது உத்தரவுக்கமைய காணிகளை விடுவிக்கும் அறிவித்தல் வெளியானது.
இங்கு காணிகள் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவில்லை என்றும், படையினர் தங்களுக்கு அவசியமான நிலப்பரப்பை எடுத்துக் கொண்டே, மீதியை தந்திருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டாலும், அந்த மக்களின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கின்றது என்பது கவனிப்புக்குரியது. இந்த இடத்தில் எழுகின்ற பெரிய கேள்வி, முஸ்லிம்கள் இதுபோல எத்தனை போராட்டங்களை நடாத்தியிருக்கின்றார்கள்? என்பதாகும். வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இழந்திருக்கின்றார்கள் அல்லது அவர்களுக்கு உரித்தான காணிகள் வேறு ஒரு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.
பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பிணக்குகளோடு காணப்படுகின்றன. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்படவில்லை. கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசினால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் கூட இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மேலோட்டமான தகவல்களின் படி, வட மாகாணத்தில் முஸ்லிம்களின் 75 ஆயிரம் ஏக்கர் காணிகள் பிணக்குகளைச் சந்தித்துள்ளன. அதேபோன்று கிழக்கில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் முஸ்லிம்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால், கேப்பாப்பிலவு மக்கள் நடாத்தியது போல எத்தனை ஜனநாயக முன்னெடுப்புக்களை வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் செய்திருக்கின்றார்கள்? எத்தனை உணவுதவிர்ப்புப் போராட்டங்கள் நடந்துள்ளன? எத்தனை அரசியல்வாதிகள், தலைமைகள் முழு அர்ப்பணிப்புடன் இதற்காக களத்தில் இறங்கிப் போராடியிருக்கின்றார்கள்? இப்படிக் கேட்டால் தலையை கவிழ்த்துக் கொள்ள வேண்டிய நிலையிலேயே முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தங்களுடைய அரசியல் வியாபாரத்தில் இலாபம் உழைப்பதே அவர்களது முதற் தெரிவாக இருக்கின்றது.
எப்போதாவது நேரம் கிடைத்தால் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையை விடுவதோடு சரி என அவர்களது பிழைப்புவாத அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது. இதேவேளை, முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிந்தனையாளர்கள், கற்றறிந்தோர், கல்வியியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் எல்லோரும் இப்பிரச்சினைகள் எல்லாம் தமக்குரியதல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இதைச் செய்ய வேண்டும். நமது வகிபாகம் என்பது ஒரு பார்வையாளர் மட்டுமே என்று நினைப்பது போலிருக்கின்றது அவர்களது பொடுபோக்குத் தனங்கள்.
உலகில் முஸ்லிம்களைப் பற்றிய பார்வை வேறுவிதமானது. விடுதலைப் புலிகள், தமிழர்கள் என்பதற்காக உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர். அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும் இல்லை. ஆனால், ஒசாமா பின்லாடனையும் இன்னபிற ஆயுத, பயங்கரவாத இயக்கங்களையும் மனதில் இருத்திக் கொண்டு, உலகெங்கும் வாழும் சாதாரண முஸ்லிம்கள் வேறு கண்கொண்டு பார்க்கப்படுகின்றனர். பொதுவாகத் தமது மதக் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற முஸ்லிம்களை அச்சுறுத்தல்மிக்கவர்களாகக் காட்டும் முயற்சியில் ‘உலக பொலிஸ்காரனும்’ அவர்களது நேச நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
மறுபுறத்தில், தமது விடுதலைக்காகவும் மேலாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் துணிந்து போராடுகின்றவர்களாக பலஸ்தீனம், லிபியா, ஈராக், காஷ்மீர் முஸ்லிம்கள் தம்மை முன்னிறுத்தி இருக்கின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், உலகெங்கும் பெருமளவிலான ஆளணி, ஆயுத பலத்துடன் இருக்கின்ற பொலிஸ் வேடம்தரித்த, வேறுநோக்கம் கொண்ட படைகளுக்கு எதிராகப் போராடுகின்ற உலக முஸ்லிம்களின் துணிச்சல், இலங்கையில் இருக்கின்ற 90 வீதமான முஸ்லிம்களிடத்தில் கொள்கையளவிலும் இல்லை.
அலப்போவில் கவச வாகனத்துக்கு எதிராக நிராயுத பாணியாக நிற்கின்ற ஒரு பச்சிளம் பாலகனுக்கு இருக்கின்ற சமூக உணர்வும் தைரியமும் இலங்கையில் இருக்கின்ற எந்த முஸ்லிம் கட்சித் தலைவனுக்கோ அரசியல்வாதிகளுக்கோ கிடையவே கிடையாது. ஆனால், வார்த்தைகளால் வடைசுடுவது என்றால், இவர்களைவிட்டால் உலகில் எங்கும் ஆட்கள் இல்லை. அறிக்கைப் போர் நடத்த முடியுமென்றால் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். கேப்பாபிலவில் மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லாத் தமிழர்களும் போராட்டக் குணத்தோடு இருக்கின்றார்கள். இங்கு போராட்டம் என்பது தனிநாடு கேட்கும் போராட்டமில்லை. மாறாக, தமக்கு மறுக்கப்படும் உரிமைகளைச் சாத்வீக ரீதியாகப் பெறும் முன்னெடுப்புகளாகும்.
அதாவது தமக்கு எதாவது அநியாயம் இழைக்கப்பட்டால், ஏதேனும் உரிமைகளைப் பெற வேண்டுமென்றால் அதற்காக வீதிக்கு இறங்குவதற்கு ஒருபோதும் தமிழர்கள் தயங்குவதில்லை. வெளித்தோற்றத்தில் தமிழர்கள் எப்படித் தோன்றினாலும் ‘உரிமைசார் சுரணை’ என்று வருகின்ற போது தமிழர்கள் முன்னே நிற்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. காணாமல் போனவர்களை மீட்கின்ற விடயமானாலும் காணிகளை மீட்கின்ற விடயமானாலும் அநியாயத்துக்கு எதிராகப் போராடுவதென்றாலும் அரசியல்வாதிகளுக்கு எதிராக களமிறங்குவது என்றாலும் அரசாங்கத்துக்கு எதிராகச் சாத்வீகக் குரல் எழுப்புவது என்றாலும், தீர்வுத்திட்டத்தில் தமது அபிலாஷையைப் பெறுவது என்றாலும்….
இப்படி எந்தச் சமூக நோக்கத்துக்காகவும் ஒன்றுதிரளக் கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்களை ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்திரட்டுவது என்றால் கல்லில் நார் உரிக்கின்ற வேலையாகவே இருக்கும். ‘நமக்கெதற்கு இந்தப் பொல்லாப்பு, நான் பிஸி’ என்ற எண்ணத்தில் அவர்கள் விலகிக் கொள்கின்றார்கள். தமது தலைவர்கள் ஒன்றுபட வேண்டுமென நினைக்கும் முஸ்லிம் மக்கள், தங்களுக்குள் இன்னும் ஒன்றுபட முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். தமிழ் மக்களும் அவர்களது அரசியல்வாதிகளும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக மட்டும் போராடவில்லை. மேற்குறிப்பிட்ட விடயங்களுக்காகவும் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை அவர்களுக்கு பெற்றுத் தந்திருக்கின்றது. குறிப்பாக வடக்கில் கணிசமான காணிகள் மீட்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறே, முஸ்லிம்களுக்கும் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற காணிப் பிரச்சினைகள் பாரதூரமானவை. ஆனால், சில ஏக்கர் காணிக்காக கேப்பாபிலவு மக்கள் போராடிய அளவுக்காவது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மீட்டுக் கொள்வதற்காக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் வீதிக்கு வரவோ, காத்திரமான நடவடிக்கையை எடுக்கவோ இல்லை என்பதே மனவருத்துப்குரிய உண்மையாகும். சிங்கள மேலாதிக்க சக்திகளும் பேரினவாத சிந்தனையும் என்றும் உயிர்ப்போடு இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அரசாங்கமே தானாக முன்வந்து, வனபரிபாலனத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் பிற தரப்பினரால் தம்வசப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியுமா? முடியாது!
அதற்கு மாறாக, இன்னும் அதிக நிலப்பரப்புகள் அறிந்தும் அறியாமலும் சட்டத்தின் பெயரிலும் சதியின் பெயரிலும் தொடர்ந்து இழக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒன்றுமே செய்யாமல், சுரணையற்று, சோம்பல் தனமாக தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அதிகாரத் தரப்பினர் தாமாக முன்வந்து, காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வை வீட்டுக் கதவடிக்குக் கொண்டு வருவார்கள் என்று எந்த முஸ்லிம் பொதுமகனோ அரசியல்வாதியோ நினைத்துக் கொண்டிருந்தால், அவர்கள் இன்னும் நிறைய இழந்து விடுவார்கள். தமிழர்களின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக எல்லா அரசியல்வாதிகளும் ஒரு கோணத்திலேயே சிந்திக்கின்றார்கள்; பாடுபடுகின்றார்கள்.
ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருகோணத்தில் சிந்திப்பதும் இல்லை; செயற்படுவதும் இல்லை. காணிப்பிரச்சினை மட்டுமல்ல, தீர்வுத்திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, தேர்தல் முறைமை போன்ற எந்த விடயத்திலும் உறுதியான ஒருமித்த நிலைப்பாடு முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் கிடையாது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் அதற்காக இடைவிடாது போராடுவதாக தெரியவும் இல்லை. யாருடைய காணி போனால் நமக்கென்ன வாக்குப் பெட்டிகளும் வங்கிக் கணக்குகளும் நிரம்பினால் நமக்கு போதும் என்பது போலிருக்கின்றது அவர்களுடைய தொடர் செயற்பாடுகள்.
இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும், கேப்பாபிலவு மக்கள் மட்டுமன்றி எல்லாத் தமிழர்களும் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவது ஒருபுறமிருக்க, யாராவது தமிழ் அரசியல்வாதிகள் அவ்விடயத்தில் தவறிழைத்தால் அதற்கெதிராகவும் களத்தில் இறங்கத் தமிழ் மக்கள் தயங்குவது கிடையாது. இந்த வழிமுறையை இனி முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். தாமாகப் போராடுகின்ற அதேநேரத்தில், அதற்குக் குறுக்கே நிற்கின்ற முஸ்லிம் கட்சித்தலைவர்கள், அரசியல்வாதிகளைச் சந்தியில் நிறுத்த வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால், நிறைய கைச்சேதங்களைச் சந்திக்க வேண்டிவரும்.
Average Rating