டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமரிடம் மனு
டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தார். “இலங்கை ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி இந்தியா வற்புறுத்தவேண்டும்” என்று அதில் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதை கண்டித்து டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க.வினர் டெல்லியில் திரண்டனர். தமிழகத்தில் இருந்தும் இதற்காக ம.தி.மு.க. தொண்டர்கள் சென்றிருந்தனர். அவர்களுடன் டெல்லியில் உள்ள தமிழர்களும் சேர்ந்து கொண்டனர்.
வைகோ தலைமை
டெல்லி சாணக்கியபுரியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், டாக்டர் கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் வரதராஜன் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர். அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் சவுத் அவென்ïவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு நடந்து சென்றனர். இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்.
“ஈழத் தமிழர்கள் அனாதை அல்ல, எங்கள் ரத்தம், எங்கள் ரத்தம்,” “எச்சரிக்கை செய்கிறோம். சிங் கள அரசே எச்சரிக்கை செய்கிறோம்”, `உடனே நிறுத்து இனப்படுகொலையை உடனே நிறுத்து’, `தமிழர்களை கொல்லாதே இனவெறி அரசே தமிழர்களை கொல்லாதே’, `ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங் கள் ரத்தம், எங்கள் ரத்தம்’ என்பன உள்பட பல்வேறு கோஷங்களை முழங்கியபடி சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
ஆர்ப்பாட்டத்தை ஒட்டி இலங்கை தூதரகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூதரகத்துக்கு 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலி அமைத்து இருந்தனர். அந்த இடத்துக்கு வந்ததும் ம.தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தினார்கள். அதை தாண்டிச்சென்றால் அவர்களை கைது செய்ய போலீசார் தயாரானார்கள்.
டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஆனந்தமோகன், வைகோவிடம் சென்று இந்த இடத்தை விட்டு தாண்டி செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதை வைகோ ஏற்றுக் கொண்டார். பின்னர் அங்கே நின்று சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் வைகோ பேசியதாவது:-
இலங்கை தமிழர்களின் துயரத்திலும், கண்ணீரிலும் நாங்கள் பங்கு கொள்கிறோம். அவர்கள் அனாதைகள் அல்ல என்பதை தெரிவிக்கவே அவர்களுக்காக அறவழியில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இலங்கை அரசு ஈழத் தமிழர்களை கருவறுக்க நினைக்கிறது. அதை எதிர்க்கவே இந்த போராட்டம்.
சிங்கள அரசு இதுவரை தமிழர்கள் நலன் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கூட மதித்தது இல்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிய பிரான்சு அமைப்பின் ஊழியர்கள் 17 பேரை கொன்றனர். முன்னாள் எம்.பி. சின்னதம்பி சிவராஜாவை கொன்றார்கள். இவ்வாறு வைகோ பேசினார்.
பிரதமருடன் சந்திப்பு
பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ மற்றும் எம்.பி.க்கள் சந்தித்து மனு கொடுத்தனர். பிரதமருடன் சந்திப்பு குறித்து டெல்லியில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வழக்கம் போலவே பரிவோடும், கனிவோடும் பிரதமர் எங்களிடம் பேசினார். ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றதாகத் தனக்கு செய்தி வந்ததாக சொன்னார். மிகக்கட்டுப்பாடாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் தம்மிடம் பாராட்டி சொன்னதை நான் பிரதமரிடம் தெரிவித்தேன். செஞ்சோலையில் அனாதையாகப் பெண் குழந்தைகள் சிங்கள விமானக் குண்டு வீச்சால் கோரமாக கொல்லப்பட்டது குறித்து அனுதாபம் தெரிவித்தார்.
திருப்பி அனுப்ப வேண்டும்
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சனம் செய்து, அறிக்கை வெளியிட்ட இலங்கை துணைத்தூதர், தனது அதிகார வரம்பை மீறிச் செயல் பட்டு உள்ளதால் இப்பிரச்சினையை இலங்கை அரசோடு நீங்கள் பேச வேண்டும். அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் கூறினேன். இலங்கை துணைத்தூதர் அறிக்கை வெளியிட்டது வரம்பு மீறிய செயல் என்று பிரதமர் தெரிவித்தார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் கொழும்பில் இருந்து கொண்டு செயல்படுவதும், பாகிஸ்தான் ஏராளமான ஆயுதங்களை இலங்கைக்கு தருவதும், இந்திய நலன்களுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்கும் என்று நான் சொன்ன போது, இப்பிரச்சினையை நாங்கள் கவனத்தில் எடுத்துகொள்கிறோம் என்றார் பிரதமர்.
உதவி செய்யக்கூடாது
எங்களது கோரிக்கையை ஏற்று இந்தியா இலங்கைக்கு ராணுவ ரீதியாக எந்த உதவியும் செய்யாது என்றும், இலங்கையின் ராணுவ பலத்தை அதிகப்படுத்தும் எத்தகைய நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபடாது என்று பிரதமர் உறுதி அளித்தார்.
ஈழத்தில் இருந்து வரும் அகதிகள் எல்லாம், ராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தான் வருகின்றனர். விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரவில்லை. ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தமிழர்களுக்கு உணவு, மருந்து இன்றி வாடுகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில், தமிழர்களுக்கு உணவும் மருந்து பொருட்களும் இந்திய அரசு அனுப்ப வேண்டும். சிங்கள அரசின் மூலமாக அல்ல. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்பு மூலம் அனுப்ப வேண்டும் என்ற போது உங்கள் கோரிக்கையை கவனத்தில் கொள்கிறேன் என்றார். இலங்கையில் இருந்து வரும் தமிழ் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படை வசதிகள் கிடைக்கின்ற விதத்தில் உதவி செய்ய இந்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சொன்னார்.
திரிகோணமலை
அமெரிக்கர்கள் திரிகோணமலைப்பகுதியில்-இந்துமாக்கடலில் கால் ஊன்ற விடாமல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உறுதியான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டார். அது போல, பாகிஸ்தான் உள்ளிட்ட அன்னிய நாட்டு சக்திகள் ஆயுத கப்பல்களோடு இலங்கைக்கு உள்ளே வருவதை தடுக்கின்ற விதத்தில், இந்துமாக்கடலில் ஒரு அரண் அமைக்க இந்தியா முன்வர வேண்டும் என்று நான் கூறினேன்.
இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், பிரதமரை சந்தித்து அங்கு உள்ள நிலைமையை கூற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றேன். சந்திப்பதற்கு இசைவு கோரி அவர்களிடம் இருந்து கடிதம் வரட்டும்-அவசியம் தான் சந்திப்பதாக பிரதமர் உறுதி அளித்தார். இதை நீங்கள் அவர்களிடம் தெரிவித்து விடலாம் என்றும் கூறினார்.
தாக்குதலை நிறுத்தவேண்டும்
நார்வே அரசு தொடங்கிய பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடப்பதற்கு, இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். முதலில் தமிழர் பகுதிகளில் ராணுவம் தாக்குதலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறினேன். ராணுவ ரீதியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்-அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு என்று பிரதமர் கூறினார்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உள்ள இயக்கம் தான் மறுமலர்ச்சி தி.மு.க. என்று கூறினேன். சிங்கள அரசுக்கு இந்தியா ராணுவ ரீதியாக உதவி செய்தால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் உள்ளத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் காரணமாக வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத எண்ணங்களுக்கு அத்தகைய இளைஞர்கள் ஆளாக நேரிடும் என்றும், அப்போது என் போன்றவர்களின் பேச்சு எடுபடாமல் போகும் என்றும், காஷ்மீரில் இருக்கின்ற தீவிரவாதம் தமிழ்நாட்டில் தலையெடுத்து விடக்கூடாது என்று இந்திய நாட்டின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு நான் பிரதமரிடத்தில் கூறி வந்துள்ள கருத்தையே சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினேன்.
அதனை ஒரு சில நண்பர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று நானாக பிரதமரிடம் சொன்னேன். பிரதமர் இது பற்றி எதுவும் கேட்கவில்லை. இந்தியாவின் நலனில் உங்களுக்கு உள்ள அக்கறையை நான் நன்கு அறிவேன் என்றார் பிரதமர். இவ்வாறு வைகோ கூறினார்.