சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்..!! (கட்டுரை)

Read Time:16 Minute, 54 Second

Bur Akaba
Bur Akaba
சில நாடுகள், சபிக்கப்பட்டவையோ எனச் சிந்திக்க வைக்கும் வகையில், மனிதாபிமான அவலங்கள், அந்நாடுகளில் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. நாடுகள், பல்வேறு காரணங்களுக்காக அறியப்படுகின்றன.
அதில் சில, அவலங்களுக்காக மட்டுமே அறியப்பட்டன. அவை சபிக்கப்பட்ட நாடுகளன்று, மாறாக, திட்டமிட்டுச் சரிக்கப்பட்ட நாடுகள்.

உலகின் ஒரு மூலையில் பட்டினியால் மக்கள் சாகையில், இன்னொரு மூலையில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயனுள்ள உணவு வீணாக்கப்படுகிறது. உலகம் இவ்வாறுதான், நியாயமற்றவொன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பசியால் ஒரு மனிதன் சாவதென்பது கொடுமையானது.

உலகில் பட்டினியால் மட்டுமே நன்கறியப்பட்ட நாடு, சோமாலியா. இவ்வாரம் சோமாலியாவில், பட்டினியால் 48 மணித்தியாலங்களுக்குள் 110 பேர் மரணித்தமையானது, சோமாலியாவின் பட்டினிப் பேரவலத்தின் தீவிரத்தை, மீண்டுமொருமுறை உலகறியச் செய்துள்ளது.

சோமாலியாவில் கடந்த சில காலமாகத் தொடர்ந்த கடுமையான வரட்சி, 6.2 மில்லியன் சோமாலியர்களைப் பட்டினியில் தள்ளியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிவரங்களின்படி, 450,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், மிகவும் மோசமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இன்னொரு பேரவலத்துக்கான தொடக்கம் மட்டுமே.

கடந்த மூன்று தசாப்தங்களில், பலமுறை இலட்சக்கணக்கானோர் பட்டினிச்சாவடைந்த ஒரு நாடாக, சோமாலியா திகழ்கிறது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட பட்டினியின் விளைவால், 260,000 பேர் மரணித்தனர்.
அதற்கு முன் 1992இல் ஏற்பட்ட பட்டினியால், 300,000 பேர் இறந்தனர். அவ்வவலம், பட்டினியால் மரணிக்கும் தறுவாயில் இருக்கும் குழந்தையையும் அக்குழந்தையை உண்ணக் காத்திருக்கும் கழுகையும் காட்சிப்படுத்தும் புகைப்படத்தின் வழி, நன்கறியப்பட்டது. அப்புகைப்படமே சோமாலியாவின் அடையாளமாக, இன்றுவரை அறியப்படுகிறது.

அப்புகைப்படத்தை எடுத்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்காரரான கெவின் கார்ட்டர், மரணிக்கும் தறுவாயில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்தார் என, கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

அப்புகைப்படத்துக்கு, உயரிய புகைப்பட விருதான புலிட்சர் பரிசை வென்ற கெவின் கார்ட்டர், மன உளைச்சலின் காரணமாக, சிறிது காலத்தில் தற்கொலை செய்து கொண்டார். அப்புகைப்படம் 1993ஆம் ஆண்டில் சூடானில் எடுக்கப்பட்ட போதும், அப்புகைப்படமும் அக்காலப்பகுதியில் நிகழ்ந்த சோமாலியப் பட்டினிச் சாவுகளும், இரண்டையும் ஒன்றாக இணைத்துவிட்டன.

ஆபிரிக்காவின் கொம்பு நாடு என அறியப்பட்ட சோமாலியா, மேற்கே எதியோப்பியாவையும் வடமேற்கே ஜிபூட்டியையும் தென்மேற்கே கென்யாவையும் வடக்கே ஏடன் வளைகுடாவையும் கிழக்கே இந்து சமுத்திரத்தையும், எல்லைகளாகக் கொண்டது. 12.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு, வரலாற்று ரீதியாக முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியது.

ஆபிரிக்கக் கண்டத்திலும் மத்திய கிழக்கின் அரபுப் பிரதேசங்களிலும் நாடுகள் உருவாக்கப்பட்ட விதமானது, தேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய இன, மொழி, பண்பாடு, பொருளியல் அடிப்படை என எதையும் சார்ந்ததல்ல.

அதை விட, ஒரே இனக்குழுவைச் சேர்ந்த மக்கள், அக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்புகளில், பிற இனக்குழுவினருடன் அருகருகாக வாழ்வதையும் நிரந்தரமாக ஒரு பிரதேசத்தில் வாழாத, ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பினுள் பருவத்துக்குப் பருவம் இடம்பெயர்ந்து வாழும் மசாய் போன்ற மந்தை மேய்க்கும் இனக்குழுக்களையும் காணலாம்.

19ஆம் நூற்றாண்டில் காலனியாதிக்கவாதிகளின் வருகையின் விளைவால், ஆபிரிக்காவில் நாடுபிடிக்கும் அவா உருவானது. 1884இல் பேர்லின் இடம்பெற்ற மாநாட்டில், குரங்கு அப்பம் பிரித்த கதையாய், காலனியாதிக்கவாதிகள் தங்கள் வசதிக்கும் விருப்புக்கும் ஏற்றபடி நாடுகளைப் பிரித்துக் கொண்டனர். இதன் விளைவாக, சோமாலியாவின் ஒருபகுதியை இத்தாலியர்கள் கைப்பற்ற, இன்னொரு பகுதி, பிரித்தானியர்களின் வசமானது.

1935இல் இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி, எதியோப்பியாவின் (அப்போது அபிசீனியா என அழைக்கப்பட்டது) மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றினான். அதைத் தொடர்ந்து, பிரித்தானியக் கட்டுப்பாட்டில் உள்ள சோமாலியப் பிரதேசங்கள் சிலவற்றை, 1960 ஓகஸ்ட் 14ஆம் திகதி கைப்பற்றினான்.
இரண்டாம் உலகப் போரின் இத்தாலியின் தோல்வி, முழு சோமாலியாவும், பிரித்தானியர்கள் கைகளுக்குச் செல்ல வழியமைத்தது. அன்று காலனியாதிக்கவாதிகளால் தொடக்கப்பட்ட பிரிவினை, இன்றும் தீராத உள்நாட்டு யுத்தமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சோமாலியா, 1961இல் சுதந்திரமடைந்தபோதும், 1969 இல் நடந்த இராணுவப்புரட்சி, சோமாலியாவின் திசைவழியை மாற்றியது. விவசாயத்தில் கவனம் செலுத்தப்பட்டு, தன்னிறைவு எட்டப்பட்டது. நகர்ப்புறங்களுக்கு மட்டுமன்றி கிராமங்களுக்கும் கல்வியறிவு பரவலாக்கப்பட்டு, கல்வியறிவுமிக்க ஒரு சமூகத்தை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆபிரிக்கக் கண்டத்தில் முற்போக்கான ரீதியில், பெண்களுக்குக் கல்வியும் இராணுவப்பணியும் பிற கைத்தொழில்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆபிரிக்காவில் விரைவாக முன்னேறும் ஒரு நாடாக 1970களில் திகழ்ந்தது. சோவியத்-அமெரிக்க கெடுபிடிப் போரில் சிக்கி, எதியோப்பியாவுடன் – தவிர்த்திருக்கக்கூடிய – போரில் ஈடுபட்டு, அமெரிக்காவின் பிடிக்குள் தன்னை இழந்தது.

1991இல் தொடங்கிய உள்நாட்டு யுத்தம், ஒருபுறம் முன்னாள் பிரித்தானியக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சோமாலியாவின் வடபகுதி தனியே பிரிந்து, சோமாலிலாந்து என்ற தனிநாட்டைப் பிரகடனப்படுத்தியது. இன்றுவரை தனிநாடாகத் தன்னை சோமாலிலாந்து கருதிக்கொண்டாலும், எந்தவொரு நாடும் அதை அங்கிகரிக்கவில்லை.

ஆனால், 1991 முதல் இன்றுவரை முடிவுறாத உள்நாட்டு யுத்தமொன்று, இங்கு அரங்கேறுகிறது. இதன் விளைவால் அரசற்ற ஒரு நாடாக, சோமாலியா மாறிவிட்டது. 1998இல் வடபகுதி சோமாலியாவின் (சோமாலிலாந்துக்கு கிழக்கேயுள்ள பகுதி) பகுதியான புண்ட்லாந்து, தன்னை சுயாட்சிப் பகுதியாக அறிவித்தது. இவ்வாறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில், சோமாலியா திண்டாடுகிறது.

சோமாலியா, இவ்வாறான மோசமான நிலைக்கு, தானாக ஆளாகவில்லை என்பதை இங்கு நினைவுறுத்தல் தகும். இதை சாத்தியமாக்கிய காரணிகள் பல. 1990 முதல் போர்ப்பிரபுகளின் கைகளில், சோமாலியா இருக்கிறது. 1991இல் வெடித்த உள்நாட்டுப் போர், அந்நியத் தலையீட்டுக்கு வாய்ப்பாகிப் போனது.

சோமாலியாவில் எண்ணெய் இருப்பதை அறிந்த அமெரிக்கா, 1992இல் சோமாலியாவில் அமெரிக்கப் படைகளை இறக்கியது. இங்கு தான் முதன் முதலாக “மனிதாபிமானத் தலையீட்டின்” பெயரால் படைகள் அனுப்பப்பட்டன. அதேபோல இத்தாலி, தனது விஷத்தன்மையுடைய கழிவுகளை, சோமாலியக் கடற்பரப்பில் தொடர்ச்சியாகக் கொட்டி வந்தது.

இது 2004இல் ஏற்பட்ட சுனாமிப் பாதிப்பின் விளைவால், வெளிச்சத்துக்கு வந்தது. இக்கழிவுகள் கொட்டப்பட்டதால், சோமாலியக் கடற்பரப்பில் மீன்வளம் முற்றாக அழிந்தது. இதனால் சோமாலிய மீனவர்களின் வாழ்வாதாரம், இல்லாமல் செய்யப்பட்டது. மறுபுறம், தொடர்ச்சியான நீண்ட வரட்சிக்காலமானது, விவசாயத்தை முழுவதுமாகத் துடைத்தெறிந்தது. இவை உள்நாட்டு யுத்தத்துக்கும் அமைதியின்மைக்கும் காரணமாக அமைந்தன.

சோமாலியாவின் பூகோள அமைவிடம், உலக அரங்கின் பிரதான அங்காடிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகும். உலகளாவிய சரக்குக் கப்பற் போக்குவரத்தின் அரைவாசிக்கு மேற்பட்டதும் 70 சதவீதமான பெற்றோலியப் பொருட்களின் கடத்தும் பாதையும், சோமாலியாவின் கிழக்கில் உள்ள இந்து சமுத்திரத்தின் ஊடே நடைபெறுகிறது.
ஆபிரிக்காவின் மிகவும் நீண்ட கடற்கரையை உடைய நாடு, சோமாலியா ஆகும். 3,300 கிலோமீற்றர் நீளமுடைய சோமாலியக்கடற்பரப்பு, இந்து சமுத்திரத்தையும் அராபியத் தீபகற்பத்தையும் ஹோமுஸ் ஜலசந்தியையும் உள்ளடக்கியது.

இவ்வகையில், ஆபிரிக்காவினதும் இந்து சமுத்திரத்தினதும் ஆதிக்கத்துக்கான முக்கியமான கேந்திர நிலையங்களில் ஒன்றாகவும், சோமாலியா உள்ளது. இதன் விளைவால் கடந்த இருபது ஆண்டுகளாக, அரசற்ற நிலையில் சோமாலியா வைக்கப்பட்டுள்ளது.

அரசற்ற நிலையில் சோமாலியக் கடற்பரப்பை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, மேற்குலக நாடுகளுக்குக் கிடைத்தது. இதனால் உள்ளூர் மீனவர்கள், தொழில்களை இழந்தனர். விளைவு: பட்டினிக்கு அடுத்தபடியாக, உலகளாவிய ரீதியில் சோமாலிய அறியப்பட்ட கடற்கொள்ளையர்களின் தோற்றத்துக்கு வித்திட்டது.

ஆபிரிக்காவின் வளங்களும் கப்பற் போக்குவரத்தின் பிரதான பகுதியாகிய இந்து சமுத்திரத்தின் கட்டுப்பாட்டுக்கான தேவையும், தவிர்க்கவியலாமல் சோமாலியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளன. குறிப்பாக, ஆபிரிக்காவின் மீதான செல்வாக்குக்கான அமெரிக்க-சீனப் போட்டி, வேறொரு வடிவில் இங்கு நிகழ்கிறது.

1992இல் படைகளை அனுப்பியது முதல், சோமாலியாவை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால்,ள இன்றுவரை அது சாத்தியமாகவில்லை.

இன்று “பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தின்” கோட்பாட்டுருவாக்கமான இஸ்லாத்துக்கெதிரான மேற்குலகின் போர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலின் பின்னணியில் தொடங்கினாலும், இது முதலில் அரங்கேறியது சோமாலியாவிலேயே ஆகும்.

1993இல் சோமாலியாவின் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய அமெரிக்கப் படைகள், அவமானகரமான தோல்வியைச் சந்தித்தன. சோவியத் ரஷ்யாவின் மறைவின் பின்னரான அமெரிக்கா தலைமையிலான ஒருமைய உலகில், அமெரிக்கா சந்தித்த முதலாவது இராணுவத் தோல்வியாகும்.
இது அமெரிக்காவுக்கு, ஆபிரிக்கா தொடர்பிலும் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பிலும், பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

சோமாலியாவின் அரசற்ற நிலையும் இஸ்லாமியத் தீவிரவாதச் சிந்தனைகளின் எழுச்சியும், பல்வேறு குழுக்களின் வளர்ச்சிக்கும் அல்கைடா காலூன்றுவதற்கும் வழிவகுத்தது. 2006இல், அல் ஷபாப் என்ற பயங்கரவாதக் குழுவின் தோற்றம் நிகழ்ந்தது. பெரும்பான்மையான சோமாலியர்கள், சூவ்பி இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்.

ஆனால் அல் ஷபாப், சவூதி அரேபியாவின் வஹாபிசத்தை பின்பற்றுபவர்கள். இவ்வகையில் இப்பயங்கரவாதக் குழுவின் தோற்றத்துக்கும் இருப்பிற்கும் சவூதி அரேபியாவின் பங்களிப்பை மறுத்திடவியலாது. அவ்வகையில் சோமாலியாவில் செல்வாக்குச் செலுத்தும் ஓர் இயக்கமாக அல் ஷபாப் இருப்பதோடு, அல்கைடாவுடன் இணைந்து அது செயற்படுகிறது.

இவையனைத்தினதும் பின்புலத்திலேயே, சோமாலியாவின் இன்றைய நெருக்கடியை நோக்கல் தகும். சந்திரனில் மனிதன் வசிப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும் உலகில் தான், பட்டினி இன்னமும் கால்நீட்டிப் படுத்திருக்கிறது. ஆபிரிக்காவுக்கான ஆவல் முனைப்படைந்துள்ள நிலையில், சோமாலியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

உலக அரசியல் அரங்கில் பசி, பட்டினி உள்ளிட்ட அனைத்தும் ஏதோ ஒரு வகையில், தலையீட்டுக்கும் அதிகாரத்துக்குமான கருவிகளாகின்றன. மனிதாபிமானப் பேரவலம், இன்னொரு வகையில் இன்னொரு களத்தில் இப்போது அரங்கேறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்….!!
Next post துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் பலி..!!