போலிச் செய்திகளும் எதிர்காலமும்..!! (கட்டுரை)
இந்தப் பத்தியாளர், உணவகமொன்றில் சில நாட்களுக்கு முன்னர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, மத்திய வயதைக் கொண்ட மூவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகவும் அதன் பின்விளைவுகள் தொடர்பாகவும் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த உரையாடலின் ஒரு பகுதி, கீழே வருமாறு: நபர் 1: “இந்தியச் சட்டத்தின்படி, 3 தடவைகள் ஒரு மாநில முதலமைச்சராக இருந்தவர், பிரதமராக வர வேண்டுமென்று இருக்கு. அதால தான் ஜெயலலிதாவ, [மத்திய அரசாங்கம்] போட்டது”
நபர் 2 “எல்லாம், அவங்கள் [பா.ஜ.க], தமிழ்நாட்டுக்குள்ள வாறதுக்குத் தான் நடக்குது”
நபர் 3: “ஓ.பி.எஸ் கூட, அவங்கட ஆள் தான். அவருக்கும் முதலமைச்சர் ஆகிறதுக்கு எந்தத் தகுதியும் கிடையாது”. இந்தக் கலந்துரையாடலில், ஓ.பன்னீர்செல்வம் பற்றிய 3ஆவது நபரின் கருத்தைத் தவிர, ஏனைய அனைத்தும், உறுதிப்படுத்தப்படாத கருத்துகள். முதலமைச்சர் பதவிக்கு அவர் பொருத்தமில்லை என்பது, தனிப்பட்ட கருத்து. அப்படியானால், ஏனைய கருத்துகள் ஏன் பகிரப்பட்டன என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறான கருத்துகள், காலங்காலமாகப் பகிரப்பட்டு வருவது வழக்கமானது தான்.
ஆனால், இணையத்தளங்களின் வருகையின் பின்னர், இவற்றுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. உறுதிப்படுத்தப்படாத எந்தக் கருத்தையும், நம்பிக்கையுடன் வெளியிடுவதற்கு முடிகிறது. அவ்வாறான இணையத்தளங்களின் வருமானமும், அதிகளவில் காணப்படுகிறது. மேலே கூறப்பட்ட கலந்துரையாடல், 100 சதவீதம் பொய்யானது என்று கூற முடியாது.
ஆனால், ஜெயலலிதாவுக்கு ஏற்கெனவே காணப்பட்ட நோய்கள் காரணமாக, அவரது மரணமென்பது, ஏனையோரை விட முன்னதாகவே நிகழ்வதில் அதிசயமில்லை. அப்படி அவரது மரணத்தில் ஏதாவது பின்புலச் சதி காணப்பட்டாலும், மத்திய அரசாங்கம், நேரடியாக அதில் ஈடுபட்டது என்பதற்கு, எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது. தவிர, 3 தடவைகள் முதலமைச்சராக இருந்தவர், பிரதமராக ஆக வேண்டுமெனச் சட்டம் கிடையாது. உண்மையில், இறக்கும் போது அவர் 5ஆவது தடவையாக முதலமைச்சராகப் பதவி வகித்திருந்தார். கலைஞர் கருணாநிதியும், 5 தடவைகளே ஆட்சி புரிந்திருந்தார்.
எனவே, அப்படிச் சட்டம் இருந்திருந்தால், இருவருமே இந்தியப் பிரதமர்களாகியிருக்க வேண்டும். எம்மைச் சுற்றி நடக்கின்ற எல்லாமே, ஏதாவொரு காரணத்தால் நடக்கிறது எனவும் அவை சாதாரணமாக இல்லை எனவும் உறுதியாக நம்புவதை, சதிக் கோட்பாடு என்பர். அதாவது, உலகத்தில் தானாக எதுவும் நடப்பதில்லை, எல்லாமே ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதாகவே நடக்கின்றது என்பது, இதன் நம்பிக்கை. செப்டெம்பர் 11 தாக்குதல், ஐக்கிய அமெரிக்காவால் வேண்டுமென்று நடத்தப்பட்டது என்பது, அவ்வாறானதொரு நம்பிக்கை. அந்தத் தாக்குதல் தொடர்பான சந்தேகங்கள் எழுந்திருந்தமை, யதார்த்தமானது.
ஆனால், அது தொடர்பான விளக்கங்கள், தெளிவாக வழங்கப்பட்டன. விஞ்ஞானிகளும் அதை விளக்கியிருந்தனர். ஆனால் அதன் பின்னரும், அந்தத் தாக்குதல், வேண்டுமென்றே ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்டது என நம்புவது, இவ்வாறான ஒன்று. சந்திரனில் கால் வைத்திருக்கவில்லை, அது நாடகம் என்பது, அடுத்த ஒன்று. சந்திரனில் காலடி எடுத்து வைக்கும் போது, அங்குள்ள ஐக்கிய அமெரிக்கக் கொடி, எவ்வாறு அசைகிறது என்ற கேள்வி எழுவது யதார்த்தமானது. ஆனால், அதுபற்றி விளக்கங்களை வழங்கிய பின்னரும், சந்திரனில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுவது பொய் என்று கூறுவது, சதிக் கோட்பாடே.
சில சதிக் கோட்பாடுகள், உயிர் ஆபத்தைக் கூட ஏற்படுத்தக்கூடியன. 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலிச் செய்திகளின் தாக்கம், உயர்ந்தளவில் காணப்பட்டது. அவற்றின் ஓர் அங்கமாக, ஹிலாரி கிளின்டனின் பிரசாரக் குழுத் தலைவர் ஜோன் பொடெஸ்டாவின் மின்னஞ்சல்கள், விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பிட்ஸா பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் காணப்பட்டது, பாலியல் தேவைகளுக்காகச் சிறுவர்கள் கடத்தப்படுவது பற்றிய செய்தியே எனவும் சங்கேத மொழியைப் பயன்படுத்தி அது உரையாடப்பட்டிருப்பதாகவும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கடும்போக்கு வலதுசாரிகள் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பின்னர் நியமிக்கப்பட்ட மைக்கல் பிளின், அவ்வாறான ஒன்று உண்மையானது என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தார். பின்னர் கடந்தாண்டு டிசெம்பர் 4ஆம் திகதி, இவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட உணவகம் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பாக நேரடியாக ஆராயும் பொருட்டே, அத்தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதல் நடத்தியவர் குறிப்பிட்டிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக, அந்த உணவகத்தின் நில அறையிலேயே, இந்த நடவடிக்கை இடம்பெறுவதாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த உணவகத்தில் நில அறையே கிடையாது என்பது தான் உண்மையானது.
இவ்வாறான சதிக் கோட்பாடுகளும் பொய்யான செய்திகளும், ஜனநாயகத்தின் மீதும் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதும் நாட்டின் சட்டம் – ஒழுங்கு மீதும், பாரிய சவாலாகக் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, பிரபலமான உண்மையான செய்தி நிறுவனங்களின் பிரபலமான செய்திகளுக்கு, பேஸ்புக்கில் கிடைத்த வரவேற்பை விட, சிறிய சிறிய இணையத்தளங்களின் பொய்யான செய்திகளுக்கு, அதிக வரவேற்புக் கிடைத்திருந்தது என, தரவுகள் உறுதிப்படுத்தியிருந்தன. இவையும், அந்தத் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தியிருந்தன.
இவ்வாறு, போலியான செய்திகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம், புதிதானது கிடையாது. காலங்காலமாகவே, இந்தச் செய்திகள், மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. புளிய மரத்தடியில் பேய் இருக்கிறது என்பது தொடங்கி, இரவில் பலகாரங்கள் கொண்டு சென்றால் பேய் தாக்கும் என்பது வரையில், இவ்வாறான தவறாக வழிநடத்தும் செய்திகள், எப்போதும் பரவியிருக்கின்றன. ஆனால், இப்போதுதான் அவை, பரவலாகியிருக்கின்றன என்று கருதமுடியும். இணையத்தளங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து, பிரதான ஊடகங்களுக்கென மாத்திரம் காணப்பட்ட பிரத்தியேகத் தன்மை, உடைத்தெறியப்பட்டது.
கருத்துச் சுதந்திரம், பல தரப்புக் கருத்துகளையும் உள்வாங்குதல் என்ற அடிப்படையில், இந்த மாற்றமென்பது, முக்கியமானதான ஒன்றாக அமைந்தது. பிரதான ஊடகங்களால், தங்களுக்குப் பிடிக்காத செய்திகளையெல்லாம், இனிமேலும் மறைத்து வைக்க முடியாது. ஆனால், மறுபக்கமாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்களெல்லாம், செய்திகளாகப் பரவிப் போயின. அதிகமான கவனம் திரும்ப வேண்டுமென்பதற்காக, நம்புவதற்குக் கடினமான விடயங்களையெல்லாம், எவ்வளவு திறமையாகக் கூற முடியுமோ, அப்படியெல்லாம் கூறப்பட்டன. ஊடக தர்மத்தின்படி தவிர்க்கப்பட வேண்டிய தனிப்பட்ட விடயங்களெல்லாம் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான புதிய ஊடகங்களால் சவால்களை உணர்ந்த பிரதான ஊடகங்களும், அவற்றின் வழியையே கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த திங்கட்கிழமை களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்த சமயங் என்பவரின் உடல், பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம், சில பத்திரிகைகளின் பிரதான செய்தியின் பிரதான புகைப்படமாகப் பயன்படுத்தப்பட்டதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது, இவ்வாறான மோசமான செயற்பாடுகள், ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன. இதற்கான தீர்வுகள் என்னவென்பது, சிக்கலான பதிலாக அமையும். ஆனால், மக்களின் நிராகரிப்பு என்பது, முக்கியமான ஒன்றாக அமையும்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள் எவற்றையும் மக்கள் நிராகரிக்க ஆரம்பித்தால், இவற்றின் பரவல் குறைவடையும். “இந்தியர்கள் அனைவரும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டும் என, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்” அறிவிப்பு என்றொரு செய்தி காணப்பட்டால், “எங்கு வைத்து அதைச் சொன்னார்?”, “எப்போது அதைச் சொன்னார்?” போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். முடியுமானால், இவ்வாறான அதிர்ச்சிகரமான விடயங்களை, ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று இடங்களில் உறுதிப்படுத்திக் கொள்வது, சாலச்சிறந்தது. ஊடகங்களைப் பொறுத்தவரை, இவ்வாறான விடயங்களைத் தவிர்த்து, அல்லது அது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதைக் கடமையாக மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
இவ்வாறான தெளிவூட்டல் இடம்பெற வேண்டுமாயின், ஊடகவியலாளர்களுக்கான தெளிவு தேவைப்படுகிறது. ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றும் போது, இந்தப் பணி இலகுவாகும். போலிச் செய்திகளும் சதிக் கோட்பாடுகளும், நீண்டகால நோக்கில், எமது சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன. எனவே, இது தொடர்பில் உரிய கவனத்தைச் செலுத்தி, எதிர்காலத்தைக் காப்பது, எம்மனைவரினதும் கடமையாக இருக்கின்றது என்பது தான் உண்மை, தேவை.
Average Rating