கரையோர மாவட்டத்தை காணவில்லை..!! (கட்டுரை)

Read Time:19 Minute, 30 Second

201607301051528944_thenpennai-river-flooding-5-District-inshore-people-warning_SECVPFகிணற்றைக் காணவில்லை’ என்று நடிகர் வடிவேலு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதும், அதற்குப் பின்னரான காட்சிகளும் திரைப்படமொன்றில் பிரபலமான நகைச்சுவையாகும். முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி கடைசியில், வேலையைத் தூக்கியெறிந்து விட்டுச் செல்வதாக அந்த நகைச்சுவை நிறைவடையும். சினமாவும் நிஜவாழ்க்கையும் அத்தனை அந்நியப்பட்டவையல்ல. பல தசாப்தங்களாக முஸ்லிம் காங்கிரஸ் தூக்கிப் பிடித்து வந்த கரையோர மாவட்டக் கோரிக்கையானது, அந்தக் கட்சியின் கடந்த 27ஆவது பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களில் காணாமல் போயுள்ளது.

மு.காவின் முன்னைய பேராளர் மாநாடுகள் அனைத்திலும் கரையோர மாவட்டக் கோரிக்கைக்கான தீர்மானம் இருந்து வந்தது. ஆனால், இம்மாதம் நடைபெற்ற மு.காவின் பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களில் கரையோர மாவட்டம் காணாமல் போயுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற, மு.காவின் 26ஆவது பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களிலும் கரையோர மாவட்டக் கோரிக்கை இருந்தது.

அந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், கரையோர மாவட்டத்தினை வலியுறுத்தும் தீர்மானமும் அடங்கியிருந்தது. ‘கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட, தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது’ என, அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன் கதைச் சுருக்கம் முதலில் நாம் கரையோர மாவட்டம் என்றால் என்ன என்பதையும், அந்தக் கோரிக்கையின் பின்னணி வரலாற்றினையும் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் சுமார் 61 சதவீதமாக உள்ளனர்.

ஆனால், இந்த மாவட்டத்தின் நிர்வாகம் முற்றுமுழுதாகச் சிங்களவர்களிடம்தான் இருக்கிறது. அம்பாறை மாவட்டக் கச்சேரியானது, சிங்களவர்கள் நூறு சதவீதமாக வாழும் அம்பாறை நகரத்தில் அமைந்திருக்கிறது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகச் சிங்களவர்கள்தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பெரும்பான்மையாக இந்த மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் மக்கள், தங்கள் நிருவாகச் செயற்பாடுகளைத் தமது சொந்த மொழியில் மேற்கொள்ளும் போது, அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆகையினால், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொத்துவில், கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாக, கரையோர மாவட்டம் ஒன்றினை உருவாக்கித்தர வேண்டும் என்பது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அம்பாறை மாவட்டமானது 1961ஆம் ஆண்டுக்கு முன்னதாக இருக்கவில்லை. இப்போதுள்ள அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்தன. 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அம்பாறை மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட சில பகுதிகளும், வேறு சில பிரதேசங்களும் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் ஆரம்பம் முதலாக, முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையாக இருந்து வருகின்றனர். 1963ஆம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்களின்படி, இந்த மாவட்டத்தில் 46.11 சதவீதமான முஸ்லிம்கள் இருந்தனர். சிங்களவர்கள் 29.28 சதவீதமாக வாழ்ந்தனர். ஆனால், 2012 ஆம் ஆண்டின் அறிக்கைகளின் பிரகாரம், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வீகிதாசாரமானது 43.53 ஆக குறைவடைந்தது.

சிங்களவர்கள் 38.73 சதவீதமாக அதிகரித்தனர். 1963இல் 23.23 சதவீதமாவிருந்த இலங்கைத் தமிழர்கள், 2012ஆம் ஆண்டு 17.40 சதவீதமானார்கள். ஆட்சியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்களின் குடியேற்றங்கள் இந்தச் சனத்தொகை மாற்றங்களுக்குக் காரணமானது. உறுத்தல் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நிலைவரமானது, சிங்களப் பேரினவாதிகளுக்கு கண்ணுக்குள் விழுந்த தூசியாகக் கரித்துக் கொண்டே வருகிறது. எப்படியாவது இந்த மாவட்டத்தைச் சிங்களவர்களின் பெரும்பான்மைக்குள் கொண்டுவர வேண்டுமென்பதில், பேரினவாதிகள் குறியாக இருக்கின்றனர்.

இதனை நிறைவேற்றுவதற்கு அவர்கள் திட்டமிட்டு உழைத்து வருகின்றார்கள். ஒரு காலகட்டத்தில் பேரினவாதிகளின் இந்த ஆசை பலிக்கும் அபாயமுள்ளது. சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டதாக, அம்பாறை மாவட்டம் மாறும் என்கிற அச்சம், தமிழ்பேசும் மக்களிடம் இருக்கிறது. அதனால், கரையோர மாவட்டத்தின் தேவை தவிர்க்க முடியாததாக உள்ளது.

கரையோர மாவட்டம் என்பதைக் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸ் தூக்கிப் பிடித்து வந்தபோதிலும், அந்தக் கோரிக்கையானது உண்மையில் முஸ்லிம் காங்கிரஸுடையது அல்ல; முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சி உருவாகுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, கரையோர மாவட்டக் கோரிக்கை உருவாகி விட்டது. இலங்கையில் 1955ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க நிருவாகச் சட்டத்தின் கீழ், 20 மாவட்டங்கள்தான் இருந்தன.

மொனராகல, அம்பாறை, முல்லைத்தீவு, கம்பஹா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் பின்னர் உருவாக்கப்பட்டன. நியாயப்படி நடந்திருந்தால், கிளிநொச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டபோதே, கரையோர மாவட்டமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது எழுந்த அரசியல்வாதிகளின் இனவாதக் கூச்சல்களினால், கரையோர மாவட்டம் இல்லாமல் போயிற்று. 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர். ஜனவர்த்தனவினால் அப்போது நியமிக்கப்பட்ட ‘மொரகொட எல்லை நிர்ணய ஆணைக்குழு’வானது, கரையோர மாவட்டத்தினை உருவாக்குவதற்கு சிபாரிசு செய்தது.

அம்பாறை மாவட்டத்திலிருந்து கரையோர மாவட்டமும் யாழ்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டமும் உருவாக்கப்பட வேண்டுமென்று, அந்த ஆணைக்குழு பரிந்துரைத்தது. ஆனால், கரையோர மாவட்டம் உருவாக்கப்படுவதற்கு, அப்போது அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராவிருந்த பி. தயாரத்ன, கடும் எதிர்ப்பினை வெளியிட்டார். அதனால், ‘மொரகொட எல்லை நிர்ணய ஆணைக்குழு’வின் கரையோர மாவட்டப் பரிந்துரை கைவிடப்பட்டது.

அதிர்ச்சி ஆயினும், கரையோர மாவட்டக் கோரிக்கையினை முஸ்லிம்கள் கைவிடவில்லை. அதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனாலும், முஸ்லிம்களின் கணிசமான ஆதரவினைக் கொண்டதும், அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளதுமான முஸ்லிம் காங்கிரஸ், கரையோர மாவட்டக் கோரிக்கையினை, தனது பேராளர் மாநாட்டுத் தீர்மானத்தில் கைவிட்டுள்ளமையானது, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களுக்கு பாரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் பற்றிய பேச்சுக்கள் எழுந்த போதெல்லாம், முஸ்லிம்கள் சார்பில் கரையோர மாவட்டக் கோரிக்கையும் உரத்துப் பேசப்பட்டு வந்துள்ளது.

கரையோர மாவட்டமொன்றின் உருவாக்கத்தினூடாகவே, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமொன்றினைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அத்துணை முக்கியமான கரையோர மாவட்டக் கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் தனது பேராளர் மாநாட்டுத் தீர்மானத்தில் கைவிட்டுள்ளமையானது, தவறுதலாக நடந்ததொரு விடயமாக இருக்க முடியாது.

அபத்தம் கரையோர மாவட்டக் கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு கைவிட்டமைக்கான காரணம் குறித்து, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸிடம் “மு.காவின் பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களில் கரையோர மாவட்டக் கோரிக்கை ஏன் கைவிடப்பட்டது” என, அண்மையில், தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பதிலளிக்கையில் “பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவில்லை.

அதனால், மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை” என்றார். மேலும் அவர் கூறுகையில், “மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் மாநாட்டில் என்ன தீர்மானங்கள் முன்மொழியப்படவுள்ளன என்று தெரிந்திருக்காது. கட்சியிலுள்ள ஒரு குழுவினர்தான் மாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரித்தனர்” என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் இந்தப் பதில் முதிர்ச்சியற்றதாகும். மு.காங்கிரஸின் பேராளர் மாநாடு என்பது அந்தக் கட்சிக்கு மிக முக்கியமானதாகும்.

மு.காவின் நிருவாகத் தெரிவு உள்ளிட்ட அனைத்து முடிவுகளுக்கும் பேராளர் மாநாட்டில்தான் அங்கிகாரம் பெறப்படுகிறது. இவ்வாறானதொரு மாநாட்டில் வாசிக்கப்பட்ட தீர்மானம் குறித்து, கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான தான், முன்னராக அறிந்திருக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹரீஸ் கூறுகின்றமை போல், பேராளர் மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பில் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை என்றால், அதுபற்றிக் குறித்த உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் கேட்டிருக்க வேண்டும்.

பேராளர் மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பாக உயர்பீடக் கூட்டத்தில் ஆலோசிக்குமாறு ஹரீஸ் வலியுறுத்தியிருக்க வேண்டும். இவற்றினைச் செய்யாமல், “எனக்குத் தெரியாது” என்று கூறுவது, ஹரீன் அரசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகிறது என, சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. “பேராளர் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை, முன்னதாக நான் அறிந்திருக்கவில்லை” என்பதுடன் ஹரீஸ் முடித்திருந்தாலும் பரவாயில்லை.

ஆனால், “தலைவருக்கும் அது குறித்து தெரிந்திருக்கவில்லை” என்று ஹரீஸ் கூறியமைதான், கடுமையான விமர்சனங்களால், அவர் வெளுத்து வாங்கப்படக் காரணமாக அமைந்துள்ளது. அலட்சியம் இன்னொருபுறம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறுகின்றமை உண்மையாயின், அது குறித்தும் இங்கு கவலைப்பட வேண்டியுள்ளது. கட்சியொன்றின் பேராளர் மாநாட்டில் என்ன தீர்மானங்கள் முன்மொழியப்படவுள்ளன என்பதை, அந்தக் கட்சியின் தலைவரே அறியாதவராக இருப்பதென்பது மிகவும் பாரதூரமானதொன்றாகும். எனவே, ஹரிஸின் மேற்படி பதில் குறித்து மு.கா தலைவர் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளமையினையும் இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது.

‘முஸ்லிம்களின் கட்சி’ என்கிற பெயரினை அரசியலரங்கில் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸுக்கு, முஸ்லிம் சமூகம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்புகள் உள்ளன. அதேபோன்று, முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பாகப் பொறுப்புக் கூற வேண்டிய தேவை, அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் ஹரீஸ் போன்ற பிரதித் தலைவர்களுக்கு அதிகமாக உள்ளது. அவ்வாறான பொறுப்புணர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் மேற்கண்ட பதிலில் காண முடியவில்லை. “எனக்கு அது பற்றித் தெரியாது” என்று கூறுவதனூடாக, பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது.

கரையோர மாவட்டக் கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டுள்ளமை தொடர்பில், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நாடாளுமன்றப் பிரதிநிதியாகவுள்ள ஹரீஸ், இப்படி அலட்சியமாகப் பதில் சொல்கின்றமையினை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு தகைமையுள்ள கட்சியாக, தன்னைத் தானே முஸ்லிம் காங்கிரஸ் அடிக்கடி பிரகடனம் செய்கின்றமையினை கண்டு வருகின்றோம். அப்படியானால், அதற்கேற்ற வகையில் அந்தக் கட்சியின் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

கரையோர மாவட்டக் கோரிக்கையினை தனது பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களில் மிகத் திட்டமிட்டே முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தவிர்த்துள்ளது என்கிற சந்தேகம் மு.காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடம் உள்ளமை குறித்தும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. யாரோ ஒரு தரப்பை சந்தோசப்படுத்துவதற்காக அல்லது யாரோ ஒரு தரப்புடன் சமரசம் செய்து கொள்வதற்காக கரையோர மாவட்டக் கோரிக்கையினை மு.கா தலைமை கைவிட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசிக்கொள்கின்றனர்.

இதேபோன்று, முஸ்லிம்களின் தனியலகுக் கோரிக்கையினையும் எதிர்காலத்தில் மு.காங்கிரஸ் கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மு.காவின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் விசனத்துடன் நம்மிடம் கருத்துத் தெரிவித்தார். அப்போதும், ‘அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்றுதான் ஹரீஸ் கூறுவாரா எனவும், மு.காவின் அந்த முக்கியஸ்தர் கேள்வியெழுப்புகின்றார். கரையோர மாவட்டம் என்பது, வடிவேலுவின் கிணறு போன்றதல்ல. அது முஸ்லிம் சமூகத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் இருப்பினை, கரையோர மாவட்டம் மூலமாகத்தான் உறுதி செய்து கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி- 2 டிரைலர்..!!
Next post 350 காதலிகளுடன் சொகுசு வாழ்க்கை..!!