முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும்..!! (கட்டுரை)
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் அனுமதிக்கவில்லை.
இதற்கெதிராகக் குட்டிமணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தார். குட்டிமணியின் மனுவினை எதிர்த்து சிறைச்சாலைகள் ஆணையாளர் சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார் நாயகம், “குட்டிமணியை சிறைச்சாலையைவிட்டு நாடாளுமன்றம் செல்வதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிடும் அதிகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை” என்ற பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்தார்.
இந்தப் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குட்டிமணியின் மனுவினைத் தள்ளுபடி செய்தது. இதனால் குட்டிமணியினால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியாது போனது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரானவர் தெரிவுசெய்யப்பட்டு அல்லது நியமனம் செய்யப்பட்டு மூன்றுமாத காலத்துக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விதியிருந்தது. குட்டிமணியினால் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்றுமாத காலத்துக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்பட முடியாமையினால் அவர் மூன்று மாத காலம் நிறைவடைவதற்கு முன்னதாகத் தனது நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.
குட்டிமணி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. உண்மையில், மரணதண்டனைக் கைதியான குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராவதில் சட்டக் குழப்பங்களும் சிக்கல்களும் நிறையவே இருந்தன. ஒரு சட்டத்தரணியான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதனை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும், ஆனாலும், ஓர் அரசியல் சித்துவிளையாட்டாகவே அவர் இந்த நியமன முயற்சியைப் பார்த்தார் என்று அமிர்தலிங்கத்தை விமர்சிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குட்டிமணியை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், அதனைச் சமாளிக்கவே நடைமுறைச் சாத்தியமற்ற இந்த நியமனத்தை அவர் செய்ததாக விமர்சிப்பவர்களும் உளர். ஆனால், அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைக்கு சார்பாகக் கருத்துரைப்பவர்கள், தமிழர் ஒருவர் நிச்சயம் நடைமுறைச் சாத்தியத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவதானது, ஓர் அடையாள ரீதியிலான அம்சமாகவே அமையுமன்றி, அதனால் நேரடி விளைபயன் ஒன்றுமிருக்கப் போவதில்லை.
மாறாக, ஏறத்தாழ ஒரு வருடமளவுக்குத் தொடர்ந்து ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அதிக சாத்தியப்பாடுள்ள ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு மறைமுகமாகவேனும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால், அதன் மூலம் ஜே.ஆர் அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவதொரு குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமிர்தலிங்கம் தரப்பு எண்ணியதால்தான் தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை என்று தமது வாதத்தை முன்வைக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆகலாமா? எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம், தேர்தலில் போட்டியிடும் ஒரே தமிழராகக் களமிறங்கியிருந்தார். இந்த இடத்தில் இலங்கையில், குறிப்பாகத் தமிழர்களிடையே காணப்படும் பொதுவான, தவறான புரிதலொன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, இலங்கையில் தமிழர் அல்லது சிங்கள-பௌத்தரல்லாத சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது; அல்லது ஜனாதிபதியாக முடியாது என்ற நம்பிக்கை இலங்கையில் பரவலாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இந்தத் தவறான நம்பிக்கை விதை கொண்டதற்கு இலங்கை அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தினைப் பற்றிய தவறான புரிதல் ஒரு காரணமாக இருக்கலாம்.
இலங்கைக் குடியரசானது, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடமையாகும். அதேவேளை, 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலம் ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்து (2ம் அத்தியாயம்) குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின்படி, அவை தொடர்பில் அரசாங்கத்துக்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகிறது.
இந்தச் சரத்தை இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாதபடி அரசியலமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது இந்த ஒன்பதாவது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால் வெறுமனே நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது, அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மை பெறப்பட்டு அதைச் ஜனாதிபதி 80 ஆம் சரத்தின்படி சான்றளிக்கும் பட்சத்திலேயே இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும். இந்தச் சரத்துதான் இலங்கையில் பௌத்தரல்லாதவர் ஜனாதிபதியாக முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கும் எழுவதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயமாக பௌத்தரல்லாத ஒருவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் ஜனாதிபதியாக முடியும், அது தொடர்பில் எந்தக் கட்டுப்பாடுமில்லை.
1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டது முதல் கடைசியாக 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டது வரை சில தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆக அரசியலமைப்பில், பலரும் எண்ணுவதுபோன்ற, ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்? இந்தத் தர்க்கத்தைப் புரிந்தாலே அத்தகைய நம்பிக்கை பிழை என்பது தெரிந்துவிடும்.
ஆனால், இனவாரியாகப் பிளவுபட்ட இலங்கையின் வாக்குவங்கியைக் கருத்தில் கொள்ளும்போது, சிறுபான்மையினத்தவர் ஜனாதிபதியாவது வாக்கு வங்கியரசியலில் நடைமுறைச் சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான தடை எதுவுமில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைமுறை முதலாவது ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிய விவரங்களைக் காண்பதற்கு முன்பதாக, ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது, ஜனாதிபதி எவ்வாறு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார் என்று பார்ப்பது சாலப் பொருத்தமாகும்.
இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் 94 ஆவது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடாத்தப்படும். இதன் பிரகாரம் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது முதலாவது மற்றும் இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து மூன்றாவது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம்.
உதாரணமாக, அ,ஆ,இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம். வாக்குகளின் எண்ணிக்கையில் முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.
இலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பெண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப்பெற்றே ஜனாதிபதிகள் தெரிவானார்கள். ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 வீதம் அல்லது அதற்கு மேல் பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
இதன் பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால் அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். மேலும், அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது மூன்றாம் விருப்பு வாக்கு இருந்தால் அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இம்முறையின் பின்னும் இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும்.
அந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு ‘லொத்தர்’ (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இதுதான் 1978 இலிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறை. ஜே. ஆரை ஆதரித்த தொண்டா தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நேரடியான மற்றும் வெளிப்படையான ஆதரவினைப் பெற ஜே.ஆர் முயன்றிருந்தாலும் அதனை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜே.ஆருக்கு வெளிப்படையாக முழுமையான ஆதரவினைத் தந்தது. ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் 1982 ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு முழுமையான ஆதரவினைத் தந்தார். இணக்க அரசியல் என்பதிலும், இணக்க அரசியலூடாகத் தன்னுடைய மக்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்பதிலும் சௌமியமூர்த்தி தொண்டான் தெளிவாக இருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் அதனது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவுடனும் தொண்டமானுக்கு ஓரளவு கசப்பான உறவே இருந்தது எனலாம். இதற்கு 1972 இல் பெருந்தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டபோது நடைபெற்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம். பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, ஹெக்டர் கொப்பேகடுவ “தொண்டமான் ஓர் இந்தியன்; அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம். இலங்கை விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்று அவர் சொல்லித்தர அனுமதிக்க முடியாது” என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரிப்பது என்பது சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு சுமுகமானதொன்றாக இருந்திராது. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி போல, தேர்தலைப் புறக்கணிக்கும் அரசியல் செய்வதும் தொண்டமானின் அரசியல் பாணிக்கு உவப்பானதொன்றல்ல. எதிர்ப்பரசியல் மீது அவருக்குப் பெரிதான நாட்டம் ஒருபோதும் இருந்ததில்லை.
எதிர்ப்பு என்பதைச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுங்கால நடவடிக்கையாகக் கைக்கொள்ளும் தொழிற்சங்கவாதியாகவே அவர் இருந்தாரேயன்றி, விடுதலைப் போராட்டம், உரிமைகளுக்கான நீண்டகால எதிர்ப்பரசியல் என்பவற்றின் மீது அவருக்கு நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும், தார்மீக ரீதியான ஆதரவினைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் அவ்வப்போது வழங்கியமையையும் மறுக்க முடியாது. தொண்டமான், ஜே.ஆருக்கு ஆதரவு வழங்கியமை, ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். மலையகப் பகுதிகளில் இடம்பெற்ற பிரசாரங்களின்போது, தொண்டமான் மீதான தனிநபர் தாக்குதல்களை கொப்பேகடுவ நிகழ்த்தினார்.
“எங்களது அரசாங்கம் தொண்டமானின் பெருந்தோட்ட சாம்ராச்சியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்போது அமைதியாக இருந்த தொண்டமான் இப்போது அமைச்சர் என்ற கோதாவில் பெரும் ஆட்டம் ஆடுகிறார். நான் ஜனாதிபதியானால், அவரிடம் எஞ்சியுள்ள பெருந்தோட்டங்களும் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவரை இந்நாட்டிலிருந்தும் வெளியேற்றுவோம்” என்று கொப்பேகடுவ ஆவேசம் காட்டினார்.
இது இவ்வாறிருக்க, ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தமிழருக்கெதிரான அநீதிகளும் வன்முறைகளும் அதிகரித்திருந்த நிலையில், வடக்கு-கிழக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு சாதகமான அலையொன்று ஏற்பட்டிருந்தது.
( அடுத்த வாரம் தொடரும் )
Average Rating