நடிகர் தவக்களை சென்னையில் காலமானார்..!!
‘முந்தானை முடிச்சு’, ‘ஆண்பாவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தவக்களை இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு.
1983 ஆம் ஆண்டு ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ’முந்தானை முடிச்சு’ படத்தைப் பார்த்திருப்பவர்கள் அதில் கதாநாயகி நடித்திருந்த ஊர்வசியையும் அவருடன் இணைந்து நடித்திருந்த மூன்று பொடியன்களையும் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள். இப்பொடியன்களை விலக்கி வைத்துவிட்டு அப்படத்தை நிச்சயமாக எவராலும் ரசித்திருக்கமுடியாது. அவ்வாறு ஒரு வெற்றிக் கூட்டணியாக படம் முழுக்க கலாய்த்தவர்கள் இச்சிறுவர்கள்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்தான் தவக்களை என்ற சிறுவன். படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது. அத்துடன் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேல் ஓஹோவென படங்களில் கொடிகட்டி பறந்தவர் இந்த தவக்களை. பார்ப்பதற்குத்தான் பொடியன். ஆனால் 1983-லியே இச்சிறுவனின் வயது 13.
இவரது தாய் மொழி தெலுங்கு. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணிக் கலைஞர்களுடன் நடித்துள்ளான். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், நவாபேட்டை. இவருக்கு நன்றாக நடனமாட வரும். நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் நடனம் கற்றிருக்கிறார்.
தாயின் பெயர் சுப்புலட்சுமி, தந்தை பெயர் விஜயகுமார். இவரும் ஒரு நடிகர். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தமிழ், தெலுங்கு மொழிகளில் குரூப் டான்சில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ தமிழில் சிட்டிபாபுவை ஓரளவிற்கு அடையாளம் காண வைத்த படம்.
‘பொய் சாட்சி’ படத்தின் துணை நடிகர் முகவராக இவரது தந்தை இருந்த காரணத்தால் ஒருநாள் அருணாசலம் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பின்போது தந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது நடிகர் குள்ள மணிதான் இவனை நடிகர் பாக்கியராஜிடம் சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் சென்னையில் தான் எப்போதோ பார்த்த இச்சிறுவனை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ‘முந்தானை முடிச்சு’ படத்திற்குத் தேர்வு செய்து, ஏவி.எம்.மிற்கு அழைத்துச் சென்றார். கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் அழைத்துச் சென்றார். படம் வெளிவந்த பின் பையன் ஏகத்துக்கும் பிஸியாகிவிட்டான். ‘முந்தானை முடிச்சு’ ஆரம்ப, அறிமுக, பாராட்டு விழாக்களில் பங்கேற்றான். ஒரே வருடத்தில் பல மேடைகளைப் பார்த்து பெரிய ஆளாகிவிட்டான்.
தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கும் முன்பே இவர் ‘நேனு மா அவிடே’ [1981] போன்ற சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், தமிழில் ‘ஆண் பாவம்’, ‘ஓசை’, ‘என் இரத்தத்தின் இரத்தமே’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தங்கமடி தங்கம்’, ‘நாலு பேருக்கு நன்றி‘, ‘பொண்ணு பிடிச்சிருக்கு‘, ‘நேரம் நல்ல நேரம்‘, ‘ஆத்தோர ஆத்தா‘, ‘மணந்தால் மஹாதேவன்‘ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தவக்களையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
Average Rating