நடிகர்களின் வங்குரோத்து நகர்வலம்..!! (கட்டுரை)
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 70 வருட இராஜதந்திர உறவுகளை நினைவு கூரும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கையைச் சுமூகமான நிலைமாறு காலகட்டத்தின் ஊடாக சுபீட்சத்தை நோக்கி வழிநடத்தி செல்லுகின்ற பெரும்பணியை செய்துகொண்டிருப்பதற்காக விக்டோரியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் ரணிலுக்கு ‘கலாநிதி’பட்டம் வழங்கி கௌரவித்தது.
அகதிகள் விவகாரமாகவும் போர்க்குற்ற விடயமாகவும் மாத்திரம் இலங்கையின் பெயர் அண்மைக்காலமாக அவுஸ்திரேலிய ஊடகங்களில் தோன்றி மறைந்ததற்கு முற்றிலும் மாறாக, கடந்த இரண்டு வாரங்களாக ரணில் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய விஜயத்துடன் இலங்கையின் பெயர் மிகவும் ஆரோக்கியமான வகையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை இலங்கை தரப்புக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்ட பின்னர், இலங்கை தலைவர் ஒருவர் மேற்கொள்ளுகின்ற முதலாவது விஜயமாக ரணிலின் பயணம் அமைந்திருந்தது. முதலில் அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் வந்திறங்கிய ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மல்கம் ரேன்புல் அவர்களை அங்கு சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இரண்டு பிரதமர்களும் கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்கள். அதன் பின்னர் ஜி லோங் மாநகருக்கு சென்று தனது பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார் ரணில் விக்ரமசிங்க. மிகச்சுருக்கமாகவும் அதேவேளை வெற்றிகரமாகவும் ரணிலுக்கு இந்த விஜயம் அமைந்தது என்று கூறலாம். ஒரு வளர்முக நாடு என்ற அடிப்படையில் இலங்கை அரசு தரப்பு அவுஸ்திரேலியாவிடம் எத்தனையோ விடயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
கடந்த எழுபது ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்ட உறவு இலங்கை ஏனைய நாடுகளுடன் பேணிவரும் உறவுகளிலும் பார்க்க வித்தியாசமானது. மெல்பேர்னில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியிருந்தார். ஆரம்ப காலங்களில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய இலங்கையர்கள் அனைவரும் உயர்கல்விக்காக வந்தவர்களாகவும் தொழில்முறை சார்ந்த நிபுணத்துவங்களை வெளிநாடுகளில் பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்களாகவும் காணப்பட்டனர்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்த சிறு தொகையினராகவும்கூட இலங்கையர்கள் காணப்பட்டனர். ஆனால், தொண்ணூறுகளுக்கு பின்னர் போர் காரணமாக புலம்பெயரத்தொடங்கிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எண்பதுகளில் இலங்கையில் ஆரம்பித்த இனப்பிணக்கின் விளைவாக அவுஸ்திரேலியாவில் விமானம் மூலம் வந்திறங்கி அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர்களின் புலம்பெயர்வு இரண்டாயிரத்துக்கு பின்னர்தான் பெருமளவில் படகுவழியாக ஆரம்பித்தது. போர் உக்கிரமடைந்திருந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதி சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்டு வரலாற்றிலும் எழுதிவைக்கக்கூடடிய மிகமுக்கியமான காலப்பகுதி அதுவாகும். இந்தப் புள்ளியில்தான் அண்மையில் அவுஸ்திரேலியா வந்திருந்த ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்தினை முன்வைத்து விரிவாக பேசவேண்டியிருக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் இலங்கை அரச தரப்பு உறுப்பினர் ஒருவர், அவர் பிரதேச சபை உறுப்பினராக இருந்தால் என்ன பிரதம மந்திரியாக இருந்தால் என்ன அவுஸ்திரேலிய அரசு அவர்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு பகிரங்கமாக முன்வைக்கக்கூடிய ஓர் உறுதி மொழியாகும்.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய நிலை அதுதான். ஏனெனில், அபரிமிதமான அகதிகள் வருகையால் உள்நாட்டு அரசியலில் விழி பிதுங்கி நிற்கும் அவுஸ்திரேலிய அரசு மிக அதிக எண்ணிக்கையிலான அகதிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் அடங்கும். தற்போதைய லிபரல் அரசு ஆட்சிக்கு வந்ததுமுதல் இந்த விடயத்தில் வெற்றிகரமாக தமது கொள்கைகளை அமுல்படுத்தி, படகு மூலமான அகதிகள் வருகையை அது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது என்று கூறலாம்.
அதனை மேலும் வலியுறுத்தும் வகையில், தற்போது வருகை தந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வாயால் தங்களது அகதிக்கொள்கையை வழிமொழியும் வகையில் பகிரங்க அறிவிப்பொன்றை முன்வைப்பது என்பது அவர் இங்கு வருவதற்கு முன்னரே அவுஸ்திரேலிய அரசுத்தரப்பினால் ஆயத்தப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். ‘அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லாதீர்கள். மீறி சென்றால் திருப்பி அனுப்பப்படுவீர்கள்’ என்று இலங்கையிலுள்ள ஊடகங்கள் அனைத்திலும் அவுஸ்திரேலியா பெருந்தொகையான பயணத்தை கொட்டி மேற்கொண்டுவருகின்ற விளம்பரத்தினை ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவில் வந்து ஏற்கெனவே இங்கு வந்து குடியேறியுள்ளவர்களின் முன்பாக அறைகூவலாக விடுத்து சென்றிருக்கிறார்.
அதாவது, “அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோமாக வந்தவர்கள் அனைவரும் நாட்டின் சட்டத்தை உடைத்தவர்கள் என்ற வகையில் குற்றவாளிகள். என்றாலும் உங்களை நாங்கள் மன்னிக்கிறோம். மீண்டும் நாடு திரும்பலாம்” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. தாங்கள் சொல்லியதை தப்பால் ஒப்புவித்த ரணிலின் திறமையை சிரித்த முகுத்துடன் அருகில் நின்று பெருமைப்பட்டுக்கொண்டார் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல்.
ரணில், மல்கம் ரேன் புல்லுக்கு மாத்திரமல்ல எல்லா வெளிநாடுகளுக்கும் செல்லப்பிள்ளை. அவரது அரசியல் அதுபோன்ற பாதையில் கட்டியெழுப்பப்பட்டதொன்று என்று அனைவருக்கும் தெரியும். இப்போதுகூட எல்லா நாடுகளும் போர்குற்ற விவகாரத்தை தூக்கிக்கொண்டு இலங்கையை துரத்திக்கொண்டிருந்தாலும் ரணில் இந்த விடயத்தில் எந்த கறையும் தீண்டாத நல்லபிள்ளையாகவே எல்லோரும் பார்க்கிறார்கள். ஆகவே, ரணிலுடன் பேசுவதென்பது எல்லோருக்கும் சுலபம். அவருக்கும் அதுதான் ஆசை. ஏனெனில், மைத்திரியின் கையை பிடித்துக்கொண்டு தனது நீண்ட நாள் கனவாகிய நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையை எட்டிப்பிடிப்பதற்கு கள்ள மௌனம் காத்து வருபவர் ரணில் விக்ரமசிங்க. அதற்கான தகுதியை தற்போது வாய்க்கப்பெற்ற பொற்காலத்தில் மேலும் செழுமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் அவர் மிகக்கவனமாக இருக்கிறார்.
இப்படிப்பட்ட ரணில் மேற்குலகின் ஊதுகுழலாக மாறி மகுடி வாசிப்பதொன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால், இப்படிப்பட்ட வஞ்சகம் நிறைந்த அரசியல் நகர்வுகளுக்கு அவர் விரல் நீட்டி குற்றஞ்சாட்டும் குழுமமாக உள்ள தமிழர் தரப்பு அவ்வப்போது முகத்திலடித்தாற்போல எதிர்வினையாற்றுவதும் அதற்கான முன்னாயத்தங்களிலும்கூட சிரத்தை கொள்வதும் மிகவும் முக்கியமானதொன்று. அவுஸ்திரேலியாவில் ரணில் “சட்டத்தை உடைத்துக்கொண்டு இந்த நாட்டுக்கு வந்திருக்கும் இலங்கை அகதிகள் எல்லோரும் திரும்பி வாருங்கள். உங்களை நாங்கள் மன்னிக்கிறோம்” என்று விடுத்திருக்கும் அழைப்பானது எவ்வளவு பெரிய அபத்தமானது என்று அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் உடனடியாகவே தனது கருத்தை முன்வைத்திருந்தது.
ஆனால், இந்தக் கருத்து எவ்வளவு தூரம் ரணிலின் விஜயத்தை முன்னிலைப்படுத்தும் ஊடகங்களின் வாயிலாக சென்றடைகிறது என்பதில்தான் அதன் தாற்பரியம் தங்கியிருக்கிறது. இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்தவர்கள் அங்கு இடம்பெற்ற மிகப்பெரும் இனப்படுகொலை போரின் விளைவாக தப்பியோடி வந்தவர்கள். அந்த போரை நடத்திய இலங்கை படைகள் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் ஈடுபட்ட போரானது இனஅழிப்பா இல்லையா என்பது சர்வதேச கலப்பு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு சென்ற விடயம்.
இவ்வாறு சர்வதேச சட்ட விதிகளையெல்லாம் மீறும் வகையில் மிலேச்சத்தனமான யுத்தம் ஒன்றைத் தனது சொந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனக்குழுமம் ஒன்றின் மீது ஏவிவிட்ட அரசை எந்த கேள்வியும் கேட்காமல் வாய் பொத்திக்கிடந்துவிட்டு, இன்றும்கூட அந்த போருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் ரணில் அரசாங்கம், அந்த போரிலிருந்து தப்பிவந்தவர்களை சட்டத்தை உடைத்தவர்கள் என்றும் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தால் மன்னிக்க தயார் என்றும் கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? போரின் கோரத்தினால் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகள் ஏனைய நாடுகளில் தஞ்சம் கோரலாம் என்றும் அவர்களுக்கு அடைக்கலாம் கொடுக்கவேண்டும் என்பதும் ஐ.நா சட்டம்.
நாடுகளுக்கு இடையில் பேணப்படும் பொதுவிதி. இதில் எங்கே இந்த அப்பாவிகள் சட்டத்தை முறித்துவிட்டதாக ரணில் விக்ரமசிங்க கண்டுபிடித்திருக்கிறார்? இந்த கண்டுபிடிப்புக்கும் சேர்த்துத்தான் இவருக்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் வழங்கப்படுகிறதா? முகநூலில் ஒரு நண்பர் கேட்டிருந்ததுபோல ‘புலம்பெயர்ந்து வந்தவர்கள் செய்த குற்றம் ஒன்று உண்டென்றால் சிறிலங்கா படைகள் சந்தோசமாக கொலை செய்து விளையாடுவதற்கு தங்களது தலையை கொடுக்காததுதான்.
இந்த அப்பாவிகள் அங்கிருந்து அரச படைகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகிருந்தால் அந்த குடும்பங்களுக்கு நட்ட ஈட்டினை கொடுத்து தனது நல்லிணக்கத்தை நாட்டிப்பிராயச்சித்தம் தேடுவதற்கு அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்’ இன்றும்கூட தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் காணிகளில் இராணுவ முகாம்களை அமைத்துக்கொண்டிருக்கும் படையினருக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போரின்போது சரணடைந்து காணமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று, அதற்கு எந்தத் தீர்வுமின்றி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.
போர் முடிந்து ஏழாண்டுகளில் தீர்வு என்ற விடயத்தில் தமிழ் மக்களும் இம்மியும் வழங்கப்படவில்லை. இந்த சீத்துவத்தில் மல்கம் ரேன்புல் கேட்டுக்கொண்டார் என்பதற்காக போரின் உக்கிரம் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு ஓடிவந்த அப்பாவிகளை ‘நாட்டுக்கு வாருங்கள்’ என்று வாய் கூசாமல் கேட்பது ரணிலின் மிகப்பெரிய அரசியல் குசும்புத்தனமன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்? இந்த விடயங்களை ரணில் போன்றவர்களின் முகத்துக்கு நேராக கேட்பதற்கு ஏதுவாக வெளிநாட்டு ஊடகங்களையாவது தமிழர் தரப்பு முறையாக ‘லொபி’ செய்யவேண்டும்.
இல்லாவிட்டால், “பாருங்கள், தமிழர் ஒருவரை உங்கள் நாட்டுக்கு தூதுவராக நியமிக்குமளவுக்கு இலங்கையில் தமிழ்மக்களுக்கு எல்லாவற்றையும் அள்ளி அள்ளி கொடுக்கிறோம். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்று அவுஸ்திரேலிய அரசிடம் ஒரு கேள்வியை போட்டு மடக்கிவிட்டு ரணில் போய்க்கொண்டேயிருப்பார்.
Average Rating