பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்?..!! (கட்டுரை)
கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”. இதுவே இன்றைய மிகப்பெரிய கேள்வி.
ஏனென்றால், தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக, அங்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள், இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால், அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு.
இப்போது, நிலைமையை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உணராதுவிட்டாலும், வாசகர்களாகிய நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பீர்கள். கொதிப்பின் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, பிலவுக்குடியிருப்புப் போராட்டம்.
அடுத்தாக என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. எதுவும் நடக்கலாம்.
“எந்த முடிவுமில்லாமல் குழந்தை, குட்டிகளோடு தொடர்ந்து வீதியில் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்க முடியும்? இப்படியான ஒரு நிலையில் இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள், அல்லது உங்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்” என்று கேட்கின்றார், இங்கே இருக்கின்ற வயதான பெண்ணொருவர். அவருடைய கேள்விக்கு யார் பதில் சொல்ல முடியும்?
ஆகவே, எந்த முடிவுமில்லாமல், எந்தப் பதிலுமில்லாமல் இருக்க இருக்க, அவர்களுக்குள் கோபமும் வெறியும் கூடுகிறது. அது தர்மாவேசம். இந்தத் தர்மாவேசம், அடுத்த கணத்தில் எத்தகைய ஒரு வடிவத்தையும் எடுக்கும்.
அதிலும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் 95 வீதமானவர்கள், பெண்களும் குழந்தைகளுமே ஆவர். ஆகவே அவர்களுடைய கோபத்தின் உச்சக்கட்டம் என்பது, நிச்சயமாகத் தர்மாவேசத்தின் வெளிப்பாடுதான். அது மதுரையை எரித்த கண்ணகியின் கோபத்துக்கு நிகரானது, அல்லது அதனிலும் கூடியது.
“வற்றாப்பளைக் கண்ணகி, கேப்பாப்புலவுவில் கோபம் கொண்டிருக்கிறாள்” என்கிறார், அகிலாண்டேஸ்வரி என்ற பெண். கேப்பாப்புலவுவில் இருந்து பார்த்தால், வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவில் தெரியும். நந்திக்கடலின் ஓரத்திலேயே, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவிலும் இருக்கிறது.
நடந்து செல்லும் தூரத்திலேயே கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பும் இருக்கிறது. ஆகவே கண்ணகியைப் பார்த்துப் பார்த்துத் தங்களுக்குள் அவளை, அவளுடைய கோபத்தை, அவர்கள் உருவகித்திருக்கிறார்கள். இப்போது அந்தக் கோபாவேசம், உருக்கொண்டு வருகிறது.
ஆனால், எதிர்த்தரப்பில் உள்ளது படை. படைக்கு, பெண்களும் ஒன்றுதான், குழந்தைகளும் ஒன்றுதான், போராளிகளும் ஒன்றுதான். தமக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை அது எதிர்க்கும். எதிராக நிற்போர், தமது இலக்கு என்று மட்டுமே அது பார்க்கும். இங்கும் இதுதான் நிலைமை.
ஏற்கெனவே இதே நந்திக்கடலின் கிழக்குக் கரையில், மிக வலுவான விடுதலைப் புலிகள் இயக்கம், இதே படைகளால் தோற்கடிக்கப்பட்டது. அப்படி அந்தப் பெரிய அமைப்பின் போராட்டத்தைத் தோற்கடித்த படைகளுக்கு இப்போது இந்தப்போராட்டத்தை, அதே கடலோரத்தில் தோற்கடிப்பதில் என்ன தயக்கம் வரப்போகிறது என்று, அரசாங்கமோ வேறு தரப்புகளோ யோசிக்கலாம்.
ஆனால் அது, கையிலே ஆயுதத்தை வைத்திருந்த புலிகள். இதுவோ, கையிலே கோரிக்கைக் கடிதங்களை ஏந்தி வைத்திருக்கும் பெண்களும் சிறு பிள்ளைகளும். அடுத்ததாக எதைத் தன்னுடைய குறிப்பேட்டில் பதிவது என்று இங்கேதான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது வரலாறு.
ஆனால், “பிலவுக்குடியிருப்பு மக்களின் காணியைத் தான் அபகரித்து வைத்திருக்கிறோம்” என்ற உணர்வு, படையிடம் இல்லை. அதற்கு, அதனுடைய நலனே முக்கியம். அதனுடைய கேந்திர நலன்களைப் பற்றியே அது சிந்திக்கும்.
அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம் என்றபடியால்தான், இதுவரை இந்தப் பிரச்சினையில் படையினரின் நிலைப்பாட்டை மீறி அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்க முடியாமல் இருக்கிறது.
இல்லையென்றால், ஜனவரி 25இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேப்பாப்புலவுவில் வைத்தே இந்த மக்களுடைய பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும். அப்படித்தானே கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவருடைய அன்றைய பயணமே, பின்னர் இரத்துச் செய்யப்பட்டது. படைகளின் நிலைப்பாட்டை மீறி, அவரால் எதையும் செய்ய முடியவில்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கும் காணப்படும் அவல நிலை இது.
இதனால் நம்பிக்கை இழந்த மக்கள், நம்பி ஏமாந்த மக்கள், தங்களுக்கு ஏற்பட்ட அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக, தெருவிலேயே போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆகவே ஒரு வகையில் இந்தப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான்.
ஆனால், அவர் அதற்குப் பிறகு எத்தகைய அறிவித்தலையும் இது தொடர்பாக விடுக்கவில்லை. இந்தப் போராட்டத்தை அறிந்த பிறகு, இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, படைத்தரப்புக்கு ஜனாதிபதி பணித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், அதனைச் சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்தத் தகவல் உண்மையாக இருந்தால், அதை பிலவுக்குடியிருப்பில் போராடிக்கொண்டிருக்கின்ற மக்களிடம்தான், ஜனாதிபதி முதலில் சொல்லியிருக்க வேண்டும்.
அதற்குரியவாறு பொறுப்புமிக்க தலைவர்கள் யாரையும், போராடும் மக்களிடம் அவர் அனுப்பி வைத்திருக்கலாம். அதற்கே அவர் முன்வந்திருக்க வேண்டும், அல்லது அவரே பிலவுக்குடியிருப்புக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவே பொருத்தமானதும் சிறப்பானதுமாகும்.
ஜனாதிபதி சிறிசேன, இப்படிச் சில அதிரடி வேலைகளை – விளையாட்டுகளைச் செய்வதுண்டு. கடந்தாண்டு, சுன்னாகத்திலுள்ள சபாபதிப்பிள்ளை முகாமுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார். அங்கிருந்த மக்களின் குடிசையில் இருந்து கொண்டு, தேநீர் பருகினார். அவர்களோடு சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்தார்.
கடந்த வாரத்தில், மலையகத்தில் உள்ள ஒரு லயமொன்றுக்குச் சென்று, அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டு, ரொட்டி சாப்பிட்டார். அப்போதெல்லாம் அந்த மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று சொல்லிச் சென்றார்.
ஆனால், அவர் சொன்னதைப்போல, இலகுவாக எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்து விடவில்லை. அப்படி ஒரே நாளில் அவை தீர்ந்தும் விடாது. எல்லாவற்றையும் ஒரு சுண்டு விரல் அசைப்பில் சீர்படுத்தி விடுவதாக ரஜினிகாந்தின் சினிமாக்களில் காட்டப்படுவதைப் போன்றதல்லவே, இலங்கையின் அரசியல் நிலைவரமும் களநிலைவரமும்.
ஆனால், இந்தமாதிரியான இடங்களுக்கு ஜனாதிபதி சென்றமையே ஒரு மாற்றம்தான், ஒரு செய்திதான். இது அங்குள்ள மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்காது விட்டாலும், அவர்களுக்கு ஒரு தற்காலிக ஆறுதலே. “ஜனாதிபதியே நேரிலே எங்களிடம் வந்தார். எங்களோடு இருந்தார். எங்களோடு படம் எடுத்துக் கொண்டார்” என்று, அவர்கள் மகிழ்கின்றனர்.
இவ்வாறான இடங்களுக்குச் செல்வதும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களைச் சந்தித்து, அவர்களுடன் நேரில் பேசுவதும் கூட நல்லதே. ஆனால், அதன் தொடர்ச்சியாக சில மாற்றங்களாவது நடக்க வேண்டும்.
இல்லையென்றால், இது வெறும், காட்சி காட்டும் அரசியலாகி விடும். வேண்டுமானால், அடுத்த தேர்தல் பிரசாரத்துக்கு, இந்தப் படங்கள் ஜனாதிபதிக்கு உதவக்கூடும். மற்றும்படி ஏதுமிருக்காது.
இதனால் ஜனாதிபதியின் இந்த மாதிரியான வேலைகளை, சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். “இதெல்லாம் போராடும் மக்களின் உணர்வைத் திசைதிருப்புகின்ற ஓர் உபாயம். அவர்களுடைய பிரச்சினை தீர்க்கப்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களுடைய போராடும் நிலையைத் தணித்து விடுகிற உத்தி” என இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆகவே ஜனாதிபதி, இந்த மாதிரி விடயங்களில் இனியும் தாமதிக்கவும் கூடாது, படம் காட்டவும் முடியாது. இதையே இன்றைய பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
முன்னே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை, கண்டும் காணாமலிருக்கும் பிடிவாதக்குணம். இது அகந்தையின் வெளிப்பாடு. அதிகாரத்தின் திமிர்த்தனம், ஜனநாயகத்துக்கு விரோதமானது.
இதனால்தான் போராடிக் கொண்டிருக்கின்ற மக்களை, இதுவரையில் அரசாங்கத்தின் பொறுப்புமிக்க எந்த நபரும் சென்று பார்க்கவில்லை. ஆறுதல் சொல்லவும் இல்லை. அவர்களைப் பற்றிப் பொருட்படுத்தாதன் விளைவன்றி, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
“எங்களுடைய காணியை, தயவுசெய்து தந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டு, தாங்கள் குடியிருந்த அரை ஏக்கர் பரப்பளவுடைய வளமற்ற நிலத்துக்காக, இந்த நாட்டிலே ஒரு கிராமத்து மக்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தெருவிலே நிற்கிறார்கள். அவர்களைப் பற்றி, அரசாங்கத்துக்கு அக்கறையில்லை என்றால், அதனுடைய அர்த்தம் என்ன?
“நல்லாட்சிக்கான அரசாங்கம்” என்ற மகுட வாசகத்தைப் பொறித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கமும் தலைவர்களும், இதைக்குறித்து என்ன சொல்கிறார்கள்?
அரசாங்கத்தின் தவறு ஒரு பக்கமாக உள்ளது என்றால், மறு பக்கத்தில் இந்த மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் எதிர்க்கட்சிக்கும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சிக்கும்) இதைக்குறித்தும் இந்த மக்களைக்குறித்தும் அக்கறையில்லை.
அப்படியான ஓர் அக்கறை இருந்திருந்தால், இந்த மக்கள் இத்தனை நாட்களாக, இப்படித் தெருவிலே நிற்க வேண்டியிருக்காது. குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என, கிராமமே எழுந்துவந்து, வீதியில் இரவு பகலாக நிற்கிறது.
மழையிலும் குளிரும், தெருவிலே இருக்கிறது. இந்த நிலையில், இவர்களிடம் வந்து ஆறுதல் சொல்வதற்கும் ஆதரவு தெரிவிக்கவும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதன் தலைவர் சம்பந்தனோ, அடுத்த தலைவர்களாக இருக்கும் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்களோ வரவில்லை.
இவ்வளவுக்குத்தான், இந்த மக்களைக்குறித்து நம்முடைய தலைவர்களுடைய அக்கறை இருக்கிறது என்று கடிந்து கொள்கின்றார் ஒரு முதியவர்.
வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்த மக்களைச் சென்று பார்த்திருக்கிறார். பின்னர், மாகாணசபை உறுப்பினர்களும் சென்றிருக்கிறார்கள். “தீர்வு கிடைக்கும்வரையில் தொடர்ந்து போராடுங்கள்” என்று எல்லோரும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மக்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராடவேண்டியர்கள், மக்களைப் போராடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாகாணசபையின் மூலமாக, ஜனாதிபதிக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டதாகத் தகவல். இதற்கப்பால் எதுவுமே நடக்கவில்லை.
இப்போது (19ஆம் திகதி) கிடைக்கின்ற தகவல்களின்படி, எதிர்வரும் நாட்களில் அரச நிர்வாக முடக்கத்தைச் செய்வதற்கு தன்னார்வலர்களும் சில அரசியல் பிரதிநிதிகளும் முயன்று கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளிலும் அடையாளப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அறிவிப்புகள் வரக்கூடிய நிலை உள்ளது.
தனியார் போக்குவரத்துச் சங்கங்களும் வணிகர் கழகங்களும், ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும். போராடும் மக்களுக்கு உள்ளூர் மட்டத்திலுள்ள சில அமைப்புகளும் இடதுசாரிய அமைப்புகளும் இப்படி ஊக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும், ஏதோ ஓர் அமைப்புச் சென்று, மக்களுடன் கூட இருக்கின்றது.
ஆனால், இதைப் பரந்த அளவில் நாடெங்கும் விரித்துச் செல்வதற்கான முயற்சிகள் தேவை. ஏனென்றால், இது மக்களின் போராட்டம், அவர்களுடைய வாழிடத்துக்கான போராட்டம். யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இனியும் அந்த மக்கள் அகதிகளாக இருக்கத்தான் வேண்டுமா? அப்படித் தொடர்ந்தும் அகதிகளாக இருக்கத்தான் முடியுமா? அது அவசியமா? அது தேவையா? நீங்கள் யாரும் அப்படி இருக்கத் தயாரா? யுத்தம் முடிந்த பிறகான சூழலை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்டளவு மக்கள் மட்டும், எதற்காக யுத்தகாலத் தண்டனையைத் தொடர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்?
ஆகவே, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு, ஆதரவு அதிகரித்துச் செல்ல வேண்டும். அதற்கமைய இந்தப் போராட்டம், பல தளங்களுக்கும் விரிந்து செல்வது அவசியம். குறிப்பாக, புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த மக்களுக்கான ஆதரவு அலைகள் உருவாக வேண்டும். நோர்வேயில் இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனைய நாடுகளுக்கும் இது விரிவடைவது சிறந்தது.
ஆனால், இதனை அதிகார சக்திகள் எவையும் விரும்பாது. மக்களின் தன்னெழுச்சியான எந்தப் போராட்டத்தையும், எந்த அதிகார சக்திகளும் விரும்புவதில்லை. அதனால் அவை இந்தப் போராட்டத்தைச் செயலிழக்க வைக்கும், அல்லது முடக்க முனையும். இப்போது செயலிழக்க வைக்கும் முயற்சியே நடந்து கொண்டிருக்கிறது.
அதனால்தான் அவை, இந்தப்போராட்டத்தைப்பற்றி தாம் அக்கறைப்படவில்லை என்ற மாதிரி நடந்து கொள்கின்றன. இப்படிச் செய்வதன் மூலமாக, போராடும் மக்கள் ஒரு கட்டத்தில் களைப்படைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றன.
இல்லையென்றால் இதைப்போல ஒவ்வொரு விடயங்களுக்குமாக மக்கள் போராடத்தொடங்கி விடுவர். அது தமது இருப்புக்கும் அதிகாரத்துக்கும் எதிரானதாக மாறி விடும் என்று அதிகார அமைப்புகளுக்குத் தெரியும். எனவே மக்களைக் களைப்படைய வைப்பதையே குறியாகக் கொண்டிருக்கின்றன. இதையும் கடந்து மக்கள் எழுச்சியடைந்தால், அதை அடக்குவதற்கு படைத்தரப்பின் எச்சரிக்கை உள்ளது.
ஆனால், மக்களின் கோபத்துக்கு முன்னால் படையின் எச்சரிக்கை எப்படி இருக்கும்?
கண்ணகியின் கோபம், மதுரையை எரித்தது. அதே கண்ணகி கோயில் கொண்டிருக்கும் வற்றாப்பளை, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு, நந்திக்கடலோரத்தில் என்ன நடக்கக்கூடும். ஆமாம், பிலவுக்குடியிருப்பில் அடுத்து என்ன தான் நடக்கப்போகிறது?
Average Rating