கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு..!! (கட்டுரை)
மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக பெரும் செல்வாக்குடன் இருந்த கருணா, புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டிருந்தது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், கருணாவை வெறுமை நிலைக்கு மாத்திரமன்றி, சிறைக்கம்பிகள் வரைக்கும் கொண்டு சென்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியிருந்த அல்லது ஓரம்கட்டப்பட்டிருந்த கருணா மீண்டும், நுகேகொடவில் கடந்த ஜனவரி 27ஆம் திகதி நடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுப் பேரணியில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
அங்கு அவர் நிகழ்த்திய உரையில், தாம் மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என்பதைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார். மீண்டும் அரசியலில் ஈடுபடுவதானால், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழேயே அதனைச் செய்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு அவர் கூறி, இரண்டு வாரங்கள் கழித்து, மட்டக்களப்பில் நடத்திய கூட்டத்தில், புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் வல்லவர் என்பதைக் கருணா மீண்டும் நிரூபித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த வரையில், தமிழர்களுக்குத் தமிழீழமே ஒரே தீர்வு என்று கூறிப் போராடி வந்திருந்தார். புலிகள் இயக்கத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கம் என்றே கூறிவந்திருந்தார். ஆனால், நுகேகொடக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர், மஹிந்த ராஜபக்ஷவைப் பெருமைப்படுத்துவதற்காக, கொடிய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டத்தில் புலிகள் இயக்கம் அவருக்குப் பயங்கரவாத அமைப்பாக அதுவும், கொடிய பயங்கரவாத அமைப்பாக மாறியிருந்தது. அப்படிப் பேசினால்தான், நுகேகொட கூட்டத்தில் கைதட்டல் விழும் என்பது அவருக்குத் தெரியும். அதுபோலத்தான், உபதலைவர் பதவியில் இருக்கும் வரையில், அவருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனிப்பானதாகவே இருந்தது. அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், “தான் சுதந்திரக் கட்சியில் இருந்து தம்மால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது கருணா, கிழக்கு மாகாணம் என்ற பிரதேசவாதத்தைப் பயன்படுத்தியே, தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயன்றார்.
சமீப காலம் வரையில் கிழக்கு மக்களின் நலன்களுக்காகக் கட்சி ஒன்றை அமைக்கப் போவதாகத்தான் கூறி வந்தார். ஆனால் இப்போது, வடக்கு, கிழக்கு மக்களின் நலன்களுக்காக என்று தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். இதே வடக்கு, கிழக்கு மக்களின் நலன்கள் பற்றி, 2004 இல் கருணா சிந்தித்திருக்கவில்லை. அவ்வாறு அவர் சிந்தித்திருந்தால் நிலைமைகள் வேறாக அமைந்திருக்கும். ஆக, கருணாவின் முடிவுகளும் தெரிவுகளும் எப்போதும் குழப்பம் நிறைந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவுமே இருந்து வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சிதான் அவரது புதிய கட்சி. கருணாவைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய அரசியலையும் செய்ய முடியாத, தேசிய அரசியலையும் செய்ய முடியாத ஒரு திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷவை மானசீகக் குருவாகக் கொண்டிருந்தாலும் அவரால், கூட்டு எதிரணியின் கீழ் அல்லது, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஊடாகக் கூட, அவர் தனது அரசியல் நகர்வை முன்னெடுக்கத் தயாராக இருக்கவில்லை.
ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களிடம் இருந்து வெகுதூரத்துக்கு அந்நியப்பட்டு நிற்கிறார். அவரை மீண்டும் தமிழ் மக்கள் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்த முனைந்தால், தனது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பது அவருக்கு தெரியும். அதேவேளை, புதிய கட்சியின் மூலமாக அவர் மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கங்களை நிறைவேற்றவே முனைந்திருக்கிறார் என்ற கருத்தும் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலும் கிழக்கிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை உடைக்கவே கருணா புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்பது சுதந்திரக் கட்சியின் கருத்தாக இருக்கிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான சாந்த பண்டார, இதனை ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைத்திருக்கிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் பலமடைந்து விடக் கூடாது என்பதே மஹிந்தவின் திட்டம். எனவே, கருணாவின் புதிய கட்சியின் ஊடாகக் கிழக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலமிழக்கச் செய்ய அவர் முனைந்திருக்கிறார். நுகேகொட கூட்டத்துக்கு முதல் நாள், கருணாவை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ பேசியிருந்தார். இதனைக் கருணா உறுதிப்படுத்தியிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷவின் கீழேயே அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிப்படுத்திய கருணா, திடீரெனப் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பதன் மூலம் தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு கிழக்கை மையப்படுத்திய ஒரு பூகம்பத்தை உருவாக்கிய கருணா இப்போது, புதிய கட்சியை வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக காண்பிக்க முனைந்திருக்கிறார். தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு பறிபோய் விட்டது என்றும் அந்த வெற்றிடத்தை நிரப்பவே தனது கட்சியின் உருவாக்கம் என்றும் அவர் கூறியிருக்கிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய கேள்விக்கு, அவர் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாவிடினும், அதனை ஆதரிப்பது போன்றே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இதனைத் தமிழ்த் தேசிய அரசியலில் நுழையும் அவரது புதிய முயற்சி ஒன்றுக்கான எத்தனமாகவும் குறிப்பிடலாம். ஆனாலும், தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடனேயே புதிய கட்சி செயற்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும், கருணாவினால் தொடங்கப்பட்டுள்ள புதிய கட்சி, தமிழ்த் தேசிய அரசியலில், பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏற்கெனவே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை கருணாவே உருவாக்கியிருந்தார்.
ஆனால், பிரதேசவாதக் கருத்துகள் உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில் கூட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அத்தகைய பிரதேசவாத கருத்துகள் வலுவிழந்து போயுள்ள தற்போதைய கட்டத்தில், கருணாவின் புதிய கட்சியினால் மக்களின் செல்வாக்கைப் பெறுவதென்பது, கடினமானதாகவே இருக்கும். தமிழ்த் தேசிய அரசியலில் கருணா மீண்டும் நுழைய முனைவது, ஒரு வகையில் அவரது தேசிய அரசியல் மீதான நம்பிக்கையீனத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆனாலும், தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே அவரது இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் நுழைவும் அரங்கேறுகிறது என்பது முக்கியமானது. 2004 இல் எது நிகழ்ந்ததோ, அதுவேதான் 2017இலும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விடுதலைப் புலிகளால் ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு அரசாங்கத்துடனும், இராணுவத்தினருடனும் சேர்ந்து இயங்கிய பல கட்சிகள், பின்னர் தீவிர தமிழ்த் தேசிய அரசியலில் இறங்கிய வரலாறு இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் மூன்று அத்தகையவை தான். அவர்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டது போலவே, தம்மையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை கருணாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும், கருணா விடயத்தில் தமிழ் மக்களின் பார்வை வேறு விதமானது. கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் விடுதலைப் புலிகளால் கை காட்டப்பட்டவை. கருணாவோ, தமிழ் மக்களுக்கு அவ்வாறு புலிகளால் அடையாளம் காட்டப்பட்டவர் அல்ல. அவர் புலிகளால் துரோகியாகவே அடையாளம் காட்டப்பட்டவர். அத்தகைய நிலையில் உள்ள ஒருவர், தமிழ்த் தேசிய அரசியலில், அவ்வளவு இலகுவாக வெற்றி பெற்று விட முடியாது. இது கருணாவுக்கும் தெரியாத விடயமல்ல.
Average Rating