கீழ்பென்னாத்தூரில் தொழிலாளி தலை துண்டித்து கொலை: வாலிபர் கைது..!!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கானாலாபாடி ஊதப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 49). சமீபத்தில் இவரது விவசாய நிலத்தில் போர்வெல் போடப்பட்டது. அந்த பள்ளம் மூடப்பட்டது. போர்வெல் இடத்தில் நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது.
நாய்கள் மோப்பம் பிடித்து சூழ்ந்து மண்ணை கிளறியது. அந்த வழியாக சென்ற, கானாலாபாடியை சேர்ந்த உத்திரகுமார் என்பவர் சந்தேகமடைந்து சென்று பார்த்தார். தலையில்லாத ஆணின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
கீழ்பென்னாத்தூர் போலீசார் தகவலறிந்து விரைந்து வந்தனர். ஊர் மக்களும் கூடினர். தலை இல்லாத உடலை போலீசார் மீட்டனர். தலை துண்டித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது.
துண்டிக்கப்பட்ட தலையும் கிடைக்காமல் இருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தலையில்லா உடல் கிடந்த விவசாய நிலத்தை அதன் உரிமையாளர் பிரபாகரனிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (32) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது தெரிந்தது. பாக்யராஜை, சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தலை துண்டித்து கொலையானவர் திருவள்ளூர் அடுத்த புளியூர் கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் மகன் பார்த்திபன் (45) என்பது தெரியவந்தது. பார்த்திபனை கொன்றதை பாக்யராஜ் ஒப்புக் கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து பாக்யராஜ் அளித்த வாக்குமூலம் திடுக் கிட செய்தது.
கொல்லப்பட்ட பார்த்திபன் திருவள்ளூர் அடுத்த சிவன் வாயூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செங்கல் சூளை உரிமையாளர் ராஜ் என்பவர் பார்த்திபனிடம், வேலைக்கு ஆட்களை அழைத்து வரும்படி ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
பணத்தை பெற்றுக் கொண்ட பார்த்திபன், கானாலாபாடி பாக்யராஜை சந்தித்தார். செங்கல் சூளைக்கு ஆட்களை திரட்டி தரும்படி கூறி ரூ.30 ஆயிரம் பணத்தையும் அவரிடம் பார்த்திபன் கொடுத்தார். நாட்கள் மட்டுமே கழிந்தன. பணம் பெற்ற பாக்யராஜ் வேலைக்கு ஆட்களை திரட்டி தரவில்லை.
பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை. இதனால் முன்விரோதம் மூண்டது. செங்கல் சூளை அதிபர் ராஜ், தனது பணத்தை கொடு அல்லது ஆட்களை அழைத்து வா? என்றுக் கூறி பார்த்திபனை எச்சரித்தார். கோபமடைந்த பார்த்திபன், கானாலாபாடிக்கு கடந்த 13-ந் தேதி வந்தார்.
அன்று மாலை, பாக்யராஜை சந்தித்து சண்டை போட்டார். அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பிறகு சமரசமாகினர். 2 பேரும் சேர்ந்து அன்று மாலை சம்பவம் நடந்த விவசாய நிலத்தில் மது அருந்தினர். பார்த்திபனுக்கு பாக்யராஜ் அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்தார்.
போதை தலைக்கேறிய பார்த்திபனை, உருட்டு கட்டையால் பாக்யராஜ் சரமாரியாக தாக்கினார். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. பார்த்திபன் சுருண்டு விழுந்தார். அதன் பிறகு கொடுவாளை எடுத்து பாக்யராஜ், பார்த்திபனை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார்.
துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடலின் பாகங்களை இழுத்துச் சென்று தண்ணீரில் கழுவினார். சம்பவ இடத்தில் ரத்தக்கறை இல்லாமல் தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தினார். இதையடுத்து, தலையில்லா உடலை போர்வெல் போடப்பட்டு அருகே குவிக்கப்பட்ட மண்ணில் புதைத்தார்.
தலையை, அருகே உள்ள முட்புதருக்கு தூக்கிச் சென்று பள்ளம் தோண்டி புதைத்தார். அதன் மீது வைக்கோல் போரை குவித்து வைத்தார். பிறகு யாருக்கும் சந்தேகம் ஏற்படாதபடி வீட்டிற்கு சென்று விட்டார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பாக்யராஜ் மேற்கண்ட இந்த தகவல்களை தெரிவித்தார்.
பாக்யராஜை போலீசார் கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று முட்புதரில் புதைக்கப்பட்ட பார்த்திபன் தலையை கைப்பற்றினர். இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் மற்றும் போலீசார் பாக்யராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating