தடுமாற்றத்துடன் ஆரம்பித்துள்ள ட்ரம்ப்..!! (கட்டுரை)
அரசியல் அனுபவமற்றவரான டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது, அவர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஏறத்தாழ மூன்று வாரங்களின் பின்னர் அந்த எதிர்பார்ப்பு, பெருமளவுக்கு இல்லாமல் செய்யப்பட்டு, ஒருவகையான அச்ச நிலை ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
ஐ.அமெரிக்காவின் வழக்கமான அரசியல்வாதிகளுக்கு எதிராகக் காணப்பட்டிருந்த கோபம்; இஸ்லாமிய ஆயுததாரிகள் விடயத்தில், அப்போது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவும் அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியினரும் மெத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு; நடப்பு அரசியல்வாதிகளுக்கெதிராக ஏற்படும் எதிர்ப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற ட்ரம்ப், தன்னை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். பொதுவாக, ஜனாதிபதிகளுக்கும் அரசாங்கங்களுக்கும், “தேனிலவுக் காலம்” என்ற ஒன்று இருக்கும்.
அவர்கள் பதவியேற்றுச் சில மாதங்கள் அல்லது ஓர் ஆண்டுக் காலப்பகுதியில், அவர்கள் மீதான விமர்சனங்கள் குறைவாகவும் அவர்கள் மீதான நம்பிக்கை அதிகமாகவும் காணப்படும். கறுப்பினத்தவராக இருந்து, ஐ.அமெரிக்க மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கான ஆதரவு, அவர் பதவியேற்கும் போது 68 சதவீதமாகவும் அவருக்கான எதிர்ப்பு, 12 சதவீதமாகவும் மாத்திரமே காணப்பட்டது. ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்கும் போது, அவருக்கான ஆதரவும் எதிர்ப்பும், தலா 45 சதவீதங்களாகக் காணப்பட்டன. இந்தப் பத்தி எழுதப்படும் புதன்கிழமையன்று, அவருக்கான ஆதரவாக 40 சதவீதமும் எதிர்ப்பாக 54 சதவீதமும் காணப்படுகிறது. இவ்வாறு, தேனிலவுக் காலமென்பதே இல்லாத ஒரு நிலையையே, ட்ரம்ப்பின் ஆட்சி எதிர்கொண்டிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே, கருத்துகளைப் பிளவுபடுத்தக்கூடியவராக ட்ரம்ப் இருந்தார் என்பது முக்கியமான ஒரு காரணமாக இருந்தாலும் கூட, பதவியேற்கும் போது 45 சதவீதமாகக் காணப்பட்ட அவருக்கான ஆதரவு, மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில், எவ்வாறு 40 சதவீதமாகவும், 45 சதவீதமாகக் காணப்பட்ட எதிர்ப்பு, எவ்வாறு 54 சதவீதமாகக் காணப்பட்டது என்பதையும் ஆராய வேண்டிய தேவையிருக்கிறது. என்றுமில்லாதவாறு ஐ.அமெரிக்கா, இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள்; ஜனாதிபதி ட்ரம்ப்பை எதிர்ப்பவர்கள் என்ற இரண்டு குழுக்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு குழுக்களில் காணப்படும் பெரும்பாலானவர்கள், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப்பை ஆதரிப்பவர்களில் குறிப்பிட்ட சதவீதமானோர், நிலைமைக்கு ஏற்ப மாறத் தயாராக இருக்கிறார்கள். சரி, இவ்வாறு ஆதரவை இழக்கும் வகையில் என்னதான் செய்கிறார் ட்ரம்ப்? என்னதான் குழப்பம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை, எங்கிருந்து ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது என்பது மிகப்பெரிய சவால். ஆனால், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் பிளின், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது பதவியிலிருந்து விலகியமை, இக்குழப்பங்களில் முக்கியமானதாக அமைந்திருந்தது. பிரசாரக் காலங்களிலேயே, ட்ரம்ப்புக்கும் அவரது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.
தங்களது போக்கில் செயற்படக்கூடிய ட்ரம்ப்பை, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ய வேண்டுமென, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரகசியத் தகவல்களை வெளியிடும் இணையத்தளமான விக்கிலீக்ஸும், ட்ரம்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து, ஹிலாரி கிளின்டன் சம்பந்தமான விடயங்களைக் கசிய விட ஆரம்பித்தது. ஆனால், ட்ரம்ப் – ரஷ்யா – விக்கிலீக்ஸ் என்ற முக்கூட்டுத் தொடர்பாக, வெளிப்படையாகத் தெரிந்த “ஒரே நோக்கத்துடன் செயற்படுவோர்” என்ற பார்வையைத் தவிர, நேரடியான ஆதாரங்கள் எவையும் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் தான், ரஷ்யாவுக்கும் ட்ரம்ப்புக்குமிடையிலான தொடர்புகள் என, பிரசாரக் காலத்தில் தயாரிக்கப்பட்ட தனியார் புலனாய்வு அறிக்கையொன்று, ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னர், ஆனால் அவர் வென்ற பின்னர் வெளியானது.
இந்த அறிக்கை, இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அந்த அறிக்கை, ஓரளவு முக்கியமானது எனக் கருதிய ஐ.அமெரிக்கப் புலனாய்வாளர்கள், அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவுக்கும் சில நாட்களில் பதவியேற்கவுள்ள ட்ரம்ப்புக்கும், அதில் அடங்கியுள்ள விவரங்கள் குறித்து அறிக்கையிட்டனர். அந்த அறிக்கையில், ட்ரம்ப்புக்கும் ரஷ்யாவுக்குமிடையில் பாரிய தொடர்புகள் காணப்படுவதாகவும் ட்ரம்ப்பை மிரட்டுமளவுக்கு, ட்ரம்ப்பைப் பற்றிய தகவல்கள், ரஷ்யாவிடம் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, பாலியல் ரீதியான காணொளிகள், ரஷ்யாவிடம் காணப்படுகின்றன என, அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியது.
ஜனாதிபதி ட்ரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் அதை மறுத்தாலும் கூட, அந்த அறிக்கையில் ஏதோ இருக்கிறது என்பதற்காகவே, நாட்டின் ஜனாதிபதிபதிக்கும் அடுத்த ஜனாதிபதிக்கும் அதுபற்றி அறிவிக்கப்பட்டது என்பதை, அந்தக் கட்டத்தில் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். தற்போது சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள தகவலின்படி, அந்த அறிக்கையின் காணப்பட்ட சில விடயங்கள் உண்மை என்பதை, புலனாய்வு முகவராண்மைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட மைக்கல் பிளின், இராஜாங்கச் செயலாளராகப் பரிந்துரைக்கப்பட்ட றெக்ஸ் டிலெர்ஸன் ஆகியோர், ரஷ்யாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டுக் காணப்பட்டது. அதை, ட்ரம்ப் குழுவினர் மறுத்திருந்தனர்.
இந்நிலையில் தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மீதான தடைகளை நீக்குவது குறித்து, ஐக்கிய அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவருடன், பிளின் கலந்துரையாடினார் என்ற விடயம் வெளியானது. இதற்கு முன்னர் இவ்வாறான குற்றச்சாட்டு எழுந்தபோது, ட்ரம்ப் குழுவினர் அதை மறுத்திருந்தனர். ஆனால் தற்போது, ஆதாரங்களுடன் அக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, தனது பதவியிலிருந்து விலகுவதாக பிளின் அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக, மைக்கல் பிளின் பதவியேற்பதற்கு முன்பாகவே, அவரைப் பற்றிய எச்சரிக்கை, பதில் சட்டமா அதிபராக அப்போது இருந்த சாலி யேட்ஸினால் வழங்கப்பட்டதாகவும் அதை வெள்ளை மாளிகை புறக்கணித்திருந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. இதே பதில் சட்டமா அதிபர் தான், தற்போது பல நீதிமன்றங்களால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள “முஸ்லிம் தடை”யை அமுலாக்க மறுத்ததால், ஜனாதிபதி ட்ரம்ப்பால் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது, மேலதிக தகவல்.
இலங்கை நேரப்படி நேற்றுக் காலை வெளியிடப்பட்ட சூடான செய்தியின்படி, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவினரும் அவரது உதவியாளர்களும், ரஷ்யாவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பைக் கொண்டிருந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயம், மேலதிக விசாரணைகளைக் கொண்டுவருமெனவும், பலர் தண்டிக்கப்படக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி, ஜனாதிபதி ட்ரம்ப்பை நிச்சயமாகக் கோபப்படுத்துமென்பதில் ஐயமில்லை. அவருக்கும் புலனாய்வு அமைப்புகளுக்குமிடையிலான உறவு, ஆரோக்கியமல்லாத நிலையிலேயே காணப்படுகிறது.
பிரசாரக் காலத்திலிருந்தே புலனாய்வு அமைப்புகளுடன், முரண்பாடான உறவொன்றைக் கொண்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஜனாதிபதியாகப் பதவியேற்க முன்னர், புலனாய்வு முகவராண்மைகளை, நாஸி ஜேர்மனியுடன் ஒப்பிட்டிருந்தார். பின்னர், புலனாய்வு முகவராண்மைகளால் வழங்கப்படும் தினசரி புலனாய்வு அறிக்கைகள் மீது அவருக்கு நாட்டமில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், புலனாய்வு அறிக்கையளிப்பு இடம்பெறும் நேரத்தில், டுவிட்டர் இணையத்தளத்தில், தனது மகள் இவங்கா ட்ரம்ப்பின் வணிகத்துக்கு ஆதரவான டுவீட்டை அவர் பதிந்திருந்தார். தேசிய பாதுகாப்பு முகவராண்மை தற்போது, அவருக்கான விசேட புலனாய்வு அறிக்கையிடலைத் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அந்தளவுக்கு, நிலைமை மோசமாக மாறியிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்கதாக, ஐ.அமெரிக்கச் சட்டங்களின்படி, ஜனாதிபதியோ அல்லது ஏனைய அரச ஊழியர்களோ, தங்களுடைய பதவிக் காலத்தில், வணிகமொன்றைச் சந்தைப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறானது. எனவே, புலனாய்வு அறிக்கையிடல் நேரத்தில், டுவிட்டர் இணையத்தளத்தைப் பயன்படுத்தியமை ஒருபக்கமிருக்க, மகளின் வணிகத்தை அவர் ஊக்குவித்தமை, குற்றமாகக்கூட அமையலாம். ஜனாதிபதி ட்ரம்ப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது பிரசாரக் குழுவைக் கொண்டு நடத்தியவருமான கேலியான் கொன்வே, ஒருபடி மேல் சென்று, “இவங்கா ட்ரம்ப்பின் நிறுவன ஆடைகளை வாங்குங்கள்.
இலவசமான விளம்பரமொன்றை நான் வழங்குகிறேன்” என்று, தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை இவ்வாறிருக்க, முன்னெப்போதுமில்லாதவாறு, வெள்ளை மாளிகையிலிருந்து கசியவிடப்படும் தகவல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாகவே, சில தகவல்கள் கசிவது வழக்கமென்ற போதிலும், பதவியேற்ற முதல்நாள் முதல், ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பான தகவல்கள், ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது, ட்ரம்ப்பின் ஊழியர்களுக்கு நடுவிலும், அவர் மீதான விருப்பமின்மை/வெறுப்புக் காணப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அதுவும், இவ்வளவு விரைவாக இவ்வளவு அதிகமான கசிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை, நீண்டகால நோக்கில், ஆரோக்கியமானதொன்றல்ல என்பது வெளிப்படையானது. முன்னரே கூறப்பட்டது போன்று, வழக்கமான அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் தேனிலவுக் காலமின்றித் தனது பதவியை ஆரம்பித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தன் செய்கைகளால், தனது பதவிக் காலத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மையானது.
Average Rating