ஜெயலலிதாவுக்கு விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள்..!!
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனவும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
மேலும் இரு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியதோடு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அத்தோடு கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாகவும், கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குறித்த தீர்ப்பால் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கும் பின்னணியும்
பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தமிழக ஊழல் தடுப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகார தலையீடுகள் இருக்குமென சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு, செப்டம்பர்மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு 100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு 10 கோடி விகிதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, வழக்கில் அரசதரப்பு கணக்கு பிரிவு தவறிழைத்துவிட்டதாக கூறி, 2015ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
குறித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் உள்ளிட்டோரால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த வழக்கின் விசாரணைகளை முடித்த நிலையில் உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா இறந்ததால் விடுதலை செய்யப்படுவதாகவும், மேலும் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பானது சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளது. இதனால் அவரின் முதல்வர் கனவு, தேர்தலில் போட்டியிடும் கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளதோடு, 4 ஆண்டுகால சிறைத் தண்டைனையில், முன்பு அனுபவித்த சிறைத் தண்டனையைத் தவிர்த்து எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளமையை, இந்திய ஊடகங்கள் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating