தகவல் உரிமைச் சட்டமும் நடைமுறை சாத்தியமும்..!! (கட்டுரை)
இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சட்ட ஏற்பாடாகக் கருதப்படக்கூடிய தகவல் அறியும் சட்டம் இப்போது அமுலுக்கு வந்திருக்கின்றது. தகவலுக்கான உரிமைச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 2016 ஓகஸ்ட் நான்காம் திகதி நிறைவேறியதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம் பெப்ரவரி மூன்றாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
2017.02.03ஆம் திகதியிடப்பட்ட 2004/66 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானி ஊடாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது. அதன்படி, மக்களின் தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகக் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் கொள்கையளவில் வெற்றியடைந்துள்ளன என்று சொல்லமுடியும். இதனது உண்மையான வெற்றி இதனை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைச் சாத்தியங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கும்.
தமிழ் பேசும் மக்கள் தகவலறியும் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் அனுகூலங்களையும் சரியாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டும். பகிரங்க அதிகார சபைகள் என்ற வரையறைக்குள் உள்ளடங்கும் அரசாங்க மற்றும் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கின்ற சமகாலத்தில், எந்தவொரு தகவலையும் பொதுமகன் ஒருவர், தான் விரும்பியபோது பெறுவதில் உள்ள தடைகளை நீக்குவதற்காகவும் இப்புதிய ஏற்பாட்டை அரசியலமைப்புப் பேரவை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மஹிந்த கம்மன்பில தலைமையிலான ஐவர் அடங்கிய தகவல் ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.
தகவலறியும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், அனைத்து விடயங்களும் அக்குவேறு ஆணிவேறாகக் குறித்துரைக்கப்பட்டுள்ளன. தகவலறியும் சட்டத்தின் 22 ஒழுங்குவிதிகள் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல் கோருவதற்கான பொதுவான நடைமுறைகள், பொதுமக்கள் தகவல் கோரி விண்ணப்பிப்பதற்கான மாதிரிப்படிவம், அந்தப் படிவத்தை ஏற்றுக் கொண்டதற்கான சான்றாதாரம், கட்டண முறைமைகள், காலஅவகாசம் என எல்லா விடயங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வளவு காலமும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய தடங்கல்கள் இருந்தன.
ஓர் அரசாங்க நிறுவனத்தில் அல்லது பகிரங்க அதிகாரசபையில், மக்களுக்கு சேவையாற்றும் தனியார் நிறுவனங்களில், பொதுமக்கள் ஒரு தகவலைப் பெற்றுக் கொள்வது என்றால், அது ‘கல்லில் நாருரிக்கின்ற வேலை’யாக இருந்தது. ஒரு தகவலைக் கேட்டுப் போனால், “அந்தத் தகவலை உங்களுக்கு தரமுடியாது; அது உங்களுக்கு உரித்துடையதல்ல” என்று சொல்லிவிடுகின்ற சம்பவங்களும் “சம்பந்தப்பட்ட அதிகாரி வரவில்லை”, “அலுமாரிச் சாவியைக் காணவில்லை”, “அந்த ஆவணம் எம்மிடம் இப்போதில்லை” என்றும் சாக்குப்போக்குச் சொல்கின்ற நிலைமைகளும் இன்றுவரை அரசாங்க அலுவலகங்களில் இருக்கின்றன.
ஓர் ஆவணத்தைத் தேடி எடுத்துக் கொடுக்கும் செயற்பாடுகளில், அரசாங்க அலுவலர்கள் காட்டிய மெத்தனப் போக்கு, பொதுமக்களிடையே பாரிய விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தகவலை நாடிச் செல்கின்ற ஒரு வயோதிபரை, குடும்பஸ்தரை அவசியமற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு, அந்தத் தகவலைப் பெறுவதற்கான அவருடைய ஆர்வத்தையே விரக்தியாக மாற்றி, வீட்டுக்கு அனுப்புகின்ற நிலைமைகள் இதுவரை சீர்செய்யப்பட்டிருக்கவில்லை. ஆனால், இந்த போக்குகளுக்கெல்லாம் ஆப்பாக வந்திருக்கின்றது தகவலுரிமைச் சட்டம். இனி எந்தப் பொதுமகனுக்கும் பெறக்கூடிய, நியாயமான, சாத்தியமான தகவல் ஒன்றை வழங்காமல் விடமுடியாதபடி, ஓர் இறுக்கமான சட்டவரையறை இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் – • அரச திணைக்களங்கள் • அரசியலமைப்பின் கீழ், எழுத்து வடிவிலான சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், பொதுக் கூட்டுத்தாபனங்கள் • உள்ளூராட்சி மன்றங்கள் • பொது (மக்கள் சார்பான) செயற்பாட்டில் ஈடுபடுகின்ற தனியார்துறை நிறுவனங்கள் • மாகாண சபைகளுக்கு கீழியங்கும் திணைக்களங்கள், நிறுவனங்கள் • பொதுச் சேவையில் ஈடுபடும் அதேநேரத்தில் சிலகுறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து நிதிவசதிகளைப் பெறும் அரசாங்க சார்பற்ற நிறுவகங்கள் • உயர் கல்வி நிறுவனங்கள் • தொழிற்பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி வழங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் என எல்லா மட்டத்திலுள்ள பகிரங்க அதிகார சபைகளிலும் தமக்கு வேண்டிய ஆவணங்களைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், இவ்வாறு கோரப்படும் தகவல்கள் தொடர்பில் சில வரையறைகளையும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது. குறிப்பாக, தனிப்பட்ட, இரகசியம் பேணப்படவேண்டிய, புலமைச் சொத்து சார்ந்த தகவல்களைப் பொதுமக்கள் கோருவது தொடர்பில் சில விதிவிலக்குகளும் காணப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் நினைவில் கொள்ளவேண்டும். தகவல் உரிமைச் சட்டம் என்பது மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். உலகின் பலநாடுகளிலும் ஊடக சுதந்திரம் அல்லது சுதந்திர ஊடகத்தின் அளவுக்கு இது தாக்கம் செலுத்தியிருக்கின்றது. இதற்கு நல்லதொரு சான்று, நமது அண்டை நாடான இந்திய அனுபவமாகும். இராஜஸ்தான், தேவதுங்கரி பிரதேசத்தில் 1990 களில் ஏற்பட்ட கடும் வரட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அம்மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் சுருட்டிக் கொண்டனர். இதன்பின் 1994 ஆம் ஆண்டிலிருந்து, இது தகவல் பெறும் உரிமைக்கான பரந்துபட்ட போராட்டமாக விஸ்வரூபமெடுத்தது. அதன் விளைவாக 2005ஆம் ஆண்டில் தகவல் பெறும் உரிமை, இந்தியாவில் சட்டமாகியது. இலங்கையிலும் 1995 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது இதுகாலவரைக்கும் சாத்தியப்பட்டிருக்கவில்லை. இருப்பினும், இந்தியா போன்றதொரு வெகுஜனப் போராட்டத்தை மேற்கொள்ளாமல் இலங்கை மக்களுக்கு இப்படியான ஒரு வரப்பிரசாதம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
எனவே, அதை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒவ்வொரு அரசாங்க நிறுவனங்கள் (நிறுவனங்கள் என்பது சில வேளை அலுவலகங்களாகவும் அமையலாம்) ‘தகவல் அதிகாரி’ ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் பிரதேச செயலகங்களில் தகவல் அதிகாரியாகத் தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு, பிரதேச செயலாளர்களை, மாவட்டச் செயலாளர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதேபோன்று, ஏனைய ‘பகிரங்க அதிகார சபைகள்’ என்ற வகுதிக்குள் வரும் மேலே பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்துமே, இவ்வாறான ஓர் அதிகாரியை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரியே தகவல் உரிமைச் சட்டத்தின்படி பொதுமக்களால் வேண்டப்படும் தகவல்களை வழங்குவதற்குப் பொறுப்பாக இருப்பார். பொதுமக்கள் மேற்படி அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சென்று பொதுவான தகவல்களைக் கோர முடியும். இதற்கான மாதிரிப்படிவம், வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதைத் தகவல் கோருபவருக்கு வாசித்துக் காட்டி ஒப்பம் பெறப்பட வேண்டும். எந்தவொரு மொழியிலும் எழுத்துமூலமாக மட்டுமன்றி, வாய்மொழி மூலமாகவும் தகவல்களைக் கோர முடியும். தகவல் வழங்க முடியுமா, இல்லையா என்பதை ஆகக் கூடுதலாக 14 நாட்களுக்குள் தீர்மானிக்க வேண்டும். தகவல் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டால், அதற்கான கட்டண விபரங்களைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிக்கு தகவல் அதிகாரி அறிவிப்பார். கட்டணம் செலுத்தும் தகவலாயின் கட்டணம் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும்.
கட்டணம் செலுத்துவதில்லையென்றால், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்பது சட்டநியதியாகும். அத்துடன் தகவல் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் புதிய சட்டத்தினால் விதந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, விதிவிலக்குகளுக்கு தகவல் கோருகின்ற எந்தவொரு பொதுமகனையும் வெறுங்கையுடன் வெளியில் துரத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது இலங்கையில் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு மாற்றமாகும். இதனைப் பயன்படுத்தி ஓர் அமைச்சின் அல்லது அதற்குப் பொறுப்பாக இருக்கும் அரசியல்வாதியின் (பொது) கணக்குவழக்குகள் முதற்கொண்டு, காணாமல் போனோர் வரை எல்லா விடயங்களையும் பொது மக்கள் கோரமுடியும்.
இதனால் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். எந்த விடயத்தையும் மூடி மறைக்க முடியாது. அவ்வாறு, இதுகாலவரை மறைக்கப்பட்ட, திருத்தப்பட்ட ஆவணங்களையும் மக்கள் கோரும் பட்சத்தில் வெளிப்படுத்தியாக வேண்டும். இதனால் நாட்டின் அரசாங்க, தனியார் நிறுவனக் கட்டமைப்பில் பொறுப்புக்கூறும் தன்மையும் ஊழல் செய்ய முடியாத நிலைமையும் ஏற்படும். அதுமட்டுமன்றி, சிங்கள அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை, அவர்களை ஒரு பொதுமக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பொது மக்கள் தகவல் கோர முடியும்.
இதனால் பல விடயங்கள், இரகசியங்கள், சுத்துமாத்துகள் வெளியில் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதற்கான கதவை தகவல் அறியும் சட்டமூலம் திறந்து விட்டிருக்கின்றது. ஆனால், இங்கிருக்கின்ற பெரிய பிரச்சினை, இந்த அற்புதமான சட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களாகும்.
அதாவது, அரசாங்க நிறுவனங்கள் உள்ளடங்கலாக, மேற்குறிப்பிட்ட வகையிலான எல்லா நிறுவனங்களும் இன்னும் தமது தகவல்களை, இதற்காகத் தயார் செய்யவில்லை. திடுதிப்பென அதை உருவாக்கி, ஒரு தரவுத் தளத்தைத் தயாரித்துக் கொள்வதற்கு இன்னும் காலமெடுக்கும். அதேநேரம், அரசாங்க அலுவலகங்கள் பலவற்றில் தமது தேவைகளை நிவர்த்தி செய்யப் போகின்ற பொதுமக்கள், அதிருப்தியுற்றவர்களாகவே திரும்பி வருகின்றனர் என்பது பரவலான அவதானிப்பாகும். ஏதாவது ஓர் ஆவணத்தைக் கேட்டுப் போனால், “அவர் இல்லை…. இவர் இல்லை.
ஒப்பமிடுவதற்கு அதிகாரி இல்லை… நாளை வாருங்கள்…..” என்று அலைக்கழிக்கப்படுகின்ற நிகழ்வுகளும், சில தகவல்கள் மறுக்கப்படுகின்ற சம்பவங்களும் தொடராக இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதுவே, இவ்வாறான சட்டமொன்றின் தேவைப்பாட்டை உணர்த்தியிருக்கின்றது என்றும் சொல்ல முடியும். இந்த இலட்சணத்தில், ஒரு தகவலைப் பொதுமக்கள் வந்து கோருகின்ற போது, அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரி, எந்தளவுக்குச் சிறப்பாக இதனைச் செய்வார் என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன.
அல்லது, எல்லாப் பாரத்தையும் அவர் மீது திணித்துவிட்டு, ஒத்துழைப்பு எதுவும் வழங்காமல் அந்த நிறுவனம் விலகிக் கொள்ளுமாக இருந்தால், அவரால் முழு வினைத்திறனோடு செயற்படுவது ஆரம்பத்தில் சவால்மிக்கதாகவே இருக்கும். அரசாங்கப் பொறிமுறை மிகப் பெரிய கட்டமைப்பாகும். இதில் வினைதிறனற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் விமர்சனமாகும்.
தனியார் துறையில் வினைதிறன் அதிகம் என்றாலும் பொது மக்களுக்கு அந்நிறுவனங்கள் வெளிப்படையாகச் செயற்படுவது குறைவு. இவ்விரு கட்டமைப்பிலும் அதற்கு வெளியிலான ஏனைய அரசாங்க சார்பற்ற நிறுவனங்களிலும் சிறியதும் பெரியதும் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் மூடுமந்திர செயற்பாடுகளாகும். ஆனால், புதிய சட்டத்தினால் இந்நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
எவ்வாறாயினும், இதுபோலவே இலங்கையில் இன்னும் எத்தனையோ சட்டங்கள் எழுத்தில் இருக்கின்றன. ஆனால், நடைமுறைப்படுத்துவதிலேயே பாரிய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதுபோல, தகவல் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு, தகவல் வழங்கும் அதிகாரி நியமிக்கப்பட்டாலும், அதிலும் இவ்வாறான நடைமுறைச் சவால்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. எனவே, அதையும் தாண்டி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனது பூரண இலக்கை அடைந்து கொள்ளும்.
Average Rating