எங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது..!! (கட்டுரை)
எங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும் எங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு மீள்குடியமர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மக்கள் மீள்குடியேறி எட்டு வருடங்களை எட்டுகின்ற போதும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கேப்பாப்புலவு கிராமத்தில் 524 ஏக்கர் காணிகளையும், புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளையும் இதுவரை விடுவிக்காது அந்த மக்களை பெரும் நிர்க்கதி நிலைக்குள் அரசு தள்ளியிருக்கின்றது.
இதனால் தங்களது நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மக்களும் தொடர்ந்து புதுக்குடியிருப்பு மக்களும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராமம் என்பது மிகவும் பழமை வாய்ந்த ஓர் விவசாயக்கிராமம். இங்குள்ள மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பினையும் அதனோடு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலையும் செய்து வந்த மக்கள் சமூகம் வாழ்ந்த ஓர் அழகிய கிராமமாகும்.
கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்த பகுதி மக்களும் தங்களது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் வரையும் சென்று கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு சென்று மிக நீண்டகாலம் முகாம் வாழ்க்கையை தொடர்ந்து மீளவும் தங்களது சொந்த இடங்களுக்குச்செல்லும் நீண்ட கனவுகளோடு காத்திருந்த மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் அழைத்து வந்து கேப்பாப்புலவு சீனியா மோட்டை பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கேப்பாப்புலவு மாதிரிக்கிராமம் என்ற பெயரில் குடியமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்தும் அந்த மக்களை அங்கேயே குடியேற்றி நாள் அடைவில் கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்றிக் கொள்ளவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் கடந்த காலங்களில் எவரிடமும் கையேந்தி வாழா நிலையில் சுயகௌரவத்தோடு வாழ்ந்த சமூகம் இவர்களுக்கு தேவையான சகல வளங்களும் பயிர் செய்கை நிலங்களும் அவர்களின் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப வீடுகளும் இருந்தன.
இவ்வாறு வாழ்ந்த மக்களை மாதிரிக்கிராமத்தில் கால் ஏக்கர் காணிகளையும் வீடுகளையும் வழங்கி அவர்களது திறந்த வாழ்க்கைமுறைக்கு மாறாக தங்க வைக்கப்பட்ட நிலையில் இன்று தொழில் வாய்ப்பின்மை சமூக சீரழிவுகள் கலாச்சார சீர்கேடுகள் என பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும் வகையில் இவர்களது வாழ்வு தள்ளப்பட்டுள்ளது.
அதாவது கேப்பாப்புலவு கிராமத்தின் சூரிபுரம் பகுதியைச் சேர்ந்த 59 குடும்பங்களினது காணிகளும் புலக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களினது காணிகளும் கேப்பாப்புலவு கிராமத்தில் 145 குடும்பங்களினது காணிகளும் என சுமார் 524 ஏக்கர் காணி விமானப்படையினர் வசமுள்ளன.
இதனைவிட திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் ஆலயங்களின் காணிகள் இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத மக்களின் காணிகள் இவற்றில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சீனியா மோட்டை பகுதியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் தமது கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் வேலாயுதப்பிள்ளை அவர்கள் தங்களது நிலங்களை விட வேண்டும் என மாதிரிக்கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் மூன்றாவது நாள் வடமாகாண முதலமைச்சரின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு உண்ணாவிரதம் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் மூலம் குழுவொன்று நியமிக்கப்பட்டு காணிகள் விடுவிப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த மக்களது காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆனால் கடந்த ஜனவரி மாதம் முல்லைத்தீவில் அரசு கையளித்துள்ள 243 ஏக்கர் காணிகளில் அரசாங்கம் கையளிப்பதாகக்கூறிய காணிகள் வேறு, கையளிக்கப்பட்ட காணிகள் வேறு என வடக்குமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி தங்களுடைய காணிகள் விடுவிக்கப்படும் என்று குறிப்பிட்டதற்கு அமைவாக அங்கு சென்றபோது அந்த மக்களின் காணிகள் விமானப்படையினரால் வேலிகள் அமைத்து பலப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி விமானப்படையினரின் இரண்டாவது வாயில் அமைந்துள்ள புலக்குடியிருப்பு வீதிக்கு முன்னால் தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு நாள் இரண்டு நாள் என்று இரவு பகலாக 84 குடும்பங்களும் தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி கொட்டும் பனியிலும், கொழுத்தும் வெயிலிலும் பச்சிளம் குழந்தைகள் வயோதிபர் என வயது வேறுபாடின்றி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்களுடைய காணிகளை இந்த நல்லாட்சி அரசு தரவேண்டும் எங்களுடைய நிலங்கள் எங்களுடைய உயிர்களுக்கு மேலானது அதற்காக எந்த விதத்திலும் போராட நாங்கள் தயாராக உள்ளோம் என்று அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் விமானப்படையினரும் அரசும் பல்வேறு காரணங்களை காட்டமுனைகின்றது.
அதாவது வனஇலாக்காவிற்கு சொந்தமான காணி என்றும் விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதை அமைந்திருந்;த பகுதியாகையால் அதனை விடுவதில் பாதுகாப்பு படைத்தரப்புக்கு பிரச்சினை என பல காரணங்களை அடுக்கிச் செல்கின்றது.
இந்த மக்களின் போராட்டம் இன்றுவரை முடிவின்றி தொடர்கின்றது. இதனைவிட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள, முன்பு டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த தனியார் மருத்துவமனை இயங்கிய வீடு, காணி மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளில் சுமார் 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளையும் அதற்குள் உள்ள வீடுகளையும் கடந்த எட்டு வருடங்களாக இராணுவத்தினர் தமது பயன்பாட்டில் வைத்திருப்பதனால் இந்த காணி உரிமையாளர்கள் கடந்த எட்டு வருடங்களாக வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த காணிகளை விடுவிக்கக்கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரியும் புலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதிய காணிகளை வழங்குமாறு அல்லது வேறு காணிகளைத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. நாங்கள் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த எங்களது காணிகளைத்தான் கேட்கின்றோம்.
எங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவோம் என்று கூறி ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு இன்று எங்களை வைத்து வேடிக்கை பார்க்கின்றது.
இந்த நல்லாட்சி அரசும் சர்வதேச நாடுகளும் எங்களது நிலங்களை எங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் பலர் நோய்களுக்கு உட்பட்டுள்ளனர்.
இந்த மக்களின் போராட்டம் நியாயமானது இதனை நிறுத்தும் படிகேட்க முடியாது. அவர்கள் தங்களது நிலத்தில் குடியேற்றுமாறுதான் வலியுறுத்துகின்றனர். அதற்கு நம்மால் முடியுமான ஆதரவுகளை வழங்குவதாக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து வந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்கள் என்பன தங்களுடைய ஆதரவுகளை வழங்கி வருகின்றன.
எது எவ்வாறு இருப்பினும் நாங்கள் விடுதலைப்புலிகளிடமோ அல்லது அரசாங்கத்திடமோ கையேந்தி வாழ்ந்தவர்கள் இல்லை.
எங்களுடைய காணிகளில் நாங்களாக பயிர் செய்து உழைத்து வாழ்ந்தவர்கள். எங்களுடைய நிலங்களைத் தான் கேட்கின்றோம். அதனை இந்த அரசு தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு அவர்களது நிலங்கள் கிடைக்கவேண்டும்.
Average Rating