நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 27 Second

real-estate-021-600-18-1479467383 “2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
“2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும் அமெரிக்காவுடையதும் ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும்.

“இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும், அது ஏதோ ஓர் ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது.

இங்கே உள்ளவர்கள் எல்லாம், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் காரில் போகவும் விசா எடுக்கவும் எல்லையில் கடவுச்சீட்டுக் காட்டவும் வேண்டி வரும். புறாக்கூடு போல சின்னச் சின்ன ஃப்ளட்களில், நாங்கள் எல்லோரும் வசிக்க வேண்டி வரும். அது நவீன சேரி என்றழைக்கப்படும். தண்ணீர், காசு கொடுத்து சின்னச் சின்ன போத்தல்களில் வாங்க வேண்டி வரும்.

வெளியே நல்ல காற்று இருக்காது. எனவே, எப்போதும் ஒக்‌ஸிஜன் கெஜெட்டோட தான் வெளியே போக வர வேண்டி இருக்கும். இப்படியாக, நாங்கள் இருந்த நாடு நமக்கு இல்லை என்றாகி, வேறு நாட்டின் கூலி அடிமைகளாக நாம் மாற வேண்டி இருக்கும்.”

மேலே உள்ளது அப்துல் ஹக் லறீனா என்பவருடைய பேஸ்புக் பதிவொன்று. அப்துல் ஹக் லறீனா, சமூக நிலைவரங்களை மையமாகக் கொண்டு எழுதி வரும் எழுத்தாளர். கூடவே, பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

சமூகங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம், சிந்தனைப் பரிமாற்றம், பண்பாட்டுறவு போன்றவற்றுக்காக மொழிபெயர்ப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றவர்.

எல்லாவற்றுக்கும் அப்பால், சமூக சிந்தனையாளர். எதிர்கால இலங்கையைப் பற்றிய அவருடைய துயரம் இது. இன்றைய இலங்கை நிலைவரங்கள், இப்படித்தான் அவரைச் சிந்திக்க வைக்கின்றன. லறீனாவை மட்டுமல்ல, பொது நிலைவரங்களைக் குறித்துச் சிந்திக்கும் எவரையும், இப்படியே உணரவைக்கும்படியாக உள்ளன.
நாடு, சுயாதீனத்தை அடைவதற்குப் பதிலாக, அதை மேலும் மேலும் இழந்து கொண்டிருக்கிறது.
வெளிச்சக்திகளின் ஆதிக்கம் வரவரக் கூடிக் கொண்டிருக்கிறது. ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15,000 ஏக்கர் நிலம்; திருகோணமலையில் இந்தியாவுக்கு; கொழும்பிலும் புத்தளத்திலும் நெடுந்தீவிலும் முதலீடுகளின் பெயரால் வெளிச்சக்திகள் நிலத்தைப் பெறுவதற்கான சாத்தியங்களே அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதைவிட, நாட்டின் ஏனைய இடங்களிலும் இதைப்போல முதலீடுகளின் பெயரால் பிற சக்திகள் நிலத்தைப் பெறும் நிலையே தென்படுகிறது. ஆனால், இலங்கை, பிற நாடுகள் எதிலும் இப்படி முதலீட்டுக்காக நிலத்தைப் பெறுவதற்காக முயல்கிறதா என்றால், “ஐயோ அப்படியெல்லாம். இல்லை. அந்த மாதிரியான ஒரு பாதகச் செயலை இலங்கை ஒரு போதும் செய்யாது” என்றொரு பதிலை, நம்முடைய தலைவர்கள் சொல்லக்கூடும்.
நாட்டை விற்றுக் கொண்டாட்டம் நடத்தும் ஒரு நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் வந்திருக்கிறோம். ஒரு பக்கம் நாடு, வெளிச்சக்திகளுக்கு விற்கப்படுகிறது அல்லது அடமானம் வைக்கப்படுகிறது.

மறுபக்கத்தில் “இந்த நாட்டுக்குள்ளேயே எங்களுக்குரிய நிலத்தைத் தாருங்கள்” என்ற போராட்டங்கள் வேறு நடக்கின்றன. “வடக்கு, கிழக்கைத் தனியாகப் பிரித்துத் தாருங்கள்” என்று ஒரு சாரார் கேட்கிறார்கள்.
அவர்கள் கேட்பது சரியா, தவறா என்ற வாதங்கள் ஒரு பக்கமிருக்கட்டும். அப்படிக் கேட்பவர்கள், இந்த மண்ணுக்குரியவர்கள், இந்த நாட்டின் மக்கள். அவர்கள் அப்படிக் கேட்பதைச் சகிக்க முடியாத அரசாங்கம், இந்த நாட்டுக்கு எதிராக இயங்குகின்ற, இந்த நாட்டைச் சுரண்டி அழிக்கின்ற சக்திகளுக்கு எந்தக் கேள்வியுமில்லாமல் கேட்பதைக் கொடுக்கிறது.

இதை இந்த நாட்டில் பிரிவினையை விரும்பாத, “ஒற்றையாட்சிக்குள்தான் நீங்கள் தூங்கி எழவேண்டும், அதற்குள்ளேயே கனவு காணவேண்டும்” என்று சொல்கின்றவர்கள் கூட, கண்டு கொள்வதில்லை. அப்படிக் கண்டு கொண்டாலும், அதைப்பற்றிக் கேள்விகள் கேட்பதில்லை. அப்படிக் கேள்விகளை எழுப்பினாலும், அதற்காகப் போராடுவதில்லை.

இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் இந்த அதிகாலை, இலங்கையின் 69ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதற்கான ஆரவாரங்களை, தொலைக்காட்சி ஒன்று காண்பித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மக்களுடைய அண்மைய போராட்டக் குரல்கள், அதை மீறிக் கேட்கின்றன. இதைப் பார்க்கையில் சிரிப்பும் எரிச்சலுமாகவே உள்ளது.

இருக்காதா பின்னே?

“கொழும்பிலே சுதந்திர தினக் கொண்டாட்டம். கேப்பாப்புலவில் நாங்கள் திண்டாட்டம்” என்ற குரல்கள் நான்கு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த மக்கள் சொல்வதைப்போல, சுதந்திரதின மேடையில் தலைவர்கள் கொடிகளை ஏந்தியபடி இருக்கிறார்கள்.

கேப்பாப்புலவிலோ தங்கள் சொந்த நிலத்துக்குப் போக முடியாமல், தங்களுடைய வீட்டில் குடியேற வழியில்லாமல் தெருவிலே மக்கள் நிற்கின்றனர்.

இவ்வளவுக்கும் கேப்பாப்புலவு ஒன்றும், பெரிய நிலப்பகுதி உள்ள பிரதேசமல்ல. வளமான பகுதிகூட அல்ல. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நந்திக்கடல் என்ற சிறுகளப்பின் மேற்கு விளிம்பிலுள்ள மிகச் சிறிய கிராமம். ஒரு கடைத்தெருக்கூட அங்கே கிடையாது.

பெரிய பாடசாலையோ, பொதுக்கட்டடங்களோ கூட அங்கில்லை. ஐந்தாம் தரம் வரை படிக்கக்கூடிய ஒரு பாடசாலையும் சிறியதொரு தபால் நிலையமுமே அங்கேயிருந்தன. மிஞ்சிப்போனால், 200 குடும்பங்கள் வரையில்தான் அந்தப் பகுதிக்குரியவை. ஆனால், அது அவர்களுடைய பூர்வீகக் கிராமம்.

தலைமுறைகள் வாழ்ந்து உருவாக்கிய வாழிடம். அவர்களுடைய கனவும் நினைவும் உயிரும் அங்கேதான் உள்ளது. ஆகவேதான், அங்கே போவதற்காக அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளாகின்றன. இன்னும் அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு மக்கள் போவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமையான விடயம்? இதைப்பற்றி இந்த நாட்டிலே எத்தனைபேருக்குத் தெரியும்?

இந்த விடயம், ஊடகங்களாலும் அரசியல் தலைவர்களாலும் எந்தளவுக்குக் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது? தெற்கிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு நோக்கிப் பயணிக்கின்றனர்.
பல இடங்களையும் சுற்றிப்பார்க்கின்றனர். நல்லிணக்க முயற்சிகள் வேறு, நாடு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் எப்படியாவது சமாதானத்தை உருவாக்கியே தீருவது என்ற வேட்கையோடும் வெறியோடும் சிலர் முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் அமைதிக்கான பணிகள் நடக்கட்டும் என்று மேற்குலகம் 1.5 பில்லியன் டொலர்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. ஆனால், சொந்த வீட்டுக்கே போக முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி? அவர்களுடைய நியாயமான போராட்டத்தைப்பற்றி?

இவ்வளவுக்கும் கேப்பாப்புலவுப் பிரதேசம் ஒன்றும் நாட்டின் பாதுகாப்புக்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இல்லை. அல்லது அந்த மக்களை அங்கே மீள அனுமதிப்பதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கு எந்த விதமான கெடுதியும் வந்து விடப்போவதுமில்லை.
அந்த மக்கள் அங்கே எதைச் செய்ய விரும்புகிறார்கள், எதைச் செய்வார்கள் என்பதை அந்த மக்களோடு ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன் காந்தன் என்ற கவிஞர் சொல்வதைப் பாருங்கள்.

புலவைக் கொடுங்கள்
அந்த அழகிய புலவை

அதன் சொந்தக்காரரிடம்
கொடுத்துவிடுங்கள் சகோதரர்களே!
கொடுத்துப்பாருங்களேன்
உடனே முற்றத்தைப் பெருக்கி
உங்களுக்குப் பாய்விரிப்பார்கள்
எங்காவது சுள்ளிகளைப் பொறுக்கி
சுடச்சுட ரொட்டி சுட்டு

ஒரு தேயிலைச் சாயமும் தருவார்கள்
சந்தோசமாக விடைபெற்றுப் பாருங்கள்
விரும்பினால் மீண்டும் வந்து பாருங்கள்
அவர்கள் ஏவுகணைப் பரிசோதனை
செய்து கொண்டிருக்க மாட்டார்கள்
வயலில் உழுது கொண்டிருப்பார்கள்
படம் பிடித்துப்போங்கள்
உங்கள் ராசாக்களிடம் காட்டுங்கள்
மீண்டும் நீங்கள் வரலாம்

விமானத்தை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்
மாடுகளைச் சாய்த்துக்கொண்டு வருவார்கள்
படம் பிடித்துப்போங்கள் அதன் அழகை
உங்கள் ராசாக்களிடம் காட்டுங்கள்
மீண்டும் வாருங்கள்
யாரும் ரி-56 வைத்திருக்க மாட்டார்கள்
நந்திக்கடலில் மீனும் இறாலும் நண்டும் குத்தி
கூழ் காய்ச்சி, கள்ளருந்தி மகிழ்ந்திருப்பார்கள்
உங்களையும் அழைத்து விருந்தூட்டுவார்கள்
படம் பிடித்துப்போங்கள்
உங்கள் ராசாக்களிடம் காட்டுங்கள்

இதுதான் உண்மை. என்றாலும் இதை விளங்கிக் கொள்வதற்கு இந்த நாடு முயலவில்லை. இப்படியான நிலையில்தான், சுதந்திர தினத்தின் ஆரவாரங்கள் காணப்பட்டன.

கேப்பாப்புலவு மக்கள் மட்டுமல்ல, அவர்களைப்போல வேறு இடங்களிலும் பலர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். “எங்களுடைய வீட்டில் குடியேறுவதற்கு எங்களை விடுங்கள். எங்கள் வயலை நாங்கள் உழுவதற்கு அனுமதியுங்கள்” என, இயக்கச்சியில் உள்ளவர்கள் கேட்கிறார்கள்.
“எங்கள் ஊர்களை எங்களிடம் தாருங்கள். எங்களுடைய கடலிலே நாங்கள் மீன்பிடிக்கத் தடுக்காதீர்கள்” என்று, வலிவடக்கு மயிலிட்டி, பலாலி மக்கள் கேட்கிறார்கள்.

“நாங்கள் குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலம் தாருங்கள்” என்று, மலையகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கேட்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பதிலைச் சொல்வதற்கு யாருமே இல்லை. அல்லது எவரிடமும் பதில் இல்லை. மக்களின் கூக்குரல்களையெல்லாம் நம்முடைய தலைவர்கள் மௌனமாகக் கடந்து, பழகி விட்டார்கள்.
எதற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. யாருக்கும் பதிலளிக்கும் அவசியமில்லை என்ற மரபு உருவாகி வளர்ந்து விட்டது.

உங்களுடைய வீட்டுக்குச் செல்வதை யாராவது தடுத்தால், உங்கள் ஊருக்கு நீங்கள் போவதற்கு அனுமதியில்லை என்றால், அதனுடைய அர்த்தம் என்ன? நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டில், உங்கள் உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில், நீங்கள் வாழ்வதற்கு ஒரு துண்டு நிலம் உங்களுக்கு இல்லை என்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு? அப்படியான ஒரு நிலையில் நீங்கள் இந்த நாட்டை எப்படி உணருவீர்கள்?
இப்படியிருக்கும்போது சுதந்திர தினம் பற்றிய உங்கள் மனப்பதிவு எப்படியாக இருக்கும்? இவையெல்லாம் மிக எளிய கேள்விகளே. மிகச் சாதாரணமக்களின் மிகச் சாதாரணமான கேள்விகளே. ஆனால், இந்தக் கேள்விகளை, அந்த மக்களால் விட்டு விட முடியவில்லை.

இலங்கையில் இன்று, தனியே நிலப்பிரச்சினை மட்டுமல்ல, பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போகடிக்கப்பட்டவர்களுடைய விவகாரம், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினை, கல்வித்துறையை தனியார் மயமாக்குவதைப் பற்றிய விவகாரம், அரசியல் தீர்வு தொடர்பான சிக்கல் என? ஏராளம் பிரச்சினைகள் உள்ளன.
இதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சுதந்திர தினத்தன்று கூட “நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்ற போதும், தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் சிங்கள ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பொதுமக்களின் காணிவிடுவிப்பு, சர்வதேச விசாரணையை நடைமுறைப்படுத்தல், காணாமல் போனவர்களுக்கு உரிய தீர்வினை வழங்கல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தை விரைவு படுத்தல் போன்ற ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து ஒரு போராட்டம் யாழ்ப்பாணத்திலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, எரியும் பிரச்சினைகளின் மத்தியில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவேதான், லறீனா போன்றவர்களின் மனதில் இந்த நாட்டைப்பற்றிய அச்சவுணர்வு ஏற்படுகிறது. இப்படி எல்லாப் பக்கத்திலும் தீ மூண்டிருக்கும் நாட்டை, மக்களைத் தெருவிலே நிற்க வைத்திருக்கும் தேசத்தைப் பார்க்கும்போது, வேறு எப்படியான உணர்வு வரும்? இந்த நிலையில் நாம் எப்படி “இலங்கை எங்கள் திருநாடு” என்று சொல்ல முடியும்? இது திருநாடா, திருடப்படும் நாடா என்றே கேட்கத் தோன்றுகிறது.
இந்த நாட்டை அந்நியர்கள் ஆட்சி செய்தபோதும் செல்வம் குறைந்திருக்கவில்லை. இயற்கை வளங்கள் மோசமான முறையில் அழிக்கப்படவில்லை. மனிதக் கொலைகள் உச்சமாக நடக்கவில்லை. இனமுரண்களும் பகையும் உச்சமடைந்ததில்லை.

ஆனால், சுதேசிகளான இலங்கையர்களின் கைகளில் ஆட்சி – அதிகாரம் கிடைத்தபிறகே, இலட்சக்கணக்கான மக்கள் தென்பகுதிப் போராட்டங்களிலும் ஈழப்போராட்டத்திலுமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இயற்கை வளங்கள் தாராளமாக அழிக்கப்படுகின்றன. ஊழலும் மோசடியும் குற்றச் செயல்களும் உச்சமடைந்திருக்கின்றன. பகையும் குரோதமும் மிக மோசமாக வளர்ந்திருக்கிறது. அந்நியரிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த பிறகு அது அடைந்திருக்கும் சுபீட்சம் என்ன? அது இதுதானா?

சிந்திக்கும் மனிதர்கள், காலத்தை முன்னுணரும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். அவர்களால்தான் உலகம் பாதுகாக்கப்படுகிறது. குறைந்தபட்சம், எதிர்வருகின்ற ஆபத்தை முன்னுணர்ந்து அவர்கள் எச்சரிக்கிறார்கள். அந்த எச்சரிக்கை மணியே, நாட்டைப் பாதுகாப்பதற்கான விழிப்போசை. ஆனால், இதை ஆட்சியாளர்களும் அதிகாரத்திலிருப்போரும் ஏற்றுக்கொள்வதுமில்லை, விரும்புவதுமில்லை.

ஏன், மக்கள் கூட இதை அதிகமாகப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. இதனால்தான், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வரலாறு, துயரத்தில் மூழ்கும்படியாகிறது.

இலங்கையைப் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், இலங்கையின் சுதந்திரத்தைப் பேணவேண்டுமாக இருந்தால், முதலில் இலங்கையர்களுடைய உரிமைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையும் அவர்களுக்கான வாழும் தகைமைகளும் உறுதி செய்யப்படுவது அவசியம்.

அதுவே, இந்த நாட்டின் குறைகளை நீக்கும். இந்த நாட்டுக்கான பலத்தைச் சேர்க்கும். இதற்கேற்பவாறு சிந்திப்பதே, இன்றைய அவசியம். ஆனால், ஆளும் தரப்பினர் யாரும் இதை நிச்சயமாகச் செய்யப்போவதில்லை.
ஆகவே, இதற்குரிய பொறுப்பு, சிந்திக்கும் குழாத்தினருக்கே உரியது. சிந்திக்கும் தரப்பினரும் செயற்பாட்டியக்கத்தினரும் இதை உணர்ந்து பொதுவெளியில் செயற்படும்போதே, மாற்றங்கள் நிகழும். அதுவே நாட்டைக் காக்கும். நமது சுதந்திரத்தையும் பேணும். சுதந்திரம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்திருப்பதே. அது, தலைவர்கள் மட்டும் பாவனை செய்யும் ஒன்றல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர்..!!
Next post ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை: மருத்துவர்கள்..!!