சோறு போடுபவர்களின் துயரம்..!! (கட்டுரை)
அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது. இப்போது நெல்லுக்குச் சந்தையில் நல்ல விலை. ஒரு மூடை நெல் 3,200 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. ஆனால், ஒரு கால கட்டத்தில் 1,200 ரூபாய் விற்பனையாகுமளவு, ஒரு மூடை நெல்லுக்கான விலை வீழ்ச்சியடைந்திருந்தது. அந்த வகையில் இப்போது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தருணம்தான். அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து கொண்டிருந்த ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்தோம்.
ஏக்கரொன்றுக்கு 35 தொடக்கம் 40 மூடை வரையில், அங்கு நெல் அறுவடையாகிக் கொண்டிருந்தது. அங்கிருந்த வயல் உரிமையாளருடன் பேசியபோது, அவர் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. ஆனால், அந்த வயலுக்கு சற்றே தூரத்தில் ‘பாலமுனை மலையடிக் கண்டம்’ வயல் வெளி உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வரையில் நிலவிய வரட்சி காரணமாக, அங்கு 50 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்கள் அழிவடைந்து, கை விடப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது. கிட்டத்தட்ட விவசாயம் என்பது, ஒரு சூதாட்டம் போல் மாறியிருக்கிறது.
இலாபம் கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா? என்பதை அறுவடை நடைபெற்ற பிறகும், சிலவேளைகளில் அனுமானிக்க முடியாது போய்விடும். நல்ல விளைச்சல் கிடைத்தாலும், சந்தையில் உரிய விலை நெல்லுக்குக் கிடைக்காமல் போனால் நஷ்டம்தான். நல்ல விலை என்பதைத் தீர்மானிக்கும் மறை கரங்கள், நெல் சந்தையில் ஏராளம் உள்ளன. குறிப்பாக, தனியார் நெல் கொள்வனவாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் முக்கியமானவர்களாவர். இவர்கள் நிர்ணயிக்கின்ற விலைதான், அவ்வப் பிரதேசங்களில் நெல்லுக்கான சந்தை விலையாக மாறுகிறது.
அதேவேளை, செயற்கையான முறையிலும் நெல்லுக்கான விலையில் இவர்கள் வீழ்ச்சியினை ஏற்படுத்துவதுண்டு. அந்த வேளைகளில், விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான். உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 65 கிலோகிராம் எடையுடைய ஒரு மூடை நெல்லுக்கான விலையாக 2,750 ரூபாயினை தனியார் நெல் கொள்வனவாளர்கள் தீர்மானித்திருந்தனர். இந்த விலைக்குத்தான் கணிசமான விவசாயிகள், தங்களின் நெல்லினை விற்பனை செய்திருந்தனர்.
ஆனால், அம்பாறை மாவட்டத்தின் வேறு சில பிரதேசங்களில் நெல்லுக்கான விலை 2,900 ரூபாய் வரையில் இருந்தது. 15 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட இரண்டு பிரதேசங்களில், இவ்வாறான விலை ஏற்றத்தாழ்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்படி, கணிசமான தனியார் நெல் கொள்வனவாளர்களும் இடைத் தரகர்களும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது பெரும்போக அறுவடையாகும். மழையை நம்பி ஏராளமான இடங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. வழமையாக, பெரும்போக அறுவடை நடைபெறும்போது, அடைமழை பெய்து கொண்டிருக்கும். மழையில் நனைந்தவாறுதான், வயல்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லினை விவசாயிகள் கொண்டு செல்வார்கள். ஆனால், இம்முறை எல்லாமே தலைகீழாகப் போயிற்று.
இந்தப் பெரும் போகத்தில் கிட்டத்தட்ட மழையே கிடைக்கவில்லை. குறிப்பாக, மழை ஆரம்பிக்க வேண்டிய காலப்பகுதியில் மழை பெய்யவில்லை. இடையிடையே சில தடவை மழை பெய்தது. அவை, வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகக் கிடைத்த மழையாகும். இந்த நிலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் கணிசமான பகுதிகளில், இம்முறை நெற்பயிர்கள் கருகி அழிவடைந்தன. இதன் காரணமாக, தமது நெய் செய்கையினை விவசாயிகள் முற்றாகக் கைவிட வேண்டிய அவலம் ஏற்பட்டது. இந்த நிலையிலிருந்து தப்பிப் பிழைத்த வயல்களில்தான் இப்போது அறுவடைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நெல் செய்கையினை மேற்கொண்டு, அதன் விளைச்சலை அறுவடை செய்து எடுக்கும் வரையில், ஏக்கரொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாயினைச் செலவிட வேண்டியேற்படுகிறது என்கிறார் பாலமுனையைச் சேர்ந்த எம்.ஐ. ஹபீப் எனும் விவசாயி. இம்முறை ஏக்கரொன்றுக்கு 40 மூடைகள் வீதம் விளைச்சல் கிடைக்கிறது. நெல்லுக்கான விலையும் மூடையொன்றுக்கு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஏக்கரொன்றுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் இலாபம் கிடைக்கும்.
மூன்றரை மாதத்தில் இந்த இலாபம் கிடைக்கிறது. ஆனால், இப்படியான இலாபம் எப்போதும் கிடைப்பதில்லை. கடந்த காலங்களில் ஏக்கரொன்றுக்கு 20 மூடைக்கும் குறைவான விளைச்சலும் கிடைத்திருக்கிறது. அப்போது நெல்லுக்கான விலை 1,200 ரூபாய் வரையிலும் இருந்துள்ளது. அதன்படி பார்த்தால், 24 ஆயிரம் ரூபாய்க்குள்தான் ஏக்கரொன்றிலிருந்து கிடைத்திருந்தது. அந்த வகையில் பார்த்தால், முதலீட்டில் அரைவாசியைக் கூடப் பெற முடியாத நிலைவரம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
எவ்வாறாயினும், தற்போது நெல்லுக்குக் கிடைக்கும் விலை உச்சமானதாகும். நெற்சந்தையில் நிரம்பல் அதிகரிக்கும்போது நெல்லுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்படுவதுண்டு. ஆனால், இம்முறை வரட்சி காரணமாக, கணிசமானளவு நெல் வயல்கள் பாதிக்கப்பட்டும் அழிவடைந்தும் விட்டன. இதனால், பெரும்போக நெற்சந்தையில் இம்முறை நிரம்பல் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளன. அதனால், நெல்லுக்கான விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்படாது என்றுதான் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் காரணமாக, “நெல்லை விற்பனை செய்யாமல் களஞ்சியப்படுத்துவோடு, பதுக்கி வைக்கும் செயற்பாடுகள் இம்முறை நடைபெற மாட்டாது” என்கிறார் நெல் வயல் உரிமையாளரான ஏ.சி.எம். சமீர். விவசாயிகளுக்கான உர வகைளை, கடந்த அரசாங்கம் அந்தர் ஒன்று 350 ரூபாய் எனும் மானிய விலையில் வழங்கி வந்தது. சாதாரணமாக ஓர் ஏக்கர் நெல் வயலுக்கு மூன்று அந்தர் உரம் தேவைப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஓர் ஏக்கர் நெல் வயலுக்கான உரத்துக்கு 1,050 ரூபாயினைத்தான் விவசாயிகள் முன்னைய அரசாங்கத்தில் செலவு செய்து வந்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம், 350 ரூபாய் மானிய விலையில் உரத்தினை நேரடியாக வழங்குவதை நிறுத்தி விட்டு, ஏக்கரொன்றுக்கு 5,000 ரூபாய் பணத்தினை உரமானியமாக வழங்குகிறது.
உரம் ஓர் அந்தர் வெளிச்சந்தையில் 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்தவகையில், ஓர் ஏக்கருக்கான மூன்று அந்தர் உரத்தினையும் பெற்றுக் கொள்வதற்கு விவசாயியொருவர் 7,500 ரூபாயினைச் செலவிட வேண்டும். அதாவது, அரசாங்கம் வழங்கும் ஐந்து ஆயிரம் ரூபாயினைக் கழித்துப் பார்த்தால், ஓர் ஏக்கருக்கு விவசாயியொருவர் 2,500 ரூபாயினைத் தனது சட்டைப் பையிலிருந்து செலவிட வேண்டியுள்ளது. இந்த நிலையில், விவசாயியொருவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு மட்டுமே இவ்வாறு உரமானியப் பணம் வழங்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நெல் உற்பத்தியில் 23 சதவீதமான நெல்லை அம்பாறை மாவட்டம் உற்பத்தி செய்கிறது. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் வரட்சி காரணமாகக் கணிசமானளவு பயிர்கள் அழிவடைந்து விட்டன. இவ்வாறானதொரு நிலையிலேயெ தற்போது, இந்த மாவட்டத்தில் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தனியார் சந்தையில் தற்போது நெல்லுக்கு நல்ல விலை உள்ளமையினால், அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இல்லை. ஆனாலும், ஏதோவொரு கட்டத்தில் தனியார் சந்தையில் நெல்லுக்கான விலை வீழ்ச்சியடையுமாயின், அப்போது விவசாயிகளின் நலன்கருதி, அவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில், நெல்லினை அரசாங்கம் கொள்ளவனவு செய்ய வேண்டியேற்படும். ஆனால், அதற்கான தயார் நிலையில் அரசாங்கம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு இருக்கிறது. கடந்த போகத்தில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லினைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியது. ஆனால், அவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்ட அதிகமான களஞ்சியசாலைகளிலிருந்து இதுவரையும் நெல் அகற்றப்படவில்லை.
இதன் காரணமாக, இம்முறை விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டாலும், அதனைக் களஞ்சியப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும். கடந்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினையினை அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது. எனவே, இது விடயத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபை, முன் கூட்டி தயாராகுதல் வேண்டும். இதேவேளை, நெல்லுக்கு இவ்வாறு உச்ச விலை சந்தையில் உள்ளமையினால், அரிசி விலையும் சந்தையில் உயர்வடையும் நிலை ஏற்படும். அவ்வாறானதொரு நிலைவரமானது அரிசியைக் கொள்வனவு செய்யும் சாதாரண பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
எனவே, இதனைத் தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் அரசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படக்கூடும். இதன்போது, நெல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாதவாறும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. எவ்வாறாயினும், தற்போதைய பெரும் போகத்தில் நெல் உற்பத்தி கணிசமானளவு வீழ்ச்சியடையும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை அதிகளவு உற்பத்தி செய்யும் பொலன்நறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இம்முறை வழமையிலும் குறைவானளவு நெல் செய்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனவே, நாட்டில் இம்முறை நெல் உற்பத்தி வெகுவாகக் குறைவடையும். இதனை ஈடுசெய்யும் பொருட்டும், அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. பெரும் போகத்தில் மழை பொய்த்துப் போனமை காரணமாக, நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்முறை வரட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
இதில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நஷ்டமடைந்த நெல் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட உரத்தினை விவசாயிகள் பெற்றுக் கொள்வதற்காக, ஓர் அந்தர் உரத்துக்கு 350 ரூபாயினைச் செலுத்தியபோது, நெல் வயல்களைக் காப்புறுதி செய்வதற்காகவும் விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக பணம் அறவிடப்பட்டது.
அந்த அடிப்படையில், மானியமாக ஒவ்வொரு அந்தர் உரத்தினையும் பெற்றுக் கொள்ளும் போது, கூடவே 150 ரூபாய் பணத்தினையும் காப்புறுதிக்காக விவசாயிகள் செலுத்தினர். இவ்வாறு காப்புறுதிப் பணம் செலுத்தியோர், தமது நெல் காணிகள் பாதிக்கப்பட்டபோது, அதற்கான நஷ்டஈடுகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான காப்புறுதிப் பணம் அறவிடும் முறைமை இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இதனால், நெல் செய்கை பாதிக்கப்படும் போது, அதற்கான நஷ்ட ஈடுகளை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நெல் செய்கையாளர்களுக்கு, நிவாரணங்களை வழங்கும் ஏற்பாடுகள் உள்ளனவா என, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் கலீஸிடம் வினவினோம். அதற்கு அவர் பதிலளிக்கையில், “வரட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மேலிடங்களுக்கு அறிவித்துள்ளோம். ஆனால், இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு உத்தரவுகள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை.
அரசாங்கம்தான் இதற்குரிய தீர்மானத்தினை எடுக்க வேண்டும்” என்றார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட 83 ஆயிரம் ஹெக்டயர் நெல் செய்கையில், 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் பாதிக்கப்பட்டுள்ளமையானது கடுமையான இழப்பாகும். விவசாயி என்பவன் நாட்டின் முதுகெலும்பு என்று வாய்ச் சொல்லில் புகழ்வதாலும் ‘கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி – விவசாயி’ என்று பாட்டுக்களை ஒலிக்க விடுவதாலும், விவசாயிகளின் வாழ்க்கையில் நல்லவை எதுவும் நடந்து விடப் போவதில்லை. இந்த தேசத்துக்கு சோறு போடுகின்றவர்களை, பசிக்க விடுவது பெரும் பாவமாகும்.
Average Rating