வேர்களை வலுவாக்குங்க கூந்தல் உதிராது..!!
கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது. கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
எண்ணெய் மசாஜ்
ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு ஆயுள் உண்டு. குறிப்பிட்ட ஆயுட்காலம் முடிந்தாலும் அந்தக் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும். கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.
நீராவி ஒத்தடம்
தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கித் தலையில் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கிப் பிழிந்த டவலால் தலைக்கு நீராவி ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீய்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தாலே கூந்தல் உதிர்வு நின்று ஆரோக்கியமாக வளரும்.
கறிவேப்பிலை தைலம்
நூறு மி.லி. தேங்காய் எண்ணெயில் கைப்பிடியளவு கறி வேப்பிலையைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக்கொண்டு, அந்த எண்ணெயைத் தினம் தலைக்குத் தடவவேண்டும். கூந்தலை நன்றாக விரித்துப்போட்டு வேர்களில் படுமாறு அந்த எண்ணெயை தடவினால் அது கூந்தலை பலப்படுத்தும்.
கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை கூந்தலில் பூசி ஊறவைத்து தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.
தேங்காய்ப்பால் மசாஜ்
ஐந்து டேபிள் ஸ்பூன் திக்கான தேங்காய் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கூந்தலின் வேர்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, சிறிது நேரம் அப்படியே விட்டு அலசலாம்.
இளநீர் அதிகம் கிடைக்கிற பட்சத்தில் அதனால் கூந்தலை அலசுவது கூந்தலுக்கு ரொம்பவும் ஆரோக்கியமானது. பத்து கிராம் ஜெலட்டினை ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில் கரைத்துக் குடிப்பது கூந்தலை மட்டுமின்றி, நகங்களையும் ஆரோக்கியமாக வைக்கும்.
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது.
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தயிருடன் கலந்து, தலைக்குத் தடவி, சிறிது நேரம் ஊறியவுடன் குளிக்கலாம். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இதைத் தவிர்க்கவும்.
வைட்டமின் பி உணவுகள்
வைட்டமின் பி 5 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் கூந்தலை பலமாக்கலாம். அதேபோல் வைட்டமின் இ அதிகம் உள்ள பட்டர்ப்ரூட், முந்திரி, பாதம் கொட்டைகள், ஆலிவ் ஆயில் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிராது பொடுகுத்தொல்லை ஏற்படாது. கற்றாழை கூந்தலின் வேர்க்கால்களை வலுவாக்கும். உதிர்ந்த கூந்தலுக்கு பதிலாக புதிய கூந்தலை வளரச்செய்யும்.
Average Rating