பாவம் பன்னீரு, உள்ளுக்குள்ளே வடிப்பார் போல கண்ணீரு: டி. ராஜேந்தர்..!!
பாவம் முதல்வர் பன்னீரு, உள்ளுக்குள்ளே வடிப்பார் போல் இருக்கிறது கண்ணீரு. சிலர் அவருக்கு ஏற்படுத்த நினைக்கிறார்கள் கெட்ட பெயரு என இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த அறவழிப் போராட்டத்தை கண்டு உடனே அடித்துப் பிடித்து டெல்லிக்கு சென்று மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை சந்தித்து அவசரம் அவசரமாக அவசர சட்டத்தை இயற்றி அதை சட்டசபையிலும் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க முற்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான மாநில அரசுக்கும், அதற்கு உறுதுணையாக பக்கபலமாக நின்று ஒத்துழைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் நன்றி.
முதல்வர் அப்படி இருக்க அம்மா இல்லாத காலத்திலும் பன்னீருக்கே வாய்ப்பா என்று சிலருக்கு வந்திருக்கிறது அங்காலாய்ப்பு. அதன் காரணமாகத் தான் இந்த அறவழிப் போராட்டத்தின் முடிவிலே முதல்வருக்கு ஏற்பட்டது சிறு சிராய்ப்பு. பன்னீரு பாவம் முதல்வர் பன்னீரு, உள்ளுக்குள்ளே வடிப்பார் போல் இருக்கிறது கண்ணீரு. சிலர் அவருக்கு ஏற்படுத்த நினைக்கிறார்கள் கெட்ட பெயரு.
அதனால் தான் இடையிலே புகுந்து இழுக்க நினைத்திருக்கிறார்கள் தேரு. இல்லை என்றால் இந்த அறவழிப் போராட்டம் ஆறு நாட்கள் அமைதியாகத் தானே போய்க் கொண்டிருந்தது. ஏழாவது நாள் எங்கிருந்து வந்தது தடாலடி மாற்றம்.
ஏன் இந்த காவல் துறையின் அடாவடி சீற்றம். சூழ்ச்சி திரைக்கதையை மாற்றியது யார்? திரைக்கு பின்னால் நின்று சூழ்ச்சி செய்தது யார்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே கட்டவிழ்க்கும் வன்முறை காட்சிகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். தீ வைப்பு ஒரு பக்கம் ஒரு இளைஞனை கீழே பிடித்து தள்ளும் காட்சி. வழியில் நின்ற வாகனங்களை கீழே தள்ளி நொறுக்கும் காட்சி.
ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சி. குடிசைக்கு தீ வைப்பது போன்ற காட்சி. இது என்ன சினிமாவா இல்லை நிஜமா? திரைப்படக் காட்சியா இல்லை திறம்பட செயல்பட முடியாத ஆட்சியா? இது மக்கள் கேட்கும் கேள்வி. புயல் பொதுவாக புயல் தான் கொள்ளுமாம் மையம். இப்போது தமிழக அரசுக்குள்ளே புதிதாக புகுந்துள்ளதோ புதிய அதிகார மையம் என்பதே பலரது ஐயம். இதற்கு சிபிஐ விசாரணை கமிஷன் வேண்டும்.
ராம்குமார் அறவழிப் போராட்டத்திற்குள் புகுந்து தீயை வைத்த தீய சக்திகள் யார் என்பதை கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நம் நாட்டில் சாதாரண ஏழை வீட்டு ராம்குமார் சாவில் மர்மம் இருக்கின்றது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதி இல்லை. ஏன் சரித்திரம் படைத்த முன்னாள் முதல்வர் அம்மாவின் சாவில் மர்மம் இருக்கின்றது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதி இல்லை. அதையும் மீறி பலர் கேட்டாலும் அதற்கு நீதி இல்லை. கேள்வி உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்களே அம்மாவின் சாவில் உள்ள மர்மம் குறித்து பல கேள்விகளை எழுப்பினார்.
அதன் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்றார்கள். சாந்தி அம்மாவின் சாவில் உள்ள மர்மம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையும் கொடுக்கவில்லை வெள்ளறிக்காய் அறிக்கையும் கொடுக்கவில்லை. அந்த அம்மாவின் ஆத்மா அடையவில்லை சாந்தி. நியாயத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன் தர்மத்தை நெஞ்சிலே ஏந்தி என ராஜேந்தர் கூறினார்.
Average Rating