சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுகிறீர்களா?..!!
உங்களையும் அறியாமல், நீங்கள் ‘சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுபவராக இருக்கலாம். அவ்வாறு அவதிப்பட்டால், உடனே அதன் அறிகுறிகளை அறிந்து ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு மாறிக்கொள்ளுங்கள்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டை விமானத்தில் அடையும்போது ஏற்படும் நேர வித்தியாசத்தில் உண்டாகும் தடுமாற்றம்தான், ‘ஜெட்லாக்’. அதேபோல, உடலின் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு தூங்காமல், அதனால் ஏற்படும் பாதிப்பே, ‘சோசியல் ஜெட்லாக்’ எனப்படுகிறது.
தற்போது, அதிகரித்து வரும் வேலைப்பளு, இணையத்தில், சமூக வலைதளங்களில் அதிக நேரம் மூழ்கியிருப்பது போன்றவற்றால் சோசியல் ஜெட்லாக்கால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
‘ஒரு நபரின் உடலியல், உளவியல் சீர்நிலையில், தூக்கத்துக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. வேலைக்கு என்றும், ஓய்வு, அதாவது உறக்கத்துக்கு என்றும் உடல் விரும்பும் தனித்தனி நேரங்கள் இருக்கின்றன. அதில் பாதிப்பு ஏற்படும்போது, உடலில் மோசமான தாக்கங்கள் ஏற்படுகின்றன’ என்கிறார்கள், உறக்கவியல் நிபுணர்கள்.
கடந்த பத்து, இருபது ஆண்டுகளில், ‘சோசியல் ஜெட்லாக்’கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை வெளித்தெரியாமல் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியான வேலை அழுத்தம், நேரங்கடந்து படுக்கைக்குப் போவது, ஆனால் சீக்கிரமாகவே எழுந்துவிடுவது போன்றவற்றால் ஒவ்வொரு மனிதரும் குறிப்பிடத்தக்க அளவு தூக்க நேரத்தை இழந்திருக்கின்றனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வேலை கூடும்போது, வாழ்க்கைமுறை மாறும்போது தூக்கம் குறைவது இயல்புதானே என்று இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதனால் ஏற்படும் ‘சோசியல் ஜெட்லாக்’, ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது.
உதாரணமாக, உடல் எடை அதிகரிப்பு, பகலெல்லாம் மந்தநிலையில் இருப்பது, எளிதில் எரிச்சல் அடைவது போன்றவற்றுடன், எப்போதும் பசிக்கும் உணர்வும் இருக்கும். இதனால்தான் நாம் நம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிட்டு எடையைக் கூட்டிக்கொள்வோம்.
அதோடு ‘சோசியல் ஜெட்லாக்’குக்கு உட்பட்டவருக்கு பணித்திறன் குறையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால், எளிதில் நோய்களால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரிக்கும்.
சிலர், தினசரி குறையும் தூக்க நேரத்தை, வார இறுதியில் பகலெல்லாம் தூங்கிச் சரிக்கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதுவும் சரியல்ல என்பது நிபுணர்கள் கருத்து.
சரி, ‘சோசியல் ஜெட்லாக்’ ஏற்படாமல் எப்படித்தான் தவிர்ப்பது? அதற்கு மருத்துவத் துறையினர் சொல்லும் ஆலோசனைகள் இவை…
* தினமும் இரவு, குறைந்தது 10 மணிக்காவது படுக்கைக்குப் போய்விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* வீட்டுக்கு தாமதமாகப் போனால், சாப்பிட்டவுடன் படுக்கையில் போய் விழுந்துவிடாதீர்கள். சாப்பிட்டு அரைமணி நேரமாவது கழிந்தபின் உறக்கத்துக்குத் தயாராகுங்கள்.
* அடுத்த நாள் பிறக்கும் அளவுக்கு, அதாவது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியும் விழித்திருக்காதீர்கள்.
* தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி., செல்போன், கணினி போன்ற மின்னணு ஒளித்திரைகளில் இருந்து விடுபட்டு விடுங்கள்.
* தினசரி தூங்கும் நேரத்தைக் குறைத்து, அதை ஒருநாள் மொத்தமாக தூங்கிச் சரிப்படுத்திவிடலாம் என்று எண்ணாதீர்கள்.
என்ன, இனி இதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வீர்கள்தானே?
Average Rating