அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்பு தெரியுமா?..!!
திருமணம், விசேஷ நாட்களில் கொஞ்சம் அதிகமாக உணவு உட்கொள்பவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ‘அஜீரணம்’.
ஆசைப்பட்டு கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டேன். இப்போ வயிறு உப்பி அவஸ்தை படுகிறேன் என்று அங்கலாய்த்து கொள்வார்கள். அஜீரணம் அவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா? என பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
அஜீரணம் என்பது உணவு செரிமானமின்மையால் ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தில் இதனை மந்தாக்னி என்பார்கள். அஜீரணம், கபத்தால் ஏற்படுகிறது என்கிறது ஆயுர்வேதம்.
செரிக்கும் ஆற்றல் எனப்படும் அக்னி மந்தமாக உள்ள ஒருவருக்கு உணவு செரிக்க அதிக நேரம் தேவைப்படும். அவருக்கு சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. மேலும் சளி, ஜலதோஷ தொல்லையும் இருக்கும்.
வாயில் எச்சில் அதிகமாக ஊறும். ரத்த ஓட்டம் குறையும். கால் நீர், உடல் எடை, கொழுப்பு, நீரிழிவு நோய், சோம்பேறிதனம் போன்றவையும் ஏற்படும்.
அதோடு எளிதான உணவு வகைகளை உண்ண தோன்றும். கசப்பான உணவை சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பும். வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். மனது மந்தமாகவும், உடல் உற்சாகம் குன்றியும் காணப்படும்.
காரணம் என்ன? :
உடலில் ஏற்படும் இந்நிலைக்கு காரணம் என்ன? என்று ஆயுர்வேதம் விளக்குகிறது. அதில் குளிர்ச்சியான, தரமற்ற உணவு வகைகளை உட்கொள்வது, அதிகமாக சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது போன்றவையும் ஒரு காரணமாகும். தூக்கத்தில் வேறுபாடு இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, அதிகமான காம இச்சை, அடிக்கடி சந்தேகப் படுவது, மனதில் வருத்தத்துடன் இருப்பது போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.
அஜீரணம் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதிகமாக மருந்துகளை உட்கொள்வது, சோகத்துடன் இருப்பது, கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் இருப்பது, வலி நிவாரணி மாத்திரைகளை தவறாக பயன்படுத்துவதும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.
இதனை தணிக்க கார்ப்பு சுவையுடைய உணவு வகைகள் நல்லது. உபவாசம் இருக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, பஞ்சக்கோலம், பஞ்சக்கோலாசவம், ஜீரகா ரிஸ்டம் போன்ற வெப்பமான மருந்துகள் இதற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
பித்தத்தால் தூண்டப்பட்ட அக்னி எனப்படும் அஜீரணம் தீவிரமாக செயல்படுவதற்கு தீக்ஷாக்னி என்று பெயர். இதில் ஜீரணத்தன்மை அதிகம் இருக்கிறது. இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமாக உணவு உட்கொள்ள நேரும்.
வயிறு எரிச்சல், புளிப்புத்தன்மை ஏற்படும். வயிற்றுப்புண், சர்க்கரையின் அளவு திடீரென குறைதல், பெருங்குடல் புண், வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படலாம். வாந்தி வரலாம். கோபம் அதிகமாக ஏற்படலாம். நாக்கு சிவந்த நிறத்தில் மாறும்.
குளிர்ச்சியான உணவு, திரவங்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றால் பித்தா ஜீரணம் சீரடையும். வயிற்றில் வெப்ப தன்மை அதிகரிப்பதால் சரகுணம் அதிகரித்து வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இதனால் அக்னி மந்தமாகவும் வாய்ப்பு உண்டு.
எளிதான உணவுகளை உட்கொள்வது நல்லது. கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் இன்னும் நல்லது. அதிமதுரம் சேர்ந்த மதுயஷ்டியாதி கசாயம், அவிபத்தி சூரணம், சந்தனத்தால் காய்ச்சி குளிர்விக்கப்பட்ட தண்ணீர் மிகவும் நல்லது.
ஒருவரின் உடலில் ஒழுங்கற்ற செரிமானம், வாயுவால் ஏற்படுகிறது. இதனால் சில நேரம் உணவில் விருப்பமும், சில நேரம் வெறுப்பும் ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்பட்டு வயிற்று வலி உருவாகும். கொஞ்சம் உணவு உண்டாலும் வாயு ஏற்படும்.
வயிறு உப்பியது போன்ற உணர்வு ஏற்படும். வெப்பமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். தோல் வறண்டு போகும். கை, கால்களில் வலி, முதுகுவலி, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.
அக்னி ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் போது மனப்பயம், பதட்டம் போன்றவையும் ஏற்படும். நாக்கில் கருப்பு, பழுப்பு நிறம் காணப்படும். பல் ஈறுகளிலும் இந்த நிற மாறுபாடு தென்படும்.
சிகிச்சைகள் :
இதற்கான சிகிச்சைகளில் பழச்சாறுகள் அருந்துவது மிகுந்த பலன் அளிக்கும். கஞ்சி, புளிப்பு, உப்பு, காரவகைகள், இஞ்சி போன்றவையும் இதற்கு சிறந்த மருந்துகளாகும். குறுகிய காலத்திற்கு உபவாசம் இருப்பதும் நன்மை தரும். சுக்கு, கொத்தமல்லி சேர்த்து காய்ச்சப்பட்ட தண்ணீர் அருந்துவதும் அஜீரணத்தை தணிக்கும்.
கசாயங்களில் இந்துகாந்த கசாயம், பெருங்காயம், ஹிங்குவசாதிகுளிகா, சுக்கு, நயோபாயம் லேகியம் போன்றவையும் சிறந்தவையாகும். அஜீரணத்தில் விஷ்டப்தா ஜீரணத்தின் அஜீரண தன்மை சற்று மாறுபட்டது. இது நீடித்தும் இருக்கும். அப்போது மலம் இறுகியோ அல்லது இளகியோ போகலாம். பசி வரலாம், வராமலும் போகலாம்.
மனம் சார்ந்த நோய்களாலும், மன அழுத்தத்தாலும் கூட இந்நோய் ஏற்படலாம். அக்னியை பாதுகாக்க அறுசுவை நிறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். சூடாக சமைக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். உணவு எளிமையாக இருக்க வேண்டும். 4 முதல் 6 மணி நேர இடைவெளியில் உணவு உண்ண வேண்டும்.
குளிர்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. சாப்பிடுவதற்கு முன்பு சிறிய கசப்பு சுவையுடைய உணவு, காய்கறிகள் உண்பது வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை மாற்றும்.
இஞ்சி, மஞ்சள், குறுமிளகு, லவங்கபட்டை அக்னியை அதிகரிக்க செய்யும். பழச்சாறு குடிப்பது அக்னியை சீராக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது.
தவிர்க்க வேண்டியவை
இயற்கை உணவே சிறந்தது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெயில் வறுத்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நிறைய மோர் அருந்தலாம்.
வெள்ளை சர்க்கரை, தவிடு நீக்கப்பட்ட மாவு வகைகள், அடிக்கடி அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அளவுடன் குடிப்பது நல்லது. பேசிக்கொண்டு, படுத்துக்கொண்டு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது தவறு.
கடைப்பிடிக்க வேண்டியவை:
சிறுபயறு, நார்த்தங்காய், மோர், கறிவேப்பிலை, சேனைக் கிழங்கு மிகவும் உத்தமமான உணவு வகைகள். அக்னி நன்றாக இருக்கிற ஒருவருக்கு உணவு சீராகச் செரிக்கும். வாயு வெளியேறும். ஆமம் (விஷத்தன்மை) உருவாகாது, மனத்தெளிவு ஏற்படும்.
மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது இயற்கையாகக் காணப்படும் என்சைம்களை அழிக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. பச்சைத் தாவரங்களில் பிராண சக்தி அதிகம் உள்ளது. பச்சையம் எனும் குளோரோபில்லும் உள்ளது.
கனமான உணவுகளை இரவில் அதிகம் சாப்பிடக் கூடாது. உண்ணும் அளவும் முக்கியம், உண்ணும் நேரமும் முக்கியம். மருந்தாக இருந்தாலும் காலம் தவறி உண்ணக் கூடாது.
செரிமானத்தை சீராக்கும் இஞ்சி:
எலுமிச்சை சாற்றில் உப்பு போட்டு குடிப்பது அக்னியை சுத்தி செய்கிறது. அக்னியை சீராக்குவதில் இஞ்சிக்கும் பெரும்பங்கு உண்டு. உடல் வெப்பத்துக்கு ஏற்றவாறு உணவு இருக்க வேண்டும். பழங்களிலும், பழச்சாறுகளிலும் பிராண சக்தி நன்றாக உள்ளது. சூரிய வெப்பம் உச்சத்தில் இருக்கும் போது மதிய உணவு உட்கொள்ளவேண்டும். சாப்பிடும் போது மூச்சை மெதுவாக, சிரமமில்லாமல் விட வேண்டும். உணவை மகிழ்ச்சியுடன், அமைதியாக உண்ண வேண்டும்.
Average Rating