40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி..!! (கட்டுரை)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி யும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, மக்களை அவமானப்படுத்துவது எவ்வளவு சுலபமான விடயம் என்பதை, இந்தச் சம்பவத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, அவர் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது என்பதாகும்.
அந்த வாக்குறுதிக்கு, அந்தத் தேர்தலின்போது, எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், அத்தேர்தலை நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிரான சர்வஜன வாக்கெடுப்பாகவே கருத வேண்டும். ஆனால், இப்போது மைத்திரிபால தலைமை தாங்கும் அரசியல் கட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்வதென்று மட்டுமல்லாது, மைத்திரிபாலவையே அடுத்த தேர்தலின்போது, தமது ஜனாதிபதி வேட்பாளராகவும் நிறுத்த முடிவு செய்துள்ளது. பழைய வரலாற்றை மறந்துவிட்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு சிந்தித்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்வதென்ற ஸ்ரீ ல.சு.கவின் முடிவை குறை கூற முடியாது.
ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, அக்கட்சி 1978 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தினால் மேலும் பலப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் பாதுகாக்கவே போராடியது. ஆனால், மைத்திரிபால அந்த முறையை முற்றாக ஒழிப்பதாகவும், இதுவே தாம் போட்டியிடும் இறுதி ஜனாதிபதித் தேர்தலென்றும் மக்களுக்கு வாக்குறுதியளித்து விட்டுப் பதவிக்கு வந்தார்.
நாகரிக அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர் எவ்வாறு தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதில்லை என்றும் தாமே அடுத்த முறையும் ஸ்ரீ ல.சு.கவின் ஜனாதிபதி வேட்பாளர் என்றும் வாய் திறந்து கூற முடியும்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டுப் பதவிக்கு வந்தாலும், இப்போது அவர் ஜனாதிபதி முறை தொடர்பான கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் எனக் கூட்டு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, விஜித் விஜயமுனி சொய்ஸா, டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்கள் வாதிடுகிறார்கள். கட்சியின் முடிவுக்குக் கட்சித் தலைவரும் கட்டுப்படுவதே நல்ல ஜனநாயக மரபு ஆகும். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக கட்சிக்கு கட்டுப்படுவதை விட, ஜனாதிபதி தமக்கு வாக்களித்த மக்களுக்கே முதலில் கட்டுப்பட வேண்டும்.
பதவிக்கு வருவதற்காக மக்களுக்கு ஒன்றை வாக்குறுதியளித்துவிட்டுப் பின்னர், கட்சி சொல்கிறதே என்பதற்காக அந்த வாக்குறுதிக்கு மாறு செய்ய ஜனாதிபதிக்கு தார்மிக உரிமை இல்லை. அது மக்களை ஏமாற்றும் செயலாகும். அதேவேளை தமது கட்சித் தலைவர் கடந்த தேர்தலின்போது மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தார் என்பதைத் தெரியாதவர்களைப்போல், இதுபோன்ற முடிவுகளை எடுத்து, தமது தலைவரை மக்கள் மத்தியில் ஏமாற்றுக்காரனாக்குவது, ஒருவகையில் அவரை மக்களைக் கொண்டு ஓரங்கட்டச் செய்து, அடுத்த தேர்தலில் அவரைத் தோற்கடிப்பதற்கு எடுத்த முயற்சிக்குச் சமமாகும்.
உண்மையிலேயே, அதுதான் ஸ்ரீ ல.சு.கவிலுள்ள சில முக்கியஸ்தர்களின் நோக்கமாகவும் இருக்கலாம். சிலர் அமைச்சுப் பதவிகளை ஏற்றாலும் ஸ்ரீ ல.சு.கவிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் மைத்திரியை விட மஹிந்தவையே விரும்புகிறார்கள். அவர்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மட்டுமன்றி, பொதுத் தேர்தலின் போதும் மஹிந்தவையே ஆதரித்தார்கள். ஒரு சிலர், அமைச்சர் பதவிகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் சேர்ந்தாலும் ஏனையவர்கள் மஹிந்தவைக் கைவிட்டு மைத்திரியைத் தழுவிக் கொள்ள எந்தத் தேவையும் இல்லை.
அமைச்சர்களாக இருப்பவர்களிலும் சிலர் இன்னமும் இரு புறங்களிலும் கால்களை வைத்துக் கொண்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே, இது மைத்திரி கை தூக்கி தலையில் வைத்துக் கொள்ளும் போர்வையில் அவரைத் தலைக்கு மேல் தூக்கி, குழியில் தள்ளும் சதியாகவும் இருக்கலாம். அது தான் நடைபெறுகிறது என்றால், அது சிலவேளை மஹிந்தவின் இரகசிய ஒப்புதலோடு நடைபெறுவதாகவும் வாதிடலாம். ஆனால், மைத்திரியும் எதுவும் அறியாத பச்சை பாலகன் அல்ல.
இந்த முடிவை ஸ்ரீ ல.சு.க மத்திய குழு எடுக்கும்போது, அவர் அங்கு இருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்காதிருந்தமையின் நோக்கம் என்ன? வழமையாகத் தமது தலைவரைப் பற்றி, அவரது கருத்தறியாமல் கட்சியொன்று முடிவுகளை எடுப்பதில்லை. அவ்வாறாயின் மைத்திரிக்கும் இந்தப் பதவியின் மீது ஆசை வந்து விட்டதோ? அல்லது அதிகாரத்துக்கு வருவதே ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி என மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் நினைப்பதைப் போல், மஹிந்த பிரதமராகவேனும் பதவிக்கு வந்தால் தமது பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் என்றும் எனவே, அதிகாரம்மிக்க இந்தப் பதவியில் இருப்பதே பாதுகாப்பானது என்றும் மைத்திரி நினைப்பதாகவும் வாதிடலாம்.
முன்னர், ஜனாதிபதி ஆட்சி முறை நாட்டுக்கு நல்லதாக இல்லை என நினைத்து, அதனை இரத்துச் செய்வதாக நினைத்தாலும், அது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு தேவையாக இருக்கிறது என இப்போதுதான் விளங்குகிறது என மைத்திரிபாலவோ அல்லது வேறு அரசியல்வாதியோ வாதிட முடியாது. ஏனெனில், நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஒரு முறை அல்ல, பல முறை இந்த ஆட்சி முறையை ஏற்பதும் நிராகரிப்பதுமானதோர் வரலாற்றை நாம் காண்கிறோம்.
ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக் கொண்டால், அக்கட்சிதான் 1978 ஆம் ஆண்டு இந்த ஆட்சி முறையை நாட்டில் அறிமுகப்படுத்தியது. 1994 ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க பிரதமராக இருந்தபோது, அந்த ஆட்சி முறையை இரத்துச் செய்யத் தமது கட்சி உதவி செய்யத் தயார் என்று ஐ.தே.கவின் தலைவராகவிருந்த மறைந்த காமினி திஸாநாயக்க கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, சர்வாதிகாரியாக நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டி காமினி திஸாநாயக்க, முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியுடன் 1991 ஆம் ஆண்டு ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சென்றார். அப்போதும் அவ்விருவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதையே தமது பிரதான கொள்கையாக பிரகடனப்படுத்தியிருந்தனர். 1993 ஆம் ஆண்டு பிரேமதாசவும் அத்துலத்முதலியும் கொல்லப்பட்டதன் பின்னர்தான், காமினி மீண்டும் ஐ.தே.கவில் சேர்ந்து கொண்டார். அந்த நிலையிலேயே அவர் சந்திரிகாவுக்கு மேற்படி வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யுமாறு வற்புறுத்தி, ஐ.தே.க, 1997 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தது. ஆனால், அப்போது ஐ.தே.க மீண்டும் ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டிருந்தது. தாம் ஏற்றுக் கொண்ட ஆட்சி முறையொன்றை இரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றில் முதலாவது அரசியல் கட்சி ஐ.தே.கவாகத் தான் இருக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தே சந்திரிகா, 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தார். அவரது வாக்குறுதியை அவருக்கு ஞாபகப்படுத்தி, அவரை அசௌகரியத்துக்குள்ளாக்குவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகியது.
மீண்டும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதையும் சமஷ்டி ஆட்சி முறையொன்றை அறிமுகப்படுத்துவதையும் குறியாகக் கொண்டு, ஜனாதிபதி சந்திரிகா 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மூன்றாம் திகதி புதிய அரசியலமைப்பொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஐ.தே.க அதனை எதிர்த்து நாடாளுமன்றத்துக்குள்ளேயே அதன் பிரதிகளைத் தீயிட்டுக் கொழுத்தியது. அதன் பின்னர், மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் 2014 ஆம் ஆண்டு மைத்திரியுடன் இணைந்து, ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்வதாக, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்தார்.
இதுதான், நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பிலான ஐ.தே.கவின் வரலாறு. ஸ்ரீ ல.சு.கவின் வரலாறும் இதைவிட வித்தியாசமானதல்ல. ஆரம்பத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை, ஜனாதிபதி ஆட்சி முறையை எதிர்த்த ஸ்ரீ ல.சு.கட்சி, 1994 ஆம் ஆண்டு அதனை எதிர்த்துக் கொண்டே, அதனை இரத்துச் செய்வதற்கான உதவியை வழங்க ஐ.தே.க தலைவர் காமினி திஸாநாயக்க முன்வந்தபோது, அந்த உதவியைப் பெற்று, அந்த ஆட்சி முறையை இரத்துச் செய்யக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டது. சிலவேளை, அதிகார மோகத்தினால் சந்திரிகா தமது உதவியை நிராகரிப்பார் என்று அறிந்தே, காமினி அவ்வாறு உதவி செய்ய முன்வந்தும் இருக்கலாம்.
1997 ஆம் ஆண்டு சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்யுமாறு கோரி, ஐ.தே.க நடத்திய ஆர்ப்பாட்டத்தை, அந்த ஆட்சி முறையை இல்லாது ஒழிப்பதாக வாக்குறுதியளித்துப் பதவிக்கு வந்த சந்திரிகாவின் அரசாங்கம், தாக்கி குழப்பியது. ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களும் அடித்துத் துரத்தப்பட்டனர். அதன் பின்னரும், தொடர்ச்சியாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டிருந்த ஸ்ரீ ல.சு.க 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ் 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அம்முறையை மேலும் பலப்படுத்திக் கொண்டது. இப்போது ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த மைத்திரியை மீண்டும் அடுத்தத் தேர்தலிலும் போட்டியில் நிறுத்தப் போகிறது.
எனவே, இவ்வாறு பல முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள இவ்விரண்டு கட்சிகளுக்கும் இந்த விடயத்தில் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் இரு கட்சிகளினதும் நிலையான கொள்கையாக சந்தர்ப்பவாதத்தைத்தான் சுட்டிக் காட்ட முடியும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, ஓர் அடக்குமுறை ஆட்சி முறையே. அதனை அரசியல் எதிரிகளை அடக்கவே, இதுவரை ஆட்சியாளர்கள் பாவித்திருக்கிறார்கள். அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறை இருந்தமையினாலேயே புலிகளை தோற்கடிக்க முடிந்தது என்று அந்த ஆட்சி முறைக்கு ஆதரவானவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையல்ல.
ஏனெனில், பஞ்சாப், மனிபூர், அஸ்ஸாம், காஷ்மீர் மற்றும் நக்ஸலைட் கிளர்ச்சிகளை ஜனாதிபதி ஆட்சி முறை இல்லாமலேயே இந்தியா அடக்கியுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகள் அந்த ஆட்சிமுறை இல்லாமலேயே இரண்டாம் உலகப் போரையும் எதிர்கொண்டுள்ளது. எனவே, இலங்கையில் ஆட்சியாளர்கள் சுமார் 40 ஆண்டுகளாக இந்த ஆட்சி முறையைப் பற்றிய வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பது தெளிவான விடயமாகும். ஏனெனில், அரசியல் எதிரிகளை அடக்க அவர்களுக்கு அது அவசியமாக இருக்கிறது.
Average Rating