மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்..!! (கட்டுரை)
அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன. ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை நினைவுபடுத்துகின்ற அளவுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் மாறத் தொடங்கியிருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷஅரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம், போருடனும் போர் சார்ந்த சூழலுடனும் கழிந்து போனது. அதனால், பொருளாதார மற்றும் அரசியல் சூழலை நாட்டு மக்களோ, எதிர்க்கட்சிகளோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதுபற்றிப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்பட்டாலும், அவை மக்களிடம் எடுபடக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.
ஆனால், இரண்டாவது பதவிக்காலத்தில், மஹிந்த ராஜபக்ஷஅரசாங்கம் சராசரியாக ஓர் அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவது, உள்நாட்டு அரசியல் சக்திகளின் பிரசாரங்களைச் சமாளிப்பது என்று சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
ஜனநாயகச் சூழல் மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு, அதிகாரத்துவ ஆட்சி ஒன்றை நடத்திய போதிலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு உண்மை என்பது மிகப்பெரிய எதிரியாகவே இருந்தது. இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவ்வப்போது, நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டும், இல்லாத விடயங்களைப் பூதாகரப்படுத்தியும் பிரசாரப்படுத்தி வந்தது. இதன் மூலம், அரசாங்கத்தின் மதிப்பைப் பாதுகாக்கவும் பொருளாதார மற்றும் அரசியல் உறுதித் தன்மையைப் பேணுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் எரிவாயு உற்பத்தி இடம்பெறப் போவதாகவும் மாகாணசபைத் தேர்தல் ஒன்றுக்கு முன்பாக அறிவித்தது மஹிந்த அரசாங்கம். இன்று வரை அங்கு எரிவாயு உற்பத்தி தொடங்கப்படவில்லை. கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் எரிவாயுப் படிமங்கள் கண்டறியப்பட்டது உண்மையே. ஆனால், அந்த எரிவாயுப் படிமங்கள் வணிக ரீதியாக உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய அளவுக்கு பெறுமானம் கொண்டதாக இருக்கவில்லை.
அது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் தெரிந்திருந்தது. அந்த உண்மையை மறைத்து, மன்னார் கடலில் எரிவாயு கிணறுகளை அமைத்து, நாட்டை அபிவிருத்தி செய்யப் போவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயன்றது அப்போதைய அரசாங்கம். இது போலத் தான், 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்காக செய்மதி ஒன்றை ஏவியதாகவும் செய்தி வெளியாகின. அந்தச் செய்மதிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்னர், இதுபற்றி நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், யாருக்கும் பதில் தெரியவில்லை. குறித்த சீன நிறுவனம், ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனமே அல்ல; பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற ஒரு நிறுவனமே அது என்றும், அதற்கும் விண்வெளிக்குச் செய்மதிகளை ஏவும் திட்டத்துக்கும் தொடர்பே இல்லை என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்திருந்தார். இதற்கென மில்லியன் கணக்கான டொலர் செலவிடப்பட்டதாகவும் கூறப்பட்ட போதிலும் அவை எங்கே சென்றன என்பது யாருக்கும் தெரியாது. இதுபோல, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் திட்டங்கள் தொடர்பாக, உண்மைக்கு மாறான தகவல்களே மக்களுக்கு வழங்கப்பட்டன.
இதன் மூலம் இலங்கை அரசாங்கம் பெரியளவில் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் காண்பிக்க முயற்சிக்கப்பட்டது. சர்வதேச அழுத்தங்களால், பொருளாதார ரீதியாக இலங்கை பின்னடைவுகளைச் சந்தித்த போதும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பற்றிய, பணவீக்கம் பற்றிய உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதாகவும் கூடக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொருளாதார மற்றும் அரசியல் உறுதித்தன்மை பாதிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்க முற்பட்டது அல்லது பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் தகவல்களை வெளியிட்டது.
அதேபோலத்தான், இப்போதைய அரசாங்கமும் செயற்படத் தொடங்கியிருக்கிறது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது மக்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவுக்கு வேகத்துடனோ, வீரியத்துடனோ இதன் செயற்பாடுகள் இருக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதைவிட அரசாங்கத்துக்குள்ளேயே குழப்பங்களும் ஏற்படத் தொடங்கியுள்ளதால், இந்த அரசாங்கம் தனது முழு ஆயுள்காலத்துக்கும் நிலைத்திருக்குமா என்ற சந்தேகமும் கூட இருக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயத் திட்டம் என்பனவற்றுக்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியதும், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டுக் குழப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமான, கருத்துகளை வெளியிட, அது கூட்டு எதிரணிக்கு இன்னும் வாய்ப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. பிரச்சினைக்குரிய விவகாரங்களில், ஒரே குரலாக அமைச்சர்களை கருத்து வெளியிடச் செய்வதில் இந்த அரசாங்கம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில், 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆரம்பத்தில் கூறிய அரசாங்கம், பின்னர் நான்கு இலட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றது.
இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது, ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. உண்மையில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது. அதுபோல, ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் இப்போது, 1,235 ஏக்கர் நிலம்தான் ஹம்பாந்தோட்டையில் ஒதுக்கப்படும் என்றும், எஞ்சிய காணிகள் ஏனைய மாவட்டங்களில் ஒதுக்கப்படும் என்றும் கூறுகிறது.
இந்த விவகாரத்தில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே அரசாங்கம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஹம்பாந்தோட்டை விவகாரம், சூடுபிடித்திருந்த தருணத்தில் அதனைத் திசை திருப்பக் குளியாப்பிட்டியவில் ‘வொக்ஸ்வெகன் கார்’ ஒருங்கிணைப்புத் தொழிற்சாலைக்கு, பெரியளவில் பிரசாரம் செய்யப்பட்டு ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கல் நாட்டினர்.
ஆனால், ஊடக நிறுவனம் ஒன்று அதுபற்றி ஜேர்மனி தூதரகத்திடம் கேள்வி எழுப்ப, அத்தகைய முதலீடு பற்றித் தமக்குத் தெரியாது என்ற பதில் கிடைத்தது. இதையடுடுத்து ‘வொக்ஸ்வெகன்’ நிறுவனமும், தாம் எந்த முதலீடும் செய்யவில்லை என்று கையை விரிக்க, அரசாங்கம் முழியைப் பிதுக்கிக் கொண்டு நின்றது.
எதற்காக ஜேர்மனியிடம் கேட்க வேண்டும், என்னிடம் கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன் என்று பிரதமர் பதில் கூறி மழுப்பினார். உண்மையில், ‘வொக்ஸ்வெகன்’ நிறுவனம் அந்தக் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை அமைக்கவில்லை. உள்ளூர் நிறுவனம் ஒன்றே அத்தகைய பெயரைப் பயன்படுத்தி தொழிற்சாலையை அமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமரும் கூட ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் தலைவர்களாக – அரசாங்கத்தின் தலைவர்களாக இருப்பவர்கள் இந்தளவுக்கு இலகுவாக ஏமாற்றப்படுபவர்களாக இருப்பார்களா அல்லது அவர்களும் சேர்ந்தே இதுபோன்ற தகவல்கள் கசிவதற்கு காரணமாக இருந்தனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை விடயத்திலும் அரசாங்கம் அவசரப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் பரிந்துரையை, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவாகக் காண்பிக்க அரசாங்கம் முனைந்திருக்கிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டாலேயே அது சாத்தியமாகும். அதற்குள்ளாகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்து விட்டதாக அரசாங்கம் பிரசாரங்களை செய்து மூக்குடைபட்டு நிற்கிறது.
இதுபோலத் தான், உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் என்ற கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட நத்தார் மரமும் பிசுபிசுத்துப் போனது தான் மிச்சம். அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முனைகிறது. அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில், இதுபோன்ற குழப்பமானதும் உண்மையில்லாததுமான தகவல்கள், அரசாங்கத்தின் மதிப்பைக் குலைப்பதாகவே இருக்கிறது. போர் வெற்றியின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ கட்டிய சாம்ராஜ்யம், அதன் தவறுகளால் தான் சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. அந்தப் பாடங்களை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறினால், அதே நிலையைத் தான் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
Average Rating