போட்டிகளில் தோல்வியே அறியாத ஜல்லிக்கட்டு காளை இதுதான்..!! செம வீடியோ!
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு காளைகளை பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்தும் விதம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டிக்காக சாதாரண காளைகளை கூட பயிற்சி கொடுத்து தயார் படுத்துவது வழக்கம். ஆனால், ஜல்லிக்கட்டிற்கு மட்டும் என்றே தனியாக வளர்க்கப்படும் காளைகளும் தமிழ்நாட்டில் உண்டு. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள் அவிழ்த்து விடப்பட்டாலும் மாடுபிடி வீரர்கள் மத்தியில் சிறு சலனம் கூட இருக்காது.
ஆனால் மதுரை மண்ணில் மட்டுமல்ல மாநில அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ‘அப்பு காளை’ என்ற ஒரு பெயரை கேட்டாலே மாடுபிடிவீரர்களுக்கு சற்று கிலியாகத்தான் இருக்கும். மாடுகளை அணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் மாடுபிடிவீரர்கள் மத்தியில் ‘அப்பு வருது’ என சொன்னாலே பக்கத்தில் நெருங்க யோசிப்பர். இதுவரை தான் கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியே அறியாத காளை என ஜல்லிக்கட்டு வட்டாரத்தில் பேசப்பட்ட ஒரே காளை. ‘ஜல்லிக்கட்டின் சத்ரியன்’, ‘ஆடுகளத்தின் ஆட்ட நாயகன்’ என காளை பிரியர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரே காளையும் இந்த அப்புதான்.
சக காளைகளே மிரளும் அளவுக்கு ஜல்லிக்கட்டில் தனது ஆட்டத்தை இது வெளிப்படுத்தும். வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டவுடன் எல்லைக்கோட்டை தாண்டி செல்ல வேண்டும் என்ற நோக்கில் காளைகள் சீறிப்பாய்ந்து செல்லும். ஆனால் அப்பு காளை அவிழ்த்து விடப்பட்டவுடன் வாடிவாசல் அருகிலேயே சுற்றி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும். வாடிவாசலில் இருந்து கூட்டத்துக்குள் புகுந்து வீரர்களை பந்தாடிவிட்டு புழுதியை கிளப்பி நிற்கும் தோரணை அசாத்தியமானது. அதனை காண்பதற்காகவே செல்லும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உண்டு. காளைக்கு கொம்பு பெரியதாக இருப்பதாகவே நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்பு காளைக்கு கொம்பு சிறிதுதான், ஆனால் அதுதான் அப்புவின் பலம். அந்தக் கொம்பினால் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் தூசுபோல தட்டிவிட்டு செல்லும் திறமைசாலி அப்பு.
மாநில அளவில் பல விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுபொருட்கள் என அப்பு வாங்கி குவித்த பரிசுகள் ஏராளம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அப்பு காளைக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகரன். இவர் அப்பு காளைக்கன்றினை மதுரை மாவட்டம், சக்குடி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வழங்கினார். அதன் பிறகு இந்த கோவில்காளைக்கு ஜல்லிக்கட்டுக்கு தேவையான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முழுமையான பயிற்சிக்கு பின்னர் களத்தில் இறங்கிய காலம் முதல் தோல்வியை கண்டதில்லை என்ற பெருமையுடனே 2014-ம் ஆண்டு இறந்துபோனது. அப்பு காளையை அவிழ்த்து விடும்போது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் “ஓடிப்போ, ஓடிப்போ அப்பு வருது ஓடிப்போ”, முடிஞ்சா பிடிப்புப்பாருடா” என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டவாறே இருக்கும். பிற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரும் விரும்பும் காளைகளுள் முக்கிய இடம் அப்புவுக்குத்தான்.
இந்த அப்பு காளை இறந்த பிறகு அதைக்காண கூடிய மக்கள் கூட்டம் மிக அதிகம். அப்பு இறந்த செய்தி கேட்டு துன்பப்பட்ட மாடுபிடிவீரர்கள் ஏராளம். மனிதர்களுக்கு செய்யும் சடங்குகளும் இந்த அப்பு காளைக்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த காளையின் சொந்தக்காரரான ராஜசேகரனிடம் பேசினோம். “அப்பு காளை களத்தில் நின்று விளையாடக்கூடியது. மாடு சிறியதாக இருந்தாலும் அது களத்தில் வீரர்களை பந்தாடிவிடும். அதனுடைய திமிலில் கை வைத்து அணைத்தால் அவரை கொம்புக்கு வரவைத்து தூக்கி எறிவதில் கில்லாடி. அப்பு என்ன நினைக்குதுன்னு யாருக்கும் தெரியாது. இடப்பக்கம் வரும்னு நினைச்சா, வலது புறம் வரும். இராணுவவீரன் களத்தில் எப்படி யோசிப்பானோ அதுபோல களத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்து விளையாடும். அப்பு என்னிடம் ஏழு வருடங்களாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டது” என்றார்.
பாரம்பர்யமான ஜல்லிக்கட்டு விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உச்சநீதிமன்றத்தின் தடையால் தவிக்கிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடையை எதிர்த்து தமிழ்நாட்டில் மெரினா உட்பட அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்து வருகின்றன. இதற்கு சரியான பலன் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கூட்டமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தங்கள் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.
Average Rating