குடும்பப் பிரச்சினைகளை கையாள உதவும் சில வழிமுறைகள்..!!
மனமகிழ்வும், மன நிறைவும் சிறப்பாக அமையும்போதுதான் மனித வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மாறுகிறது.
“எப்படியோ பிறந்தோம், ஏதோ இருந்தோம், ஏனோ பிரிந்தோம், எங்கோ சென்றோம்” என எந்தவித குறிக்கோளும் இல்லாமல் வாழுகின்ற வாழ்க்கை, தேவையற்ற விவகாரங்களில் சிக்கிக்கொள்கிறது. வீணாய்ப் போய்விடுகிறது.
வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத சிலர், தங்கள் வாழ்க்கையை பிரச்சினைகள் மிகுந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள். வாழ்க்கையின் நெறிமுறைகளைப் பின்பற்றி முறையாக தங்கள் குடும்பத்தை வழிநடத்த இயலாதவர்களுக்கு, வாழ்க்கை என்பது பெரும் போராட்டக்களமாக மாறிவிடுகிறது. இதனால், அவர்கள் வாழும் குடும்பத்தில்கூட பல்வேறு பிரச்சினைகள் நாளும் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.
“அப்பாவிடம் எப்படிப் பேச வேண்டும் என என் மகளுக்கு தெரியவில்லை” – இது ஒரு தந்தையின் தவிப்பு.
“ஒழுக்கமாக வாழத் தெரியாத என் மகனால் என் மானம் போகிறது” – இது ஒரு தாயின் வேதனை.
“மனைவிக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவரை கணவனாக நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” – இது மன அழுத்தத்தால் உருவாகும் ஒரு மனைவியின் கவலை.
“எங்கள் அப்பா ஒழுங்காக எங்களை சிறுவயதிலேயே வளர்த்திருந்தால், நாங்கள் இந்த அளவுக்குக் கெட்டுப்போயிருக்க மாட்டோம்” – இது ஒரு மகனின் மனக்குமுறல்.
“குடும்பத்திற்கு ஏற்றபடி ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரியாத பொம்பளையை வைத்துக்கொண்டு இனிமேல் என்னால் காலம் தள்ள முடியாது. அதனால்தான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன்” – இது ஒரு கணவனின் கண்ணீர் வார்த்தைகள்.
இப்படி ஏராளமான பிரச்சினைகள் குடும்பங்களில் ஏற்பட்டுவிடுகின்றன.
பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குடும்ப உறுப்பினர்கள் யாரும் செயல்படுவதில்லை. மாறாக, சில சூழல்களின் காரணமாக குடும்பத்தில் பிரச்சினைகள் திடீரென முளைத்துவிடுகின்றன. வளர்ந்த பிரச்சினைகள், குடும்பத்தில் விரிசல்களை ஏற்படுத்தி, வீணான சிக்கல்களை உருவாக்கி, ஒற்றுமை நிறைந்த குடும்பத்தை- ஓங்கி தரையில் அடிக்கப்பட்ட தேங்காயைப்போல சிதறி ஓட வைத்துவிடுகிறது.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், ‘குடும்ப ஒற்றுமை’யில் அணுகுண்டைத் தூக்கிப் போட்டது போன்ற நிலையை உருவாக்கினால், அந்தக் குடும்பம் அழிவைச் சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது அல்லவா?
எனவே, குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை முதலிலேயே கூர்ந்து கவனித்துக்கொண்டால், அந்தப் பிரச்சினைகளை எளிதில் சமாளித்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.
குடும்பத்தில் உருவாகும் ‘பொதுவான குடும்பப் பிரச்சினைகள்’ ( Family Problems) எவை என ஆய்வாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றுள் சில-
1. தகவல் தொடர்பு பிரச்சினைகள், ஒருவரோடு ஒருவர் பேசும்போது அல்லது தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற சிக்கல்களைக் குறிக்கும்.
2. ஒழுக்கம்சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடும்ப உறுப்பினர்கள் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றி வாழாத நிலையில் உருவாகும் பிரச்சினைகளைக் குறிக்கும்.
3. மரியாதைம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயதில் மூத்த பெரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் மதிப்பும், மரியாதையையும் கொடுக்காத நிலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைக் குறிக்கும்.
4. பெற்றோர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குழந்தைகளை சின்னஞ்சிறு வயது முதல் பெரியவர்கள் ஆகும்வரை வளர்த்து உருவாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறிக்கும்.
5. மண முறிவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கணவன்-மனைவி இருவரும் மனம் ஒருமித்து வாழாத நிலையில் ஏற்படும் பிரச்சினைகளையும், திருமண உறவில் ஏற்படும் விவாகரத்து பற்றிய பிரச்சினைகளையும் குறிக்கும்.
மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளெல்லாம் எல்லா குடும்பங்களிலும் ஏதோ ஒருநிலையில் உருவாகத்தான் செய்கின்றன.
“எந்தச் சூழ்நிலையில், எப்படிப்பட்ட பிரச்சினைகள் ஒரு குடும்பத்தில் உருவாகும்?” என்று யாரும் முன்கூட்டியே குறிப்பிட்டு கணித்துச் சொல்ல இயலாது. கண் இமைக்கும் நேரத்தில், கருக்கொண்ட சில பிரச்சினைகள் வாழ்க்கையில் மையம்கொண்டு, புயலாக மாறி சிலர் வாழ்க்கையைச் சீரழித்துவிடுகின்றன. எனவே, குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகாமல் தவிர்க்கவும், உருவான பிரச்சினைகளை முறையாகக் கையாளவும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
வாழ்க்கையில் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளை கையாள உதவும் சில வழிமுறைகளை ‘குடும்ப உறவு’ பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றுள் சில…
1. உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் எவை என்பதை முதலில் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். பின்னர், உடல்நலம், நிதி, உறவு, நட்பு, கல்வி, வேலை என வெவ்வேறு தலைப்புகளின்கீழ் அந்தப் பிரச்சினைகளை வகைப்படுத்துங்கள். உங்கள் பிரச்சினை எந்த வகையோடு தொடர்புள்ளது என்பதை தெளிவாகத் தெரிந்துகொண்டால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எளிதாகும்.
2. நீங்கள் மிகவும் பதற்றமாக இருக்கும்போது உங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சி செய்யாதீர்கள். கட்டுப்பாடற்ற உணர்வுகளின் பிடியில் சிக்கி, நீங்கள் தவிக் கும்போது பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண முடியாது. ஏனென்றால், உங்களின் வலி மிகுந்த உணர்வுகள் உங்களுக்கு சிறந்த தீர்வைத் தர அனுமதிக்காது.
3. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவறு செய்யும்போது அதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், குடும்ப உறுப்பினர்கள் உங்களின் ரத்தத்தோடு கலந்த உறவுகள். இந்த உறவுகளை வாழ்க்கையில் தவிர்க்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
4. நீங்கள் பிரச்சினைகளில் சிக்கியிருக்கும்போது கோபத்தோடு பேசாதீர்கள். மேலும், மரியாதை இல்லாமல் மற்றவர்களைத் திட்டுவதையும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதையும் தவிர்த்து விடுங்கள்.
5. உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு பேசுவதையும், கலந்துரையாடுவதையும் எந்தச்சூழலிலும் முற்றிலும் நிறுத்திக்கொள்ளாதீர்கள். ஒருவரோடு மற்றவர் கொண்டுள்ள தகவல் தொடர்பு முற்றிலும் தடைபட்டால், உறவுப்பாலம் உடைந்துவிடும். எனவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களோடு மனம்விட்டு பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
6. உங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்வது நல்லது. இதற்கு மாறாக, கடிதம் எழுதுவதும், இமெயில் அனுப்புவதும், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்புகொள்வதும், உணர்வுபூர்வமான தகவல்களை பரிமாற இயலாத நிலையை உருவாக்கிவிடும்.
7. பிரச்சினைக்குரியவர்களிடம் நேரில் மனம்விட்டுப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, இன்னொருவர் மூலம் தூது அனுப்புவதும் சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கிவிடும். உங்கள் பிரதிநிதியாக பேசுபவர் சிலவேளைகளில் உங்கள் உணர்வுகளை தெளிவாகத் தெரிவிக்கத் தவறி விட்டால், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும் அல்லவா?
8. குடும்பத்தோடு இணைந்து முடிவெடுக்கப் பழகுங்கள். எந்தவொரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர் களோடு இணைந்து கலந்து பேசி, முடிவுக்கு வரும்போது அந்த முடிவு சிறந்ததாக அமையும்.
9. குடும்ப உறுப்பினர்களில் சிலர் பிரச்சினைக்குரியவர்களாக இருந்தால், அவர்களோடு பேசுவதற்கும், அவர்களிடம் கொண்டுள்ள உறவுக்கும் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுவது நல்லது.
10. சில குடும்பப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண இயலாது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான அளவு நேரம் எடுத்துக்கொள்வது நல்லது. அவசர அவசரமாக நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்போது சில எதிர்பாராத விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலே குறிப்பிட்ட சில வழிமுறைகள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். பிரச்சினைகள் அதிகம் இல்லாத குடும்ப வாழ்க்கைதான் இதயத்தில் ஏற்படும் விரிசல்களை விலக்கும். மகிழ்ச்சியை மனமெங்கும் நிறைக்கும்.
Average Rating