பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய 1981 கலவரம்..!! (கட்டுரை)
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக, 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை, இடம்பெற்ற கொடூர வன்முறைகள் உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின.
குறிப்பாக, ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமையானது, உலகளவில் பரபரப்பான விடயமாகப் பார்க்கப்பட்டது.
அதுவரை இலங்கை இனப்பிரச்சினை பற்றி, உலகின் கவனம் பெரிதாக ஈர்க்கப்படவில்லை, ஆனால், யாழ். நூலக எரிப்பு உட்பட யாழில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள், உலகின் பல முக்கிய ஊடகவியலாளர்களையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் கல்வியியலாளர்களையும் அரசியல் பிரமுகர்களையும் யாழுக்கு அழைத்து வந்தன.
அவர்கள், கலவர பூமியின் களநிலவரத்தைக் காண வந்தார்கள். இலண்டன் ‘நியு ஸ் ரேற்ஸ்மன்’ பத்திரிகையின் பிரான்ஸிஸ் வீன், சம்பவம் நடந்து ஆறு வார காலத்துக்குள் இலங்கைக்கு வந்தார்.
இந்தியாவில் அடைக்கலம் புகுந்த, பாகிஸ்தானிய ஊடகவியலாளரான சலமத் அலியும் இலங்கை வந்தார்.
இவர்கள், இலங்கையின் வடக்கே அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட, தமிழ் மக்கள் மீதான கொடும் வன்முறைகள் பற்றிய களநிலவரத்தைக் கண்டு, தமது பத்திரிகைகளில் எழுதினார்கள்.
1981 ஜூலை 17 இல் இலண்டன் ‘நியு ஸ் ரேற்ஸ்மன்’ பத்திரிகையில் வௌிவந்த, 1981 யாழ். நூலக எரிப்பு மற்றும் வன்முறைகள் பற்றிய பிரான்ஸிஸ் வீனின் கட்டுரையில், ‘அங்கு கருகிப்போய்க்கிடந்த எச்சங்களைக் காணும்போது, இதயம் நொறுங்கிப்போயிருந்த, உள்ளூர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஒருவரைச் சந்தித்தேன். “சிங்களவர்கள் இந்த நூலகம் பற்றிப் பொறாமை கொண்டார்கள்” என்று அவர் சொன்னார். எனது விரிவுரைகளுக்கும் கற்பிக்கும் செயற்பாடுகளுக்கும் என்னைத் தயார்படுத்த நான் ஒவ்வொருநாளும் இங்கு வருவேன். இனி நான் கொழும்புக்குத்தான் போக வேண்டும், ஆனால், இங்கிருந்த பல நூல்கள் அங்கு கூட இல்லை” என்று பதிவுசெய்கிறார்.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் செல்போன், யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் தங்கியிருந்து, நடந்த சம்பவங்கள் பற்றியும் வளர்ந்துவரும் இனமுரண்பாடு பற்றியும் களநிலவர ஆய்வொன்றைச் செய்து, இங்கிலாந்தின் ‘கார்டியன், ‘நியூஸ் ரேற்ஸ்மன்’ மற்றும் இந்தியாவின் ‘இலஸ் ரேற்றட் வீக்லி ஒஃப் இன்டியா’ ஆகிய பத்திரிகைகளில் இதுபற்றிய கட்டுரைகளை எழுதினார்.
இதைவிட, ‘இந்தியா டுடே’யின் வெங்கட் நாராயணனும் இலங்கை வந்தார். டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்தும் புலமையாளர்கள் களநிலவரம் காண வந்தார்கள்.
இவ்வாறு, வௌிநாட்டினர் இலங்கைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்தமை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையிலிருந்தும் களநிலவரம் காண பல்வேறு தரப்பினரும், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.
குறிப்பாக, இடது சாரிக் கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ, கத்தோலிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புலமையாளர்கள், புலமைக் குழுக்கள் ஆகியன, தன்னார்வ விஜயங்களை மேற்கொண்டு, களநிலரத்தை ஆராயந்தன.
இந்த விஜயங்கள், நடந்துகொண்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை நாடுபூராகவும் கொண்டு சேர்க்கும் கைங்கரியத்தை, பேரினவாத சக்திகள் நடாத்திக் கொண்டிருந்தன.
இன்னொரு கலவரத்துக்குத் தயாராகுதல்
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், அன்றைய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின்போது, தான் ஆற்றிய இனவாத விஷம் கக்கும் உரையினைக் கொண்ட ‘ஹன்ஸார்ட்’ பிரதிகள் பல்லாயிரக்கணக்கானதை எடுப்பித்து, அதனை, நாடுமுழுவதும் பரப்புரை செய்யும் கைங்கரியத்தை ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த சிறில் மத்யூ செய்தார்.
இந்தப் பிரதிகளைப் புத்தகோவில்கள், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரசாங்க அலுவலகங்கள் என அனைத்து இடங்களுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பித்தார்.
குறித்த, ‘ஹன்ஸார்ட்’ பிரதியுடன் கூடவே, தமிழர்களுக்குத் தனிநாடு கிடைத்தால் எத்தனை பௌத்த ஸ்தலங்கள் இல்லாது போகும் என்பதைக் குறிக்கும் ஒரு வரைபடமும் கூடவே அனுப்பி வைக்கப்பட்டது.
இவையெல்லாம், அப்பாவிச் சிங்கள மக்களிடையே அச்சத்தையும் தமிழ் மக்கள் மீதான வெறுப்பையும் விதைத்து, அதனூடாக அவர்களைத் தமிழ் மக்கள் மீது, வன்முறைப் பாதையில் திசைதிருப்பும் காரியத்தின் அங்கமாக அமைந்தன.
இத்தோடு, திடீரென நாடெங்கிலும் “சிங்கள மக்களே! தமிழர்களுக்கெதிராக எழுந்து கொள்ளுங்கள்!” என்ற வார்த்தைகளைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சிங்கள-பௌத்த மக்களைத் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றி, அங்குள்ள பௌத்த ஸ்தலங்களைப் பாதுகாக்குமாறு சிறில் மத்யூ அறைகூவல் விடுத்தார்.
இதற்குப் பௌத்த பிக்குகளின் ஆதரவும் இருந்ததாகச் சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிங்கள மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் இந்தக் கேவலமான சதித்திட்டம் வெற்றிபெறத் தொடங்கியதுதான், இலங்கை என்ற நாட்டின் துர்பாக்கியம்.
நாட்டின் ஏனைய பாகங்களிலும் கலவரம்
சிறில் மத்யூ மற்றும் அரசாங்கத்திலிருந்த அவரது பேரினவாத சகாக்களின் பேச்சுக்கள் சிங்கள மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைப் பாதையில் திருப்பியது.
இதனால் தூண்டப்பட்டவர்களும் பேரினவாத சக்திகளால் களத்திலிறக்கப்பட்ட காடையர் கூட்டமும் நாடு முழுவதிலும் ஆங்காங்கு, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டன.
யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறை போலவே, நாடெங்கிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதுடன் தமிழ் மக்களின் வீடுகள், கடைகள், வணிக மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன எல்லாம் தாக்கியழிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மலையகத் தோட்டத்தொழிலாளர்கள்
இரத்தினபுரி மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புறத் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்த பேரினவாத வெறியர்கள், அங்குள்ள மக்களைத் தாக்கியதுடன், அவர்களது சொத்துகளுக்கும் பெரும் சேதத்தினை விளைவித்தனர்.
1981 ஆகஸ்ட்டில் மலையகத்தின் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த ‘லைன்’ அறைகளுக்குள் நுழைந்த காடையர்கள், அங்கிருந்த அப்பாவி மக்களை வௌியே இழுத்துப்போட்டு அடித்ததுடன், அந்த, ‘லைன்’ அறைகளையும் உடைத்தனர்.
மலையகத்தில் மட்டும் ஏறத்தாழ 25,000 தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள், இந்த வன்முறைகளால்ப் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாகி நின்றனர்.
மலையகப் பிரதேசங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகக் கடுமையான வன்முறைத் தீ பரவியதால், அரசாங்கத்தில் அங்கம் வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் பொறுமையிழந்தார். உடனடியாக, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவைச் சந்தித்து, தன்னுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
ஜே.ஆர் – தொண்டா சந்திப்பு
ஆகஸ்ட், 17 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆரை அவரது இல்லத்தில் வைத்துச் சந்தித்த சௌமியமூர்த்தி தொண்டானும் அவரது கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான எம்.எஸ்.செல்லச்சாமியும் “மலையக தோட்டப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகள் கடுமையாகப் பரவிவருகின்றன.
பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இதனை இந்த அரசாங்கத்தின் ஆதரவு சக்திகளைப் பின்புலமாகக் கொண்ட ‘ரௌடி’ கும்பல்கள்தான் செய்கின்றன என்பதற்கு எம்மிடம் ஆதாரமுண்டு. இவ்வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், அம்மக்களும் பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுப்பதன் மூலம், இந்த வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரும்” என்று கடும் தொனியில் நேரடியாகவே ஜே.ஆரிடம் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தனது தந்திரோபாயச் செயற்பாடுகளுக்காக ‘நரி’ என்றறியப்பட்ட ஜே.ஆர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டதுடன், நிலைமையைத் தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகச் சொன்னார்.
அத்தோடு ஜே.ஆர் நின்றுவிடவில்லை, விரைவில் இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகப் பிரதேசங்களுக்கும் தொண்டமானுடன் விஜயமொன்றைச் செய்யவும் திட்டமிட்டார்.
இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம்
இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில், இலங்கையில் நாடெங்கிலும் தமிழர்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்த வன்முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதன்போது பேசிய, அன்றைய இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்மராவ், “இலங்கையில் தற்போது இடம்பெற்ற கலவரங்களில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே. குறிப்பாக, தோட்டத்தொழிலாளர்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
சில உயிரிழப்புக்களும் பல எரியூட்டல்கள், கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், பலரும் தங்கள் வீடுகளைவிட்டு வௌியேறியிருக்கிறார்கள்.
இலங்கையின் நிலைமை நிலையற்றதாக இருப்பதால், எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உறுதியான தகவல்களைப் பெறமுடியவில்லை” என்று குறிப்பிட்டதுடன், “இது நிச்சயமாக இலங்கையின் உள்விவகாரம்.
ஆயினும் இங்குள்ளவர்கள் பலரும் அக்கறை கொள்வதுபோல, இந்திய அரசாங்கத்துக்கும் அக்கறையுண்டு. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியர்கள்.
ஆகவே, இலங்கை அரசாங்கம் உடனடியாக இந்த வன்முறைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நிலைமையைச் சுமுகமாக்கும் என்று நம்புகிறோம்.
எம்முடைய எண்ணத்தை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். இந்திய-இலங்கை பாரம்பரிய உறவுகளை, இது எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.
தமிழகப் பிரஜை இலங்கையில் தாக்கிக் கொலை
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 42 தமிழர்களைக் கொண்ட குழுவொன்று கதிர்காமம் சென்று கொண்டிருந்த போது திஸ்ஸமஹாராம அருகிலே, காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான, தமிழகத்தின் திருவொற்றியூரைச் சேர்ந்த தனபதி என்பவர், காயங்களின் காரணமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப்பயணி, தமிழன் என்ற காரணத்துக்காக இலங்கையில் கொல்லப்பட்டமையானது தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டிலே அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சியிலே இருந்த மு.கருணாநிதிக்கு, இலங்கையில் நடந்த இந்தத் தமிழகத்தைச் சேர்ந்தவரின் படுகொலை, மத்திய மாநில அரசுகளுக்கெதிரான போராட்ட ஆயுதமாக பயன்படுத்தத்தக்க வாய்ப்பாக அமைந்தது.
தி.மு.கவினர் 1981 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆர்.டீ. சீதாபதி மற்றும் என்.வீ. என்சோமு ஆகியோர் தலைமையில், இலங்கையில் நடந்த குறித்த படுகொலையைக் கண்டித்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தன்னுடைய கட்டுரையொன்றில் பேராசிரியர் அ .இராமசாமி குறிப்பிடுகிறார்.
இவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படவே, தி.மு.க செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் 14 வரை, இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் போது, ஏறத்தாழ 500 தி.மு.க செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
செம்டெம்பர் 15 ஆம் திகதி தி.மு.க தலைவர் மு.கருணாநிதியே நேரடியாகப் போராட்டக் களத்தில் குதித்தார். இதன்போது கைது செய்யப்பட்ட அவர், 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இடம்பெற்றன.
இது தமிழக அரசாங்கத்துக்கு மட்டுமல்லாது இந்திய அரசாங்கத்திற்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
1981 செப்டெம்பர் 11 இல் இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில், இந்தியப் பிரஜை ஒருவர் இலங்கையில் கொல்லப்பட்ட விவகாரம் பற்றிப் பேச்செழுந்தபோது, அங்கு உரையாற்றிய இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், குறித்த சம்பவதுக்காக இலங்கை ஜனாதிபதியும் இலங்கையின் வௌிவிவகார அமைச்சரும் தம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதாகவும் கொல்லப்பட்டவரின் உடலைத் தமிழகம் எடுத்து வருவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியதுடன், “இலங்கையில் நடப்பவை அவர்களது உள்நாட்டு விவகாரம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை” என்பைதையும் மீள வலியுறுத்தினார்.
ஆனாலும் தாம் தமது அக்கறையை இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் கூறினார்.
சர்வதேச கவனம்
யாழில் தொடங்கிய வன்முறைகள் நாடெங்கிலும் தமிழர்களைக் கடுமையாகப் பாதித்துக் கொண்டிருந்தமை, உலக நாடுகளின் கவனத்தை இலங்கை மீது ஈர்த்தது.
ஜப்பான், பிலிப்பைன்ஸ் , தென்கொரியா, சீனா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் இலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்தனர்.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டமை, தமிழ்நாட்டிலும் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டமை இந்தத் சீற்றத்துக்கு முக்கிய காரணம்.
தமிழகத்திலிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கல்யாணசுந்தரமும் காமராஜ் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான நெடுமாறனும் கூட இலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்திருந்தார்கள்.
இத்தோடு இது நின்றுவிடவில்லை, தெற்கிலே இருந்தும் யாழ்ப்பாணத்துக்குச் சில முக்கிய அரசியல் தலைவர்கள் தமது விஜயத்தினை மேற்கொண்டார்கள்.
Average Rating