தேசியப் பட்டியலுக்குள் சிக்குண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ்..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 56 Second

526x297-bP4சமூகம் சார்ந்த அரசியல் என்பது அஞ்சலோட்டம் போன்றது. இதில் ஆரம்பத்தில் களமிறங்கும் போட்டியாளரில் இருந்து, போட்டியை நிறைவு செய்பவர் வரை எல்லோருமே சரியான இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக ஓடவேண்டியிருக்கின்றது. முதலாவதாக ஓடும் நபர் வேகமாக ஓடி, பொல்லை அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்து ஓடுகின்றவர்களும் விறுவிறுப்பாக ஓட வேண்டும். அவ்வாறில்லாமல்,ஓட்டப் பாதைக்கு வெளியில் இருக்கின்ற காட்சிகளைப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தால், வெற்றி இலக்கை, நமக்கு முன்னே வேறொருவன் அடைந்து விடுவான் என்பதே நியதியாகும்.

முஸ்லிம் அரசியல் இதற்கு நல்ல உதாரணம். முஸ்லிம் அரசியல் இதற்கு உதாரணமென்றால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதில் பெரும் பங்கை வகிக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அஷ்ரப் என்கின்ற ஆளுமை, மிக வேகமாக ஓடி, அந்தப் பொல்லை ரவூப் ஹக்கீம் என்ற, மு.காவின் இன்றைய தலைமையிடம் கொடுத்தார். ஆயினும், அஷ்ரப்புக்குப் பிறகு அந்தக் கட்சியின் இயக்கப்பாடு, ஓட்டம் என்பது அவ்வளவு சீரானதாக இல்லை என்பது கண்கூடு. சின்னச் சின்ன விடயங்களுக்குப் பின்னால் கட்சியும் தொண்டர்களும் ஓடியோடி,காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்ட கட்சியின் யாப்பை மறந்து விட்டு, தம்முடைய சொந்த நிகழ்ச்சிநிரல், இலாப-நட்டங்களின் அடிப்படையிலேயே அக்கட்சியின் பெருமளவிலான அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. தேசியத் தலைவர் என்ற, தாங்களே உருவாக்கிய மாயத் தோற்றத்துக்குள் தலைவர் என்றும், பிரதியமைச்சர்கள் என்றும், எம்.பிக்கள் என்றும், மாகாண சபை உறுப்பினர்கள் என்றும், இணைப்பதிகாரிகள், அமைப்பாளர்கள், அரசியல் கொந்தராத்துக் காரர்கள் என்றும் பல வகையறாக்களில் உள்ளடங்குவோரும் கட்சிக்குள் இருக்கின்றனர்.

தலைவரது குறைகளை அவருக்கு நேரெதிரே பேசி வாதிடுகின்றவர்களும் இருக்கின்றார்கள். தலைவரோடு நல்ல பிள்ளைபோல் நடித்துக் கொண்டு, திரைமறைவில் இருந்து அவருக்கு எதிராகச் சதி செய்கின்றவர்களும் இருக்கின்றார்கள். தலைவரும் இதை அறியாதவர் அல்லர். இதற்கு மேலதிகமாக, கட்சியின் தலைமைத்துவம் உள்ளடங்கலாக, முக்கிய பதவிகளைக் குறிவைத்து, ஒருகூட்டத்தினர் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கின்றனர் என்ற அதிர்ச்சிகரமான ஊகமும் இருக்கின்றது. (அதுபற்றி இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம்) இதேவேளை, கட்சிக்குள் ஜனநாயகப் பொறிமுறையும் ‘மசூரா’ எனப்படும் கூட்டுக் கலந்தாலோசனையும் இல்லாது போய்விட்டதென்ற கருத்தும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கூட, அஷ்ரபின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. அப்படியாயின், குர்ஆனும் ஹதீஸூம், மு.காவின் அரசியல் இயக்கப்பாட்டில் எந்த இடத்தில் அல்லது எந்த விடயத்தில் நடைமுறையில் இருக்கின்றது என்ற கேள்வி எழுவது இயற்கைதானே. கடந்த ஒன்றரை தசாப்தங்களாக, இலங்கை முஸ்லிம்களின் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிய விடயங்களில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றது. தனிப்பட்ட விடயங்கள் தொடக்கம் முழுமொத்தக் கட்சியின் பேரம்பேசல் (டீல்), கட்சி மாறுதல் வரையும், சமூகத்துக்குப் பயன்படாத எத்தனையோ காரியங்களில் மு.காவின் அரசியலும் காலமும் கழிந்திருக்கின்றது; இன்னும் கழிந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான முறையான அரசியல் போராட்டத்தை மேற்கொண்டதாக சொல்லவும் முடியாது. இந்த வரிசையில் ஒன்றாகவே மு.காவுக்குள் ஏற்பட்டிருக்கின்ற உள்ளக முரண்பாடுகளையும் அதிலும் குறிப்பாக, தேசியப்பட்டியல் எம்.பி விவகாரத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தேசியப்பட்டியல் எம்.பியை யாருக்கு கொடுப்பதென்ற விவகாரம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கு மத்தியிலும் கடுமையான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்த சமயத்தில், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு அப்பதவியை வழங்கும் முடிவுக்கு வந்திருந்தார். கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில், இதை அறிவித்துமிருந்தார். “ஹசன் அலி கடந்த தேர்தலில் போட்டியிடவே விரும்பினார். நான்தான் அதைத் தடுத்து தேசியப் பட்டியல் தருவதாக வாக்குறுதி அளித்தேன். அதை நான் கொடுப்பதற்கு இப்போது தீர்மானித்திருக்கிறேன்” என்று அவர் சபையில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்னரே, அதாவது தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு விதித்து, ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலையில் ஹக்கீமும் ஹசன் அலியும் இணக்கப்பாட்டுக்கு வந்த வேளையிலும் இதே வாக்குறுதி, ஹசன் அலிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது உண்மையாகவே ஹசன் அலியின் பிரச்சினையில்லை. அவருக்கு தேசியப்பட்டியல் வழங்குவதோ, அதிகாரம் வழங்குவதோ முஸ்லிம் சமூகத்துக்கு அத்தியாவசியமான விடயமும் இல்லை. இவற்றையெல்லாம் வழங்குவதன் மூலம் கட்சிக்குள் இருக்கின்ற எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து, சரியான பாதையில் மு.கா பயணிக்கத் தொடங்கிவிடும் என்று கூறவும் இயலாது.

இது உண்மையில் என்ன பிரச்சினையென்றால், இந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற பதவியின் அதிகாரம் சூட்சுமமான முறையில் குறைக்கப்பட்டது பற்றியதாகும். குர்ஆனையும் ஹதீஸையும் யாப்பாகக் கொண்டுள்ள ஒரு கட்சியின் தலைமைத்துவம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு மெத்தனமாக இருக்கின்றது என்பது பற்றியதாகும். மு.கா என்ற மக்களின் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியலை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கோ ஹசன் அலி போன்ற தனிநபர்களுக்கோ கொடுப்பதில் இழுத்தடிப்புகளை மேற்கொள்கின்றது என்பது பற்றியதாகும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டு…. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைக் கவனிக்காமல், கட்சி பொடுபோக்காக இருக்கின்றது என்பது பற்றிய பிரச்சினையாகும். எனவே, முஸ்லிம் சமூகத்தின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பிரச்சினைகளில் மு.கா கவனம் செலுத்த வேண்டுமென்றால், ஏதோ ஓர் அடிப்படையில் உள்ளக மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ரவூப் ஹக்கீம் – ஹசன் அலி இணக்கப்பாடு, எட்டப்பட்ட மறுநாளே, (டிசெம்பர்- 16) அதாவது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இரு தரப்பும் சென்றிருந்த போது, எம்.எச்.எம். சல்மான் எம்.பி, இராஜினாமாச் செய்த கடிதத்தின் பிரதி ஒன்றைத் தலைவர் ஹக்கீம் ஹசன் அலியிடம் கொடுத்தார்.

அதில் அன்றைய திகதி இடப்பட்டிருந்தது. ஆயினும், அத்தினத்தில் சல்மான் இராஜினமாச் செய்திருக்கவில்லை. இப்படியிருக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றியிருந்த தலைவர், “இன்னும் ஒரு வாரமோ இருவாரமோ சல்மான் அப்பதவியில் இருப்பார்” என்று கூறியிருந்தார். “இது ஒரு பேய்க்காட்டல்” என்றும் “நீங்கள் ஏமாற்றப்படப் போகின்றீர்கள்” என்றும் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் பலர் கூறியபோதும், அவர் அதை மறுதலித்தார்.

“தலைவர் அவ்வாறு செய்ய மாட்டார்; செய்யவும் முடியாது” என்று சொன்னார். இன்னும் அதையே சொல்லிக் கொண்டுமிருக்கின்றார். இந்நிலையிலேயே கடந்த உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் விடுத்த அறிவிப்புக்குப் பின்னர், கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில், புதுவருடத்தின் முதலாவது அமர்வு கூடுகின்றபோது, எம்.ரி.ஹசன் அலி எம்.பியாகச் சத்தியப்பிரமாணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. இவ்வாறிருக்கும் போது, தேசியப்பட்டியல் எம்.பியான சல்மான், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பின்னணியில் ஹசன் அலி ஏமாற்றப்படப் போகின்றாரோ என்ற கோணத்தில் சிந்திப்பவர்களும் உள்ளனர்.

இந்தப் பதவியை, தலைவர் ஹக்கீம் விரும்பி, ஹசன் அலிக்குக் கொடுக்கவும் இல்லை. அதை ஹசன் அலி மிகவும் சந்தோசமாக ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அவர்கள் இருவரது முகத்தையும் உற்றுநோக்குபவர்களே இதைப் புரிந்து கொள்வார்கள். ஹக்கீமை ஒரு பிடிபிடிப்பதற்கு ஹசன் அலியும், ஹசன் அலியைக் கட்டுப்படுத்துவதற்கு ஹக்கீமும் இந்த எம்.பி பதவியை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த நினைக்கின்றனர் என்பதே கட்சியின் உள்ளாந்தரங்கங்கள் தெரிந்தவர்கள் அறிந்த விடயமாகும். இந்நிலையில், ஹசன் அலிக்குத் தேசியப்பட்டியல் கிடைக்குமா என்பதை விட, கட்சியின் யாப்புத் திருத்தப்பட்டு, அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது.

கடந்த உயர்பீடக் கூட்டத்தில் பேசிய கட்சித்தலைவர், எம்.பி பதவியை ஹசன் அலிக்குத் தருவதாகச் சொன்னாலும்,“செயலாளர் நாயகத்துக்கான அதிகாரங்களை வழங்குவது நானல்ல; அதைப் போராளிகளே தீர்மானிக்க வேண்டும். அதை அவருக்கு மிகத் தெளிவாக சொல்லியுள்ளோம்” என்று குறிப்பிட்டார். இது இரட்டை அர்த்த வாக்கியமாக இருக்கும் பட்சத்தில், பேராளர் மாநாட்டில் அதிகாரங்களை மீள வழங்காத விதத்தில் ஹக்கீம் காய்களை நகர்த்தலாம் என்ற அனுமானத்துக்கு வரமுடியும். அதுபோலவே,“சட்ட வல்லுநர்களின் துணையுடன் இப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும்” என்று அக்கூட்டத்தில் ஒரு முக்கிய உறுப்பினர் பேசியிருந்தார்.

அப்படியென்றால், ஒருபக்கம் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் எம்.பி கேட்கின்றார்கள். தனிநபர்கள் பலரும் அழுத்தம் கொடுக்கின்றார்கள். இந்நிலையில் ஹசன் அலியைச் சட்ட ரீதியாகத் தோற்கடிக்க முடியுமென்றால் அதைச் செய்துவிட்டு, மற்றையவர்களுக்கு அப்பதவியைக் கொடுக்காமல் ஏன் அவருக்குக் கொடுக்க நினைக்கின்றார்கள் என்ற கேள்வி மிக ஆழமானது. இப்போது எம்.பியைக் கொடுத்துச் சமாளித்துவிட்டு, பின்னர் அதிகாரமற்ற செயலாளராக வைத்திருந்து, பழிவாங்கும் நீண்டகாலத் திட்டமாக, இது இருக்குமோ என்ற ஐயப்பாடு கட்சியின் மூத்த போராளிகள் பலருக்கு எழுந்திருக்கிறது. மு.கா தலைவர் ஹக்கீமுக்கும் சல்மானுக்கும் இடையிலான நட்பு மிக இறுக்கமானதும் இரகசியமானதும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, அவரிடமிருந்து அடாத்தாக எம்.பி பதவியை, ஹக்கீம் பறித்தெடுக்க முடியாது. ‘முள்ளில் விழுந்த சேலை’ போல மெதுவாகவே கழற்றி எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், தேசியப்பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமாச் செய்வதென்றால், தனக்கு ஏதாவது ஓர் உயர்பதவி வழங்கப்பட வேண்டுமென சல்மான், சாடைமாடையாகக் கோருவதாகவும் அவ்வாறான பதவிகள் எதுவும் கைவசம் இல்லை என்பதால் ஹக்கீம், தடுமாறுவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அந்தக் காரணத்தினாலேயே, இராஜினாமாச் செய்வதற்குத் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. அப்படியாயின், தனக்கு நம்பிக்கையானவர் என்று சொல்லி, அமானிதமாக ஒரு பெரிய பதவி கொடுக்கப்பட்டவரிடம் இருந்து, அதனைப் பெறுவதற்குக் கைமாறு செய்ய வேண்டிய நிலையில் தலைமை இருக்கின்றது எனலாம்.

எது எப்படியாயினும், இவ்விவகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் தொடர்புபட்டதாகும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு முன்னால் வைத்தே இருவரும் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டனர். அத்துடன்,முன்னதாக ஆணைக்குழுவுக்கு ஹசன் அலி எழுத்துமூலம் செய்திருந்த முறைப்பாட்டை எழுத்துமூலம் வாபஸ் பெறவும் இல்லை என்பது இங்கு கவனிப்புக்குரியது.

ஆதலால், தான் ஏமாற்றப்படுவதாக ஹசன் அலி கருதத் தொடங்கும் எந்த வேளையிலும் அவர் ஆணைக்குழுவை நாட முடியும். எனவேதான், சல்மான் இன்னும் இராஜினமாச் செய்யாதிருப்பதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளின் சாத்தியத் தன்மையை அறிந்து கொண்ட மு.கா தலைவர் ஹக்கீம், கடந்த செவ்வாய்க்கிழமை ஹசன் அலியைச் சந்தித்து, இதுவிடயமாகப் பேசியிருக்கிறார். “சல்மான் நாடுதிரும்பியதும் உடனடியாகப் பதவி, கைமாற்றப்படும்” என்று சொல்லியிருக்கிறார். எது எவ்வாறிருப்பினும், சல்மான் எப்போது நாட்டுக்கு திரும்புவார் என்பதும், அவர் எதில் திருப்தியுறுவார் என்பதுமே அந்த இராஜினாமாவுக்கான திகதியைத் தீர்மானிக்கும்.

ஒருவேளை, அவை இரண்டும் அடுத்த வாரத்திலேயே இடம்பெற்றாலும், அது வர்த்தமானி அறிவித்தலாக வெளியாகுமே தவிர, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு 24 ஆம் திகதி இடம்பெறும்போதே ஹசன் அலியோ வேறு யாரோ சத்தியப் பிரமாணம் செய்ய முடியும். தேசியப் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதைப் பெறுவதற்கு படாதபாடுபட்ட பல அனுபவங்கள் மு.கா தலைவருக்கு இருக்கின்றது. தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரின் விடயத்திலும் ஒவ்வொரு அனுபவத்தைக் கட்சியும் பெற்றிருக்கிறது.

குறிப்பாக, ஹக்கீமினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியலை, ஹூசைன் பைலா மீள ஒப்படைக்கவே இல்லை. அதுபோல, சல்மானின் தேசியப்பட்டியலும் ஆகிவிடக் கூடாது. உண்மையில், கிழக்கு மக்களின் வாக்குகளுக்கு சன்மானமாகக் கிடைத்த இந்தப் பதவிகளை, ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் மற்றும் எம்.எச்.எம். சல்மான் ஆகியோருக்கு வழங்கியதே தார்மீகமானதல்ல எனும்போது, அதில் ஒன்றை உரியகாலத்தில் மீளப் பெறாமலிப்பது, மு.காவின் அரசியலைப் பின்னோக்கித் தள்ளுவதற்கு போதுமானது.

தேசியப்பட்டியல் எம்.பி போன்ற முரண்பாடுகளுக்குள் கட்சி சிக்கிக் கொண்டுள்ளதால், மக்கள்சார் அரசியலில் ஓர் அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாதுள்ளது. எனவே, இந்த எம்.பி பதவியை செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு கொடுத்தாலும், பரவாயில்லை அல்லது பொருத்தமான நியாயமான வேறு ஓர் ஊருக்குக் கொடுத்தாலும் பரவாயில்லை. முதலில் இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டும். அவ்வாறே உட்கட்சி முரண்பாடுகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.

தலைவரும் மற்றவர்களும் தமது தற்போதைய நிலையில் இருந்து இறங்கிவர வேண்டும். ஆளுக்காள் பதவிச் சண்டை பிடித்துக் கொண்டிருக்காமல், ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களினதும் தேசிய ரீதியான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்தத் தனித்துவ அடையாள அரசியல் பணிக்குள் இறங்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்கள்..!!
Next post விட்டமின் மாத்திரைகளை யார் பயன்படுத்தலாம்?? பயனுள்ள தகவல்..!!