கரும்பு எப்போதும் இனிப்பதில்லை..!! (கட்டுரை)
அழகும் சுவையும் தருகின்ற ஒவ்வொரு விடயங்களுக்குப் பின்னாலும், வலியும் கசப்பும் ஒளிந்திருக்கிறது எனும் உண்மையினை, நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.
நாம் மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளிலும், அவற்றினை உருவாக்குவதற்கு உழைத்த மனிதர்களின், கண்ணுக்குத் தெரியாத வியர்வைத் துளிகள் கலந்திருக்கின்றன.
நாம் சுவைத்துக் கொண்டிருக்கும் சீனியை, உள்நாட்டில் தயாரிப்பதற்காக, மேற்கொள்ளப்படும் கரும்புச் செய்கை தொடர்பில், விவசாயிகளின் அனுபவங்களும் இவ்வாறாகவே இருக்கின்றன.
அம்பாறை மாவட்டக் கரும்புச் செய்கையாளர்கள், மிக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்தத் தொழில் தொடர்பில் முகம்கொள்கின்ற கஷ்டங்களுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையில், அவர்கள் இதுவரை மேற்கொண்ட எந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.
ஏராளமான ஆர்ப்பாட்டங்களைச் செய்துவிட்டார்கள், எக்கச்சக்கமான அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
அம்பாறை மாவட்டம், ஹிங்குரான பிரதேசத்தில், சீனித் தொழிற்சாலையொன்று உள்ளது. 1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத்தொழிற்சாலையானது, அரசாங்கத்துக்குச் சொந்தமானது. ஆனாலும், இதுவரையில் பல்வேறு நிறுவனங்கள் – மேற்படி சீனித் தொழிற்சாலையினை குத்தகைக்குப் பெற்று நடத்தி வந்திருக்கின்றன.
தற்போது கல்லோயா பிளான்டேசன் எனும் தனியார் நிறுவனம், ஹிங்குரான சீனித் தொழிற்சாலையினை குத்தகைக்குப் பெற்று நடத்தி வருகின்றது. எவ்வாறாயினும், குறித்த தொழிற்சாலையின் பங்கில் 51 சதவீதத்தினை, அரசாங்கம் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது.
ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்கு, கரும்பினை உற்பத்தி செய்வதற்காக, அம்பாறை மாவட்டத்தில் 7,250 ஹெக்டேயர் காணிகள் உள்ளன. இவற்றில், 5,200 ஹெக்டேயர் காணிகள், 4,400 குடும்பங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
1960ஆம் ஆண்டு கரும்புச் செய்கைக்காக, தனியாரின் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. பின்னர், இவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட மாற்றுக் காணிகள், மேற்படி 5,200 ஹெக்டேயர் காணிகளுக்குள் அடங்குகின்றன.
மேலும், ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் தொழிலிழந்தவர்கள் மற்றும் தொழில் செய்து இளைப்பாறியோருக்கு பணமாக நஷ்டஈடு வழங்குவதற்கு முடியாததொரு காலகட்டத்தில், அவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டன. அந்தக் காணிகளும் மேலே குறிப்பிடப்பட்ட 5200 ஹெக்டேயர் காணிகளுக்குள்ளேயே அடங்குகின்றன.
இந்தக் காணிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டபோது, அவற்றில் கரும்புச்செய்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையொன்று விதிக்கப்பட்டிருந்தது.
ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்கான கரும்பு உற்பத்திக்குரிய 7,250 ஹெக்டேயர் காணிகளும் 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, கல்மடுவ, வரிப்பத்தான்சேனை, ஹிங்குரான, நீத்தை மற்றும் தீகவாபி ஆகிய வலயங்களாகும்.
இவற்றில், தீகவாபி வலயத்தில், சுமார் 400 ஹெக்டேயர் காணிகள் உள்ளன. தீகவாபி வலயம் தவிர்ந்த ஏனைய வலங்களில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தீகவாபி வலயத்திலுள்ள காணிகளின் உரிமையாளர்கள், கரும்புச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
தீகவாபி கரும்புச் செய்கை வலயத்தில் – நுரைச்சோலை, தீகவாபி மற்றும் ஆலங்குளம் ஆகிய பகுதிகள் அடங்குகின்றன. இங்குள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் கரும்புச் செய்கை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும், அந்தத் தொழிலில் தாம் கடுமையான நட்டத்தினை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர்.
குறித்த காணிகளில், கரும்பினை உற்பத்தி செய்ய வேண்டுமென, ஹிங்குரான சீனித் தொழிற்சாலையினை முகாமைத்துவம் செய்கின்றவர்கள் வற்புறுத்தி வருகின்றபோதும், நட்டத்தினை எதிர்கொள்ளக் கூடியதொரு விவசாயத்தினை தம்மால் மேற்கொள்ள முடியாது என்று, அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.
தீகவாபி வலயத்திலுள்ள கரும்புச் செய்கைக் காணி உரிமையாளர்கள், கரும்புச் செய்கையில் தாம் நட்டத்தினை எதிர்கொள்வதற்கான காரணங்கள் எவை என்பதை தெளிவுபடுத்துகின்றார்கள்.
அவை,
*குறித்த காணிகளில் காணப்படும் மண்வளம் கரும்புச் செய்கைக்கு உகந்ததல்ல.
*தரமான முளை கரும்பு தமக்கு வழங்கப்படுவதில்லை.
*அறுவடைக்குரிய பொறிமுறையில்லை.
*கரும்புக்கான விலை குறைவு
*தொழிற்சாலை முகாமைத்துவம், தமக்கு வழங்குகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தை 18 சதவீத வட்டியுடன் பெற்றுக்கொள்தல் போன்ற பல காரணங்களால், கரும்பு உற்பத்தி செய்வதில் தாம் நட்டத்தினை எதிர்கொள்வதாக, நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஏ.எல். மஹ்றூப் கூறின்றார்.
கரும்புச் செய்கையாளர்களுக்கான பல்வேறு பொருட்களையும், சேவைகளையும், தொழிற்சாலை முகாமைத்துவத்தினரே வழங்கி வருகின்றனர்.
முளை கரும்பிலிருந்து அறுவடை செய்து எடுப்பது வரையிலான பல விடயங்களை, தொழிற்சாலை முகாமைத்துவத்தினர்தான் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில், கரும்புச் செய்கையில் தாம் நட்டத்தினை எதிர்கொள்வதற்குரிய காரணமாக, விவசாயிகள் மேலே கூறியிருந்த காரணங்களை சற்று விரிவாக பார்க்க வேண்டியுள்ளது.
மண் வளம்
ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்கான கரும்பு உற்பத்திக் காணிகள், பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ளன. ஆயினும், தீகவாபி வலயத்திலுள்ள காணிகளில் உள்ள மண் வளமானது, கரும்புச் செய்கைக்கு உகந்ததல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அப் பிரதேச விவசாயிகள் கூறுகின்றனர்.
தரமான முளை கரும்பு
கரும்பினை உற்பத்தி செய்வதற்காக வழங்கப்படும் முளை கரும்பானது, பல்வேறு வகைகளில் காணப்படுகின்றன. ஆயினும், தமக்கு தரமான முளை கரும்புகள் வழங்கப்படுவதில்லை என்று, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால், எதிர்பார்க்கும் விளைச்சல் தமக்குக் கிடைப்பதில்லை என்று, விவசாயிகள் கூறுகின்றார்கள்.
அறுவடைப் பொறிமுறை
கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 15 மாதங்களில் அறுவடை மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த நிலையில், கரும்பு அறுவடையினை மேற்கொள்வதற்கான இயந்திரங்களையும், கூலியாட்களையும், வெளியில் பெற முடியாத போது, தொழிற்சாலையினை நடத்துகின்றவர்களே கரும்புகளை அறுவடை செய்துகொள்ள வேண்டும்.
ஆனால், அவர்கள் உரிய காலங்களில் அறுவடையினை மேற்கொள்வதில்லை என்று விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக, அறுவடைக்குரிய காலம் கடந்து பல மாதங்கள் கழிந்த நிலையில், கரும்புச் செய்கைகள் அழிவடைந்துள்ளமையினை இப்பகுதிகளில் காண முடியும்.
கரும்புக்கான விலை
ஒரு கிலோகிராம் கரும்பினை, 4 ரூபாய் 50 சதம் எனும் விலைக்கே, தொழிற்சாலையினர் கொள்வனவு செய்கின்றனர். சிலவேளைகளில், கரும்புச் செய்கையாளர்கள், இயந்திரங்களுக்கு பணம் வழங்கி அறுவடை செய்தால், ஒரு கிலோகிராம் கரும்புக்கான அறுவடைக் கூலியாக, 02 ரூபாவினைச் செலவிட வேண்டியுள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஒரு கிலோகிராம் கரும்புக்காக, தொழிற்சாலையினர் வழங்கும் 4 ரூபாய் 50 சதம் எனும் விலையானது, போதுமானதாக இல்லை என்று, கரும்புச் செய்கையாளர்கள் வாதிடுகின்றனர்.
18 சதவீத வட்டி
கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினை இதுதான். கரும்புச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, தொழிற்சாலை நடத்துநர்களால் பல்வேறு விதமான பொருட்களும், சேவைகளும் பிந்திச் செலுத்தும் கட்டண முறையில் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக – விவசாயிகளுக்கு முளை கரும்பு வழங்கப்படுகின்றன. காணிகளை உழுது, பண்படுத்திக் கொடுக்கின்றனர். கரும்புச் செய்கைக்கான உரம் மற்றும் நாசினிகள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கான கட்டணங்களை – விவசாயிகள் வழங்குகின்ற கரும்புக்கான பெறுமதியிலிருந்து தொழிற்சாலை நிருவாகம் கழித்துக்கொள்கிறது.
அத்தோடு, வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களுக்கு 18 சதவீதம் வட்டியினையும் விவசாயிகளிடமிருந்து தொழிற்சாலை முகாமைத்துவத்தினர் அறவிட்டுக் கொள்கின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றமையினாலேயே, கரும்புச் செய்கையாளர்கள் நட்டத்தினை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
ஹிங்குரான சீனித் தொழிற்சாலையினை பொறுப்பேற்று நடத்தும் தனியார் நிறுவனமானது, கரும்புச் செய்கையாளர்களிடமிருந்து 18 சதவீதமான வட்டியினை அறவிடுகின்றமையினை, ஒரு தொழிலாகச் செய்து வருகிறது என்று, இப்பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகத்தான், இங்குள்ள விவசாயிகள், நட்டத்தினை எதிர்கொண்டபோதும், அவர்களை தொடர்ந்தும் கரும்புச் செய்கையினை மேற்கொள்ளுமாறு, தொழிற்சாலையினை நடத்துகின்ற கம்பனியினர் வற்புறுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
ஒரு ஹெக்டேயர் காணியில் கரும்புச் செய்கை மேற்கொள்வதற்கு 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினைச் செலவிட வேண்டியுள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஹெக்டேயரில் அதிகபட்சமாக 100 தொன் கரும்பு, விளைச்சலாகக் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 100 டொன் என்பது, 1 இலட்சம் கிலோகிராமாகும். இதன்படி, தமது மொத்த விளைச்சலையும் கிலோகிராம் ஒன்றுக்கு 4.5 ரூபாய் எனும் அடிப்படையில் விற்பனை செய்தால், 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கே விற்பனை செய்ய முடியும் என்று, விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தொகையானது, அவர்களின் உற்பத்திச் செலவுக்குச் சமனானதாகும். அநேகமாக ஒரு ஹெக்டேயர் காணியில், 100 தொன்னுக்கும் குறைவாகவே விளைச்சல் கிடைக்கிறது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், இதே காணியில் நெற்செய்கை மேற்கொண்டால் வருடமொன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாவினை இலாபமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், இங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தீகவாபி வலயத்திலுள்ள கரும்புக் காணிகளின் மண் வளமானது, நெற் செய்கைக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலை மற்றும் தொழிற்சாலையின் ஊழியர் சங்கப் பிரச்சினைகள் காரணமாக, ஹிங்குரான சீனித் தொழிற்சாலை 1997ஆம் ஆம் ஆண்டு மூடப்பட்டது.
பின்னர், 2012ஆம் ஆண்டுதான் மீண்டும் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது. இந்தக் காலப் பகுதியில், இங்குள்ள கரும்புச் செய்கைக்கான காணிகளில், அதன் உரிமையாளர்கள் நெற்செய்கையினை மேற்கொண்டனர். இதன்போது, தீகவாபி வலயத்திலுள்ள காணிகளில் நெற்செய்கை மேற்கொண்டவர்களுக்கு அதிக விளைச்சலும், இலாபமும் கிடைத்ததாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னொருபுறம், ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்குத் தேவையான கரும்பினை உற்பத்தி செய்வதற்குரிய காணிகளை விடவும், அதிகமான காணிகளில் கரும்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும், கரும்புச் செய்கையில் விவசாயிகள் நட்டத்தினை எதிர்கொள்வதற்கு இதுவும் முக்கியமானதொரு காரணம் என்றும், நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பின் தலைவர் மஹ்றூப் சுட்டிக்காட்டுகின்றார்.
“ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 2,000 தொன் கரும்பு அரைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வருடத்தில் 250 நாட்கள் அங்கு கரும்பு அரைக்கப்படுவதாக தொழிற்சாலை நிருவாகத்தினர் கூறுகின்றனர். வகையில் பார்த்தால், வருடமொன்றுக்கு 5 இலட்சம் தொன் கரும்பு போதுமானதாகும்.
ஒரு ஹெக்டயரில் 100 தொன் கரும்பு விளைச்சலாகக் கிடைக்கும் நிலையில், ஒரு வருடத்துக்கான 05 இலட்சம் தொன் கரும்பினையும் 5,000 ஹெக்டேயர் காணியில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7250 ஹெக்டேயர் காணிகளிலும் கரும்பு உற்பத்தி செய்யுமாறு, தொழிற்சாலை நிருவாகத்தினர் வற்புறுத்தி வருகின்றனர்” என்று நுரைச்சோலை விவசாய அமைப்பின் தலைவர் மஹ்றூப் விபரித்தார்.
ஆனாலும், மேற்சொன்ன கணக்குக் கூட மிகையானது என்று அங்குள்ள விவசாயிகள் மறுக்கின்றனர். “வருடத்தின் ஏப்ரல் மாதத்தில்தான் தொழிற்சாலை இயங்க ஆரம்பிக்கிறது. ஒக்டோபர் மாதம், தொழிற்சாலையின் இயக்கம் முடிவடையும். அந்த வகையில், 7 மாதங்கள் அதாவது 210 நாட்கள்தான் தொழிற்சாலை இயங்குகின்றது.
இதில் 125 நாட்கள்தான் கரும்பு அரைக்கப்படுகிறது. ஏனைய நாட்களில் இயந்திரம் பழுதடையும், சிலவேளை வேலை நிறுத்தங்கள் இடம்பெறும். அப்படிப் பார்த்தால், ஒரு நாளைக்கு 2000 தொன் கரும்பு அரைக்கப்படும். தொழிற்சாலைக்கு 125 நாட்களுக்குமாக 02 இலட்சத்து 50 ஆயிரம் தொன் கரும்புதான் தேவைப்படும். இதற்காக 2,500 ஹெக்டேயரில் கரும்பு உற்பத்தி செய்தாலே போதுமானதாகும்’ என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் 2014ஆம் ஆண்டு, 19 ஆயிரத்து 960 தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டதாக, அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹிங்குரான சீனித் தொழிற்சாலையின் உற்பத்தியில், இது சாதனையாகக் கூறப்படுகிறது.
100 தொன் கரும்பினை அரைத்தால், அதிலிருந்து 08 தொன் சீனியினைப் பெற முடியும் என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இதன்படி, ஹிங்குரான தொழிற்சாலையில் நாளொன்றுக்கு அரைக்கப்படும் 2000 தொன் கரும்பிலிருந்து, 160 தொன் சீனி கிடைக்கும்.
இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியாகக் கிடைத்த 19,960 தொன் சீனியியையும் உற்பத்தி செய்வதற்கு வருடத்தில் சுமார் 125 நாட்கள்தான் செலவிடப்பட்டிருக்க வேண்டும். இந்த 125 நாட்களுக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் தொன் கரும்புதான் அரைப்பதற்குப் தேவையாகும்.
இந்தத் தொகைக் கரும்பினை 2500 ஹெக்டேயரில் உற்பத்தி செய்து விடலாம். ஆனாலும், 2014ஆம் ஆண்டு, 3400 ஹெக்டேயரில் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டதாக, தொழிற்சாலை நிருவாகம் அறிவித்துள்ளது.
இன்னொருபுறம், கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் வருடங்களில், சீனி உற்பத்தி குறைவடைந்து செல்கின்றமையினையும் தொழிற்சாலையின் அறிக்கை மூலம் தெரிந்து கொள்ள முடிவதாக, விவசாய அமைப்பின் தலைவர் மஹ்றூப் கூறுகின்றார்.
“அதாவது, 2014 ஆம் ஆண்டு, 3400 ஹெக்டேயரில் கரும்பு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 19,960 தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 4400 ஹெக்டேயரில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, முந்தைய வருடத்தை விடவும் 1000 ஹெக்டேயரில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யப்பட்டபோதும், அந்த வருடம் 13 ஆயிரம் தொன் சீனிதான் கிடைத்துள்ளன.
2016ஆம் ஆண்டு, 4800 ஹெக்டேயரில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த வருடம் 10 தொன் சீனிதான் கிடைத்திருக்கிறது. ஆக, கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், சீனி உற்பத்தி குறைவடைந்து செல்கின்றமையினை இங்கு காணக் கூடியதாக உள்ளது. தேவையான கரும்பினை விடவும் அதிக கரும்பை உற்பத்தி செய்தமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று மஹ்றூப் புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டினார்.
“எவ்வாறாயினும், ஹிங்குரான சீனித் தொழிற்சாலை நஷ்டத்திலேயே இயங்கி வருவதாக, கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்துக்கு 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது” என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது, உள்நாட்டில் சீனி உற்பத்தி செய்வதை விடவும், வெளிநாட்டிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதுதான் இலாபமானதாகும் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, தேவைக்கு அதிகமான காணிகளில் கரும்பினை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை வற்புறுத்தாமல், தேவையான அளவு காணிகளில் மட்டும் கரும்புகளை பயிரிடுவதற்கும், மிகுதிக் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்குவதற்குமான ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பது, விவசாயிகளின் கோரிக்கையாகும்.
ஒவ்வொரு வருடமும் கரும்புச் செய்கையினை மேற்கொள்ளும் பொறுப்பினை, விவசாயிகளுக்கு சுழற்றி முறையில் வழங்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அல்லது, கரும்புச் செய்கைக்கானவை என்று ஒதுக்கப்பட்ட அனைத்து காணிகளிலும், கரும்புதான் பயிரிட வேண்டுமென, தொழிற்சாலை நிருவாகம் தம்மை வற்புறுத்துமாயின், கரும்புச் செய்கையினால் தமக்கு ஏற்படும் நட்டத்தினை, அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதேவேளை, கரும்புச் செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றீடாக வழங்கப்பட்ட மேற்படி காணிகளை, விவசாயிகளுக்கு உரித்தாக்கும் வகையில், அரசாங்கம் உறுதிகளை வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
‘தான் சாக, மீன் பிடிக்க முடியாது’ என்று, கிராமப் புறத்தில் ஒரு பழமொழியுள்ளது. அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் நிலைப்பாடும் இதுவாகத்தான் உள்ளது.
Average Rating