எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி..!! (கட்டுரை)
பொறுப்புக்கூறல் பொறி முறை என்பது மிகவும்
உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற் றிக்கொள்ளக் கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப் புடனுமே அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும். இந்த விடயம் தீப்பற்றிக்கொண்டால் அரசாங்கத்தின் இருப் புக்கே பாதகத்தை ஏற்ப டுத்தும் என்பதை புரிந் துகொண்டே இந்த விட யத்தை நாங்கள் அணுகவேண்டும்
“தம்பி.. அரசியலமைப்பு வரைபைக்காட்டி பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே முன்னெடுக்கிறாங்கள், போற போக்க பார்க்கும்போது அப்படித்தான் தெரியுது. நாங்கள் என்ன செய்யப்போறம் என்றுதான் தெரியாம இருக்குது”” இவ்வாறு இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறை விவகாரங்களில் அக்கறை செலுத்தும் பெரியவர் ஒருவர் அண்மையில் கூறினார்.
இதேவேளை “”இந்தப் பொறுப்புக்கூறல் விவகாரத்தை வைத்து நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வலுவிழக்கச் செய்வதற்காக அரசியலமைப்பின் ஊடாக நியாயமான தீர்வொன்றை வழங்கும் சாத்தியமுள்ளது. எனவே அதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும்””
இவ்வாறும் பெரியவர் ஒருவர் எம்மிடம் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டார். இந்த இருவரினதும் கூற்றுக்களைப் பார்க்கும்போது ஏன் இவ்வாறானதொரு விடயங்களை இவர்கள் இருவரும் வெளியிட்டனர் என்பது குறித்து சிந்திக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது.
அதாவது அரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்லது இந்தப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுடன் அக்கறையுள்ள தரப்பினர் நம்பிக்கை இழந்துவிட்டனரா? அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றனவா? இவ்வாறு பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன. அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் மக்களை ஏமாற்றிவிடும் என பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனரா? இந்த விடயத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கின்றது? இதுபோன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டுவருகின்றன.
மேலும் தற்போது அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை ஏன் இந்த விடயத்துடன் கொண்டுவந்து முடிச்சுப்போட முயற்சிக்கின்றனர் போன்ற கேள்விகளுக்கும் விடைகாண வேண்டியுள்ளது. தற்போதைய நிலைமையில் அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே இந்தப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்களான அத்திபாரம் இடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்திபாரம் போட்டப்பட்டதைபோன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டாலும் இதுவரை பொறிமுறைக்கான செயற்பாடுகள் முழுமை அடையாமல் இருக்கின்றன. அதாவது எங்கே பொறுப்புக்கூறல் விடயமானது வெறும் பேச்சளவில் மட்டும் இருந்துவிடுமா? அல்லது உண்மையிலேயே செயலுருவாக்கம் பெறுமா? என்பன குறித்தும் தீவிரமாக ஆராயப்படவேண்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் பொறிமுறை என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் அனைத்து தரப்பினரும் அணுகவேண்டும். இந்த விடயம் தீப்பற்றிக்கொண்டால் அரசாங்கத்தின் இருப்புக்கே பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டே இந்த விடயத்தை நாங்கள் அணுகவேண்டும்.
அரசாங்கத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு வருடகாலத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. பல்வேறு வழிகளில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலும், ஏனைய விடயத்திலும் முன்னேற்றத்தை காட்டியே வந்திருக்கின்றது.
இதனை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது தென்னிலங்கையில் நடைபெறும் சில நிகழ்வுகளையும் அதனையொட்டிய கடும்போக்குவாத சக்திகளின் எதிரொலியையும் பார்க்கும்போது எங்கே பொறுப்புக்கூறல் செயற்பாடு என்பது சாத்தியமானதா? என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கின்றனர்.
பொறுப்புக்கூறல் விசாரணை என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போதே கடும்போக்கு வாதிகள் அதனை மிகப்பெரியதொரு குற்றமாகக் கருதி விமர்சனம் செய்ய முயற்சிக்கின்றனர். இது பொறுப்புக்கூறல் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
குறிப்பாக பாதுகாப்பு தரப்பினரை விசாரிப்பதற்கு முயற்சித்தாலே அது ஒரு பாரிய பின்விளைவை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் அரசாங்கத்திடம் இருப்பதாக தெரிகின்றது. இந்த நிலையில் அரசாங்கமானது தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி இந்த பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வலுவிழக்க செய்துவிடுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
முதலில் புதிய அசியலமைப்பு விவகாரத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். அதாவது புதிய அரசியலமைப்பு விவகாரத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கம் உண்மையிலேயே பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிகின்றது. இதனை சில இடங்களில் தமிழர் தரப்பும் சுட்டிக்காட்டியுள்ளது. விசேடமாக அரசியலமைப்பு நிர்ணயசபை உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பிரதான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதான வழிநடத்தல் குழுவானது மேலும் ஆறு உபகுழுக்களை நியமித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்துவருகின்றது.
அதன்படி குறித்த ஆறு உப குழுக்களும் தமது அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளன. அதனைத்தவிர பிரதான வழிநடத்தல் குழுவானது மூன்று முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து இன்னும் சில தினங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு, மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றி அமைத்தல் போன்ற மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பிரதான வழிநடத்தல் குழு ஆராய்ந்து வருகின்றது.
இதில் தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பிரதான வழிநடத்தல் குழு ஆராய்கிறது. இந்த 21 பேர் கொண்ட குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் பிரதான வழிநடத்தல் குழுவானது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்கின்றது.
குறிப்பாக முழுமையான அதிகாரப்பகிர்வு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குதல், சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி என்ற பதங்கள் தவிர்த்து புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துதல் போன்ற விடயங்கள் பிரதான வழிநடத்தல் குழுவில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கையான வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரதான வழிநடத்தல் குழுவில் மாறுபட்ட விடயங்கள் முன்வைக்கப்படுவதாக தெரிகிறது.
விசேடமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்காமல் இரண்டு மாகாணங்களினதும் சுகாதாரம் மற்றும் கல்வி விடயங்களை இணைப்பது தொடர்பில் பிரதான வழிநடத்தல் குழுவில் ஆராயப்பட்டு வருவதாக தெரிகிறது. இதில் இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.
ஆனால் இம்முறை புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதே தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் தீர்க்கமான விடயமாகும். அந்த வகையில் விரைவில் இது தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டு பிரதான அரசியலமைப்பு வரைபு மார்ச் மாதம் அளவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்பை உருவாக்கும் விவகாரத்தில் இதுவே தற்போதைய நிலைமையாகும். மறுபுறம் பொறுப்புக்கூறல் பொறிமுறை நிலைமை எவ்வாறு இருக்கின்றது என ஆராய வேண்டியுள்ளது. பொறுப்புக்கூறல் பொறிமுறையைப் பொறுத்தவரையில் அரசாங்கமானது உள்ளக விசாரணையொன்றை முன்னெடுப்பதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமைவாக இந்த உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் நான்கு காரணிகளின் அடிப்படையில் உள்ளகப் பொறிமுறையை முன்னெடுப்பதாக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி அளித்துள்ளது.
அதன்படி அரசாங்கம் ஏற்கனவே காணாமல் போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகத்திற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை ஸ்தாபிப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதேநேரம் விரைவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவையும் ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
அத்துடன் மீள்நிகழாமை மற்றும் நஷ்டஈடு வழங்கும் செயற்பாடு போன்றவற்றையும் முன்னெடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்நிலையில் இறுதி பொறுப்புக்கூறல் பொறிமுறை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு அணியை நிறுவி நாட்டு மக்கள் மத்தியில் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி வந்தது. அதன்படி அதன் அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரியாகும்போது பொறுப்புக்கூறல் பொறிமுறை வரைபை தயார் செய்து ஜெனிவாவிற்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமாகும்.
இவ்வாறான பின்னணியில் இந்த அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை ஆகிய இரண்டு விடயங்களுக்கும் முடிச்சுப்போடும் போக்கே தற்போது காணப்படுகின்றது. அதாவது இந்த அரசியலமைப்பு உருவாக்கப் செயற்பாட்டை முன்னிலைப்படுத்தி பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கப்படுமா? என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டும். அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் எந்தளவு முக்கியமானதோ, அதே அளவு பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதும் மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக யுத்தகாலத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகாலமாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் தமது உறவுகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
கடத்தப்பட்ட தமது உறவுகள் அல்லது காணாமல் போன தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்பது கூடத் தெரியாமல் அந்த மக்கள் தவிப்புடனும் திண்டாட்டத்துடனும் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வாழ்வாதார விடயத்தில் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே பொறுப்புக்கூறல் பொறிமுறை கொண்டுவரப்பட்டு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றுவதும் அவசியமாகும். இது தொடர்பில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக சிந்திக்கவேண்டும்.
அரசியலமைப்பின் ஊடாக அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்து அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவது அவசியம். அதனூடாக எதிர்காலத்தில் இந்த நாட்டில் எந்தவிதமான அரசியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றமையானது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் அதேநேரம் பொறுப்புக்கூறல் விடயத்திலும் அக்கறை செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்றிவிடக்கூடாது.
அரசாங்கம் இந்த விடயத்தில் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு கடும்போக்குவாத இனவாதிகளை தாண்டி தீர்வு காண்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் அதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காமல் இருந்து விட முடியாது. அதுமட்டுமன்றி இந்த விடயத்தை தாமதப்படுத்தி காலத்தை இழுத்தடிக்கவும் எந்தவொரு தரப்பும் முயற்சிக்கக்கூடாது.
தமிழ் தரப்பு தலைமைகள் இந்த விடயத்தில் சாமர்த்தியமாகவும், அதேநரம் அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் செயற்படவேண்டும். இல்லாவிடின் இதுவரை காலமும் அரசியல் தீர்வு என்பது எந்தளவு தூரம் எட்டாக்கனியாக இருந்ததோ அதேபோன்று பொறுப்புக்கூறும் செயற்பாடும் எட்டாக்கனியாக மாறிவிடும் என்பதே திண்ணம்.
Average Rating