விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்

Read Time:4 Minute, 11 Second

SLK.Army.2.jpgஇலங்கையின் வடக்கே முகமாலை பகுதியில் இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல் ஒன்றில் 6 படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் இராணுவ ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்களையடுத்து முகமாலை பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகவும் அப்பகுதியில் வீதிச்சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருப்பதாகவும் இராணுவ ஊடகத் தகவல் மையம் அறிவித்துள்ளது.

இதனிடையில் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினரைச் சந்தித்து உரையாடிய போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விலகிச் செல்லும் தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன் விடுத்த வேண்டுகோளையடுத்து விடுதலைப் புலிகள் தமது பாதுகாப்பில் வைத்திருந்த இலங்கை அரசின் பொலிஸ் அதிகாரியான போபிட்டிகொட என்பவரை இன்று விடுதலை செய்துள்ளனர்.

போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளையேற்ற தமது தலைமைப்பீடம் மனிதாபிமான அடிப்படையில் அந்த பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனால் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் இன்று காலை கையளிக்கப்பட்ட இந்த பொலிஸ் அதிகாரியை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் வவுனியாவுக்கு அழைத்து வந்து அங்குள்ள பொலிஸ் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உடனடியாகவே அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை சுமார் இரண்டு வார காலத்தின் பின்னர் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திற்கும் 45 ட்ரக் வண்டிகளில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிவில் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் குடாநாட்டில் முகாமாலை பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட மோதல்களையடுத்து, ஏ9 வீதி முழுமையாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பொதுப்போக்குவரத்து மற்றும் அப்பகுதிக்கான விநியோகச் செயற்பாடுகளும் தடைபட்டிருந்தன. இந்த நிலையில் அப்பகுதிக்கு அனுப்பப்படுவதற்காக வவுனியாவில் தேங்கியிருந்த அத்தியாவசிய பொருட்களில் ஒரு தொகுதியே இன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பில் விமான நிலையத்தை தகர்க்க சதி: பெண்கள் உள்பட 16 பேர் கைது
Next post அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் `ஹாட்ரிக்’ பட்டம் பெறுவாரா?