‘வலி’யை விரட்ட எளிய வழி..!!
“முதுகுவலி, மூட்டுவலி என்று உடம்பில் தோன்றும் எந்த வலியையும் மருந்து, மாத்திரை, தைலம் ஏதுமின்றி, எளிய பயிற்சியின் மூலமே போக்கிவிடலாம்’’ என்கிறார், உடல் தோற்ற ஒழுங்கமைப்புச் சிகிச்சை (Posture Alignment Therapy) நிபுணரான டாக்டர் பரத் சங்கர். பா.ஜ.க. தலைவர் அத்வானி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றோருக்குச் சிகிச்சை அளித்தவர் இவர்.
புதிய சிகிச்சை முறையில் எவ்வாறு வலியைப் போக்கலாம் என்பது குறித்த பரத் சங்கரின் விளக்கக் கட்டுரை…
‘‘உடம்பில் ஓர் இடத்தில் ஏற்படும் வலி என்பது உடம்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து வெளிப்படுத்தும் எச்சரிக்கை ஆகும். வலி ஏற்பட்ட இடத்தில்தான் பிரச்சினை இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதற்கான பிரச்சினை வேறொரு இடத்தில் இருக்கலாம். அதைக் கண்டறிந்து களைந்துவிட்டால் வலி மறைந்துவிடும்.
தற்போது அலுவலகங்களில் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான தோற்றத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வீடுகளிலும் கூட பெண்கள் சோபாவில் அசையாமல் அமர்ந்து டி.வி. பார்க்கின்றனர்.
இப்படி நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை, வலிமை, செயல்திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. அது குறித்து எச்சரிக்கும் விதமாகத்தான் வலி பிறக்கிறது. அப்போது, அந்த வலிக்கான வேரைத் தேடி அதை அகற்றாமல், மருந்து, மாத்திரைகளில் நிவாரணம் தேட முயல்கிறோம். அது தற்காலிக ஆசுவாசம் தருமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது.
வலியின் மூலாதாரத்தை அறிந்து பயிற்சிகளின் மூலம் சரிசெய்வதே சரியான முறையாக அமையும். அதற்கான பயிற்சிகளை அளிப்பதுதான் புதிய சிகிச்சை முறை.
உட்கார்ந்தே இருப்பவர்கள், அமர்ந்தே வேலை செய்பவர்களை நாடி, உடல் பருமன், இதயநோய், முதுகுவலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு அதிகரிப்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பு என்று 14 வகையான பக்கவிளைவுகள் வந்துவிடும். அப்போது ஏற்படும் வலி ஓர் எச்சரிக்கை அலாரம். அதை உணர்ந்து சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், வலியை நிரந்தரமாகப் போக்க முடியாது.
நம் உடலின் அடித்தளமாக இருப்பது இடுப்பு எலும்பு. அது நிலையாக இருப்பது மிகவும் அவசியம். இடுப்பு வரிசை ஒழுங்கின்றிப் போகும்போது தசைநார் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இடுப்பு எலும்பின் நடுநிலையைச் சீர்செய்யும்போது பல வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஒருவருக்குக் கழுத்தில் வலி என்றால், அதற்கு கழுத்தில்தான் பிரச்சினை இருக்கும் என்று கூற முடியாது. இடுப்பு, கால் மூட்டுப் பகுதியில் பிரச்சினை என்றால் கூட கழுத்தில் வலி ஏற்படலாம். எனவே அதைக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் கழுத்துவலிக்கு விடைகொடுக்கலாம்.
நம் உடல் எடையைத் தாங்க ஏற்ற வகையில்தான் கால் எலும்பு மூட்டுகள் உள்ளன. ஒரு நேரத்தில் இரண்டு மூட்டுகளிலும் சமமான அளவு எடை விழ வேண்டும். ஆனால் நம்முடைய தவறான பழக்கவழக்கங்களால் ஒரு காலில் அதிக எடையும், மற்றொரு காலில் குறைவான எடையும் விழுகிறது.
அதன் பாதிப்பு, இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து வரை நீடிக்கிறது. நம் உடல் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது 5.44 கிலோ எடை முதுகெலும்பில் இறங்குகிறது. அதுவே தலை முன்னோக்கி நகர நகர, எடையானது 15 முதல் 20 கிலோ வரை அதிகரிக்கிறது.
இதனால்தான், கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் கழுத்தில் வலி ஏற்படுகிறது. எனவே உடல் தோற்ற நிலையைச் சரிசெய்வதன் மூலம் கழுத்து வலியைப் போக்க முடியும். அதை நோக்கமாகக் கொண்டு பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
முதலில், வலி பாதிப்பு உள்ளவர்களை நேராக நிற்கவைத்து ஒரு புகைப்படம் எடுக்கப்படும். பிறகு ஒரு சிறப்பு மென்பொருள் மூலம், மூட்டுகள் மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதா, எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பது கண்டறியப்படும். பிறகு, அவற்றைச் சரிசெய்ய சிறப்பு உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். ஒருவரின் உடல் அமைப்பு, நேர்கோட்டில் இருந்து விலகியிருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அந்தப் பயிற்சிகள் அமையும்.
இந்தப் பயிற்சிகளின் மூலம், உடலானது நேர்கோட்டுக்குக் கொண்டு வரப்படும். இதனால் ஒரு சில நிமிடங்களில் வலி குறைந்துவிடும் என்றபோதும், பாதிப்புகள் சரியாவதற்குச் சில நாட்கள் ஆகும். ஆனால் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் பாதிப்புகளில் இருந்தும், அதனால் ஏற்படும் வலியில் இருந்தும் முழுமையாக விடுபடலாம்.
நம் உடல் நேர்கோட்டில் இல்லாதபோது உடல் பாகங்களில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறது. பிரத்தியேக பயிற்சியின் மூலம் உறுப்புகளை அதனதன் சரியான இடத்தில் இருக்கச் செய்வதன் மூலம் அவற்றின் செயல்பாட்டை சீரடையச் செய்யலாம். நீடித்த, நிலைத்த நிவாரணத்துக்கு இந்தப் பயிற்சிகள் சரியான முறையாக இருக்கும். இதே துறையில் நிபுணரான எனது மனைவி பிரீத்தியும் இப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.”
Average Rating