மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும்..!! (கட்டுரை)
மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில மாகாணங்களில் இருப்பதைப் போன்று, அதிகபட்சமாக இரண்டு நாள் விடுப்பை வழங்குவதற்கு ஆராய முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் அதிகபட்சமாக ஒருநாள் விடுப்பை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான திணைக்களம், ஜனாதிபதிக்கு முன்னகர்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இதற்கான முடிவு, மே 1ஆம் திகதி அறிவிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்போதும், சீனாவின் சில மாகாணங்களே உதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. பெண்களின் மாதவிடாய்க் காலத்தில், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குதலென்பது, சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்டதோ அல்லது அண்மைக்காலத் திட்டமோ கிடையாது. ஜப்பானில், 1947ஆம் ஆண்டு முதல் இவ்வாறான நாடுதழுவிய திட்டமொன்று அமுலில் காணப்பட்டுள்ளது. தாய்வான், தென்கொரியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும், இவ்வாறான திட்டங்கள் காணப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும், சில நிறுவனங்களால், இவ்வாறான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்களின் மாதவிடாய்க் காலத்தில், தாங்கொண்ணா வலி ஏற்படும் நிலையில், அதன்போது அவர்களுக்கான விடுப்பை வழங்குதலே, இதன் நோக்கமாகும். எனவேதான், வழக்கமாகக் காணப்படும் விடுப்புகளுக்கு மேலதிகமாக இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், மிகச்சிறந்த திட்டமாக ஒரு தரப்பினராலும் இது அனுகூலமற்ற விளைவுகளையே கொண்டுவருமென மறுதரப்பினராலும், விவாதிக்கப்பட்டு வருகின்ற ஒரு திட்டமேயாகும். ஆகவே, இவ்வாறான விவாதங்கள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது, அதுகுறித்த யோசனைகளை இலங்கை ஆரம்பித்திருப்பது, ஆரோக்கியமான செயற்பாடாகும்.
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலிகள், இலகுவாக விளங்கப்படுத்தப்பட முடியாதன. ஆனால், இரத்தம் வெளியேறுவதால் ஏற்படக்கூடிய அசௌகரியத்துக்கு மேலதிகமாக, வயிற்றுப் பகுதியில் கடுமையான வலியும் தசைப்பிடிப்பும் ஏற்படுவது வழக்கமானது. இந்த வலியும் தசைப்பிடிப்பின் வலியும், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த, இனப்பெருக்கச் சுகாதாரத்துக்கான பேராசிரியரான ஜோன் கில்பௌட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, மாரடைப்பு ஏற்படும் வலியளவுக்கு இருக்கிறது என வெளிப்படுத்தியிருந்தார். மாரடைப்புக்கான ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதற்குச் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
மாறாக, மாரடைப்புக்கு நிகரான வலியைக் கொண்ட மாதவிடாய்க் கால தசைப்பிடிப்புக்குக் காணப்படும் வழி? ஐபுரூபன், பரசிற்றமோல் அல்லது பொன்டக் போன்ற மருந்துகள் தான். இவற்றால், சாதாரண அளவிலான வலியையே குணப்படுத்த முடியும். ஒரு பெண்ணுக்கு மிக அதிகளவிலான வலி ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்? இவ்வாறானதொரு நிலைமைக்கு, மாதவிடாய் தொடர்பான ஆராய்ச்சிகள், பெருமளவில் இடம்பெறாமையே காரணமாகும். இதற்கான காரணம், ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில்லை என்பதாகும்.
ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்படுவதாக இருந்தால், மாதவிடாய்க் கால வலிகள் தொடர்பாக, பாரியளவு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுத் தீர்வுகள் கிடைத்திருக்கும். ஆனால், உலகில் காணப்படும் ஆராய்ச்சியாளர்களில், வெறுமனே 30 சதவீதமானோர் மாத்திரமே பெண்களாக இருக்கின்றனர். அவர்களிலும், முடிவெடுக்கும் உயர் நிலைகளில் காணப்படும், இன்னமும் குறைந்த சதவீதத்திலேயே காணப்படுகின்றனர் என, யுனெஸ்கோ தெரிவிக்கிறது.
ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் துறையொன்று, பெண்களின் பிரச்சினைகளை ஆராயாமல் விடுவதில் என்ன வியப்பு? இந்தப் பின்னணியில் தான், பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பை ஆராய வேண்டியிருக்கிறது. மாரடைப்புக்கு நிகரான வலியை ஏற்படுத்தும் ஒன்று, மாதாமாதம் பெண்களுக்கு ஏற்படுகிறது. அதற்காக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதில், எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லைத் தான். ஆனால், அவ்வளவு எளிதாக முடித்துவிடக்கூடிய பிரச்சினை, இது கிடையாது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்றால், எதற்காகப் பெண்களுக்கு மாத்திரம் விசேட விடுப்பு என்று கேட்கும் ஆண்கள் உள்ளனர். பெண்கள் (அல்லது ஆண்கள்) இல்லாவிட்டால், மனித இனம் அழிந்துவிடும்.
அப்படியான பெண்களுக்கு (அல்லது ஆண்களுக்கு), விசேடமான மருத்துவத் தேவை காணப்பட்டாலும், அதுவும் மாதந்தோறும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய தேவை இருந்தால், அதற்காக விசேட மாற்றங்களை ஏற்படுத்துவதில் தவறு கிடையாது என்பதை, இவ்வாறான “சமவுரிமை இப்போது எங்கே?” என்று கேட்பவர்களிடம் விளங்கவைக்க முடியாது.
ஆனால் மறுபக்கமாக, இவ்வாறான விடுப்பொன்று, பெண்களுக்கு எவ்வளவு தூரம் நேரடியாக நன்மை பயக்கும் என்பது முக்கியமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இலங்கை உட்பட உலகம் முழுவதிலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாடென்பது காணப்படுகிறது. ஆண்களை விடப் பெண்கள் குறைந்தவர்கள் அல்லது கீழானவர்கள் என்ற எண்ணமே இதில் பிரதான காரணமாக இருந்தாலும், பெண்களின் கர்ப்பகாலத்தையும் உதாரணமாகக் காட்டுவர்.
இவ்வாறான நிலையில், மாதத்தில் இரண்டு நாட்கள் மேலதிமாக விடுப்பு வழங்கப்படுமாயின், ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் முடிவு எடுக்கப்படும் மட்டத்தில், பெண்களுக்கான சம அளவிலான ஊதியத்தைப் பெற்றுக் கொடுத்தலென்பது, கடினமாக மாறிப் போகக்கூடும். ஒக்ஸ்பாம் நிறுவனத்தால் கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள பெண் தொழிலாளர்கள்/பணியாளர்கள், ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்வதற்காக, ஆண்கள் பெறும் ஊதியத்தில் 82.1 சதவீதமானதையே ஊதியமாகப் பெறுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பெண்களுக்கு மேலதிமாக இரண்டு நாட்களை விடுமுறையாக வழங்குங்கள் என்ற இந்த நிறுவனங்களிடம் தெரிவித்தால், அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்துவார்களா, அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், பெண்களுக்கான முழுமையான/பொருத்தமான ஊதியத்தை வழங்குவார்களா என்பது கேள்விக்குறியே.
அடுத்ததாக, தென்கொரியா போன்ற நாடுகளில், இந்த மாதவிடாய்க் கால விடுப்பு நடைமுறையில் இருந்தாலும், குறிப்பிட்ட பிரிவினர், அந்த விடுப்பைப் பயன்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் தொடர்பில், இன்னமும் காணப்படும் ஒருவகையான மறை எண்ணத்தால், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சமே, அந்த விடுப்பை அவர்கள் பயன்படுத்தாமைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலும் கூட, மாதவிடாய் என்பது உரையாடப்படக்கூடாத அல்லது ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு கருப்பொருளாகவே காணப்படுகிறது. அதுபற்றிய வெளிப்படையான கலந்துரையாடல்கள், இன்னமும் மேற்கொள்ளப்படுவதில்லை.
கோவில்கள் உள்ளிட்ட சில இடங்களில், மாதவிடாய்க் காலத்தில் உள்ள பெண், அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான ஒரு சமூகச் சூழலில் தான், “எனக்கு மாதவிடாய். அதற்கான விடுப்பை நான் எடுக்கப் போகிறேன்” என, பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் உயர் பதவியிலுள்ளவர்களிடம் பெண்கள் போய்ச் சொல்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. அடுத்ததாக, பெண்கள் பற்றி ஆண்கள் கொண்டிருக்கும் “நம்பிக்கைகளில்”, மாதவிடாய்க் காலத்தில் பெண்ணென்பவள், சிடுமூஞ்சியாக இருப்பாள் என்பதுவும் ஒன்று.
மாதவிடாயின் வலியென்பது சாதாரணமானது கிடையாது என்ற போதிலும், எல்லாப் பெண்களும் மாதவிடாய்க் காலத்தில், தேவையற்றுக் கோபப்படுவது கிடையாது. அதுவும், கோபப்படக்கூடாத அல்லது கோபப்படத் தேவையில்லா விடயங்களுக்காக அவர்கள் கோபப்படுவது அரிதானது. ஆனாலும், பெண்ணொருத்தி ஏதாவது விடயத்தில் கோபப்பட்டு விட்டால், குறிப்பாக உயரதிகாரி நிலையில் இருக்கும் ஒருவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், “இதென்னது, இண்டைக்கு இது எரிஞ்சு விழுந்து கொண்டிருக்குது. பீரியட் (மாதவிடாய்க் காலம்) போல” என்பது, ஆண்களிடத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு “நகைச்சுவை”.
இவ்வாறான “நகைச்சுவைகள்” காணப்படுகின்ற சூழலில், பெண்ணால் மாதவிடாய்க் காலத்தில் பணிபுரிவது கடினம் என்று கூடுவது, பெண்கள் தொடர்பாகச் சமூகம் கொண்டிருக்கும் பொதுமைப்படுத்தல்களை மெய்ப்பிப்பதாக அமையுமென்ற அச்சமும் காணப்படுகிறது. அடுத்ததாக, மாதவிடாய் வட்டமானது, 21 தொடக்கம் 35 நாட்களாகக் காணப்படுகிறது. பதின்ம வயதுடைய பெண்களில், அந்த வட்டம் 45 நாட்கள் வரை செல்கின்றது. ஆகவே, சிலருக்கு மாதத்தில் இரண்டு தடவைகள் மாதவிடாய் ஏற்படக்கூடும். சிலருக்கு, 3 மாதங்களுக்கு 2 மாதவிடாய்கள் மாத்திரம் ஏற்படும். இவ்வாறான நிலைமைகளில், மாதத்துக்கு 2 விடுப்புகள் என்பது, பொருத்தமானதா அல்லது வேறு வகையிலான நடைமுறையைக் கொண்டுவர வேண்டுமா என்பது பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது.
ஆகவே, மாதவிடாய்க்கால விடுப்பைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கும் அதிகாரிகள், இவை அனைத்தையும் ஆராய்ந்து, முடிவொன்றை எடுப்பார்கள் என்று நம்புவோமாக. ஆனால் அதற்கு முன்பாக, பெண்களிடத்திலிருந்து இது தொடர்பில் அதிகமான பங்களிப்புகள் அவசியமானது. இந்தப் பத்தியை, ஆண் பத்தியாளர் எழுதுவதை விட, பெண் பத்தியாளர் எழுதியிருந்தால், இது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கக்கூடும்.
ஆகவே, சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரிக்கப்பட வேண்டும். முன்னேற்றகரமான கொள்கைகளைக் கொண்ட ஆண்களும், இவற்றில் கலந்துகொள்ள வேண்டும். சமூகம் தவறாக நினைக்கும் என்பதற்காக, இந்த விடுப்புத் திட்டத்தைத் கைவிடத் தேவையில்லை. ஆனால், சமூகத்தில் பெண்களுக்கான பிரதிகூலமான மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கேற்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இவ்வாறான திட்டமொன்றைக் கொண்டுவருதல், உசிதமாக அமையும்.
Average Rating