நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசியலமைப்பு மாற்றம்..!! (கட்டுரை)
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக நாடு தழுவிய ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கும் அப்பால் மீண்டும் ஒருமுறை மக்களுடன் அரசியல் சாசனம் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக கண்டியில் உயர் மட்ட பௌத்த மதகுருமார்களுடனான சந்திப்பின் போது அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
2016ல் புதிய அரசியலமைப்பு சாசனம் தயாரிக்கப்பட்டுவிடும் என சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும், இன்னமும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் இது மிகவிரைவில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியமும் குறைவாகவே காணப்படுகிறது.
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடாதிபதிகளுடன் கடந்த ஞாயிறன்று அதிபர் சிறிசேன கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். புதிய அரசியல் சீர்திருத்தத்தில் பிரிவினையை ஊக்குவிக்கும் கூறுகளை உட்சேர்க்கவில்லை என அதிபர் சிறிசேன, மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஆகவே சிறிசேனவின் இந்தக் கருத்தானது, புதிய அரசியல் சீர்திருத்தமானது ஒற்றையாட்சியை மையப்படுத்தியதாகவே அன்றி சமஸ்டி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக வரையப்பட மாட்டாது என்பதையே குறித்து நிற்கின்றது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் ஒன்றிணைந்து ஒன்றிணைக்கப்பட்ட தமிழ் பேசும் மாகாணம் ஒன்றை உருவாக்குவதற்கு இப்புதிய அரசியல் சீர்திருத்தம் இடமளிக்காது. மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியல் யாப்பு வரையப்படாது எனவும் அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மீண்டும் மக்களுடன் ஆலோசிக்கவுள்ளதாகவும் சிறிசேன, உயர் பௌத்த பீடாதிபதிகளிடம் உறுதி வழங்கியுள்ளார்.
மக்கள் பரிந்துரைகள் குழுவால் நாடு முழுவதிலும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் தற்போது மீண்டும் ஒரு தடவை இது தொடர்பாக மக்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக அதிபர் சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளமையானது மக்கள் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையையும் அதிபர் கைவிட்டு புதியதொரு நடவடிக்கையைக் கையாளவுள்ளார் என்பதையே குறித்து நிற்கின்றது.
மக்கள் பிரதிநிதிகள் குழுவானது சிறிலங்காவில் வரையப்படவுள்ள புதிய அரசியல் சாசனமானது ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது சமஸ்டி நிர்வாக ஆட்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமா எனக் கூறாவிட்டாலும் கூட, இது சில அடிப்படைவாத யோசனைகளையும் முன்வைத்திருந்தது.
குறிப்பாக மாகாண ஆளுநர்கள் தற்போது கொண்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக இவர்கள் மாகாண முதலமைச்சர்களின் இறப்பர் முத்திரைகளாக மாற்றப்பட வேண்டும் எனவும் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் மாகாணங்களுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் மக்கள் பிரதிநிதிகள் குழு யோசனை முன்வைத்தது.
இக்குழுவால் முன்வைக்கப்பட்ட இவ்வாறான சில பரிந்துரைகள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. அதாவது இவ்வாறான பரிந்துரைகள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் என இவர்கள் கருதுகின்றனர்.
மறைமுகமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவால் தலைமை தாங்கப்படும் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் சிறிலங்கா பொதுசன முன்னணி ஆகிய இரண்டும் புதிய அரசியல் சாசன வரைபை எதிர்த்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றமானது புதிய அரசியல் சீர்திருத்தத்தை வரைய ஆரம்பித்த போது அதனை எதிர்த்து கூட்டு எதிர்க்கட்சியும் சிறிலங்கா பொது ஜன முன்னணியும் இணைந்து வெற்றிகரமாகப் பரப்புரைகளை மேற்கொண்டன.
‘இந்த நாட்டைப் பொறுத்தளவில் தற்போது முற்றுமுழுதாக புதியதொரு அரசியல் சீர்திருத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால் நாடாளுமன்றில் இரண்டாவது சபை ஒன்றையும் தேர்தல் சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது’ என அண்மையில் ராஜபக்ச வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
Average Rating