‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? (கட்டுரை)
புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி.
அரசாங்கத்தைக் கூட்டமைப்பு நம்பியுள்ளதைப் போல, கூட்டமைப்பினை நிபந்தனை ஏதுமின்றி நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உள்ளுக்குள் பயங்கரமான வெறுமை. இப்படியாக 2017 ஆம் ஆண்டு சஞ்சலம் மிக்க காலப்பகுதியாக விடிந்திருக்கிறது. அப்படியானால், தமிழர் தரப்பின் – அதாவது ஒட்டுமொத்தத் தமிழர்களின் – ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த வருட நகர்வு என்ன? தாம், இவ்வளவு காலமும் முன்னெடுத்து வந்த பல்வேறு அரசியல் முயற்சிகளுக்கும் 2017 இல் உரிய வெற்றி காத்திருக்கிறது என்ற சாரப்படக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் விடுத்துள்ள புதுவருட ஆசிச்செய்தி கூறுகிறது. அதனடிப்படையிலும் தென்னிலங்கை அரசியலையும் வைத்து ஒப்புநோக்கும்போது, ஏதோ ஒரு தீர்வு தமிழர் தரப்பின் மீது கொண்டுவரப்படப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது.
அதேபோல அந்தத் தீர்வானது நிச்சயம் தமிழர்கள் எதிர்பார்த்த அரசியல் அபிலாஷைகளுக்கு விடையாக வரப்போவதில்லை என்பதும் நிச்சயம் தெரிகிறது. கடந்த வருட இறுதியில், தென்னிலங்கை அரசியல் தரப்புகள் அடிக்கடி பேசிய விடயங்களை வைத்துப் பார்க்கும்போது, எதுவுமே தமிழர் தரப்புக்குச் சாதகமாக நடைபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு முதல், பௌத்த மேலதிக்கம் பெற்ற அரசமைப்பு என்பதுவரை, இடையில் ஊசலாடும் அனைத்தும் ஒப்புக்கு ஏதோ ஒரு வெற்றுத் தீர்வொன்றைத் தமிழர் தரப்பின் தலையில் கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது போலவும் அதற்குக்கூட, சிங்களக் கடும்போக்காளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும்தான், தென்னிலங்கையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க விளையும் ஜனாதிபதி முதல் அரசாங்கத் தரப்பின் முக்கியமானவர்கள் அனைவரும், சிங்களக் கடும்போக்காளர்களைச் சமாளிக்கும் விதமாக “அப்படியொன்றும் தமிழர்களுக்கு நாம் வழங்கிவிடப் போவதில்லை” என்ற சாரப்பட அறிக்கை விடுகிறார்கள். நாடாளுமன்றத்திலேயே கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் பண்ணாத குறையாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்போ, இவற்றுக்கு எதிர்ப்பேதும் காட்டாமல் நீண்ட மௌனத்தை மாத்திரம் கடைப்பிடித்து வருகிறது. மைத்திரி அரசாங்கம் சிங்களக் கடும்போக்காளர்களுக்கு வழங்கிவரும் வாக்குறுதிகளைவிட, தமக்கு தந்த வாக்குறுதிகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயங்கரமாக நம்புகிறது.
மைத்திரி அரசாங்கம் தம்மைக் கடைசிவரை கைவிடாது என்று ஒன்றுக்கு நூறுதரம் சம்பந்தரும் சுமந்திரனும் வாய்பாடு போல கூறுகிறார்கள். தாங்கள் நம்புவதைப்போலவே, மக்களும் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கிறார்கள். எல்லா எதிர்ப்புக்களையும் சமாளித்துக்கொண்டு, விண்ணில் சீறிப்பாயும் மைத்திரி அரசாங்கம், ஏதோவொரு நன்நாளில், சுப நேரத்தில், ‘தமிழீழம் தவிர்த்து அனைத்து அபிலாஷைகளுக்கும் விடைகள் அடக்கிய தீர்வொன்றை நிச்சயம் தரும்’ என்று அபார நம்பிக்கையை இன்றுவரை பேணி வருகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு, 2017 ஆம் ஆண்டு வழங்கப்போகும் பதில் என்ன என்பதுதான் தமிழர்களது எதிர்பார்ப்பு.
2009 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கிளிநொச்சி நகரம் படையினரின் கைகளில் வீழ்ந்த பின்னரும், விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்தாக்குதல் ஒன்று பெருவெற்றியை ஈட்டித்தரப்போவதாகத் தமிழர் தரப்பு, எப்படி நம்பிக்கை கொண்டிருந்ததோ, அதேபோல சரியாக, எட்டு வருடங்களுக்குப் பின்னர், அரசியல் ரீதியாகப் பெரும் நம்பிக்கையொன்றுடன் தமிழர் தரப்பு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிறது. சிறிலங்காவின் அரசியல், தற்போது எட்டியிருக்கும் வித்தியாசமான களம், எப்படியான ஒரு பாதையில், தமிழர் தரப்பை 2017 இல் வழிநடத்தப்போகிறது என்று பார்த்தால், அது உள்ளுர் நம்பிக்கைகளையும் அரசியல் தரப்புக்களின் சத்தியங்களின் மீதும் அல்ல. அது முற்றுமுழுதாக வெளிச்சக்திகளில் இறுக்கமான பிடிக்குள் வழமாக வந்துவிட்டது என்பதுதான் யதார்த்தம். சுருக்கமாகச் சொல்லப்போனால், இனி மைத்திரியே தமிழீழம் தருவதாக அறிவித்தால்கூட, அதனை நடைமுறையில் தமிழர் தரப்பு பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் சிறிலங்காவின் அரசியல் சிறிலங்காவுக்குள் இல்லை.
போர்முடிவடைந்த இந்த எட்டுவருட காலப் பயணம் அவ்வாறான ஒரு தளத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது. ஒரு காலத்தில், மைத்திரி அரசாங்கம் தமது நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால் அரசைக் கவிழ்ப்போம் என்று மிரட்டி அடியபணிய வைக்கும் பலத்துடனிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று அதே அறிவிப்பை வெளியிடக்கூடிய நிலையில் இருந்தாலும், அந்த அறிவிப்பு கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாக மட்டுமே பார்க்கக்கூடிய வகையில், தென்னிலங்கை அரசியலானது புதிய வடிவத்துக்குள் வனைந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தரப்பு என்ன காரணத்துக்காக அரசை விட்டு வெளியேறுவது என்று அறிவித்தாலும்கூட, அந்தக் காரணத்துக்காக அரசைக் காப்பாற்றி, அதன் வழியாகத் தன்னை அரசாங்கத்துக்குள் நுழைத்துக்கொள்ளக்கூடிய சக்தியாக மஹிந்த பரிவாரத்தையும் இந்த நல்லாட்சி காலம் வளர்த்தெடுத்திருக்கிறது. எல்லாச் சிங்கள அரசுகளும் புலிகளுடன் யுத்தம் செய்தார்கள். ஆனால், தன்னுடைய அரசாங்கம்தான், புலிகளை அழித்தொழித்தது என்றும் சிறிலங்காவில் இதுவரை காலமும் ஆண்ட, சகல ஜனாதிபதிகளிலும் பார்க்கத் தானே ஆளுமை மிக்க தலைவர் என்பதையும் மஹிந்த இன்னமும் நம்புகிறார்.
அந்த இறுமாப்புடன், தோற்ற பின்னரும் இன்றுவரை அரசாங்கத்தை எதிர்த்த வண்ணம்தான் உள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குச் சகல வியூகங்களையும் வகுத்தபடி இருக்கிறார். அதனைப் பகிரங்கமாக அறிவித்தபடியும் உள்ளார். அரசாங்கம் தமிழ்க் கூட்டமைப்பும் அரசியல்த் தீர்வைப் பெற்றுக்கொள்ளப் போவதாக 2017 ஆம் ஆண்டுக்குரிய தங்களது பணிகளைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்க, தனது இலக்கு இந்த ஆண்டில் மைத்திரி அரசாங்கத்தைக் கவிழ்த்து தனது ஆட்சியை கொண்டுவருவதே என்று துணிச்சலுடன் சொல்கிறார் மஹிந்த.
இந்த அரசியல் போர்ப் பிரகடனங்கள் முற்று முழுதாக மொக்குத்தனமான சுவரில் மண்டையை மோதுகின்ற, எதிர்ப்பாக இல்லாமல், சாணக்கியத்துடன் கூடிய எதிர்ப்பாக, மைத்திரியின் கீழ், தான் பிரதமராகப் பணியாற்றத் தயார் என்ற மாதிரியான அறிவிப்புக்களாக உள்ளன. மொத்தத்தில் மைத்திரி – ரணில் கூட்டணி அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே நேரத்தில் எல்லா அழுத்தங்களையும் ஏற்படுத்தக்கூடிய சகல நடவடிக்கைகளையும் ஓயாது, முன்னெடுத்த வண்ணமுள்ளார் மஹிந்த.
இம்மாதிரியான ஒரு நிலையில், இந்த 2017 ஆம் ஆண்டெனப்படுவது மைத்திரி அரசாங்கத்துக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும், காப்பரணமைக்கும் காலமாகக் கழியப்போகிறதா அல்லது இந்த ஆபத்தையெல்லாம் மீறி, அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று தமிழர் தரப்புக்கு எதிர்பார்த்த தீர்வை அறிவிக்கும் காலமாக மலரப்போகிறதா என்ற சிக்கலுக்குள் ஆழமாக சிக்கிப்போயிருக்கிறது. “இப்படியான சில்லெடுப்புக்களையெல்லாம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். எமக்கு, எமது மக்களின் அபிலாஷைகள்தான் முக்கியம்.
உங்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்துவிட்டது. கேட்டதைத் தர முடியுமா? முடியாதா” என்ற கேள்வியைத் தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்தை நோக்கிக் கேட்கவேண்டும் என்பதுதான் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பும் நியாயமும்கூட. சம்பந்தர் அப்படியான கடும்போக்கை கடைப்பிடிப்பவராகத் தெரியவில்லை. அப்படியே அவர் மைத்திரியின் ‘கொலரில்’ பிடித்து தீர்வைக் கேட்டாலும், அந்தக் கேள்விக்கு, மைத்திரியின் சார்பில் மேற்குலகமும் இந்த ஆட்சியை கொண்டுவந்த சாணக்கியர்களும்தான் சம்பந்தனுக்கு பதில் கொடுப்பார்கள். அவர்களை மீறி சம்பந்தன் எங்கும் அசைய முடியாது. அப்படியான அதி தீவிர அரசியலை சம்பந்தர் என்றைக்கும் செய்ததும் இல்லை. இனியும் செய்யப்போவதுமில்லை.
சீனாவையே முற்றாக வெளியேற்றவிடாமல், அந்தத் தரப்பினைப் பொருளாதார விடயத்தில் மாத்திரம் கைக்குள் வைத்துக்கொண்டு, காரியங்களை முன்னகர்த்துமாறு, மிகச்சாணக்கியமாகக் கொழும்பை பின்னுக்கிருந்து இயக்கிவரும் மேற்குலகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இயக்குவது மிகவும் இலகு. அப்படியான கட்டளைகளுக்கு வளைந்து கொடுப்பதை விடுத்துத் திமிறிக்கொண்டு போர் புரிவதற்கு கூட்டமைப்புக்கும் பாரிய செயற்பாட்டுத்தளம் எதுவும் இல்லை என்பது அடுத்த விடயம்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாகத் தமிழ் கூட்டமைப்பு கூண்டோடு கூச்சல்போட்டாலும் மஹிந்த தரப்பை அரசாங்கத்துக்குள் இறக்கி, கபடி ஆடுவதற்கு, மேற்குலகம் எப்போதும் மஹிந்த தரப்பினைச் சமாந்தரமாக கையாண்டு கொண்டுதானிருக்கிறது. மஹிந்தவை முற்றாகப் புறக்கணிக்காமல், அவரது பரிவாரங்களின் மீது போர்க்குற்ற விசாரணைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரைத் தூக்குக்கயிற்றில் மேய விட்டிருப்பது போன்ற ஓர் அதிகார எல்லைக்குள் மேற்குலகம் தனது காய்களைச் சரியாக நகர்த்தி வைத்திருக்கிறது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், மஹிந்தவை ஓர் அழகான எதிரியாகக் கையாண்டு வருகிறது. இப்படியான ஒரு வியூகத்துக்குள்ளிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு வெளியேறப்போகிறது? மக்கள் ஆணையைச் சரியான பேரம்பேசும் சக்தியாக இன்னும் உருமாற்றம் செய்யாததுபோல காணப்படும் மர்மமான நிகழ்ச்சிநிரல்களை எப்போது மக்களிடம் கூறப்போகிறது? சம்பந்தர் கிளிநொச்சியிலிருந்து தமிழர்களை மீட்பாரா?
Average Rating