யாழ். நூலக எரிப்பும் எதிரொலியும்..!! (கட்டுரை)
யாழ். பொது நூலக எரிப்பு பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் நடேசன் சத்தியேந்திரா, யாழ். நூலக எரிப்பை இலங்கை மக்களின் ‘க்ரன்ஸ்டட்’ (Kronstadt) என்று குறிப்பிடுகிறார். லூயிஸ் ஃபிஷர் தன்னுடைய ‘The God that Failed’ என்ற நூலில் ‘க்ரன்ஸ்டட்’ என்பது ஒரு திருப்புமுனை. கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸத்தின் அடக்குமுறையை, வல்லாதிக்கப் போக்கின் கொடூரத்தை உணர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியதுடன், கம்யூனிஸ எதிர்ப்பாளர்களாகியதன் ஆரம்பப்புள்ளி என சுருக்கமாக விவரிக்கிறார். அதுபோலவே இலங்கைத் தமிழ் மக்களுடைய ‘க்ரன்ஸ்டட்’ திருப்புமுனையாக யாழ். நூலக எரிப்பு அமைந்தது.
அதுவரைகாலமும் இருந்த எல்லாப்பிரச்சினைகளைத் தாண்டியும் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலினூடாக இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டு, தாம் தமது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை, பல்லாயிரம் தமிழர்களுக்கு விட்டுப்போன புள்ளியாக யாழ், நூலக எரிப்பு அமைந்தது என்கிறார் சத்தியேந்திரா. இந்த ஒப்பீட்டில் உண்மையில்லாமல் இல்லை. 1976 இல் தனிநாடு கோரிய ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதிலிருந்தே உணர்ச்சிமிக்க இளைஞர் சக்திகள், தனிநாட்டுக்கான வழியை நோக்கித் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயணிக்க வேண்டும் என்ற அழுத்தத்தைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருந்தன.
ஆனால், தமிழ்த் தலைமைகள் தேர்தல் காலத்தில் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ மக்களாணைக்காக முன்வைத்து, தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்றிருப்பினும், அதுசார்ந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையெதனையும் முன்னெடுக்கவில்லை. மாறாக, சர்வகட்சி மாநாடு ஒன்றின் மூலம், அரசியல் தீர்வொன்றை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதுதான் தமிழ்த் தலைமைகளின் எண்ணமாக இருந்தது. தனிநாட்டுக்கான மக்களாணையைத் தமது பேரம் பேசும் சக்தியாகவே தமிழ்த் தலைமைகள் கைக்கொண்டனவேயன்றி, அதன்பால் பயணிக்கும் மெய் நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்க முடியாது.
இதுதான் அன்றைய தமிழ் இளைஞர்களின் விசனத்துக்குக் காரணமாகும். ஆனால், தமிழ்த் தலைமைகளின் இந்தப் போக்குக்கு வெகுசன ஆதரவு இருந்தது. அதுவரை தமிழ் வெகுசனப் பரப்பில், பிரிவினை என்பது ஒன்றும் கிடைக்காத பட்சத்திலான இறுதி அஸ்திரமாகவே பார்க்கப்பட்டதேயன்றி, அது முதல் தெரிவாக இருக்கவில்லை. ஆனால், யாழ். பொது நூலக எரிப்பும் அதனுடன் தொடர்ந்த கொடும் வன்முறையும் அதனைத் தொடர்ந்து நடந்த இனக்கலவரமும் தமிழ் வெகுசனப் பரப்பின் எண்ணப்பாங்கில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதே பல அறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வது பற்றி தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்த முக்கிய தருணம் இதுவாகும் என்பதை மறுக்கமுடியாது. பரவிய வன்முறை யாழ். சந்தைக் கட்டட எரிப்பு, வீடுகள் எரிப்பு, வணிக, வர்த்த நிலையங்கள் எரிப்பு, யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு எரிப்பு, ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் அச்சகம் எரிப்பு, யாழெங்கும் அழகுற மிளிர்ந்த தமிழ் அறிஞர்களின் சிலைகள் உடைத்தழிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்களின் அடையாளமாக, புலமைச் சொத்தின் சேமிப்பகமாக இருந்த யாழ்ப்பாண நூலக எரிப்பு என மே 31 மற்றும் ஜூன் முதலாம் திகதிகளில் பெரும் வன்முறைத்தீ, இலங்கைப் பொலிஸாரினாலும் அரசாங்கக் கைக்கூலிகளினாலும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இந்த வன்முறைத்தீ, ஜூன் இரண்டாம் மூன்றாம் திகதிகளிலும் தொடர்ந்தது மட்டுமல்லாது, யாழ். நகரிலிருந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. வீடுகள், வணிக மற்றும் வர்த்தக நிலையங்கள், கடைகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன. சுன்னாகம் சந்தைக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியும் தீக்கிரையானது. அவசரகாலநிலையும் தேர்தலும் மே 31 முதல், ஜூன் 3 வரை இத்தனை வன்முறைகள் நடந்தும், அதுவும் ஜூன் நான்காம் திகதி மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யவில்லை. குறைந்த பட்சம் ஊரடங்கைக் கூட அமுல்படுத்தவில்லை. இத்தனைக்கும் ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்களான சிறில் மத்யூவும் காமினி திசாநாயக்கவும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்.
அவர்களுடன் ஒரு மேல்மட்டக்குழுவும் இருந்தது. இறுதியாக ஜூன் மூன்றாம் திகதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது. இதேவேளை ஜூன் மூன்றாம் திகதி, கொழும்பில் ஜனாதிபதி செயலகம், யாழ்ப்பாணத்தில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டபடி ஜூன் நான்காம் திகதி மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தது. நான்கு நாட்கள் தொடர் கலவரங்களும் பெரும் வன்முறையும் பேரழிவும் இடம்பெற்றிருந்த ஒரு பிரதேசத்தில் நான்கு நாட்களாக அதனைத் தடுப்பதற்கு அவசரகால நிலைப் பிரகடனமோ, குறைந்த பட்சம் ஊரடங்கோ அறிவிக்காத அரசாங்கம், தேர்தலுக்கு முதல்நாள் அதனைச் செய்துவிட்டு, தேர்தலை ஒத்தி வைக்காது, திட்டமிட்டபடி நடத்துவதானது இந்தக் கலவரம், வன்முறை மற்றும் அதனைத் தடுப்பதில் காணப்பட்ட அலட்சியம் எல்லாவற்றுக்கும் பின்னால் அரசாங்கத்தின் கை ஓங்கி நிற்பதையே உணர்த்துவதாக இருக்கிறது.
தமிழ்த் தலைவர்கள் கைது ஜூன் நான்காம் திகதி அதிகாலையிலே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை, அவரது பண்ணாகம் வீட்டில் வைத்து, பெரும் பொலிஸ்படையொன்று, ஜனநாயக செயற்பாட்டை (மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்) முன்னெடுப்பதற்குத் தடையாக இருக்கிறார் என்ற காரணத்தின் நிமித்தம், மேல்மட்ட உத்தரவின் பேரில் கைது செய்தது. குருநகர் இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அமிர்தலிங்கம் அங்கு தடுத்து வைக்கப்பட்டார். இந்தக் கைதானது, யாழில் முகாமிட்டிருந்த அமைச்சர் சிறில் மத்யூ உள்ளிட்டோரின் உத்தரவின் பேரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆயினும், பொழுது விடிந்ததும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி ஜே.ஆர், அவரைத் தவறுதலாகக் கைதுசெய்து விட்டார்கள் என்றும், அது தவறு என்றும், தான் உடனடியாக அவரை விடுதலை செய்வதாகவும் கூறி, விடுதலை செய்தார்.
ஆனால், இந்த விடயம் இத்தோடு முடியவில்லை. தேர்தல் தினத்தன்று, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான வீ.என்.நவரட்ணம், வீ.தர்மலிங்கம் மற்றும் எம்.சிவசிதம்பரம் ஆகியோரும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டார்கள். தேர்தல் முறைகேடுகள் அரசாங்கத்தின் காட்டாட்சிச் செயற்பாடுகள் இவற்றோடு நின்றுவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் தேர்தல் பணிக்கென ஏற்கெனவே ஏறத்தாழ 150 தமிழ் அரசாங்க அலுவலர்கள் பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர்களுக்குப் பதிலாக, தெற்கிலிருந்து வரவழைக்கப்பட்ட சிங்கள அலுவலர்கள் தேர்தல் பணியிலீடுபடுத்தப்பட்டார்கள்.
இந்தக் காரியமும் யாழில் முகாமிட்டிருந்து மேல்மட்டக் குழுவினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலின் பின் வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டமை, சில வாக்குப்பெட்டிகள் எண்ணப்படாது விட்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இத்தனை கொடூரங்களும் கபடங்களும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஓர் ஆசனத்தையேனும் யாழ். மாவட்ட சபைத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும். இத்தனை கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டும் ஆளும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என ரஜீவ விஜேசிங்ஹ தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடுகிறார். தேர்தல் முடிவுகள் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து ஆசனங்களையும் (10) வெற்றி கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 23,302 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளையும் பெற்றுக் கொண்டது. அதுமட்டுமல்லாது, வடக்கு-கிழக்கின் ஆறு மாவட்ட அபிவிருத்தி சபைகளையும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வெற்றிகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இந்த விடயத்தில் விடாப்பிடியர்கள் என்பதை இன்று வரை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எத்தனை துன்பங்கள் தம்மீது ஏவப்பட்டாலும் எத்தனை அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்தாலும் துப்பாக்கி முனையில் வைத்து வாக்களிக்கச் செய்தாலும் ஒட்டுமொத்தத்தில் பெரும்பான்மைத் தமிழர்கள் கொள்கைக்காகத் தொடர்ந்தும் விடாப்பிடியாக வாக்களித்தே வந்திருக்கிறார்கள். தமது அரசியல் அபிலாஷைகளை பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக மீள மீள வாக்குகளினூடாக எடுத்தரைத்த மக்கள் கூட்டமொன்றை வேறெங்கினும் காண்பது அரிது. சிறில் மத்யூ உள்ளிட்ட அமைச்சர்கள் தமிழ் மக்களைத் தவறாக மதிப்பிட்டுவிட்டார்கள்.
அவர்களது கணக்குப் பிழைத்துவிட்டது. ஆனால், அவர்கள் விதைத்த இனவெறிக் கொடூரத்தின் வேர்கள் அழிந்துவிடவில்லை. அவை தொடர்ந்து வளரத்தொடங்கின. வன்முறைகள் பற்றி விசாரணைகள் இல்லை யாழ்ப்பாணத்தில் மாபெரும் அழிவுகள் பொலிஸாரினாலும் அரசாங்கக் கைக்கூலிகளினாலும் நடத்தி முடிக்கப்பட்டிருந்த வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அ.தியாகராஜா சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும், பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டமை பற்றி விசாரிக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும் என பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால், யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய யாழ். பொது நூலக எரிப்பு உள்ளிட்ட பெருங்கொடூரங்கள் பற்றி எந்த விசாரணையோ, நடவடிக்கையோ அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்பது வெட்கக் கேடானது.
கண்டனங்களும் அழுத்தங்களும் யாழ். நூலக எரிப்பு மற்றும் யாழில் நடந்தேறிய வன்முறை தொடர்பில், பல உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு, சிவில் மற்றும் அரசாங்கம் சார அமைப்புக்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. திஸ்ஸ பாலசூரிய, பேராசிரியர் சரத்சந்த்ர, கலாநிதி குணதாச அமரசேகர, வைத்திய கலாநிதி காளோ பொன்சேகா, எஸ்.நடேசன் கியூ.ஸீ உள்ளிட்ட புலமையாளர்கள், அறிஞர்கள் பலரைக் கொண்ட தேசிய இணக்கப்பாட்டுக்கான குடிமக்கள் குழு என்ற அமைப்பு யாழ். நூலக எரிப்புச் சம்பவத்துக்கு கவலையை வௌியிட்டதுடன், ‘ஒரு தேசம் என்ற வகையில், எமது சட்டம் மற்றும் ஒழுங்குக்கான படைகள் நடத்திய இந்தக் குற்றத்துக்கு நாம் பிராயச்சித்தம் தேட வேண்டும்’ என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டதுடன், அரசாங்கத்தின் முகவரான பொலிஸார் நடத்திய இந்தக் கொடூர தாக்குதல்களுக்கு அரசாங்கமும் உரிய பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றி விசாரிக்க மூன்று இந்நாள் அல்லது முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியது.
இந்த வன்முறைகள் பற்றி சர்வதேச சட்டவியலாளர்கள் ஆணைக்குழு வௌியிட்ட அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைகள் ஏறத்தாழ 100-200 சீருடையணிந்த பொலிஸாரினால் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அத்தோடு யாழ். நூலக எரிப்புப் பற்றி குறிப்பிடும்போது, இந்தக் கொடூரத் தாக்குதலானது, யாழ். மக்களின் கற்றல் மற்றும் கலாசாரம் மற்றும் கற்பதற்கான விருப்பு மற்றும் கற்பதற்கான விருப்புடைய கலாசாரம் ஆகியவற்றின் அடையாளத்தின் மீதான தாக்குதலாகும். இந்த நூலக எரிப்பானது, கசப்பான நினைவுகளை விட்டுச்செல்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை’ என்று கூறுகிறது.
அத்தோடு, அரசாங்கம் மிகத்தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து, இந்தப் பேரழிவுக்குக் காரணமாகப் பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. யாழ். நூலக எரிப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பற்றி எந்த விசாரணைகளோ, நடவடிக்கைகளோ அரசாங்கத்தால் எடுக்கப்படாத நிலையில், 1982 இல் இந்த விடயம் பற்றிய தனது அறிக்கையொன்றில், சர்வதேச மன்னிப்புச் சபையின் அன்றைய தலைவர் ஓர்வில் ஷெல், ‘இலங்கை அரசாங்கமானது குறித்த கொடூரங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கையெடுக்க ஒரு சுதந்திர விசாரணையை முன்னெடுக்காமையானது கவலைக்குரியது.
மாறாக, இக்கொடூரத்தில் ஈடுபட்ட ஒரு பொலிஸ் அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டு, அவசர காலச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்னும் தொடர்ந்து கொலைகள் செய்வதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறுகிறார். கொடூரத்தின் காரணகர்த்தாக்கள் இந்தக் கொடூரங்களுக்குப் பின்னால், யாழில் முகாமிட்டிருந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ் மக்கள், தமிழ்த் தலைமைகள், வௌிநாட்டு ஊடகவியலாளர்கள் எல்லோரும் குற்றஞ்சுமத்திய போது, அதை மறுத்து மௌனம் காத்தது அரசாங்கம். ஜனாதிபதி ஜே.ஆரின் இந்த அரசாங்கத்தில் பிரதமராக இருந்தவர் ரணசிங்ஹ பிரேமதாஸ.
ஆனால், 1991 ஒக்டோபரில், பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை, அவரது கட்சிச் சகாக்களான லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க கொண்டுவந்திருந்த நிலையில், புத்தளத்தில் உரையாற்றும் போது, “1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில், எமது கட்சி உறுப்பினர்கள் சிலர், இலங்கையின் வேறு பாகங்களிலிருந்து பலரை வடக்குக்கு அழைத்துச் சென்று, அங்கு பெரும் பிரளயத்தை உண்டுபண்ணி, வடக்கில் தேர்தல் செயற்பாடுகளைக் குலைத்தனர். இதே குழுவினர்தான் இப்போதும் பிரச்சினையை உண்டுபண்ணுகிறார்கள்.
யாழ். நூலகத்தின் விலைமதிப்பற்ற புத்தகங்களை எரித்தவர்கள் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், எம்மை இப்போது எதிர்ப்பவர்களின் முகங்களைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டார். 1981 இல் நடந்த அசம்பாவிதங்களின் காரணகர்த்தாக்களை ரணசிங்ஹ பிரேமதாஸ மறைமுகமாகவேனும் அடையாளம் காட்ட 10 வருடங்கள் ஆனது. ஆகவே, யாழ். நூலக எரிப்போ, அங்கு நடந்த வன்முறைகளோ தற்செயலாக நடந்தவை அல்ல! மாறாக, அரசாங்கத்தின் சக்தி மிக்க நபர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை. இந்தக் கறை, ஐக்கிய தேசியக் கட்சி என்று நினைத்தாலும் அழிக்க முடியாததொரு கறை.
அதனால்தான் யாழ். நூலக எரிப்பு பற்றி அண்மையில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மீது பழி சுமத்தப்பட்டபோது கூட, உணர்ந்து சொல்லவில்லையாயினும், அதற்காக தாம் வருந்துவதாக இன்றைய பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்ஹ கூறியமை குறிப்பிடத்தக்கது. 1981 ஜூன் 4ம் திகதி மாவட்ட சபைத் தேர்தல்கள் முடிவடைந்து மீண்டும் நாடாளுமன்றம் கூடியபோது மிகவும் அபத்தமான கருத்துக்கள் அரசாங்கத்தரப்பினால் முன்வைக்கப்பட்டது, அதைவிட பெரியதொரு அபத்தமும் அரங்கேறியது.
(தொடரும்)
Average Rating