மனைவிகள் மட்டும் படிக்க வேண்டாம் ..!!
இல்லத்தரசி அருமை இல்லாதப்ப தெரியும் என்பது முன்னோர் சொல்ல மறந்த பழமொழி. பல் தேய்க்கப் போகிற போதுதான் டூத் பேஸ்ட் காலி என்று தெரிகிறது. பென்சில் வைத்து உருட்டி, இடுக்கி வைத்துப் பிதுக்கி கடும் முயற்சி. பட்டாணி அளவு பேஸ்ட்டை எக்ச்டிராக்ட் செய்யப் போகிற போது டினுங் என்று அழைப்பு மணி அடிக்கிறது. கை நடுங்கி அந்த ஒரு துளி பேஸ்ட்டும் பாதத்தில் சொட்டுகிறது. யாருடா காலையிலேயே டார்ச்சர்? என்று கதவைத் திறந்தால் மேல் வீட்டுப் பெண், அங்க்கிள் அம்மா பேஸ்ட் வாங்க மறந்துட்டாங்களாம்.
கொஞ்சம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க என்று நிற்கிறாள். சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது இதான் போலிருக்கு. பில்டரில் காபிப் பொடியைப் போட்டு வெந்நீரை ஊற்றி விட்டு வெளியே வந்தால், ராத்திரி வாஷிங் மிஷினில் போட்ட துணியெல்லாம் எடுத்துக் காயப் போடாதது ஞாபகம் வருகிறது. மிஷினைத் திறந்தால் ஒரு வினோதமான துர்நெடி. மறுபடி ரின்ஸ் போட்டால்தான் இது சரியாகும்.
ஆன் செய்யப் போகிற போது ஞாபகம் வருகிறது, கரண்ட் போக இன்னும் பத்து நிமிஷம்தான்! ஐயய்யோ பத்து நிமிஷம்தானா! இந்த ஓசூர் குளிரில் எவன் தண்ணீரில் குளிப்பது ஓடிப் போய் இன்ஸ்டன்ட் வாடர் ஹீட்டரை ஆன் பண்ண வேண்டியிருக்கிறது. டிகாஷன் இறங்கி விட்டதா என்று பார்த்தால் அப்படியே கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறது. கரண்டி எடுத்து மண்டையில் ரெண்டு போட்டால் கக்கலும் கரைசலுமாக இறங்குகிறது.
பால் பாக்கெட்டைக் கிழித்து ஊற்றி ஸ்டவ்வை பற்ற வைத்தால் போன் அடிக்கிறது. எடுத்தால் காலையிலேயே ராங் கால். நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும் நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்? ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான்.
டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே? யாரு ராஜலிங்கம் பேருக்கா? ம்ம்ம் அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே? அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன் எவ்ளோ அமவ்ண்டு? இருபத்திநாலு கோடி என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா? மொளகாயா? கஞ்சா இல்லையா? கஞ்சாவா? யாருங்க பேசறது? இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும் அதற்குள் புஸ்ஸ்ஸ்ஸ் என்று பால் பொங்குகிற சத்தம்.
ஓஓஓடிப் போகிற போது முட்டியில் பிரிஜ் இடித்து உட்கார வேண்டியிருக்கிறது. அதற்குள் பால் பர்னரில் வழிந்து காஸ் நாற்றம். ஒரு கன்றாவிக் காப்பியைக் குடித்து விட்டு பாத்ரூமுக்கு ஓடினால் வெந்நீர் வழிந்து சாக்கடையில் போய்க் கொண்டிருக்கிறது. குளிக்க ஆரம்பித்தால் மறுபடி வாசலில் பெல். ஐயய்யோ, உடனே போகாவிட்டால் பால்காரன் நான் ஆபிஸ் போய் விட்டேன் என்று நினைத்துக் கொண்டு பால் போடாமல் போய் விடுவானே? மறுபடி ஓட்டம். திரும்பியும் அதே குண்டுப் பெண்.
அங்க்கிள் எங்கம்மாவோட உள்பாவாடை விழுந்திடுச்சு அய்யே இதை ஏன் ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கே? சத்தம் போடாம திருப்பி எடுத்துக் கட்டிக்க வேண்டியதுதானே? அய்யே சமத்து வழியுது. உங்க வீட்டு பால்கனியில விழுந்திடுச்சு சரி சரி எடுத்துகிட்டு ஓடு அங்க்கிள் உங்க டிரஸ் எல்லாம் கீழ் வீட்டு பால்கனியில விழுந்திடுச்சா?
Average Rating