ஞாபக மறதியால் அவதியா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!
படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை, ஞாபக மறதி. அது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் தெரியும்.
ஞாபகமறதி பிரச்சினையைத் தீர்க்க உணவுகளும் கைகொடுக்கும் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம், மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம்.
ஞாபக சக்தியைக் காக்கும் உணவுகள் குறித்து அறிவோமா…
பச்சை இலைக் காய்கறிகள்:
கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது பலரும் அறிந்த உண்மை. அதிலும் குறிப்பாக, பசலைக் கீரை, லெட்டூஸ், புராக்கோலி, காலிபிளவர் ஆகியவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வேதிப்பொருட்களுடன், வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் அதிகம் இருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
பழங்கள்:
பழங்கள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன. தங்களுக்கு ஞாபகசக்தி குறைவாக இருப்பதாக எண்ணுபவர்கள், ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், முலாம் பழம், பேரீச்சம்பழம், அன்னாசி போன்ற பழங்களை உண்ணலாம்.
மீன்:
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இந்தக் கொழுப்பு அமிலம், இதயத்துக்கு மட்டுமின்றி, மூளைக்கும் நன்மை பயக்கும். ஏனெனில் மூளையின் செயல்பாட்டுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகவும் முக்கியமானது. இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சூரை, நெத்திலி, மத்தி போன்ற மீன்கள் சிறந்தவை.
ஓரிகான் உடல்நல அறிவியல் பல் கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் வில்லியம் கானர், மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என்கிறார். மூளையில் ஏற்படும் பிரிவுகளை தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படச் செய்பவை மீனும், மீன் எண்ணெய் மாத்திரையும் என்கிறார் அவர்.
பால் பொருட்கள்:
பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இவற்றைச் சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் உள்ள அமினோ ஆசிட் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருளாகும்.
வெள்ளைப் பூண்டு:
வெள்ளைப் பூண்டு மனதை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. எனவே, ஞாபகசக்தி பாதிக்கப்படாமல் இருக்க உணவில் வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேன்:
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
கொட்டைப் பருப்புகள்:
‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப் பருப்புகள், மூளையின் சக்தியை அதிகரிக்கும். இவற்றில் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கின்றன. எனவே அவ்வப்போது பாதாம், பிஸ்தா எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தானியங்கள், சோயா பீன்ஸ் போன்ற வற்றை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகை களைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட, கொண்டைக்கடலை முதலியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.
கிரீன் டீ:
தற்போது பலரும் கிரீன் டீ விரும்பிப் பருகி வருகிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம்தான். கிரீன் டீயில், மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும் பாலிபினால் என்ற சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. எனவே கிரீன் டீ அருந்துவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும், சோர்வான மனநிலை மாறும். தரமான கிரீன் டீ தூளை தேர்வு செய்து வாங்கிப் பயன்படுத்துவதும் முக்கியம்.
தண்ணீர்:
மேற்கண்ட அனைத்துடன், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் முக்கியம். காரணம், மூளையில் நான்கில் மூன்று பங்கு, தண்ணீர்தான் உள்ளது. தண்ணீர் அளவு குறைந்தால், மூளையின் செயல்பாடும் குறைந்து வறட்சி ஏற்பட்டு, ஞாபக சக்தியைப் பாதிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது மூளையில் வறட்சி ஏற்படாமல் தடுக்கப்படுவதால், மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் செயல்படும்.
Average Rating