சீனாவுக்கு எதிராகத் திரும்புகிறாரா மஹிந்தா?..!! (கட்டுரை)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத உரிமையை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை கைத்தொழில் வலயத்துக்காக சீனாவுக்கு வழங்கவும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது. ஜே.வி.பியினர், துறைமுகத் தொழிலாளர்கள், கூட்டு எதிரணியினர் என்று பல தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த போது, அதற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பத்தினரதும் கூட்டு எதிரணியினதும் பின்புல ஆதரவு இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது. கடந்த 24ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மூலம், சீனாவின் திட்டங்களுக்கு எதிராக, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக களமிறங்கியுள்ளார். சீனாவின் உண்மையான நண்பன் என்று போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
இன்னொரு பக்கத்தில், சீனாவின் எல்லா நகர்வுகளையும் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாகக் கருதும் இந்தியாவும் இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. இந்த இரண்டுமே இலங்கை அரசியலில் ஆச்சரியத்துக்குரிய விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த நெருக்கம் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் மாத்திரமே இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதே சீன அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ விடயத்தில் சீனா அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. 2015ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராகக் கொழும்பு வந்த உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், மஹிந்த ராஜபக்ஷவை தனியாகச் சந்தித்துப் பேசியதும், அண்மையில் சீன அரசாங்கமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்து, அவருடன் சந்திப்புகளை நடத்தியதும் சீனாவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தை காட்டப் போதுமான நிகழ்வுகளாகும். போர்க்காலத்தில் செய்த இராணுவ உதவிகளையும், போருக்குப் பின்னர் செய்த பொருளாதார உதவிகளையும் காரணம் காட்டி, இலங்கையில் சீனாவின் தலையீடுகள் வலுப்பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாக இருந்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா இன்று குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்துள்ளது என்றால், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், இலங்கையில் அளிக்கப்பட்ட வாய்ப்புகளால் தான் என்பதில் சந்தேகமில்லை. எனவே, மஹிந்த ராஜபக்ஷவை கைவிட சீனா ஒருபோதும் தயாராக இல்லை. அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் ஆட்சியை இழந்த பின்னர் சீனாவுக்காகவே பரிந்து பேசி வந்தவர். இலங்கையில் சீனாவின் திட்டங்கள் முடக்கப்பட்ட போது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த மஹிந்த ராஜபக்ஷ, தம்மை ஆதரித்ததால், தற்போதைய அரசாங்கம் சீனாவைப் பழிவாங்குவதாகவும் கூட முன்னர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.
சீனா என்றால் மஹிந்த என்றும் மஹிந்த என்றால் சீனா என்றும், ஒரு விம்பம் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய ஒருவர் தான் இப்போது, ஹம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீடுகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த நொவம்பர் மாதம் மேற்கொண்ட சீனப் பயணத்துக்கு முன்னதாகவே, மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை, சீனாவுக்கு வழங்கும் திட்டத்தையும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தையும் எதிர்க்கத் தொடங்கி விட்டார். இப்போது அவரது எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இதுவரையில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தமது எதிர்ப்பை ஊடகங்களிடம் தான் வெளிப்படையாகக் காண்பித்து வந்தது. மறைமுகமாகச் சில போராட்டங்களையும் ஒழுங்கு செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது.
எனினும், தற்போது ஹம்பாந்தோட்டையில் சீன முதலீடுகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டிருக்கிறார். இது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சீனாவின் திட்டங்களை எதிர்த்துப் பகிரங்கமாகப் போராட்டத்தில் இறங்கியுள்ள முதல் சந்தர்ப்பமாகும். புறநிலையில் இருந்து பார்க்கும் போது, இது சீனாவுக்கு எதிரான போராட்டம் போலத் தென்பட்டாலும், உண்மையில் ராஜபக்ஷக்களின் திட்டம் அரசாங்கத்தை வீழ்த்துவது தான். ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குவதையும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதையும் தான் ராஜபக்ஷவினர் எதிர்க்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் நாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி விட்டார் மஹிந்த என்ற கறை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது சீனாவின் கைக்கு மாற்றப்பட்டால், மஹிந்தவின் மீதான கறை நிரந்தரமானதாகி விடும். தனது பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், விமான நிலையம் எல்லாவற்றுக்கும் தனது பெயரைச் சூட்டியவர் மஹிந்த. அப்படிப்பட்ட ஒருவர், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் நாட்டுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்தியவர் என்ற களங்கம் ஏற்படுத்தப்படுவதை விரும்பவில்லை.
சீனாவுக்கு 80 வீத உரிமை வழங்கப்பட்டாலும், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அரசுடமையாக்குவோம் என்று மஹிந்த எச்சரித்திருக்கிறார். அப்படிச் செய்யும் துணிச்சல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால், தற்போதைய அரசாங்கம் கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகளையே அவரும் சந்திக்க நேரிடும். அண்மையில், நடத்திய சர்ச்சைக்குரிய செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நிலையான கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சிமாற்றங்களால் அவை பாதிக்கப்படக் கூடாது என்றும் சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் கூறியிருந்தார்.
அவ்வாறான நிலையான கொள்கை அறிமுகப்படுத்தப்படாது போனால், வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். இப்படியான ஒரு நிலையில் தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவிடம் கையளிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மீண்டும் அரசுடமையாக்குவோம் என்ற மஹிந்தவின் எச்சரிக்கையை, சீனா அவ்வளவாக இரசித்திருக்காது என்பது உண்மை. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இந்தத் தருணத்தில் சீனாவை விடவும் அவரது அரசியலே முக்கியமானது. அதுவே நிலையானதும் நிரந்தரமானதுமாகும். சீனாவை, கையில் பிடித்துக் கொண்டு, உள்நாட்டு அரசியலில் வெற்றியைப் பெறுவது கடினமானது. ஹம்பாந்தோட்டை, மொனராகல, இரத்தினபுரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக 15 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தில் ஒரு பாரிய கைத்தொழில் வலயத்தை சீனா உருவாக்க முனைகிறது.
இதற்கான நிலங்களை ஒதுக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இத்தகைய கட்டத்தில் பாரியளவில் நிலங்களை இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கும் போது, உள்ளூர் மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் ஏற்படும். அது இயல்பான விடயம். உள்ளூர் மக்களிடம், அந்த எதிர்ப்பை தூண்டி விட்டு, தமது அரசியல் பயணத்தை வலுப்படுத்துவதே மஹிந்த ராஜபக்ஷவின் இப்போதைய நகர்வாக உள்ளது. சீனாவை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றே அவர் கருதுகிறார். ஏனென்றால், உள்ளூர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் வரை தான், அரசியல் நடத்த முடியும்.
அதற்கான வாய்ப்புகள் உள்ள தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டால், சீனாவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்ளலாம் என்பது மஹிந்தவின் திட்டமாக இருக்கக் கூடும். இதனால்தான் சீனத் திட்டங்களுக்கு எதிரான ஒரு தற்காலிக நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். இதனைச் சீனா எப்படிப் பார்க்கப் போகிறது? இந்த விடயத்தில் சீனாவுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் உள்ளுக்குள் ஏதேனும் உடன்பாடுகள் இருக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன. ஹம்பாந்தோட்டையில் கால் பதிப்பது சீனாவின் ஒரு பெருங்கனவு, இதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் இராணுவ ரீதியாக இல்லாவிடினும் பொருளாதார ரீதியாகவேனும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று சீனா எதிர்பார்க்கும்.
அத்தகையதொரு வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவினால், அவரது அரசியல் நலன் பேணும் நிலைப்பாட்டினால் கைநழுவிப் போவதை சீனா விரும்புமா என்ற கேள்வி இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும், அரவணைப்போம் என்று கூறும் மஹிந்தவுக்கு ஆதரவு அளித்தால், ஹம்பாந்தோட்டையில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு சீனா இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரலாம். இப்போதே அரவணைக்கத் தயாராக உள்ள மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் இணைந்தால் ஹம்பாந்தோட்டையில் உடனடியாகவே கால் பதிக்கலாம். இந்தத் தெரிவுகளில் எதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது.
Average Rating