நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன் ?..!!

Read Time:11 Minute, 59 Second

facebook-500x500நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.

வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு ‘இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்’ (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர்.

காரணம் என்ன?
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.
உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது.

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல ‘தொளதொள’வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.

வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும்.
பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.

தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.
என்ன முதலுதவி?

நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம். ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.
அலட்சியம் வேண்டாம்!

அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.

இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ (Barrett’s Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும்.
தடுப்பது எப்படி?

நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் ‘அமிலக் கவளம்’ உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.

வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

முக்கிய யோசனைகள்

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.

மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை நந்திதா தாஸ் விவாகரத்து..!!
Next post பைரவா படைத்த சாதனை – 3,896,094..!! (வீடியோ)