பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: வேலூர் போலீஸ்காரர் சிக்குகிறார்..!!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவரது மனைவி லாவண்யா (25). இவர் வேலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டார்.
கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பணி முடிந்து ஸ்கூட்டரில் லாவண்யா வீடு திரும்பியபோது, மர்ம நபர்கள் 2 பேர் ஆசிட் வீசி விட்டு தப்பினர். இதில் அவரது முகம், கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. லாவண்யாவுக்கும், திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு என்கிற பிரபாகரனுக்கும் (36) தொடர்பு இருந்தது தெரியவந்தது.
பிரபாகரனை பிடித்து விசாரணை நடத்தியதில் சிக்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் போலீஸ் லாவண்யாவுக்கும், பிரபாகரனுக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் நெருங்கி பழகினர்.
லாவண்யாவுக்கு என்.ஜி.ஓ. நகரில் ரூ.28 லட்சம் மதிப்பில் பிரபாகரன் புதிதாக வீடு வாங்கி கொடுத்தார். அந்த வீட்டிற்கான பணத்தை லாவண்யாவிடம் அவர் கேட்கவில்லை. நாளடைவில் இருவர் உறவிலும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் பிரிந்தனர். போனில் பேசுவதையும் தவிர்த்தனர்.
இந்த நிலையில் வீடு வாங்கி கொடுத்தற்கான தொகை ரூ.28 லட்சத்தை பிரபாகரன் திருப்பி கேட்டார். லாவண்யா பணம் கொடுக்க மறுத்ததோடு, போலீஸ் என்ற தொணியில் பிரபாகரனிடம் மிரட்டல் விடுத்தபடி பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரன் ஆத்திரம் கொண்டார். மோதல் முற்றிய நிலையில், பிரபாகரன் தூண்டுதலின் பேரில் ஏவப்பட்ட 2 பேர், பெண் போலீஸ் லாவண்யா மீது ஆசிட் வீசியது தெரிய வந்தது. பிரபாகரனை கைது செய்யப்பட்டார்.
ஆசிட் வீசியதாக கூறப்படும் கவுதம்பேட் டையை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவரையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையே, பெண் போலீஸ் லாவண்யாவின் 6 சிம்கார்டு அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
6 சிம்கார்டுகளிலும் பல செல்போன் எண்களில் இருந்து ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன. லாவண்யா யார் யாரிடம்? பேசியுள்ளார். உரையாடல் எந்த மாதிரியானது? என்பது குறித்து உரையாடல் பேச்சுகளும் ஆய்வு செய்யப்படுகிறது.
லாவண்யாவின் 6 சிம் கார்டுகளிலும் வேலூர் போலீஸ்காரர் ஒருவரின் செல்போன் எண் அழைப்பும் அதிகமாக பதிவாகி உள்ளது. வேலூர் ஆயுதப்படை பிரிவில் லாவண்யா பணியாற்றியபோது, அந்த போலீஸ்காரருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் போலீஸ்காரரும், லாவண்யாவும் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. லாவண்யா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, வேலூர் போலீஸ்காரருடனான நட்பு முறிந்துள்ளது.
போனில் பேசுவதையும் லாவண்யா தவிர்த்து விட்டார். இதனால் வேலூர் போலீஸ்காரரும் லாவண்யா மீது ஆத்திரத்தில் இருந்தார். ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரனுடன், வேலூர் போலீஸ்காரர் கைகோர்த்து லாவண்யாவை பழிவாங்க திட்டமிட்டார்.
ஆசிட் வீசுவதற்கு வேலூர் போலீஸ்காரர் திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி, ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரன் ஆட்களை ஏவி ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் லாவண்யாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு உள்ளது.
எனவே, லாவண்யாவின் அழகை சீர்குலைப்பதற்காக அவர்கள் முகத்தில் ஆசிட் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த போலீஸ்காரர், தற்போது ஏட்டாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
Average Rating