முஸ்லிம் அரசியல்: இயலாமையும் முயலாமையும்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 55 Second

article_1483171086-bathusaமிகத் தொன்மையான சரித்திரங்களிலெல்லாம், வீரத்துக்கும் தைரியத்துக்கும் கொள்கைப் பற்றுறுதிக்கும் பெயர்போன முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் அவ்வாறான இலட்சணங்களை இழந்து கொண்டிருக்கிறது.

நாட்சம்பளத்துக்கு வேலை செய்கின்ற ஒரு கூலித் தொழிலாளி, அந்தந்த நாளின் பொழுதைக் கழிப்பது பற்றி மட்டுமே சிந்திப்பான். அதுபோல குறுங்கால அனுகூலங்களை இலக்காகக் கொண்டு முஸ்லிம்களின் அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

நீண்டகாலத் திட்டங்கள், எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தின் தலையெழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் அக்கறையும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதான எந்த அடையாளங்களையும் காணமுடியாதுள்ளது.

தமிழர் சமுதாயம் ஐம்பது வருடங்களாக ஒன்றுபட்டிருக்கின்றது; 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடத்தியிருக்கின்றது; 16 வருடங்களாகப் பிரதான தமிழ்க்கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக, ஓரணியில் திரண்டிருக்கின்றன.

ஆனால், இந்தநொடி வரைக்கும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுவதுமாக நிறைவேறவில்லை என்றிருக்கையில்,சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஒற்றுமைப்படாத முஸ்லிம்களின் அபிலாஷைகள் பற்றி, கனவு காண்பது கூட சாத்தியமற்றதாகவே தெரிகின்றது.

99 வீதமான முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தம்முடைய அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சி, சொத்துக்களைச் சேகரித்தல்,அடுத்த தேர்தலுக்குத் தயாராதல் என்ற சுயநலப் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

கட்சித்தலைவர்களாக இருக்கின்ற ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா மட்டுமன்றி எம்.பிக்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளைத் தொடராக நோக்குகின்ற ஒரு சிறுபிள்ளைகூட, இவர்களுடைய அரசியல் எதனை மையமாகக் கொண்டு சுழல்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளும்.

விகிதாசாரத் தேர்தல் முறையின் வரப்பிரசாதமாக, இன்றைய ஆட்சியில் 21 முஸ்லிம்கள் எம்.பிக்களாக இருக்கின்றனர். இவர்களுள் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்வோரும்,பெருந்தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்போரும் உள்ளடங்குகின்றனர்.

இது தவிர, பெருமளவிலான மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அரசியலை நிரப்பியிருக்கின்றனர்.

ஆனால்,முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? அரசியல் மற்றும் சமூக உரிமைகள், அபிலாஷைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளனவா? குறைந்தபட்சம், சமூகநலனை முதன்மைப்படுத்திய செயற்பாடுகளையாவது மேற்கொள்கின்றார்களா என்று மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினால், அதிகமான மக்கள் ‘இல்லை’களையே பதிலாக அளிப்பார்கள்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் இந்தக் குணாதிசயத்தை என்னவென்று வரையறுப்பதெனத் தெரியவில்லை.

பொறுப்பற்ற தனம், இயலாமை, சுரணையற்ற போக்கு, முயலாமை, வியாபாரப் புத்தி, அரசியல் இலாபம் உழைக்கும் மனநிலை என…எந்த வகையறாவுக்குள்ளும் அது அடங்கலாம். அன்றேல், அடங்காது கூடப் போய்விடலாம். ஆனால், எல்லோரும் வாய்ச்சொல்லில் மட்டுமே வீரராகவே இருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகம் தொடர்பான எத்தனையோ விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மிகப் பலவீனமாக உள்ளன.

குறிப்பாக,யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதிக்கப்பட்ட, காணாமல் போன முஸ்லிம்களுக்கு பரிகாரங்கள் வழங்கப்படவில்லை; வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடியேற்றப்படவில்லை; யுத்த காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், மனித உரிமை மீறல்கள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை; யுத்தத்துக்குப் பிறகு முன்கையெடுத்திருக்கின்ற இனவாதப் பிரசாரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை; முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதான சர்ச்சைக்கு முடிவுகட்டவில்லை; பல்லாயிரக்கணக்கான காணிப் பிணக்குகளைத் தீர்க்கவில்லை; இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு எதுவெனக் கூறவும் இல்லை, எதைத் தருவீர்கள் என்று ஒருமித்த குரலில் கோரவும் இல்லை.

மாணிக்கமடு புத்தர் சிலை பிரச்சினைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு காணப்படும் என்று கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதைச் செய்யவில்லை.

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை ஒரு மாதத்துக்குள் விடுவிப்பதாகச் சொன்ன மக்கள் காங்கிரஸ் தலைவரின் வாக்குறுதியும் மெய்ப்பிக்கப்படவில்லை. அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை முஸ்லிம் எம்.பிக்கள் எடுத்தமாதிரித் தெரியவில்லை.

பல இலட்சங்களைச் செலவு செய்து மாநாடுகளை, கூட்டங்களை நடாத்துகின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தேர்தல் முறை மறுசீரமைப்பு, உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பு, எல்லை மீள்நிர்ணயம், இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்ற மிக முக்கியத்துவமான விவகாரங்கள் குறித்து மக்களை அறிவூட்டுவதற்கான கருத்தரங்குகளையேனும் பரந்தளவில் நடத்தாதிருக்கின்றனர்.

இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் உட்கட்சிப் பிரச்சினைக்குப் பரிகாரம் செய்வதற்கே, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சிக்குள்ளும் செயலாளர் பதவி தொடர்பான நெருக்கடிகளும் கருத்து வேற்றுமைகளும் – ஒரு நோயாளியின் இதயத்துடிப்பு மானி வாசிப்பைப் போல, அதிகரிப்பதும் குறைவதுமாக இருக்கின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற மிகப் பெரிய அரசியல் கட்சித் தலைமையின் அண்மைக்கால போக்குகள், சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததைக் காண முடியாது போய்விட்டது.

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களையும் கண்டியில் தனக்கு வாக்களிக்கின்ற சிங்கள மக்களையும் பகைத்துக் கொள்ளாமல், அவர் செயற்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால், குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள், ஒரு சிறு அளவில் கூட நிறைவேற்றப்படவில்லை.

முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களில் ரவூப் ஹக்கீம் என்ன உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதைக் கூட அறிய முடியாமலுள்ளது. குறிப்பாக, மேற்குறிப்பிட்டவற்றுள் பல பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு, ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ஹக்கீம் செயல்விளைவுமிக்க நடவடிக்கைகளை எடுத்தது மிகக் குறைவாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விடயத்தில் மு.கா தலைவர் தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதுமட்டுமன்றி, முஸ்லிம்களுக்கான தனியான நிர்வாக அலகு மற்றும் கரையோர மாவட்டம் போன்ற நீண்டகால அபிலாஷைகள் பற்றியெல்லாம் அவர் வாயைத் திறந்து பேசுவதே கிடையாது.
மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேற்குறிப்பிட்ட விடயங்களுள் சில விடயங்கள் தொடர்பாகச் சற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அதை முழுமூச்சாக நின்று வென்றெடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்புக்குப் பகிரங்கமாகவே அவர் எதிர்ப்புத் தெரிவித்து விட்டார்.
ஆயினும்,கரையோர மாவட்டம், முஸ்லிம் நிர்வாக அலகு பற்றி அவர் பெரிதாகப் பேசா
மல் இருப்பது, அவரது அரசியல் வட மாகாண மக்களை சார்ந்ததாக சுழல்கின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

நடப்பு அரசியல் போக்குகளாகக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தேர்தல்முறைமை மறுசீரமைப்பு போன்றவற்றில் மு.கா தலைவர் ஹக்கீமை போலவே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டும் மௌனமாகச் செயற்படுகின்றார்.

சமகாலத்தில்,வாக்களிப்பின் அடிப்படையில் தோற்றுப்போன, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவுல்லா வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கும் கூட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவரது செயற்பாட்டுத் தளம் ஓய்ந்து போயுள்ளது.

அவரும் கூட, வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் முஸ்லிம்களுக்கு என்ன தேவை? இணைந்தால் என்ன தேவை என்பதை, ஒரு கட்சி என்ற அடிப்படையில் ஆவணமாக அரசாங்கத்துக்கு முன்வைக்கவில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பாக, தீர்வுத் திட்டம் தொடர்பாக துறைசார்ந்தவர்களைக் கொண்டுவந்து, மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை.

இப்படியாகக் கட்சித் தலைவர்கள் இருக்க, மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை இதைவிடவும் மோசமாக இருக்கின்றது. ‘கட்சித் தலைவர்களே மௌனியாக இருக்கும் போது, நமக்கு எதற்கு வேண்டாத வேலை’ என்பது போலிருக்கின்றது அவர்களது செயற்பாடுகள்.

உண்மையில், இது ஹக்கீமின், ரிஷாட்டின், அதாவுல்லாவில் வேலை மட்டுமல்ல; முஸ்லிம்களின் நடப்பு விவகாரங்கள் பற்றிக் கரிசனை செலுத்துவதும், மக்களைத் தெளிவூட்டுவதும், மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கு அனைத்து விதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க போராடுவதும் எல்லா முஸ்லிம் எம்.பிக்களினதும் கடமையாகும்.

தங்களது தொகுதிக்காக, மாவட்டத்தில் உள்ள மக்களுக்காகச் சேவையாற்றினால் போதுமென்று, எந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் நினைக்க முடியாது. அப்படியென்றால், அவர் பிரதேச சபை உறுப்பினராகவே இருந்திருக்கலாம். எம்.பியாகி விட்டால், தேசிய ரீதியான கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டும்.
அந்தவகையில், இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சிறிய, பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக முஸ்லிம் கட்சிகள் சார்பான எம்.பிக்கள் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி சார்பான முஸ்லிம் எம்.பிக்களும் முழுமூச்சாக உழைக்க வேண்டும்.

தாம் சார்ந்த கட்சியின், அதன் தலைவரின் ஏவலுக்குச் செயற்படுபவர்களாக அன்றி, மக்களுக்குப் பொறுப்புக்கூறுபவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தீர்வுத்திட்டம், தேர்தல் முறைமை மறுசீரமைப்பு என ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விவகாரங்கள் பற்றி முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் வாழாவிருப்பது மிகவும் பாரதூரமானதாகும்.

இலங்கை நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பிருந்தே, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்தறிவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்த குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது.

புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபை தயாரிப்பதற்காகவும் அரசியலமைப்பு பேரவையின் சேவைகளை ஆற்றுவதற்குமாக வழிப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு அந்தந்த விடயதானங்களில், துறைவாரியான ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டு, ஆறு வழிப்படுத்தல் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி பற்றிய உபகுழு, பகிரங்க சேவை மறுசீரமைப்பு பற்றிய உப குழு, மத்திய – சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழு, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு ஆகியவையே மேற்படி உப குழுக்களாகும்.

இந்த உப குழுக்கள், தமது அறிக்கைகளை வழிப்படுத்தல் குழுவுக்குச் சமர்ப்பித்திருந்தன. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுள், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான உபகுழுவுக்கு எழுத்துமூல பரிந்துரைகளை முஸ்லிம் கட்சிகளோ, அமைப்புக்களோ சமர்ப்பிக்கவில்லை என்பது முக்கியமானது.
முஸ்லிம்களுக்கு எவ்வளவோ நடந்துவிட்ட பிற்பாடும், அவர்களது அரசியல்வாதிகள் எந்தளவுக்கு முயற்சி செய்யாமல் இருக்கின்றனர் என்பதற்கு இது நல்லதொரு பதச்சோறு எனலாம்.
இந்த உப குழுக்களால், வழிப்படுத்தல் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை வழிப்படுத்தல் குழுவின் தவிசாளரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சபைக்கு, கடந்த மாதம் 19 ஆம் திகதி சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும். புத்தாண்டில் நாடாளுமன்றம் கூடுகின்ற போது, இவ்விடயம் அரசியலமைப்புப் பேரவைக்கு (நாடாளுமன்றத்துக்கு), கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்கத்தக்கதாக,புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான முஸ்தீபுகளை அரசாங்கம் கைவிடக் கூடும் அல்லது பிற்போடலாம் என்ற அனுமானங்களும் அரசியல் பரப்பில் கசியத் தொடங்கியிருக்கின்றன.
அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளின் செயற்பாடுகள் நாட்டில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள், கூட்டு எதிர்க்கட்சியின் போக்குகள், சிங்களக் கடும்போக்குச் சிந்தனைகள் என்பன அரசியலமைப்பைப் புதிதாக உருவாக்குவதில் அரசாங்கத்துக்கு சிக்கலாக உள்ளன.

அதுமட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகலாம் என்றிருக்கையில் ‘புதிய அரசியலமைப்பை உருவாக்கவே விடமாட்டோம்’ என எதிர்க்கட்சி அறிவித்துள்ளமை அரசாங்கத்துக்கு பாரிய சவால் எனலாம். எனவே, அரசாங்கம் தற்சமயம் சீர்திருத்தப் பணிகளை அவசரமாக முன்னெடுக்காமல், ஐ.நா போன்ற சர்வதேச அமையங்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியாக வேறு எதையாவது செய்யலாம் என்று அவதானிகள் கருதுகின்றனர்.
குறிப்பாக, தற்போதிருக்கின்ற அரசியலமைப்பிலேயே 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அவசிய மாற்றங்களை மேற்கொள்ள எத்தனிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அவ்வாறு நிகழுமாயின், 20 ஆவது திருத்தத்தில் மிக முக்கியமான இடத்தைத் தேர்தல் முறை மறுசீரமைப்பு பிடிக்கும் வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தொகுதி எல்லைகளில் பாரிய மாற்றங்கள் இல்லாத ஒரு சூழலில், தொகுதிவாரி முறை சட்டமூலமாக முன்வைக்கப்படலாம். அது சட்டமாகும் பட்சத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைவடையும் வாய்ப்பிருக்கின்றது.

எனவே, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள், அரசியலமைப்பு மறுசீராக்கம் பற்றிச் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாது, அதற்கு முன்னதாகப் புதிய திருத்தம் ஒன்று கொண்டு வரப்படும் சாத்தியமுள்ளதா என்பது பற்றியும் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட வேண்டியுள்ளது.

முயற்சி செய்து விட்டுத்தான் இயலாது என்று சொல்ல வேண்டும். முயலாமல் சும்மா இருந்து கொண்டு, எம்மால் இயலவில்லை என்று சொல்வது மறுதலையாக நாம் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்பதாகவே அமையும். ‘முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும். முயலாமை ஒருபோதும் வெற்றி பெறாது’ என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதற்கு எது சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்…??
Next post படுக்கையில் சிறப்பாக செயல்பட இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..!!