ரூ.30 ஆயிரத்துக்காக வங்கி அதிகாரி மகனை கடத்தி கொன்ற கல்லூரி மாணவன்…!!
ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 12). இவர் அதே பகுதியில் இருக்கும் நகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் யுவராஜ் வீட்டிலேயே இருந்தார்.
கடந்த 8-ந் தேதி விடுமுறை நாளில் வீதியில் யுவராஜ் தனது நண்பர்களுடன் விளையாடினார். பிறகு யுவராஜூடன் விளையாடிய அனைத்து சிறுவர்களும் தங்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.
யுவராஜ் மட்டும் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார். பெற்றோர் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரணி நகரில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். மாயமான சிறுவன் யுவராஜ் கடத்தப்பட்டரா? என்ற சந்தேகம் கிளம்பியது.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி ஆரணி- வந்தவாசி சாலையில் வேலப்பாடி ஊராட்சி சிவசக்தி நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் யுவராஜ் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். சிறுவனின் இடுப்பு பகுதியில் கயிற்றால் கல் கட்டப்பட்டிருந்தது. எனவே, சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணத்தை கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.
உடல் மற்றும் முகம், தலையில் ரத்த காயங்கள் இருந்தன. யுவராஜை கடத்திய பிறகு கொலையாளி அடித்து, துன்புறுத்தி சித்ரவதை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
ஆரணி டவுன் போலீசில் இருந்த சிறுவன் மாயமான வழக்கு ஆரணி தாலுகா போலீசுக்கு மாற்றப்பட்டு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. கொலையுண்ட சிறுவன் தந்தை வங்கி அதிகாரியாக பணிபுரிகிறார்.
எனவே ரூபாய் நோட்டு விவகார பிரச்சினையில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நகர்ந்தது. ஆனால் சிறுவன் கொலையில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அருணகிரி சத்திரத்தில் உள்ள ஒரு கடையின் சி.சி.டி.வி. கேமரா காட்சியில் சிறுவன் யுவராஜை, வங்கி அதிகாரி தாமோதரனின் தூரத்து உறவினரான ஆரணியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 24) என்பவர் பைக்கில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
ஜெயக்குமாரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் யுவராஜை பைக்கில் கடத்தி சென்று ஜெயக்குமார் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கைதான கொலையாளி ஜெயக்குமார், செய்யாறில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். விசாரணையில் சிறுவன் கொலை தொடர்பாக ஜெயக்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஆன்லைன் மூலம் செல்போன்களை விலைக்கு வாங்கி கூடுதல் விலை நிர்ணயித்து விற்பனை செய்து வந்தேன். இந்த தொழிலில் எனக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது.
இந்த தொகையை நானே கடனாக தான் வாங்கி இருந்தேன். வீட்டில் கேட்டால் பணம் தரவில்லை. அப்போது தான் எனது உறவினரான வங்கி அதிகாரி தாமோதரனின் ஞாபகம் எனக்கு வந்தது.
அவரது மகனை கடத்தி மிரட்டினால் எனக்கு தேவையான ரூ.30 ஆயிரம் பணம் கிடைக்கும் என திட்டமிட்டேன். அதன்படி சிறுவன் யுவராஜை ஆசை வார்த்தை கூறி பைக்கில் கடத்தினேன்.
என்னால் மிரட்டி பணம் பறிக்க முடியவில்லை. பிறகு மாட்டிக் கொள்வோம் என்று பயந்து சிறுவனை கொன்று வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் பிணத்தை வீசிவிட்டு தப்பினேன். விசாரணையை தொடக்கம் முதலே கண்காணித்தேன்.
முதலில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் நினைத்தாக கேள்விபட்டேன். இதனால் நிம்மதியடைந்தேன். இந்த நிலையில் கேமரா காட்சியை வைத்து போலீசார் என்னை பிடித்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating