நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள்…!! கட்டுரை
“நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலமைச்சர் கூடிய கவனம் எடுக்க வேண்டும், கருத்தின் தாக்கம் பற்றி அறிந்து தெரிவிக்க வேண்டும்” எனவும் அண்மையில் கொழும்பு, ராஐகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மத்தியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார்.
நல்லிணக்கம் என்ற சொல், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அனைத்து தென்பகுதி அரசியல்வாதிகளும் உபயோகிக்கும் ஒரு பொதுவான சொல்லாக மாறிவிட்டது. ஆனால், அந்தச் சொல்லுக்கு அமைய செயல்கள் நடைபெறுகின்றனவா என்பதே இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். வடக்கு, கிழக்கில் சமாதானத்துக்கான யுத்தம், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம், மனிதாபிமான யுத்தம் எனப்பல பெயர்களில் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடிய முப்பது வருடப் போரால் அனைத்தையும் பறிகொடுத்தவர்கள் தமிழ்மக்கள்.
ஆகவே, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நல்லிணக்கத்துக்காகக் காத்திருக்கின்றனர். நல்லிணக்கமாக வாழ விரும்புகின்றனர். ஆனால், உண்மையான, நேர்மையான நல்லணக்கத்தின் திருமுகத்தைப் பார்க்கவே ஆசைப்படுகின்றனர். நல்லிணக்கம் என்ற போர்வையில் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்கத் தமிழ்மக்கள் தயாரில்லை என்ற தாற்பரியத்தை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாகவே நல்லிணக்கம் பற்றிப் பலரும் கதைசொல்கின்றனர்.
“வடக்கில் இராணுவ மயமாக்கல் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றார். ஆனால், உண்மையில் இன்றும் வடக்கில் மக்களின் உதவிக்கு இராணுவமே உள்ளது. அங்கு நடைபெற்று வரும் அபிவிருத்திகள் மற்றும் பாதுகாப்பு இரண்டுக்கும் இராணுவம் துணை நிற்கின்றது” என்றும் கூரே மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மிதமிஞ்சிய படைக்குவிப்பு என்பது ஓர் இரகசிய விடயமல்ல; இராணுவ இரகசியமும் அல்ல.
நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் அங்கு இலட்சம் கடந்த இராணுவம் நிலை கொண்டுள்ளது என்பது நிதர்சனம்; யாவரும் அறிந்த விடயம். அத்துடன் படையினர் தமது சராசரிப் பணிக்கு மேலதிகமாக விவசாயச் செய்கை, கால்நடைப் பண்ணை, முன்பள்ளி, வர்த்தக நடவடிக்கைகள், சிற்றுண்டிச்சாலை, அழககம் (சிகை அலங்கரிப்பு நிலையம்) என வேறு மாகாணங்களில் இராணுவம் செய்யாத, வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இராணுவம் தமது வீரர்களுடன் பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்திலும் விடுமுறை தினங்களிலும் முடி திருத்தி வருகின்றனர். இதனால் தமது தொழில் பெரும் பாதிப்புக்கு உட்படுவதாக வவுனியா மாவட்ட அழகக சங்கப் பொதுக் கூட்டத்தில், அவ்அமைப்பின் தலைவர் க. நாகராசா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரது இவ்வாறான வர்த்தக நடவடிக்கைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறிய மக்களது வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கின்றது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவுள்ளது. வங்கிகள், நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் பெற்றுத் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் சராசரித் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகவுள்ளது.
வடக்கு, கிழக்கில் படையினர் பொதுமக்களது காணிகளில், பல ஏக்கர் விஸ்தீரமான தமது படைமுகாம்களை அமைத்துள்ளனர். மேலும், தமது படை முகாமை அண்டியும் வேறு இடங்களிலும் பௌத்த விகாரைகளை அமைத்துள்ளனர்; அமைத்தும் வருகின்றனர். இவற்றினால், தமிழ் மக்கள் மிகுந்த அச்ச நிலைமைக்குச் சென்றுள்ளனர். ஏனெனில், எதிர் காலங்களில் அவற்றை அண்மித்து சிங்களக் குடியேற்றங்கள் வந்து விடுமோ என உள்ளூர ஏங்குகின்றனர். அது, அவர்களின் பழுத்த ஆறு தசாப்தகாலப் பட்டறிவாகும். ஆனால், உதாரணமாகக் காலி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படையினர் இப்படி விகாரை கட்டினால், வழிபாடு செய்தால் அங்கு அதுசாதாரண விடயமாவதுடன், அப்பிரதேச மக்களும் இணைந்து கொள்வர்.
ஆனால், ஆளுநரோ வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றினால் தெற்கிலிருந்தும் இராணுவத்தை அகற்ற வேண்டும் எனக் கூறுவது, போரால் முழுதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் பகிரும் ஆரோக்கியமான கருத்தாடலாகத் தோன்றவில்லை.
தற்போது, கூட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்கும் பணிகள், நீதிமன்றத்தின் தடை உத்தரவுகளையும் மீறி இரவுபகலாக வேகமாக நடைபெற்று வருகின்றன. யார் விகாரையை அமைக்கின்றனர்? யார் பின்னணியில் உள்ளனர்? என்பவற்றுக்கு மேலதிகமாக நல்லிணக்கம் பற்றி வாய் கிழியக் கதறும் உண்மையான (?) உள்ளங்கள் தடுக்கவில்லை அல்லது தடுக்கத் தவறி விட்டார்கள் என்பதே நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொள்ளத் தமிழர் தயங்குகின்றார்கள். நீதி தேவதை கூட தமிழர் விடயத்தில் தோற்றுப் போனதாகவே தமிழர் கருதுகின்றனர்.ஆகவே, நல்லிணக்கம் தொடர்பான பிரத்தியேக வகுப்புக்களை முதலில் தென் பகுதியில் நடாத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கில் காணப்படும் அதீத இராணுவப் பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்து உள்ளமையால், அங்குள்ள மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருவதாக அண்மையில் பிரித்தானிய இராஜாங்க அமைச்சரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலாவாரியாக எடுத்துரைத்துள்ளது.
தமிழ் மக்களது அபிவிருத்திக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமே படைப் பிரசன்னம் உள்ளதென்றால், இப்படியாக வருவோர் போவோர் என எல்லோரிடமும் முறைப்பாட்டு விண்ணப்பம் முன்வைக்க வேண்டிய தேவை எவருக்கும் ஏற்படாது.
இது இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலர் பிரிவில் மாணிக்கமடு என்ற தமிழ்க் கிராமத்தில் உள்ள மாயக்கல்லி மலையில் அடாத்தாக கௌதமபுத்தர் சிலை நிறுவியுள்ளனர். அதை அகற்றுமாறு தமிழ், முஸ்ஸிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில், அதே அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர் தயாகமகே, “புத்தர் சிலையை அகற்றினால், தனது அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு, வீடு செல்வேன்” என்ற வாக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது?
ஆகவே, நாக்கிலிருந்து நல்லிணக்கம் வராமல் மனத்திலிருந்து, உள்ளத்திலிருந்து வருவதே நலன் பலன் தரக் கூடிய விசுவாசமான நல்ல இணக்கமாக அமையும்.
வவுனியாவில் கொக்குவெளி என்ற தமிழ்க் கிராமத்தை கொக்கெலிய எனப் பெயர் மாற்றம் செய்து அதிக அளவில் சிங்கள மக்களையும் சொற்ப தமிழர்களையும் குடியேற்றுவது தமிழர்கள் அத்தியாயத்தில் எவ்வாறு நல்லிணக்க கிராமமாக அமையும். வலி வடக்கில் இன்னமும் பல ஆயிரம் எக்கர் காணி படை வசமிருக்க, கடல் செல்வம் மிகுதியாகக் கிடைக்கும் மயிலிட்டி கடற்படையால் கடல்சார் சமூகத்துக்கு விடுவிக்கப்படாமலிருக்க, எவ்வாறு கீரிமலையில் நூறு வீட்டைக் கட்டிக் கொடுத்து ‘நல்லிணக்கபுரம்’ எனப் புது நாமம் சூட்டுவது?
“தமிழர்கள் தம்மை இலங்கையின் தேசிய இனமாக ஒருபோதும் அடையாளப் படுத்த முடியாது. பத்தாம் நூற்றாண்டில் இலங்கைக்குப் படையெடுத்த தமிழக மன்னனின் இராணுவத்தில் இடம்பெற்றிருந்த சிலர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக் குடியேறியதன் மூலமே, நிரந்தரமாக வாழும் தமிழ் இனம் ஒன்று இங்கு உருவானது” என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சம்பவங்கள் நடைபெறுகையில் எவ்வாறு தெற்கில் நல்ல இணக்கம் (?) ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம்.
கொடூர யுத்தத்தை வெற்றி கொண்டுள்ள போதும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான போரில் நாம் இன்னமும் வெற்றிபெறவில்லை என நாட்டை இருமுறை ஆண்ட முன்னாள் ஐனாதிபதியும் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவியுமான சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார். மேலும், அவர் நாம் ஏனைய இனத்தவரின் கலாசாரம், மொழிகள், சமூகச் செயற்பாடுகள் மற்றும் அச்சமூகங்களின் பன்முகத் தன்மையை மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் தீவிரமடைந்த இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் பொருட்டே இந்தியாவின் அழுத்தத்துடன், தமிழ் மக்களின் பூரண சம்மதமின்றி மாகாண சபை அமைப்பு முறை 1987 இல் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு (07) மாகாணங்களிலும் மாகாண முதலமைச்சரும் ஆளுநரும் ஒரே இனத்தைச் சார்ந்தவராக (மேல் மாகாணம் தவித்து) இருக்கின்றனர். அத்துடன் ஆளுநரை மத்திய (கொழும்பு) அரசாங்கம் நியமிக்கின்றது. அத்துடன் முதலமைச்சரும் மத்தியில் ஆளும் அரசாங்கம் சார்ந்த கட்சிக்காரர் என்பதால் அங்கு கருத்து முரண்பாடு இல்லை; அல்லது குறைவு எனலாம். ஆனால், வடக்கு, கிழக்கில் நிலைமைவேறு விதமாக உள்ளதைக் காணலாம்.
இவ்விரு மாகாணங்களிலும் மத்தியில் (கொழும்பு) ஆளும் அரசாங்கத்தைச் சாராத வேறு கட்சியைச் சார்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்க ஆளுநராகப் பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்கள் உள்ளர். ஆதலால், இவ்விருமாகாணங்களிலும் முதலமைச்சர், ஆளுநர் முரண்பாடு தொடர்வதைக் கண்கூடாகக் காணலாம்.
அவ்வகையிலேயே மஹிந்த ஆட்சியில் வடக்கு ஆளுநராக இருந்த இராணுவ பின்னணியைக் கொண்ட சந்திரசிறியை நீக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் பலதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அவை சாதகமாகப் பரிசீலிக்கப்படவில்லை. இவ்வேளையில், ஆட்சிமாற்றத்துடன் நடப்பு நல்லாட்சி அரசு ஆளுநராக கூரே அவர்களை நியமித்தது. அவர், தமிழர் சிங்களவர்களைக் கலப்புத் திருமணம் செய்தால் இனப்பிரச்சினை இலகுவாகத் தீரும் என முன்னர் தெரிவித்திருந்தார்.
அக்கருத்து தமிழ் மக்களது இதயத்தை இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு மனதளவில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இராணுவ வெளியேற்றம் தொடர்பிலான கருத்து. ஆக, மொத்தம் ஆளுநர்கள் மாறினாலும் மாற்றினாலும் அவர்கள் செல்நெறி மாறாதுபோலும். அவர்கள் தாங்களாகவே இவ்விதம் பேசுகின்றார்களா அல்லது தெற்கில் பெறுமதியான நற்சான்றுப் பத்திரம் பெறப் பேசுகின்றார்களா? என்பது புரியாது உள்ளது. எனவே, போர்த்துக்கேயரிடமிருந்து விடுபட்டு ஒல்லாந்தரிடம் அகப்பட்டதுபோலவே துயர்கதை தொடர்கிறது.
Average Rating