புலிகள் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம்: நல்லூரில் மக்கள் வெள்ளம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -101) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

Read Time:21 Minute, 18 Second

timthumb13.09.1987ல் புலிகள் அமைப்பினரால் ஐந்து கோரிக்கைகள், இந்தியத் தூதருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

1. பயங்கரவாத இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.

3. இடைக்கால இரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்றழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் நிலை கொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

இக்கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலைத் தருமாறு இந்தியத் தூதருக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தியத் தூதர் திக்ஷித் புலிகளின் கோரிக்கை தொடர்பாக பதில் எதனையும் சொல்லவில்லை.

புலிகள் இயக்கத்தினர் தன்னை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டார் திக்ஷித்.

தாம் அனுப்பிய கோரிக்கைகளுக்கு பதில் தரப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிப்பது என்று புலிகள் தீர்மானித்திருந்தனர்.

13.9.87 அன்று புலிகள் இயக்க பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தியா தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலளிக்கத் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திட்டமிட முன்பாக, யாழ் குடாநாட்டில் உள்ள இராணுவ முகாம்கள் முன்பாக பொதுமக்களை நிறுத்தி மறியல் போராட்டங்களை நடத்தினார்கள் புலிகள் இயக்கத்தினர்.

இந்தியப் படையினர் இலங்கைப் படையிகளுக்கு ஆதரவாக நடக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியே மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

யாழ் கோட்டையில் உள்ள இந்திய இராணுவ முகாம் முன்பாக நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் உரையாற்றினார்.

திலீபனின் உரையில் இந்தியா மீதான கண்டனம் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

“இந்த யாழ்ப்பாணக் கோட்டையிலே சில காலம் முன்பாக தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியை போர்த்துக்கேயர் பறித்தொடுத்தனர். போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரும் கைப்பற்றிக் கொண்டனர்.

ஆங்கிலேயரிடமிருந்து சிங்களவர்கள் கைப்பற்றினர். இன்று இந்தியர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கோட்டையிலே தமிழ்க்கொடி புலிக்கொடி பறக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

எங்கள் விடுதலைப்போராட்டத்தை மழுங்கடிக்கவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியப்படை வந்து சேர்ந்தது.

விடுதலை கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். இந்தக் கோட்டையிலே தமிழர்கள் சுதந்திரக் கொடி, புலிக்கொடி பறக்கவேண்டும்” என்று உணர்ச்சிகரமான உரையாற்றினார் திலீபன்.

இந்தியப்படைகள் வெளியேற வேண்டும் என்று புலிகள் இயக்கத்தினரின் தரப்பில் இருந்து வெளிப்படையாகக் கூறப்பட்டது அப்போதுதான்.

15.09.1987 காலை 9.45 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ‘கந்தன் கருணை’ என்னும் இல்லத்திலிருந்து வோக்கி டோக்கியுடன் புறப்பட்டார் திலீபன்.

வேனில் ஏறுவதற்கு முன்னர் வோக்கி டோக்கி மூலம் பிரபாகரனுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு ஏறுகிறார்.

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கூடிநின்று திலீபனை வழியனுப்பி வைத்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாகத் தான் ‘உண்ணாவிரத மேடை’ அமைக்கப்பட்டிருந்தது.

வேனில் வந்து திலீபன் இறங்கியதும் பிரதித் தலைவர் மாத்தையா திலீபனை கட்டியணைத்து வரவேற்றார்.

வயதான ஒரு தாயார், கண்களில் கண்ணீருடன் திலீபனின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு குங்குமம் இட்டு வாழ்த்தினார்.

காலை 9.55 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு திலீபனை அழைத்துச் சென்று அமரவைத்தார் மாத்தையா.

உண்ணாவிரத மேடையருகே இன்னுமொரு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பமானதும், அருகேயுள்ள மேடையில் கூட்டம் ஆரம்பமானது.

கவிஞர் காசி ஆனந்தன், நடேசன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் ஏன், எதற்காக நடத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்கும் வகையில் உரையாற்றுகின்றனர்.

நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பது என்பதுதான் திலீபனின் முடிவு.

புலிகள் இயக்கத்தின் இரண்டாவது உண்ணாவிரதப் போராட்டம் அது.

1986ம் ஆண்டு நவம்பரில் தமிழ்நாட்டில் பிரபாகரன் – உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தம்மிடமிருந்த கைப்பற்றிய ஆயுதங்களை திருப்பிதத் தருமாறு கோரிக்கை விட்டு பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்

நீராகாரம் அருந்தாமல்தான் பிரபாகரனும் உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளே தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் தலையீட்டால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இரண்டாவது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் திலீபனால் நடத்தப்பட்டது.

உண்ணாவிரதமிருந்த திலீபனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

தாமாக வந்து சென்ற மக்கள் ஒருபுறுமிருக்க, புலிகள் இயக்கத்தினரும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களை மினி பஸ்களில் ஏற்றிவந்து உண்ணாவிரதத்தைக் காண வைத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் இருந்து மாணவ மாணவிகளை உண்ணவிரதப் போராட்டத்தைக் காண்பதற்கு அனுப்பிவைக்குமாறும் புலிகள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.

திலீபனுக்கு ஆதரவாக பலர் தாமாகவே முன்வந்து அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

முகாமுக்குள் மக்கள்

யாழ் குடாநாடெங்கும் துக்கநாள் போலவே நிலைமைகள் காணப்பட்டன. கிளிநொச்சிக்கு அப்பால் ரயில் போக்குவரத்து நடத்த முடியவில்லை.

இந்தியப் படையினருக்கு எதிராக வீதிகளில் மக்கள் கோஷமிட்டனர்.

மன்னாரில், தலை மன்னார் வீதியில் இருந்த இந்தியப்படை முகாமை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.

ஊர்வலத்தின் பின்னால் புலிகள் இயக்கத்தினர் வாகனம் ஒன்றில் வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது.

ஒலிபெருக்கி மூலம் இந்தியப் படைக்கு எதிரான கோஷங்களைச் சொல்ல, ஊர்வலத்தினர் அதனை திருப்பிச் சொல்லிக் கொண்டுவந்தனர்.

முகாமை ஊர்வலத்தினர் நெருங்கியதும் “முகாமுக்குள் செல்லுங்கள்” என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

முகாமுக்குள் செல்ல முற்பட்ட மக்களை இந்தியப் படைவீரர் ஒருவர் குறுக்கே நின்று வழிமறித்தார்.

“வரவேண்டாம். உள்ளே வரவேண்டாம்” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்ததை மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த வீரரை தள்ளிக் கொண்டு மக்கள் உள்ளே புகுந்தனர்.

முகாமுக்குள் இருந்த வீரர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். உள்ளே புகுந்தவர்களில் முன்வரிசையில் நின்றவர் சூடுபட்டு கீழெ விழ ஏனையோர் கலைந்து ஓடினார்கள்.

செப்டம்பர் 18ம் திகதி, வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறையில் மற்றொரு சம்பவம்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை நோக்கி ஆர்ப்பாட்டம் செய்தபடி மக்கள் திரண்டு சென்றனர். புலிகள் இயக்க உறுப்பினர்கள் முன்னணியில் நின்று ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பொலிஸ் நிலையத்துக்குள் மக்கள்

பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த மக்கள் அங்கிருந்து பொலிசாரை வெளியேறுமாறு கூறிக்கொண்டே, பொலிஸ் நிலையத் தளபாடங்களை அடித்து நொறுக்கினார்கள்.

திரண்டு வந்த மக்களைக் கண்டதும் பொலிசார் பயந்துவிட்டனர். மறுபேச்சே இல்லாமல் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு புறப்பட்டனர்.

பொலிசார் ஊர்வலமாக
உடமைகளைத் தலையில் சுமந்து கொண்டு பருத்தித்துறை இராணுவ முகாமுக்கு நடந்து செல்லுமாறு பொலிசாரிடம் கூறப்பட்டது.

அதன்படியே பொலிசார் நடந்து செல்ல அவர்களைக் கேலிசெய்தபடி பருத்தித்துறை இராணுவ முகாம் வரை ஊர்வலமாக அழைத்துச்சென்று விட்டு வந்தனர். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் தீயிடப்பட்டது.

பருத்திதுறை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட போதும், பொலிசார் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்ப்ட்ட போதும் இந்தியப் படையினர் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர்.

திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாக ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தபோதும், நிலமை விபரீதமாக மாறுகிறது என்பதை பின்னர் இந்தியப்படை அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.

தம்மை ஆதரவாக வரவேற்ற் மக்களை தமக்கு எதிராக திருப்பிவிட புலிகள் இயக்கத்தினர் மிகக் கச்சிதமாக காரியமாற்றுகின்றனர் என்பது அவர்களுக்கு புரியத் தொடங்கியது.

திலீபனைப் பார்வையிடவும் இந்தியப் படை அதிகாரிகள் சிலர் சென்றனர்.

செப்டம்பர் 15ம் திகதி திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த தினத்தன்று இரவு பதினொரு மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார் பிரபாகரன்.

திலீபனின் தலையை வருடி, அவரது நிலையை அறிந்துவிட்டுச் சென்றார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தமையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இரண்டாவது நாளே சிரமப்பட்டார் திலீபன்.

இரண்டாவது நாள் உண்ணாவிரத மேடையில் இருந்தபடியே மைக்கில் உரையாற்றினார் திலீபன்.

“எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து கொண்டு பேசுகிறேன்.

நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனா என்பது தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கிறோம். அறுநூற்று ஐம்பது பேர் இன்றுவரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒருவரி கூறினான். நான் அவனுடன் இறுதிவரை இருந்தேன்.

“நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன்.

மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காண முடியாது என்பதே ஒரே ஒரு ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச் சென்றான்.

மரணித்த அறுநூற்று ஐம்பது பேரும் அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரின் அனுமதியைக் கேட்டேன். அப்போது தலைவர் கூறிய வார்த்தைகள் எனது நினைவில் உள்ளன.

“திலீபா நீ முன்னால் போ, நான் பின்னால் வருகிறேன்” என்று அவர் கூறினார்.

இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத ஒரு தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரும்.

அதனை வானத்தில் இருந்து, அந்த அறுநூற்று ஐம்பது போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.

உண்மையான, உறுதியான இலட்சியம் எமது இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் அதுதான்”

திலீபன் பேசி முடித்தபோது கூடியிருந்த மக்கள் கண்ணீர் விட்டனர். கதறியழுதனர்.

மூன்றாம்நாள்

திலீபனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. கொஞ்சமாவது தண்ணீர் குடித்தால்தான் உடல்நிலை ஓரளவாயினும் தேறும் என்று நினைக்கின்றனர் சிலர்.

அதனை திலீபினிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கம்.

திலீபனுக்கு அருகிலிருந்த மேடையில் கூட்டத்தில் உரையாற்றிய கருணானந்தசிவம் என்னும் ஆசிரியர் தனது பேச்சோடு பேச்சாக அந்தக் கோரிக்கையை முன்வைத்துவிட்டார்.

“திலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. தமிழழனத்துக்கே சொந்தமானவர்”

கருணானந்தசிவம் அதைச் சொன்னபோது திலீபனின் முகத்தில் புன்னகை அரும்பியது. அடுத்ததாகச் சொன்னார் “அப்படிப்பட்ட திலீபன் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும்.

இது என் வேண்டுகோள் மட்டுமல்ல. இங்கு வந்துள்ள இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளுமாகும்.”

அதைக் கேட்டதும் திலீபனின் முகம் வாடிவிட்டது. மைக்கை தன்னிடம் வாங்கித்தருமாறு கேட்டார்.

“இந்த மேடையில் பேசிய ஒரு அன்பர் நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப்படுத்துவது போல இருந்தது. நான் இநத மேடையில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதம் ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன்

நீங்கள் இந்த திலீபனை நேசிப்பது உண்மையானால், என்னை யாரும் நீராகாரம் அருந்தும்ப வற்புறுத்தவேண்டாம்.

என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால், இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்”

அதன் பின்னர் நீராகாரம் அருந்தும்படி திலீபனை யாரும் வற்புறுத்தவில்லை.

நான்காம் நாள்

உண்ணாவிரத மேடையில் இருந்த கட்டிலில் சுருண்டு கிடந்தார் திலீபன். நான்காவது நாள் திலீபன் ஆற்றிய உரை உருக்கமாக இருந்தது.

“அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையும் முன்பாக பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகமாக இருக்கிறேன். இன்று தாராளமாகப் பேச முடிகிறது. போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள். ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்கவேண்டாம். நானும், தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.

எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவையும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்.”

நான்காம் நாள் இரவு திலீபனின் உடலில் திரவநிலை குறையத் தொடங்கியது. இரண்டு நாட்களாக அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை.

தொடர்ந்து இவ்வாறே இருந்ததால் செல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்கு நாட்கள் சென்றநிலையிலும் இந்திய அரசோ, இந்தியத் தூதர் திக்ஷித்தோ அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.

மக்கள் வெள்ளத்தால் நல்லூர் வீதிகள் நிரம்பிவழிந்தன.

எங்கும் ஒரே பதட்டம். திலீபன் பலியானால் புலிகள் சும்மாயிருக்கமாட்டார்கள். போர்தான் தொடங்கப்போகிறது என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

அரசியல் தொடர்
எழுதுவது -அற்புதன்

தொடரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் சோதனையின்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்த பெண் – சிறுவன்…!!
Next post என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு ‘கிறிஸ்துமஸ்’ விருந்தளித்த தனுஷ்…!!