பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை: உறவினர்கள் சாலைமறியல்…!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 15). நெய்வேலி 10-வது பிளாக்கில் உள்ள என்.எல்.சி. பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் உள்ள கடைக்கு ஜெயப்பிரகாஷ் சென்றான். கடையின் உரிமையாளர் பழனியப்பனுக்கும், ஜெயப்பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஜெயப்பிரகாசை பழனியப்பன் கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஜெயப்பிரகாஷ் படுகாயம் அடைந்தான். உடனே பழனியப்பன் அங்கிருந்து ஓடி விட்டார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கீழே விழுந்தான். அவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் மீட்டு நெய்வேலி என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தான்.
கொலை குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஜெயப்பிரகாஷ் எதற்காக கொலை செய்யப்பட்டான்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த கொலை தொடர்பாக கடை உரிமையாளர் பழனியப்பனை தேடிவந்தனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பழனியப்பன் சிகிச்சை பெற வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் பழனியப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் மாணவர் கொலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் முன்னாள் மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் கூறும்போது, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து இருக்கிறோம். விரைவில் கைது செய்வோம் என்றார்.
இதைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள செல்போன் டவரில் பண்ருட்டி ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் பிரகாஷ், பண்ருட்டி நகர பொருளாளர் இளையராஜா ஆகியோர் ஏறி கோஷமிட்டனர். அவர்கள் மாணவரை கொலை செய்த குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் இங்கிருந்து கீழே குதித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முத்தாண்டிக்குப்பத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Average Rating