புதிய உத்தியுடன் தொடரும் கதை…!! கட்டுரை
ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் அரசியல்வாதியும் இரவு பகலாகப் பணிபுரிந்தாலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில், பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும், செயலாளர் பதவிப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டுள்ளமை, மிகப் பெரிய துரதிர்ஷ்டமன்றி வேறெதுவாகவும் இருக்க முடியாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மட்டுமன்றி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் தலைவர் – செயலாளர் முரண்பாடுகள் உக்கிரமடைந்திருக்கின்றன. தலைவரைப் பிரதான பலமாக, கதாபாத்திரமாகக் கொண்டு பயணிக்கும் ஒரு கட்சியாக, மக்கள் காங்கிரஸ் இருக்கின்றமையால் அக்கட்சியின் செயலாளர் பதவி விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்துக் கொண்டு பயணிப்பதாகச் சொல்ல முடியும்.
ஆனால், மு.கா கட்சி என்பது, தலைவரில் பெருமளவுக்குத் தங்கியிராத, தன்னளவில் பலம்பொருந்திய ஓர் இயக்கமாக இருக்கின்றமையால், தலைவர் என்னதான் உறுதியாக இருப்பதாகக் கூறிக்கொள்கின்ற போதும், உள்ளக முரண்பாடுகளால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைச் சமாளிப்பதில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளமை கண்கூடு.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு காலக்கெடு விதித்திருந்த நிலையிலேயே கடந்த புதன்கிழமை இரவு கட்சியின் உயர்பீடக் கூட்டம் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. கட்சியின் செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் பதவிகளுக்காக முன்னர் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு விளக்கமளிப்பது என்றும், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியுடன் சுமுகமாகப் பேசுவது என்றும் முடிவுவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இலங்கை முஸ்லிம்களின் மூத்த முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டிருக்கின்ற உள்ளகப் பனிப்போர் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் அன்றாட அரசியல், சமூக வாழ்வில் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. உள்ளகப் பிரச்சினைகளையே தீர்த்துக் கொள்ள இயலாத இந்தக் கட்சி, தம்முடைய அபிலாஷைகளை, இமாலயப் பிரச்சினைகளைக் காலக்கெதியில் தீர்த்து வைக்கும் என நம்பிக் கொண்டிருக்க முடியுமா என்று பெருமளவிலான மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், செயலாளர் நாயகம் யார் எனத் தீர்மானித்து, அறிவிக்குமாறு குறிப்பிட்டு, தேர்தல்கள் ஆணைக்குழு, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் இவ்விவகாரம் தொடர்ந்தும் இழுபறியாகச் சென்று கொண்டிருக்கின்றமை, மக்களின் மனக்குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது.
2015 நவம்பர் மாதம் கண்டியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தத்தின் பிரகாரம், ஏற்கெனவே இருக்கும் செயலாளர் நாயகம் எனும் பதவிக்கு மேலதிகமாக உயர்பீடச் செயலாளர் என்ற பதவி ஸ்தாபிக்கப்பட்டது. அப்பதவிக்கு மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டார். இவர் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு ஒத்தாசையாகச் செயற்படுவார் என்று சொல்லப்பட்டது. மன்சூர் ஏ.காதர் ஒரு வருடகாலத்துக்கு நியமிக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டதுடன் அவருக்கு மாதாந்தச் சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இதன் பிறகு தேர்தல்கள் ஆணையாளருக்குக் கட்சித் தலைவர் அனுப்பிய அறிக்கையில், புதிய பதவி நிலைகள் தொடர்பில் ஆணையாளரைப் பிழையாக வழிப்படுத்தும் தகவல்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அதாவது, கட்சியின் செயலாளர் நாயகம் என்று ஒருவர் இருக்க, அவரே தேர்தல் ஆணையாளருடன் தொடர்புகளைப் பேணுவது வழக்கமாக இருக்கும் நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட உயர்பீடச் செயலாளரே கட்சியின் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், இது ஏகமனதான தீர்மானம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மு.கா அதிருப்தி அணியினர் தகவல்களைக் கசிய விட்டிருந்தனர்.
ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த ஹசன் அலி, இது தொடர்பாகக் கொஞ்சம் கவனம் செலுத்தினார். அவர், தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டபோது, மு.கா தலைமை சூட்சுமமாகச் செய்த மேற்குறிப்பிட்ட காரியங்கள் சில உண்மையெனத் தெரியவந்தன.
அத்தோடு, ஒரு செயலாளரைப் புதிதாக நியமிப்பது என்றால், ஏற்கெனவேயுள்ள செயலாளர் நாயகமான ஹசன் அலியின் சம்மதம் தேவை என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தெளிவுபடுத்தல்களைக் கோரியும் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு கடிதத்தை ஹக்கீமுக்கு அனுப்பியுள்ளமையும், அதன் பிரதி தனக்கு அனுப்பப்பட்டும், அது தாறுஸ்ஸலாமில் இருந்து தனக்கு ஒப்படைக்கப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணைக்குழுவின் மூலம் ஹசன்அலி அறிந்து கொண்டார்.
இதுவே, அவர் ஹக்கீமுக்கு எதிரான பனிப்போரில் களமிறங்க உடனடிக் காரணமாகியது எனலாம். அதன்பின் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து ஹசன்அலியின் பெயர் நீக்கப்பட்டது. இதற்கெதிராக அவர் தேர்தல் ஆணையாளருக்குத் தனது ஆட்சேபத்தைத் தெரிவித்துக் கடிதம் ஒன்றை எழுதினார். தேர்தல் ஒன்று நெருங்கிவரும் நிலையில், அடுத்த பேராளர் மாநாடு இடம்பெறுவதற்கு முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து சட்ட ரீதியாகத் தனது பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள ஹசன் அலி முயற்சி செய்துள்ளார் என்றே கருத முடிகின்றது.
இதற்குப் பிற்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பிய கடிதத்தில், பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு கட்சிக்கு இரு செயலாளர்கள் இருக்க முடியாது’ என்ற அடிப்படை விதியைக் குறிப்பிட்டிருந்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்,‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2015.11.07 மேற்கொண்ட யாப்புத் திருத்தத்தின் மூலம், கட்சியின் செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரு பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை’ சுட்டிக்காட்டியுள்ளார்.
‘எனவே செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை 15.12.2016 இற்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் பதவிகளில் இரண்டில் ஒன்றை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு’ கோரியிருந்தார்.இந்நிலையில் மு.காவின் செயலாளரின் பெயர் தேர்தல் ஆணைக்குழு இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக Rival factions claiming leadership என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசியப்பட்டியல் எம்.பி தருவதாகச் சொல்லி ஏமாற்றப்பட்டதாகக் கூறப்பட்டதிலிருந்து மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் உறவு கசக்கத் தொடங்கி விட்டது. செயலாளர் நாயகத்தின் அதிகாரங்களைத் தலைவர் ஹக்கீம் குறைத்தமையும், அதனால் விசனமுற்ற ஹசன் அலி கருத்துக்களை வெளியிட்டமையும் பரஸ்பரம் இருவரும் பகைமை பாராட்டிக் கொள்ளும் நிலையை உருவாக்கியது.
எவ்வாறிருப்பினும், ஹசன் அலி, கட்சியோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை 16 வருடங்களுக்கும் மேலாக அறிந்துணர்ந்த ஹக்கீம், அவரோடு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முயற்சித்தார். ஆனால், செயலாளருக்குரிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்நிபந்தனையில் ஹசன் அலி விடாப்பிடியாக இருந்தார். உடனடியாக அதிகாரத்தை வழங்குவது சாத்தியமில்லை. எனினும், குறைந்த பட்சம் மன்சூர் ஏ.காதரைப் பதவி விலக்கியாவது ஹசன் அலியைச் சமாளிக்கத் தலைவர் முயற்சி எடுக்கவில்லை.
பழிவாங்கப்பட்ட ஹசன் அலிக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கினால், அவர் கட்சிக்கு உள்ளே வந்து தனக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டுவாரோ எனத் தலைவர் எண்ணியிருக்கலாம். அதேபோல் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடங்கலாக இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற விடயங்களில் தன்னுடைய விருப்பப்படி செயற்படச் செயலாளர் நாயகம் விடமாட்டார் என எண்ணியிருக்கவும் கூடும். அதனடிப்படையிலும் சமரச முயற்சிகள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று கட்சிக்குள் இருக்கும் விடயமறிந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ? அடுத்த தேர்தல் வரைக்கும் அல்லது பேராளர் மாநாடு வரைக்கும் எவ்வித பிரச்சினையும் இன்றிக் கட்சியைக் கொண்டு செல்லவே தலைவர் ஹக்கீம் விரும்பியிருக்கின்றார். ஆனால், தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் அதில் சிக்கல்களை உண்டு பண்ணியிருக்கின்றது.
செயலாளருடன் சமரசமாகிப் போவதற்கு மீண்டும் கடந்த சில நாட்களாக மு.கா தலைவர் முயற்சிகளை மேற்கொண்டதாக அறிய முடிகின்றபோதும், இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவோ உடன்பாட்டுக்கு வரவோ இல்லை. எது எப்படியாயினும்,தேர்தல் ஆணைக்குழு வழங்கிய கால அவகாசம் நேற்று 15ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது.
அதற்கு முன்னைய தினம் (14) மு.காவின் உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு ஆரம்பமான கூட்டம் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த வேளையிலேயே இக்கூட்டம் நடைபெற்றிருக்கின்றது.
இக்கூட்டத்தில் ஹசன் அலி விடயம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அவருடன் பேசுவதற்குத் தான் பலமுறை முயற்சி செய்தும் அது சாத்தியப்படவில்லை என்றும், அவருக்குத் தேசியப்பட்டியல் எம்.பி தருவதாகச் சொல்லியும் அவர் சமரசமாகவில்லை என்றும் தலைவர் ஹக்கீம் இங்கு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் நாயகம் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பது என்றும், ஹசன்அலியை உடனடியாகச் சந்தித்துப் பேசுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றும் இங்கு ஹக்கீம் தெரிவித்ததாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இதேவிடயங்களை ஊடகவியலாளர்களுக்கும் தெரிவித்த மு.கா தலைவர், “செயலாளர் நாயகம் ஹசன் அலி தனது நிலைப்பாடுகளைத் தெரிவிக்க விரும்பிய இடத்தில், அவர் என்னை நாளை (15 ஆம் திகதி) சந்தித்துப் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என்ற செய்தி, இன்று (14 ஆம் திகதி) அனுப்பப்படும்” என்றார். யாப்பு மாற்றம் பற்றிய விடயங்கள் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில் 2017.01.02 ஆம் திகதி கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்தார்.
ஹக்கீமும் ஹசன் அலியும் கடந்த சில நாட்களாகப் பரஸ்பர விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்றாலும், இந்தக் கௌரவச் சமரில் ஆளை ஆள் வீழ்த்துவதற்கான அடித்தளைகளைத் தயார்நிலைப் படுத்தியிருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது. ஹசன் அலி விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என்று மு.கா தலைவர் கடுமையான மந்திராலோசனைகளை நடத்தியிருப்பதுடன், மறுபக்கமாகச் செயலாளர் ஹசன் அலியும் தனது சொந்த மாவட்டத்தில் ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்திவிட்டே கொழும்பு திரும்பியிருந்தார். ஆனால், தாறுஸ்ஸலாமில் இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லை.
மு.காவின் செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்ற இரண்டில் ஒரு பதவியை மாத்திரம் முறையாக ஸ்தாபிக்கும்படி தேர்தல்கள் ஆணைக்குழு பணித்திருக்கின்றமையால், இக்காரியத்தை நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்கள் காலக்கெடுவுக்குள் செய்து முடிப்பது சற்றுச் சிரமமான காரியமாகும். ஏனெனில், அதனைச் செய்வதாயின் ஒரு யாப்புத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். யாப்பைத் திருத்துவதென்றால் அதை ஒரு பேராளர் மாநாட்டிலேயே செய்ய வேண்டும். ஆகவே, இப் பணிகளைக் குறுகிய காலவரையறைக்குள் செய்வது சிரமமான விடயமாகும்.
ஆனால், தேர்தல் ஆணைக்குழுவிடம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான காலத்தை நீடித்துத் தருமாறு கோர முடியும். அக்காலப் பகுதிக்குள் குறிப்பிட்ட பதவிக்கு ஹசன் அலியையா, மன்சூர் ஏ. காதரையா நியமிப்பது என்ற ஏகோபித்த முடிவை முறையாக எடுக்க முடியும்.
ஆனால், உயர்பீடக் கூட்டம் இடம்பெற முன்னதாக, மு.கா தலைவர் வெளியிட்டிருந்த கருத்து அவரது மனவோட்டத்தை ஓரளவுக்குப் படம்போட்டுக் காட்டியது. “தேர்தல் ஆணையாளர் காலம் கடந்து கருத்து வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டார். ‘தேர்தல் ஆணையாளரைத் தெளிவுபடுத்தல்’ என்ற நிலைப்பாடும், அதே மனவோட்டத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின், எடுக்கப்பட்ட பழைய தீர்மானங்களை நியாயப்படுத்துவதற்கான முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படப் போகின்றது.
ஆயினும், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நியதிச்சட்ட ஏற்பாடுகளைப் பரிசீலித்த பின்னரே, காலஅவகாசம் வழங்கும் கடிதத்தை அனுப்பியிருக்கின்றார், என்ற அடிப்படையில் நோக்கினால், நமக்குள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேறு வழிகள் இருக்கின்ற போது, தேர்தல் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிப்பது பிரச்சினைகளைச் சுமுகமாக்குமா என்ற சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.
இவ்விவகாரம் செயலாளரைப் போலவே, தலைவருக்கும் தன்மானப் பிரச்சினையாக மாறிக் கொண்டிருக்கின்றது. முடிவுகளை எல்லாம் சரிப்படுத்தி, எல்லோரையும் சமாளிக்கும் பாங்கில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் வேறு ஒரு சாணக்கியமான காய்நகர்த்தலை மேற்கொள்ள முனைவதாகத் தெரிகின்றது.“கட்சியை விட்டு வெளியில் செல்லவோ, சட்டத்தின் முன் கட்சியை நிறுத்தவோ மாட்டேன்” என அறிவித்திருக்கின்ற ஹசன் அலி, அதேநிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பாராயின் அது கட்சி நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாகச் சவாலுக்கு உட்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகும்.
ஆனால், இப்பிரச்சினைக்கு அறுதியான தீர்வெடுக்காமல், இரண்டு நியமனங்களும் சரியென வாதிடுவதும், அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்ட பதவியில் தொடர்ந்தும் ஹசன் அலியை வைத்திருப்பதும், இருவரும் வேறுவேறு மூலைகளில் இருந்து கொண்டு ‘அணில்விட்டு மாங்காய் ஆய்வதற்கு’ முனைவதும் – பிரச்சினைகள் காலக்கெதியில் தீர்க்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது.
அப்படிப் பார்த்தால்,வேறு ஒரு வகையான உத்தியுடன் நகர்த்தப்படும் தொடர் கதையாகவே கட்சியின் உள்முரண்பாடுகள் அமையும்.
Average Rating