கோவையில் மூதாட்டியை கொலை செய்த மணிப்பூர் வாலிபர் கைது..!!
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு முதலாவது விரிவாக்க வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 85) கடந்த 19-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
கணவர் மறைவுக்கு பிறகு மகள் பராமரிப்பில் இருந்த அவர் தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. கையில் அணிந்திருந்த 2 பவுன் வளையல்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பழனியம்மாள் வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் பலர் தங்கி உள்ளனர். இதில் 15-க்கும் மேற்பட்ட வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மணிப்பூரை சேர்ந்த சமீர் கான்(வயது 23) என்பவர் பழனியம்மாளை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வட கோவை பகுதியில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் ஜீப்பில் அங்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடிய அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றார். அப்போது அவருக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு ஓட்டல் வேலைக்கு வந்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை. கோவையில் எனது உறவினர்களும், நண்பர்களும் தங்கி உள்ளனர். எனவே கோவையில் வேலை தேடலாம் என நினைத்து சில நாட்களுக்கு முன்பு கோவை வந்து காந்தி புரத்தில் உறவினர் வீட்டில் தங்கினேன்.
கடந்த வாரம் பழனியம்மாள் வீட்டருகே வசிக்கும் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் பிறந்த நாள் விருந்து நடந்தது. இதில் பங்கேற்று விட்டு திரும்பிய போது சாலையை ஒட்டியுள்ள பழனியம்மாள் வீட்டில் நள்ளிரவு நேரத்திலும் லைட் எரிவதை கண்டேன்.
இதுகுறித்து எனது நண்பரிடம் கேட்ட போது அந்த வீட்டில் ஒரு மூதாட்டி மட்டும் தனியாக வசிப்பதாக கூறினார். இதைக்கேட்ட எனக்கு விபரீத எண்ணம் தோன்றியது. சம்பவத்தன்று நான் மது அருந்தினேன். நள்ளிரவில் போதை தலைக்கேறியதும் பழனியம்மாள் வீட்டுக்குள் சென்றேன். அங்கு பழனியம்மாளை பலாத்காரம் செய்ய முயன்றேன். அப்போது அவர் சத்தம் போட்டார். ஆத்திரத்தில் கீழே கிடந்த டவலை எடுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் நகைக்காக தான் இந்த கொலை நடந்தது போல தெரிவதற்காக அவரது கையில் இருந்த வளையலை எடுத்துக் கொண்டு சென்று விட்டேன்.
கொள்ளையர்கள் தான் இந்த கொலையை செய்திருப்பார்கள் என போலீசார் நினைப்பார்கள் என்பதால் என் மீது சந்தேகம் வராது என கருதினேன். ஆனால் போலீசார் துப்புதுலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
போலீசார் துரத்திய போது கீழே விழுந்து காயம் அடைந்த சமீர்கானை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப் பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Average Rating