வெடி மருந்துகளுடன், புலிகள் இயக்கத்தினருக்கு பர்மாவில் இருந்து வந்த ஆயுதக்கப்பல்..!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -100) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
• புளொட் அமைப்பினரான வாசுதேவா குழுவினரை பேச்சு நடத்துவதாக தந்திரமாக அழைத்து, வாகனம் வந்ததும் வழிமறித்து புலிகள் சுட்டுக்கொன்றனர்.
• தன்னால் முன்னர் ஏற்றி வைக்கப்பட்ட புலிகள் இயக்கக் கொடியை இழுத்துக் கிழித்துவிட்டு, அலுவலகத்தில் இருந்தவர்களை திட்டித்தீர்த்து விட்டுச் சென்ற வாசுதேவாவின் தாயார்,
• ராஜீவ்காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட 50 இலட்சம் பணத்தின் முதலாவது பகுதியை இந்தியா கொடுக்காமல் தாமதித்தது.
தொடர்ந்து…
மட்டக்களப்பில் தாக்குதல்
புளொட் இயக்கத்தின் அரசியல் துறைச் செயலர் வாசுதேவாவும், படைத்துறைச் செயலர் கண்ணனும் மட்டக்களப்பில் இருந்தனர். இருவரையும் ஒன்றாகவே தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர் புலிகள் இயக்கத்தினர்.
புளொட் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு புலிகள் இயக்கத்தினர் தயாராக இருப்பதாக வாசுதேவாவுக்கு ஒரு தகவல் கிடைத்தது.
தனது சகோதரர் பரமதேவா புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்பதால் தன்னோடு பேசுவதற்கு புலிகள் விரும்பக்கூடும் என்று வாசுதேவாவும் நம்பி விட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டக்களப்பில் புலிகள் இயக்கக் காரியாலயத் திறப்பு விழாவில் பரமதேவா, வாசுதேவா ஆகியோரின் தாயார்தான் புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.
பலியான பரமதேவாவை கௌரவிக்கும் முகமாக அவரது தாயாரைக் கொடியேற்ற வைத்தனர் புலிகள் இயக்கத்தினர். தன்னுடன் பகைமை பாராட்டமாட்டார்கள் என்று வாசுதேவா நினைக்க அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
செப்டம்பர் 13ம் திகதி காலை பாசிக்குடா கடற்கரையில் குளித்துவிட்டு வாசுதேவாவும், கண்ணனும் புளொட் உறுப்பினர்கள் சிலரும் வாகனத்தில் சென்றனர்.
வாசுதேவா குழுவினரை எதிர்பார்த்து கும்புறு முல்லைச் சந்தியில் புலிகள் இயக்கத்தினர் காத்திருந்தனர். வாகனம் வந்ததும் வழிமறித்த புலிகள் வாசுதேவா குழுவினரை சுட்டுக்கொன்றனர்.
வாசுதேவா, கண்ணன் ஆகியோரும், சுபாஷ் , ஆனந்தன் ஆகிய புளொட் இயக்க முக்கிய உறுப்பினர்களும் பலியானார்கள்.
வாசுதேவா ஆரம்பத்தில் தமிழ் இளைஞர் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
கூட்டணியின் போக்கை நிராகரித்து இளைஞர் பேரவையின் ஒரு பகுதியினர் பிரிந்தனர். ‘இளைஞர் பேரவை விடுதலை அணி’ என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.
அதில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வாசுதேவா.
அதன் பின்னர் புளொட் இயக்கத்தின் ஒரு பிரிவான தமிழ் ஈழ விடுதலைக் கழகத்திலும் வாசுதேவா செயற்பட்டார். ‘புளொட்’ இயக்கத்துக்குள் ஏற்பட்ட உள் முரண்பாடுகளின் போது வாசுதேவா உமாமகேஸ்வரனின் பக்கம் இருந்தார்.
கண்ணன் புளொட் இயக்க உருவாக்கத்திலும் பங்குகொண்டவர்.
‘புதிய பாதை’ பத்திரிகை ஆசிரியர் சுந்தரம் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ‘புதிய பாதை’யை தொடர்ந்து வெளியிடுவதில் முக்கிய பங்கெடுத்தவர் கண்ணன். ஜோதீஸ்வரன் என்பது அவரது சொந்தப்பெயர்.
கண்ணனை சென்னையில் வைத்து புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது தொடபாக முன்னர் விபரித்திருந்தேன்.
தாயாரின் கோபம்
வாசுதேவா, கண்ணன் ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து புலிகள் இயக்கத்தினர் கொலை செய்துவிட்டதாக புளொட் கடுமையாகக் குற்றம் சாட்டியது.
செய்தியறிந்த வாசுதேவாவின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.
வாசுதேவா, கண்ணன் ஆகியோரின் உடல்களை புலிகள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
வாசுதேவாவின் தாயார் புலிகள் இயக்க அலுவலகத்துக்கு சென்றார். “என் மகனை எதற்காகக் கொலை செய்தீர்கள்.?” என்று கேட்டார்.
வாசுதேவாவின் உடலை ஒப்படைக்கவும் புலிகள் இயக்கதினர் மறுத்துவிட்டனர்.
கோபம் அடைந்த வாசுதேவாவின் தாயார், தன்னால் முன்னர் ஏற்றிவைக்கப்பட்ட புலிகள் இயக்கக் கொடியை இழுத்துக் கிழித்துவிட்டு, அலுவலகத்தில் இருந்தவர்களை திட்டித்தீர்த்துவிட்டுச் சென்றுவிட்டார்.
மட்டக்களப்பில் இருந்த இந்தியப்படையினரிடம் சென்று முறையிட்டார். வாசுதேவாவின் உடலை மீட்டுத்தரும்படி கேட்டார்.
இந்தியப்படை படையினரால் மீட்டுக் கொடுக்க முடியவில்லை. வாசுதேவா அணிந்திருந்த பாதணிகளை மட்டுமே தாயாரிடம் சேர்ப்பிக்கப்பட்டன.
இச் சம்பவம் நடைபெற முன்னர் மன்னாரில் உள்ள புலிகள் இயக்க முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜில்மன்(அடம்பன்), அர்ஜுனா, ரஞ்சன் ஆகிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் மன்னாரில் கொல்லப்பட்டனர்.
“புகார் தெரிவித்தோம். இந்தியப் படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன செய்வது?” என்று பிரபாகரனுக்கு தகவல் அனுப்பினார்கள் மன்னாரில் இருந்த புலிகள் இயக்கத்தினர்.
“திருப்பித்தாக்குங்கள்!” என்று உத்தரவிட்டார் பிரபாகரன்.
50க்கு மேற்பட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் மன்னாரில் கொல்லப்பட்டனர்.
உமாமகேஸ்வரன்- லலித் அத்துலத்முதலி
கொழும்பில் புளொட்
புளொட் இயக்கத்தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்புக்கு வந்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொண்டார்.
புலிகள் இயக்கத்தினருக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் இடையேயுள்ள பகைமையை பயன்படுத்தலாம் என்பதால் புளொட் இயக்கத்தினருக்கு லலித் அத்துலத் முதலி உதவி செய்தார்.
கொழும்பில் முகாம்களையும் அமைத்துக் கொண்டனர் புளொட் இயக்கத்தினர். வவுனியாவிலும் செயற்பட்டனர்.
டென்சில் கொப்பேகடுவ அப்போது வவுனியாவில் இருந்தார். புளொட் இயக்கத்தினருடன் நெருக்கமான உறவுகளையும் வைத்திருந்தார்.
வவுனியாவில் புளொட் இயக்கத்தை நிலைப்படுத்துவதற்கு இராணுவரீதியான தொடர்புகளை ஏற்படுத்தியதில் மாணிக்கதாசன் முக்கிய பங்கு வகித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் டென்சில் கொப்பேகடுவ புலிகளைப்பற்றிச் சொன்னது இது:
அவர்கள் மிகத்திறமையாகச் சண்டை செய்தார்கள். நாம் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் எதிர்ப்பு தீவிரமாக இருந்தது.”
இந்தியா தலையிட்டிருக்காவிட்டால் படைபலம் மூலம் யாழ் குடாநாட்டை கைப்பற்றி முடித்திருக்கலாம் என்றும் டென்சில் கொப்பேகடுவ தன்னைச் சந்தித்த புளொட் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
பிரபா குற்றச்சாட்டு
“இந்திய உளவுப்பிரிவான ‘றோ’ ஏனைய இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி, புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தூண்டிவிடுகிறது” என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே ராஜீவ்காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட பணத்தின் முதலாவது பகுதியை இந்தியா கொடுக்காமல் தாமதித்தது.
பணத்தை ஏன்விட வேண்டும். வாங்கி வைத்துக் கொண்டால் பின்னர் உபயோகப்படும் என்று நினைத்தனர் புலிகள்.
தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்ட பணம் தரப்படவில்லை என்று ஆகஸ்ட் மாத இறுதியில் புலிகள் தரப்பால் நினைவூட்டப்பட்டது.
இந்திய அரசாங்கம் மறுக்கவில்லை.
முதல் கட்டத் தொகையான 50 இலட்சம் ரூபாய் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது.
இரகசியமாக வைத்திருக்கவேண்டிய அத்தகவலை ஜெனரல் ஹரிகிரத்சிங் பத்திரிகைகளுக்குக் கூறிவிட்டார்.
புலிகள் இயக்கத்தினர் தம்மோடு ஒத்துழைக்க மறுத்தால், பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்று மக்கள் நினைக்கட்டும் என்று ஹரிகிரத்சிங் எண்ணியிருக்கலாம்.
ஆனாலும் ஹரிகிரத்சிங் வெளியிட்ட தகவல் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
இந்திய அரசின் நடவடிக்கைகளும், இந்தியப் படையின் செயற்பாடுகளும், ஏனைய இயக்கங்களின் பிவேசமும் பிரபாகரனின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறிச் செயற்படும். அப்போது இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே விரோதம் உருவாகும்.
அவ்வாறு விரோதம் உருவாகாவிட்டாலும் இலங்கை அரசு ஒப்பந்தத்துக்கு மாறாக நடப்பதை சுட்டிக்காட்டிக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகலாம் என்பதுதான் பிரபாகரனின் ஆரம்ப நிலைப்பாடாக இருந்தது.
அதற்காக கொஞ்சக் காலம் காத்திருக்கலாம் என்றும் அவர் நினைத்தார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா இந்தியாவோடு பகைக்க விரும்பவில்லை. தெற்கில் ஜே.வி.பியினரும் வளர்ந்து கொண்டிருந்தனர்.
ஒரே நேரத்தில் புலிகளையும், ஜே.வி.பி.யினரையும் எதிர்கொள்வது புத்திசாலித்தனமல்ல. போதாக்குறைக்கு இந்தியாவையும் பகைத்துக்கொண்டால் வடக்கு-கிழக்கில் தனியாட்சியே ஏற்பட்டுவிடலாம்.
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்து இந்தியாவை நண்பனாகவே வைத்திருக்கவே விரும்பினார் ஜே.ஆர்.
எனவே பிரபாகரன் பொறுமையிழக்கத் தொடங்கினார்.
இலங்கைப் படையினர் வெளியேறிய இடங்களில் எல்லாம் இந்தியப்படையினர் முகாம்களை நிறுவத் தொடங்கினார்கள். அதுவும் புலிகள் இயக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
யாழ் நிலை மாற்றம்
இந்தியப் படையினரின் வருகைக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பியது. யாழ் நகரில் ஷெல் தாக்குதல்கள் காரணமாக மக்கள் நடமாடவே அஞ்சினார்கள். கடைகளும் களையிழந்து காணப்பட்டன.
இந்தியப்படை வந்தபின் மக்கள் யாழ்நகரில் பயமில்லாமல் நடமாடினார்கள். கடைகள் களைகட்டின. ‘இந்தியப் படை இருக்கையில் நமக்கென்ன பயம்?’ என்பது போல மக்களிக் மனநிலை மாறத் தொடங்கியது.
இந்தியப் படையினரோடும் மக்கள் வாஞ்சையோடு பழகத் தொடங்கினார்கள். இந்தியப் பாசைகூட பலருக்குப் பரிச்சயமானது. இந்திய வார்த்தைகள் சிலவற்றை தெரிந்து கொண்டு படையினருடன் பேசிப்பார்த்தார்கள்.
தமிழ் தெரிந்த படையினரும் இருந்தமையால் இந்தியப் படையினரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதில் தடையெதுவும் இருக்கவில்லை.
இந்தியா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளாக மாறிவிடுவார்கள் என்றுதான் புலிகள் இயக்கத்தினர் நினைத்தனர்.
இதற்கிடையே ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தினரை யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறப்பதற்கு இந்தியப் படையினர் அனுமதித்தனர்.
யாழ்ப்பணம் குருநகரில் முன்னர் இராணுவமுகாம் இருந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஈ.என்.டி.எல்.எஃப் அலுவலகம் திறக்கப்பட்டது.
அவ்வீட்டில் தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட அமெரிக்கர்களான அலென் தம்பதியினர் முன்னர் குடியிருந்தனர்.
இந்திய ‘றோ’ உளவுப்பிரிவுதான் ஈ.என்.டி.எல்.எஃப்பை அனுப்பி வைத்திருக்கிறது. அலுவலகம் நடத்த அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானித்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
புலிகள் இயக்கத்தின் குருநகர் பொறுப்பாளர் அந்த ஊர் மக்களைத்திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.
ஈ.என்.டி.எல்.எஃப் அலுவலகம் முன்னால் சென்று “வெளியேறுங்கள் , வெளியேறுங்கள்” என்று மக்கள் கோஷமிட்டனர்.
“என்ன பிரச்சனை?” என்று கேட்டுக்கொண்டு வெளியே வந்தார் அந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவர். “அடியுங்கடா அவனை” என்றொரு குரல் கேட்டதுதான் தாமதம், அந்த உறுப்பினர் தாக்கப்பட்டார்.
உள்ளே இருந்த உறுப்பினர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். செய்தியறிந்து யாழ் கோட்டையில் இருந்து இந்திய இராணுவத்தினர் விரைந்து வந்தனர்.
ஈ.என்.டி.எல்.எஃப் முகாமை மூடிவிட்டு, உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டனர்.
படிப்படியாக இந்திய இராணுவத்தினருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள் புலிகள் இயக்கத்தினர்.
தமது ஆதரவாளர்கள் மூலம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது. இந்தியப் படை கேட்டால், ‘எமக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று கூறிவிடுவது, அதுதான் புலிகளின் பாணியாக இருந்தது.
வழிமறிக்கப்பட்ட இந்தியப்படை!!
பலாலி இராணுவ முகாமில் இருந்து ரோந்துக்காக புறப்பட்ட இந்திய இராணுவத்தினரை தொடர்ந்து செல்லவிடாமல் அவ்வூர் மக்கள் வழிமறித்தனர். இந்திய இராணுவத்தினரை நோக்கி கற்களும் வீசப்பட்டன.
இந்திய படை தளபதி திபீந்தர் சிங் யாழ் கோட்டை முகாமுக்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு கூட்டத்தினர் குறுக்கே நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.
கிட்டத்தட்ட 200 பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டனர்.
திபீந்தர் சிங்குக்கு காரணம் புரியவில்லை. “புலிகள் இயக்கத்தினர் தான் இவர்களை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று மற்றொரு அதிகாரி விளக்கம் கொடுத்தார்.
திபீந்தர் சிங்குக்கு கோபம் வந்துவிட்டது. உடனே புலிகள் இயக்க தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டார்.
“என்ன இது? எதற்காக இப்படியெல்லாம் பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.
“என்ன ஆர்ப்பாட்டமா? அதுபற்றி நமக்கு எதுவும் தெரியாதே!” என்று சொல்லி விட்டனர் புலிகள் இயக்கத்தினர்.
ஆனாலும் திபீந்தர் சிங் தொடர்பு கொண்ட கொஞ்ச நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்று விட்டனர்.
புலிகள் இயக்க தலைமையகத்தில் இருந்து, யாழ் கோட்டை முகாமுக்கு அருகில் இருந்த புலிகள் இயக்க முகாமுக்கு தகவல் சொல்லப்பட்டது.
முகாமில் இருந்தவர்கள் சென்று சொன்னதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடத்தை காலிபண்ணிவிட்டுப் போய் விட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ‘ஈழமுரசு’, ‘முரசொலி’ இரண்டும் புலிகள் இயக்கத்தினரின் கருத்துக்களையே பிரதிபலித்தன.
“மக்கள் ஆர்ப்பாட்டம். இந்திய இராணுவத்தினரை வழிமறித்தனர்” என்று அந்த இரண்டு பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில் செய்திகள் வெளியாகின.
இந்தியப் படைக்கு எதிரான செய்திகள் மக்கள் மத்தியில் பரவட்டும், இந்தியப் படை நமக்காகத்தான் வந்திருக்கிறது என்ற நம்பிக்கை வரக்கூடாது என்பதே புலிகள் இயக்கத்தினரின் விருப்பமாக இருந்தது.
ஆயுதக் கப்பல்
‘இனிமேல் யுத்தமே இல்லை’ என்றுதான் மக்களும் நினைத்தனர். பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பதுதான் பரவலான நம்பிக்கையாக இருந்தது.
ஆனால் பிரபாகரன் ஓய்ந்திருக்கவில்லை. மீண்டும் யுத்தம் தொடங்கத்தான் போகிறது என்பதில் உறுதியாக இருந்தார்.
1987 செப்டம்பரில் பர்மாவின் தலைநகரான ரங்கூனிலிருந்து ‘இல்யானா’ என்னும் கப்பல் புறப்பட்டது.
கப்பலில் புலிகள் இயக்கத்தினருக்கான ஆயுதங்கள் இருந்தன.
நடுக்கடலில் தரித்துநின்ற கப்பலில் இருந்து படகுகள் மூலமாக ஆயுதங்களை கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர் புலிகள் இயக்கத்தினர்.
கிட்டத்தட்ட 700 துப்பாக்கிகளும், தோட்டாக்களும், வெடி மருந்துகளும் இருந்தன. எல்லாவற்றையும் பொலித்தீன் பைகளில் போட்டு பத்திரமான இடங்களில் புதைத்து வைத்துவிட்டனர்.
இந்தியாவை முழுமையாக நம்ப முடியாது. நாம் தான் சொந்தக்காலில் நின்று தொடர்ந்து போரிட வேண்டியிருக்கும் என்று பிரபாகரன் முடிவுசெய்து விட்டதன் அடையாளம் தான் அது.
இந்தியப் படை வந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்றுதானே மக்கள் நினைக்கிறார்கள்.
பிரச்சனைகள் தீரவில்லை என்று வெளிப்படுத்தியாக வேண்டும் என்று தீர்மானித்தனர் புலிகள் இயக்கத்தினர்.
செப்டம்பர் 15
இந்தியப் படையினருக்கும், இந்தியாவுக்கும் எதிரான முதலாவது காயை நகர்த்தினார் பிரபாகரன்.
செப்டம்பர் 15ல் புலிகள் இயக்க யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் அந்த அறிவிப்பை இந்திய அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மிரட்டல் என்றுதான் நினைத்தனர்.
ஆனால் புலிகள் இயக்கத்தினர் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர் என்பதுதான் உண்மை.
உண்ணாவிரதமும், அதனையொட்டிய நிகழ்வுகளும் புலிகள் இயக்கத்தினர் ஆயுதப்போராட்டத்தில் மட்டுமல்ல, அறவழிப்போராட்டத்திலும் சாதுரியமாக காய் நகர்த்தக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தன.
அவைபற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்.
(தொடர்ந்து வரும்)
(அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்)
தொடரும்
Average Rating